Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all
   
    என்னைப் பற்றி

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
திரையுலகில் பாரதி!
என்.வி. சுப்பராமன்





             

தேசியத்திரு விழாக்களான சுதந்திர நாள், குடியரசு நாள், அண்ணல் காந்தி அடிகள் பிறந்த நாள் ஆகியவற்றில் வானொலியிலும், தொலைக் காட்சிகளிலும், நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் பாரதியார் பாடல்களைத்தான் ஒலி, ஒளி பரப்பி வரும்பொழுது, மகா கவி பாரதியின் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை என்று எண்ணி மகிழும் ஆயிரக் கணக்கான பாரதித் தொண்டர்களில் நானும் ஒருவன். 39 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்து, அந்தக் கவியரசனின் உயிர்ப் பறவை சிறகு விரித்து 88 ஆண்டுகள் ஆன பின்னரும் அவருடைய பாடல்கள் நிலைத்து நின்று, அவை அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருப்பது அப்பாடல்களின் அமர நிலையைக் காட்டுகிறதல்லவா?

வைரமான கருத்துக்களை, வெவ்வேறு நடைகளில் பாரதியார் வெளிப்படுத்தியிருந்தாலும், அனைத்துள்ளும் முதன்மை இடம் பெற்றது அவரது கவிதை நடையே. இதனை அவரது பாடல்கள் பறை சாற்றும். ”நமக்குத் தொழில் கவிதை” யென்று முரசறைந்தவரல்லவா பாரதி. ஒரு கவிதை எப்படி அமைய வேண்டும், அவற்றில் என்னென்ன கூறுகள் அடங்கியிருக்க வேண்டும், எந்த இலக்கணத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் வரையறுத்துக் கொண்டதை இறவா வரம் பெற்ற அவரது கவிதைகளே நன்கு எடுத்துக் காட்டும். காலத்தால் அழியாத, கவிச்சுவை குறையாத, கருத்து வளம் குன்றாத கவிதைகளே நிலைத்து எக்காலமும் சிறப்புடன் நிற்பன. அவை புத்தம் புதுச் சுவைகளையும், பொருளையும் பெற்றிருக்கும் பொழுது காவிய நிலையை எய்துகின்றன.

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற்புதிது சோதிமிக்க
நவ கவிதை, எந்நாளும் அழியாத
மாக்கவிதை!

ஆம்! அவ்வாறு மாக்கவிதைகளை இயற்றியதால்தான் பாரதியார் “மகா கவி’ என்று இன்றும் போற்றப் படுகிறார்.

அவரது இசை நடை எந்த இசைஞரையும் அசை போடச் செய்யும்! ஆழ்ந்து சிந்திக்கச் செய்யும்! அனுபவிக்கச் செய்யும்! மற்றவர்கள் அவற்றைக் கேட்டு மகிழ, இசைக்கச் செய்யும்! கவிதைக்கும் பாடலுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கவிதைக்கு ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற வறைமுறைகள் கிடையாது. ஆனால் இசைப் பாடல்களில் இவ் விதி முறைகள் இருக்கும். பாரதியாரே கவிஞரும், இசைஞரும், பெரும் சுவைஞரும் ஆனதால் அவர் கவிதைகள் மாத்திரமன்றி, தோத்திரப் பாடல்களும், தேசீய கீதங்களும், வேதாந்தப் பாடல்களும் பாடியுள்ளார். கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் பாடும் வண்ணம் பாரதியார் பல பாடல்களைப் பாடியுள்ளார். காவடிச்சிந்து, நொண்டிச்சிது போன்ற கிராமிய இசையிலும் பாடல்களைத் தொகுத்துள்ளார்.

அறுபது பாடல்களுக்கு ராகம், தாளத்தோடு மெட்டமைத்துக் கொடுத்திருக்கிறார். நடைமுறையில் உள்ள பல ராகங்கள் மட்டுமன்றி, சில அபூர்வ ராகங்களிலும் இயற்றியிருப்பது வியப்பிற்குரியது. அவர் தனது பாடல்களில் பயன்படுத்தியுள்ள ராகங்களின் பட்டியல் இதோ:

பிலஹரி, ஆனந்த பைரவி, நாட்டை, சக்கரவாகம், ஸரஸ்வதி மனோஹரி, ஸ்ரீ ராகம், புன்னாக வராளி, நாட்டைகுறிஞ்சி, செஞ்சுருட்டி, பூபாளம், நாதநாமக்கிரியை, தன்யாசி, பியாக், காம்போதி, கமாஸ், யதுகுல காம்போதி, ஹிந்துஸ்தானி பியாக், ஹிந்துஸ்தானி தோடி, வராளி, தண்டகம், ஸைந்தவி, சங்கராபரணம், பைரவி, கேதாரம், கரஹரப்பிரியை! இதுவன்றி, காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து,!!

இவ்வாறு பாடல்களையும், கவிதைகளையும் இயற்றியுள்ள பாரதியார் இன்றையத் திரையுலகத்துக்கு மிகவும் உதவியுள்ளார்! அந்த நாள் முதல் இந்த நாள்வரை ஏராளமான பாரதியாரின் பாடல்கள் திரைப் படங்களில் பயன் படுத்தப் படுகின்றன. அவற்றை இந்தப் பகுதியில் சற்றே நோக்குவோம்.

எனது நினைவிற்கும் எனது அரிய நண்பர் ஒருவரது நினைவிற்கும் வந்த திரைப் படப் பாடல்களைப் பாடிய பாடகர்களின் வரிசை ஒரு நீண்ட வரிசை!

திருமிகு டி.கே. பட்டம்மாள், டி.ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், பி.பி ஸ்ரீநிவாஸ், டி.எம். செளந்திரராஜன், ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியன், எம்.கே. தியாகராஜ பாகவதர், எம்.எல். வசந்தகுமாரி, உன்னிகிருஷ்னன், ராஜ்குமார் பாரதி, மகாராஜபுரம் சந்தானம், மது பாலகிருஷ்னன், இளையராஜா, மனோ, பாம்பே ஜயஸ்ரீ, ராஜா, சி.எஸ். ஜயராமன், சூலமங்கலம் ராஜலக்‌ஷ்மி, இன்னும் பலர்!

பாரதி பாடல்கள் இடம் பெற்ற சில திரைப் படங்களின் பட்டியல் இதோ!

அந்தமான் கைதி, ஏழை படும் பாடு, கப்பலோட்டிய தமிழன், கை கொடுத்த தெய்வம், கெளரி கல்யாணம், சிந்தாமணி, சிந்து பைரவி, திருமால் பெருமை, படிக்காத மேதை, பராசக்தி, பாரதி, புது வாழ்வு, மண மகள், வறுமையின் நிறம் சிகப்பு, விளையாட்டு பொம்மை,, வேதாள உலகம் இன்னும் பலபல!

திரைப் படங்களில் வந்த பாரதி பாடல்களைப் பார்ப்போம்.

”பாரதிக்கு வேண்டும்” என்ற இந்த நூலின் மற்றொரு பகுதியில் பாரதி எவை எவை வேண்டும், எவை எவை வேண்டாம் என்று அவரது கவிதைவழி கண்டவை விளக்கப் பட்டுள்ளன. அவற்றுள் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்:

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்; - அங்கு
தூணில் அழகியதாய் - நல்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணியருகினிலே – தென்னை மரம்
கீற்று மிள நீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போல – நிலாவொளி
முன்பு வர வேணும்; அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வர வேணும்
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா நின்றன்
காவலுறவு வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

இந்தப் பாடலை 1951ஆம் ஆண்டு வெளியான ”அந்தமான் கைதி” என்ற திரைப் படத்தில் திரு சி.எஸ். ஜயராமன் அவர்கள் தனது இனிய குறலில் பாடியுள்ளார். எத்தனை நேர்த்தியான பாடல்; பாரதியார் இயற்கையை மிகவும் இரசிப்பவர். ”பாரதி ரசித்த இயற்கை” என்ற மற்றொரு பகுதியில் பாரதியின் இரசனையை விரிவாகக் காணலாம். பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்தவனல்லவா பாரதி. அவனுக்கு வேண்டியது: காணி நிலம், நல் மாடங்கள், ஒரு மாளிகை, ஒரு கேணி, தென்னை மரங்கள், இள நீர், ஒரு பத்தினிப் பெண், நிலா ஒளி, குயிலோசை, காட்டு வெளி .................................... அப்பப்பா! அவர் வேண்டுதலைக் கேட்கும்பொழுதே எவ்வளவு இனிமை, எத்தனை மகிழ்ச்சி!

சி.எஸ். ஜயராமன் அவர்கள் பாடிய மற்றொரு பாரதி பாடல் “பரா சக்தி“ என்ற படத்தில் “நெஞ்சு பொறுக்குதிலையே”. மகா கவியின் காலத்தில் இருந்த பாரத ஜனங்களின் நிலைமையைக் கண்டு மனம் வருந்திப் பாடிய பாடல் இது. எதைக் கண்டாலும் அச்சம், யாரைக் கண்டாலும் பயம், கண் மூடித்தனமான மூட நம்பிக்கைகள். அதன் பயன்

:”நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற வில்ங்குகள் போல வாழ்வார்.”

ஏறக்குறைய, இதே கருத்தை வலியுறுத்தும் பாரதியின் மற்றொரு பாடல் “நெஞ்சில் உரமுமின்றி” என்று துவங்கும் பாடல். “நடிப்புச் சுதேசிகள்” என்ற தலைப்பில் தேசிய கீதங்களில் ஒன்றாகப் பாடப்பட்ட இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் “கப்பலோட்டிய தமிழன்” திரைப் படத்திற்காகப் பாடினார். இத்தனை ஆண்டு காலம் கடந்தும் இன்றும் நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை செய்யும் வாய்ச்சொல் வீரர்களைக் காணும்பொழுது வேதனைப்பட்டு, தலை குனிகிறோம் அல்லவா?

பாரதியின் பல்வகைப் பாடல்களில் ஒன்றாகப் பகுக்கப்பட்ட ஓர் அற்புதமான பாடல் “வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” என்ற பாடல். இப்பாடலை திருமதி டி.கே. பட்டம்மாள் அவர்கள் ”வேதாள உலகம்” என்ற படத்திற்காகவும், இப்பாடலின் தொடர்ச்சியாக வரும் "ஊருக்கு நல்லது சொல்வேன்" எனும் பாடலின் முக்கிய வரிகளை பாரதியின் பேரன் திரு ராஜகுமார் பாரதி, “பாரதி” என்ற திரைப் படத்திற்காகவும் பாடியுள்ளனர். இப்பாடல் மூலம் பாரதி ஊருக்கு நல்லது சொன்னார்; அவருக்கு உண்மை தெரிந்ததைச் சொன்னார். அவரது அறிவுரைகள்:

“சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்”

“பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை அற்றிடும் காணீர்!”

“பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்”
”அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.”

“பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் – பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்”

இப்பாடல் முழுமையுமாகத் திரைப் படங்களில் பாடப்படவில்லை என்றாலும், இப்பாடல் பாரதியின் சமூக, ஆன்மீகச் சிந்தனைகளை முழுக்க முழுக்க வெளிப்படுத்துகிறது!

திரு கே.ஜே. ஜேசுதாஸ் அவர்கள், “சிந்து பைரவி” என்ற திரைப் படத்தில் பாடிய பாடல், ‘மனதி லுறுதி வேண்டும்’ என்ற பாரதியின் தலைசிறந்த பாடல்களில் ஒன்று. ஆம்! மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்வதற்கு எவை எவை தேவையோ அவற்றையெல்லாம் பாரதி இப்பாடலில் வேண்டுகிறார்.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்;
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

இதைப் போன்ற பாடல்கள் பாரதி பாடல்களின் பெருமையை காலம் காலமாகப் பறை சாற்றிக் கொண்டிருக்கும்!

”வறுமையின் நிறம் சிகப்பு” என்ற திரைப்படம் ஒரு மிக நல்ல தயாரிப்பு என்று அனைவராலும் பாராட்டப் பட்டது; ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல, பாரதியின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப் பட்டது “பாரதி” இந்த திரைப் படங்களுக்கு ஒரு பொதுவான பாடல் ‘நல்லதோர் வீணை’ என்ற தலைப்பில் பாரதியார் பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி’ என்பது. இப்பாடலை முதலில் குறிப்பிட்ட திரைப் படத்தில் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார். இந்த அருமையான பாடலில் சிவசக்தியிடம் இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கு வேண்டும் வல்லமையை அருளும்படி கேட்பார். ஏன்? நல்லதொரு வீணையைச் செய்து, அதை நலங்கெட புழுதியில் எறிவது மடமையல்லவா? சுடர் மிகும் அறிவுடன் படைக்கப் பட்ட மனிதன் தனது அறிவை மாநிலம் பயன்பட உபயோகிக்க வேண்டும் அல்லவா? நிலச்சுமை என வாழ்தல் வீணே. மாநிலம் பயன்பட வாழ நினைப்பவர்களுக்கு உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் தேவை. நசையறு மனமும், நித்தமும் புதுமையாக ஒளிவிடும் உயிரும், துன்பம் வந்தபோதும், சிவ சக்தியைப் பாடும் மனமும்,, அசைவறு மதியும் வேண்டும் என்று இப்பாடலில் பாரதி வேண்டுவார்.

கண்ணன் பாடல்களில் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடல் “தீராத விலையாட்டுப் பிள்ளை”. பாரதி ‘கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை’ என்ற தலைப்பில் அவரே ராகம், தாளம் இவற்றைக் குறிப்பிட்டு எழுதிய பாடல். கண்ணன் குழந்தையாகச் செய்த விளையாட்டுக்களை எல்லாம் விவரித்து சிருங்கார ரசம் பொங்க இந்தப் பாடலை ‘வேதாள உலகம்’ என்ற திரைப் படத்தில் திருமதி டி.கே. பட்டம்மாள் பாடியுள்ளார்.

’கண்ணன் என் தோழன்’ என்ற தலைப்பில் எழுதிய பாடலில் ‘சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச் சிரித்துக் களித்திடும்’ பாங்கை அழகாக விளக்குவார் பாரதி. இப்பாடலைக் “கப்பலோட்டிய தமிழன்” படத்தில் திருமதி பி. சுசீலா அவர்கள் இனிமையாகப் பாடியுள்ளார்.

பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு “கண்ணம்மா – என் குழந்தை’ என்ற தலைப்பில் ‘சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே’ என உள்ளத்தை உருக்கும் ஒரு பாடலை எழுதினார். அதை, “மண மகள்” என்ற திரைப் படத்தில் திருமதி எம்.எல். வஸந்தகுமாரி அவர்கள் அவரது இனிமையான குறலில் பாடி நம்மை மகிழ வைத்தார். அந்தக் குழந்தை எப்படிப் பட்ட குழந்தை? சின்னஞ்சிறு கிளி, செல்வக் களஞ்சியம், பிள்ளைக் கனியமுது, பேசும் பொற்சித்திரம், ஆடி வருந்தேன்! கண்ணம்மவின் மேல் வைத்த அளவற்ற அன்பால், அதன் உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருமாம், ஊரார் மெச்சி மகிழ்ந்தால் மேனி சிலிற்குமாம், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் கள்வெறி கொள்ளுமாம், குழந்தையின் முகம் சற்றுச் சிவந்தால் மனது சஞ்சலமாகுமாம், நெற்றி சுருங்கினால் நெஞ்சம் பதைக்குமாம், கண்ணில் நீர் வழிந்தால் நெஞ்சில் உதிரம் கொட்டுமாம்!. அதுவல்லவா குழந்தைகள் மேல் வைக்கும் உண்மை அன்பும், பரிவும், பாசமும் ஆகும்! கேட்கும் மழலையில் துன்பங்கள் தீரும்; முல்லைச் சிரிப்பில் மூர்க்கம் தொலைந்திடும்!

இந்நூலில் ’பாரதி கண்ட கண்ணன்’ என்ற மற்றொரு பகுதியில் கண்ணனை பாரதி எப்படியெல்லாம் கண்டார் என்று விளக்கப் பட்டுள்ளது. ஆம்! கண்ணன் பாரதிக்குத் தாய், தந்தை, தோழன், சேவகன், அரசன், சீடன், காதலன், காந்தன், ஆண்டான், குலதெய்வம்; கண்ணம்மா குழந்தை, விளையாட்டுப் பிள்ளை, காதலி!

”கண்ணம்மா என் காதலி’ என்ற தலைப்பில் பாடிய ஒரு பாடல் “சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?’ எனத் துவங்கும் உள்ளத்தை உவந்திழுக்கும் பாடல். இப்பாடலை “சிந்தாமணி”, “புது வாழ்வு”என்ற படங்களில் திரு எம். கே. டி. பாகவதர் இசைத்துள்ளார்

”கண்ணம்மா – என் – காதலி (5)” என்ற தலைப்பில், ‘தீர்த்தக் கரையினிலே- தெற்கு மூலையிலே-செண்பகத் தோட்டத்திலே’ என்று துவங்கும் பாடலில் காதலி கண்ணம்மாவைக் காணமுடியாமல் படும் வேதனையை விவரிக்கின்றார்.. இப்பாடலை திரு டி.ஆர். மகாலிங்கம் 1954ஆம் வெளிவந்த ‘விளையாட்டு பொம்மை’ என்ற திரைப் படத்திலும், ’வறுமையின் நிறம் சிகப்பு, என்ற படத்தில் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களும், சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் டி.எம். சௌந்தரராஜன் அவர்களும் பாடியுள்ளனர்..

கண்ணனைச் சேவகனாகக் கண்ட பாரதி “கண்ணன் என் சேவகன்” என்ற பாடல், தக்க வேலை ஆள் கிடைக்காவிட்டால் மக்கள் படும் பாட்டை வெகு அழகாகவும் நகைச்சுவையோடும் விளக்கும் பாடல் மிகவும் நேர்த்தியானது. சரியான சேவகனில்லாமல் அல்லலுற்ற பாரதியிட்ம் கண்ணனே சேவகனாக வந்து சேவகம் செய்தானாம்!

....................................................................................
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்.
சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.!
.”மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்.
................................................................................................................
..................................................................................................................
”மிக்க வுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு” கென்றேன்
”ஐயனே!
தாலிகட்டும் பெண் டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்! நரை திரை தோன்றா விடினும்
ஆனவயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை” யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன்..........................................

எவ்வளவு நல்ல சேவகன்! கனவிலும் கவிதையிலும் தான் இதைப் போன்ற சேவகர் கிடைப்பாரோ!

”கண்ணம்மாவின் காதல்” என்ற தலைப்பில் “காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன், காதலை யெண்ணிக் களிக்கின்றேன்” என்ற பாரதியின் அமுதான பாடலை திருமதி பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் சேர்ந்து ’கப்பலோட்டிய தமிழன்” என்ற திரைப்படத்தில் அருமையாகப் பாடியுள்ளனர்.

”நந்த லாலா” என்ற கருத்தைக் கவரும் சிறிய பாடல் ஒன்று பாரதியின் இனிய படைப்பு. காக்கைச் சிறகினில் கண்ணனின் கருமை நிறந்தனையும், பார்க்கும் மரத்திலெல்லாம் கண்ணனின் பச்சை நிறத்தினையும், கேட்கும் ஒலியில் எல்லாம் கண்ணனின் கீதத்தையும், தீக்குள் விரலை வைக்கும்பொழுது கண்ணனைத் தீண்டும் இன்பத்தையும் காணும் பாங்கை என்னவென்று சொல்வது! பாரதியின் கண்ணன் பக்தியை எப்படிச் சொல்வது! இப்பாடலை, ’திருமால் பெருமை’ என்ற திரைப் படத்தில் பி. சுசீலாவும், ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்ற படத்தில் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களும் இனிமையாகப் பாடியுள்ளனர்.

கண்ணன் பாரதியின் காதலன் அல்லவா? காதலி பாரதி, தன் காதலனுடைய கண்ணனின் மனநிலயைக் கண்டு வருமாறு பாங்கியைத் தூது விடுக்கிறார்.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
(அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.
...........................................................................................................
....................................................................................................

அப்பாடலில் பெண்ணின் நிலையையும் நினைத்து வருந்திக் கூறுவார்:

“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை யிருக்குதடீ தங்கமே தங்கம்” என்று! இப்பாடலை “ஏழை படும் பாடு” என்னும் திரைப் படத்தில் திருமதி எம். எல். வசந்தகுமாரி அவர்கள் சிருங்கார, ரெளத்ர ரசங்களிலே பாடியுள்ளார்.

கண்ணம்மாவைப் பாரதி தான் குலதெய்வமாகக் கருதி அவரிடம் சரணடைவார். கண்ண பிரான் தனது கீதையின் வழி உலகத்திற்கு அளித்த மிகப்பெரும் அறிவுரை ‘சரணாகதித் தத்துவம்’ அல்லவா! அதை மனத்தில் வைத்துப் பாடப்பட்ட கவிதையாகத்தான் இருக்க வேண்டும்

”நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னை)
...........................................................................................
............................................................................................

இப்பாடலை திருமதி பாம்பே ஜயஸ்ரீயும் ராசாவும் இணைந்து “பாரதி’ திரைப் படத்தில் பாடியுள்ளனர்.

‘உலகே மாயம், வாழ்வே மாயம், இதில் நாம் காணும் சுகமே மாயம்’ என்பது ஒரு பழங்காலத் திரைப்படப் பாடல். அதை வாழ்வின் பெருந் தத்துவமாக ஏற்றுக் கொள்வோரும் உண்டு. இதனை ஏற்றுக் கொள்ளாத பாரதியின் ஒரு பாடல்:

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ? – பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? – வெறுங் காட்சிப் பிழைதானோ?

என்று கேள்விக் கணைகளைத் தொடுத்து, பதிலும் தருவார்!

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால்
உறுதியில்லை
காண்பது சத்தியாம் – இந்தக் காட்சி நித்தியமாம்!

இப்பாடலை “பாரதி” திரைப் படத்திற்காகப் பாடியவர் திரு ஹரீஷ் ராகவேந்திரா அவர்கள்.

பாரதி ஒரு சக்தியை வழிபடும் பக்தர்; ”சக்தி உபாசகர்” என்பதை இந்நூலின் மற்றொரு பகுதி விளக்கும்! மகாசக்திக்கு ஒரு விண்ணப்பத்தை இடுகிறார். எத்ற்கு அந்த விண்ணப்பம்? அதனால் என்ன கிடைக்க வேண்டும்? உள்ளம் குளிரும்; பொய்யாணவம் என்ற ஊனம் ஒழியும்; கள்ளம் உருகிப்போகும்; பக்திக் கண்ணீர் பெருகும்; வெள்ளக் கருணையிலே வேட்கை தவிரும் – மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு வேறென்ன வேண்டும்!

ஆம்! அந்தப் பாடலை கே.ஜே. ஜேசுதாஸ், சித்ரா ஆகியோர் “இனி ஒரு சுதந்திரம்” திரைப் படத்திற்காகப் பாடியுள்ளனர். அப்பாடல்

”மோகத்தைக் கொன்றுவிடு – அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்துவிடு –அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு
...............................................................................
.................................................................”
என்று தொடரும்.

பாரதியின் பல்வகைப் பாடல்களில் அனைவர் உள்ளங்களையும் மிகவும் கவர்ந்த பாடல் ”பாப்பாப் பாட்டு” . “பாரதியும் பாப்பாவும்’ என்ற வேரு ஒரு பகுதியில் இதைப் பற்றி விரிவாக எழுதப் பட்டுள்ளது. பாப்பாக்களுக்கான இந்த நீண்ட பாடலில்தான் எத்தனை அறிவுரைகள், எத்தனை உயர்ந்த தத்துவம், எவ்வளவு அழகான நடை, ..........! இது குழந்தைகளுக்காக மாத்திரம் என்று நான் கருதுவதில்லை. அறுபதைக் கடந்த எனக்கும் தான், நானும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கே. இந்த அருமையான பாடலைத் திருமிகு சீர்காழி கோவிந்தராஜனும், பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களும் ”கப்பலோட்டிய தமிழன்” படத்திற்காகப் பாடியுள்ளனர்.

பாரதி நீண்ட நெடும் காவியங்களையும் எழுதியுள்ளார்; வெறும் நான்கு வரிகளிலும் பாடல்களைப் படைத்துள்ளார். சிறிய பாடல்களில் ஒன்று “அக்கினிக் குஞ்சு”.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

ஆம்! வீரமும் தீரமும் கொண்டு சாதனைகள் புரிவதில் சிறியவர் என்ன, பெரியவர் என்ன – எல்லோரும் புரியலாம்; எப்பொழுதும் செய்யலாம்; எங்கும் படைக்கலாம். வேண்டியதெல்லாம் அந்தத் ‘தழலே’! நல்லுணர்ச்சி, உத்வேகம், திறமை, உயர்ந்த இலக்கு, கடின உழைப்பு, நம்பிக்கை-தன் நம்பிக்கை இறை பக்தி, இறை அருள்! தனிப் பாடல் திரட்டைச் சார்ந்த இப்பாடலை “பாரதி” படத்தில் கே. ஜே. ஜேசுதாஸ் அவர்கள் பாடியுள்ளார்.

பாரதிக்கு பாரதத்தின் மேல் – பாரத நாட்டின் மேல் – அழியாத காதல்! அந்த நாளைய பாரதத்தை வியந்து பார்ப்பார். பெருமையுடன் பாடுவார். பாரத நாட்டின் தொன்மையையும், பாரத சலாச்சாரத்தையும், நாகரிகத்தையும், வெவ்வேறு துறைகளில் படைத்த சாதனைகளைக் கண்டு குதூகலிப்பார்; உளம் நிறையப் பாடுவதில் மகிழ்ச்சி காண்பார். இப் பெருமை அவரது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பிரதிபலிக்கும். எனவே திரைப்படங்களில் பல கவிதைகள் இடம் பெற்றிருப்பது வியப்பளிக்கவில்லை. எனவே இப்பகுதியை முடிக்கு முன் அவரது தேசிய கீதங்கள் இடம் பெற்ற திரைப் படங்களைப் பற்றி சிந்திப்பது இன்றியமையாதது அல்லவா?

பாரதத்தின் பெருமையைக் கூறும் பாடல்களையும் திரைப்படங்களையும் பட்டியலிட்டுப் பார்ப்போமே!

பாடல்திரைப்படம் பாடியவர்
வந்தே மாதரமென்போம்கப்பலோட்டிய தமிழன் சீர்காழி கோவிந்தராஜன்
ஜய வந்தே மாதரம்பாரதி எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
வந்தே மாதரம்பாரதிமது பாலகிருஷ்ணன்
பாருக்குள்ளே நல்ல நாடுகப்பலோட்டிய தமிழன்சீர்காழி கோவிந்தராஜன்
பாரத தேசமென்றுகப்பலோட்டிய தமிழன்சீர்காழி கோவிந்தராஜன்
சிந்து நதியின்மிசை கை கொடுத்த தெய்வம்டி.எம். செளந்தரராஜன்
பாரத சமுதாயம் வாழ்கவேபாரதிகே.ஜே. ஜேசுதாஸ்
செந்தமிழ் நாடெனும் போதினிலேவேதாள உலகம்டி.ஆர் மகாலிங்கம்
”பாரத சமுதாயம் வாழ்கவே” என்ற பாடல் பாரதியின் சமூக, பொருளாதாரச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் பாடல். ஆம்! பாரத சமுதாயம் என்பது

”முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை”

அந்த சமுதாயத்தில் என்ன செய்வோம்?

இனியொரு விதிசெய் வோம் – அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்..........

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்.......

இந்தியர்கள் அனைவரும் யார்?

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிரை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்................

விடுதலைப் போராட்ட காலத்தில் பாரதி பட்ட வேதனையும், மன உளைச்சலையும் விளக்கும் இரு பாடல்கள்:

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
................................................................................................
..............................................................................................
இந்த உள்ளத்தை உருக்கும் பாடலை “கப்பலோட்டிய தமிழன்” திரைப் படத்திற்காகப் பாடியவர்கள் திரு திருச்சி லோகநாதனும், திருமதி பி. லீலா அவர்களும்.

அடுத்தது அதே படத்தில் திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல்; “சுதந்திரப் பயிர்” என்ற தலைப்பில்

தண்ணீர்விட்டோவளர்த் தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?
................................................................................................
...................................................................................................
தர்மமே வெல்லுமெனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?
.................................
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
.............................................................................................................
.............................................................................................................

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல, ஆண்டு இரண்டாயிரத்தில் பாரதியின் வாழ்க்கை வரலாறு ஒரு தலை சிறந்த திரைப் படமாக வெளியானது. திரு ஞான ராசசேகரன் இயக்கத்தில் “பாரதி” என்ற தலைப்பில் எடுக்கப் பட்ட இத்திரைப் படம் 2001ஆம் ஆண்டின் சிறந்த திரைப் படத்திற்கான தேசியவிருதைப் பெற்றது. 150 நிமிட நேரம் அனைவரையும் கவர்ந்திழுத்த இப்படத்தில் சாயாஜி ஷிண்டே பாரதியாகவும், தேவயானி செல்லம்மாளாகவும் நடித்துள்ளனர்.

இக்கட்டுரை பாரதியின் பன்முக ஆளுகையின் ஒரு பரிமாணத்தைக் காட்டும் என்பது திண்ணம்!




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants