Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
கத்தரிக்காய்
மழலைகள் குழு





             

காதலாவது கத்தரிக்காயவது என்றும், என்னடா பெரிய காதல், கத்தரிக்காய் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். அது ஏன் காதலுடன் கத்தரிக்காய் மட்டும் சேர்க்கிறார்கள். ஏன் காதலாவது அவரைக்காயாவது என்பதில்லை? காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே? இது கத்தரிப்பூ நிறம், இதைப் பார்க்க முடிகிறது. இதைச் சமையலுக்கு உபயோகிக்கிறோம். ஆனால் காதல் பார்க்க முடியாதது, அனுபவிக்கத்தான் முடியும். அப்படி இருக்க இந்த கறிகாயை ஏன் காதலுடன் ஒப்பிடுகிறார்கள்? எதாவது புராணக்கதை இருக்கிறதா?

அன்புடன் விசாலம்

அன்பு சகோதரி,

கத்தரிக்காயைப் பற்றி நானறிந்ததையும் "காதலாவது கத்தரிக்காயாவது" என்ற வழக்கு எப்படி வந்திருக்க வேண்டும் என்ற யூகத்தையும் கூறுகிறேன்.

கத்தரிக்காய் இயற்கையாக நம் நாட்டில் விளைந்த பயிரல்ல. கிருஷ்ணதேவராயர் காலத்தில் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டதாகத் தெனாலிராமன் கதை ஒன்றுண்டு.

கத்தரிக்காயை மிகவும் பாதுகாப்பான ஒரு தனியான தோட்டத்தில் பயிரிட்டு பலத்த காவலும் போட்டிருந்தார் கிருஷ்ணதேவராய மன்னர். தெனாலிராமன் சாதுர்யாமாகத் தோட்டக்காவலர்களை ஏமாற்றிவிட்டு சில கத்தரிக்காய்களைத் திருடிக்கொண்டு சென்று மனைவியிடம் கொடுத்து இரவில் சமைக்கச் சொன்னான். தங்களது ஒரே மகனுக்கும் கொடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதால் அதற்கு ஒரு உபாயம் செய்ததான் தெனாலிராமன். கத்தரிக்காய் சகிதம் உணவு உண்டபின் திண்ணையில் அமர்ந்து மகனுடனும் மனைவியுடனும் உறவாடி, தன் மகனைத் தன்னையறியாமல் உறங்க வைத்த தெனாலிராமன் உறங்கிக்கொண்டிருக்கும் மகனின் மேல் தண்ணீரைத் தெளித்து, "மகனே, மழை பெய்கிறது, உள்ளே வந்து படுத்துக்கொள்" என்று கூறி உள்ளே படுக்கவைத்தான்.

அவன் மகன் மறுநாள் தன் நண்பர்களுடன் விளையாடும்பொழுது தான் கத்தரிக்காய் சாப்பிட்டதாகக் கூறிவிட்டான். இது மன்னர் காதுக்கு எட்டி, தெனாலிராமனைக் கத்திரிக்காய் திருடியதற்காக அரரசபையைக் கூட்டி அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டார். தெனாலிராமனின் மகனை சாட்சிக்கு அழைத்து அவன் விட்டில் கத்தரிக்காய் சாப்பிட்டானா என்று கேட்க அவனும் ஒப்புக்கொள்ளவே, தெனாலிராமனுக்கு தண்டனை தரப் போவதாக மன்னர் கூற, தெனாலிராமன் இடைமறித்து, "மன்னா, அவன் சின்னப்பையன், ஏதோ கனவு கண்டு உளறிகிறான். அவனிடம் அன்றிரவு மழைபெய்ததா என்று கேளுங்கள்" என்று கூறினான். மழை பெய்ததாகத் தெனாலிராமன் மகன் கூறவே தண்டனையிலிருந்து தெனாலிராமன் தப்பித்துக் கொண்டான்.

கத்தரிக்காய் அன்று முதல் பிரபலாமாகிவிட்டது. அது மட்டுமல்ல அது சமையலுக்கு மிகவும் ருசியானது. அனேகமாக கத்திரிக்காய் விற்காத காய்கறி வியாபாரிகளே கிடையாது, அத்துடன் அதை பேரம் பேசி வாங்காத இல்லத்தரசிகளே கிடையாதெனலாம். இதைத் தொடர்ந்து எதற்கெடுத்தாலும் கத்திரிக்காயை உதாரணம் சொல்லும் பழக்கம் நாளடைவில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப் படுத்தியிருந்த காலத்தில் ஒரு பிரபலமான பாடல் வழக்கிலிருந்தது:

"ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டாண்டா கத்ததரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி அவன்
காகிதம் போட்டாண்டா வெள்ளக் காரன்"

என்பதாகும்.

இந்த மரபிலே தான் காதலையையும் கத்திரிக்காயுடன் ஒப்பிடும் பழக்கம் வந்திருக்க வேண்டும்.

ஆகிரா


அம்மா!

அதெல்லாம் எதுகை மோனைக்காக சொல்லப்பட்ட வார்த்தையம்மா! இங்கே காதலை மட்டமாக சொல்ல நினைத்ததனால், அதற்கு ஏற்றாற்போல் கத்தரிக்காய் அதே முதல் எழுத்தில் பொருந்தி வருகிறது. இரண்டாவது கிராமங்களில் கத்தரிக்காய், முருங்கைகாய், வாழைக்காய் சர்வ சகஜமாக கிடைக்கும். எல்லோர் வீட்டிலும் இந்த மூன்று காய்கள் மாறி மாறி சமையலில் இருக்கும். மற்றபடி வேறு பெரிய காரணம் ஒன்றும் இல்லை அம்மா.

இத்தகைய வழக்கு சொற்கள் எளிமையானவை. நேரடியாக விஷயத்தை பட்டென்று உடைத்து சொல்பவை. பரிபாஷையாகவோ, பெரிய தத்துவத்தை மறைமுகமாகவோ சொல்வதில்லை. கிராம வழக்கு மொழிகள்.

kaazhi yuran


காதல், கத்தரிக்காய்

க க என்று வருவதால் இருக்கலாம். அல்லது கத்தரி போல் கழுத்தறுத்து உயிர் வாங்குவது காதல் என்பதால் இருக்கலாம். அல்லது யாரோ ஒரு "புத்திசாலி" கத்தரிக்காய் பறிக்கும் போது அவர் மனதை ஒரு தேவதை பறித்து சென்றிருக்கலாம், அதனால் விரக்தி அடைந்து இப்படி சொல்லி இருக்கலாம்.

"எல்லாமே "லாம்" தான்.

எது நிஜமென்று யாமறியேன் அம்மா!

- நிலாரசிகன்.

அன்புள்ள ஆகிரா,

கத்தரிக்காயின் இலக்கியப் பெயர் வழுதுணங்காய்; இது ஒரு பண்டைய தமிழ்நாடு அறிந்த காய்தான். கோவைக்காயின் உறவினர். பாடல் கிடைத்ததும் அறிவிக்கிறேன். கத்தரிக்காய் மிக எளிதில் விளையக்கூடிய, காய். திரு காழியூரான் கூறியது போல மிகவும் அறியப்பட்ட (மலிவான) ஒன்று. உண்மையான காதல் என்பது அப்படி எளிதாக, மலிவான பொருள் அல்ல என்பதற்காக "காதலென்ன கத்தரிக்காயா? உடனே உண்டாவதற்கு எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

மற்றுமொரு செய்தி கூட.

வான்கோழி 16ம் நூற்றாண்டு வரை ஆசியாவில் அறியப்பட்டதில்லை என பறவை நூல் வல்லுநர்கள் கூறுவதாக "மருத்துவர்" மாத இதழில் ஒரு செய்தி கண்டேன். வான்கோழி அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவிற்கு வந்து பிற இடங்களுக்கும் பரவியதாக இருக்க, எப்படி அவ்வையார் (16ம் நூற்றாண்டுக்கு முந்தியவர் என்பது சரியானால்) பாடலைப் பாடியிருக்க முடியும். எனவே "கானமயிலாட" பாடலே நான் முன்பு சொன்னபடி இடைச் செருகலாக (கம்பராமாயணத்தில் கூட 400 பாடல்கள் இடைச் செருகல் என ஆ.மு. ரா கூறுவதாக ஒரு செய்தி உண்டு) இருக்கலாமல்லவா?

அன்புடன்
செபரா

கத்திரிக்காய் மஹிமை

திருமதி விசாலம் அவர்கள் கத்திரிக்காய்-காதல் சந்தேகம் சூடு பிடித்துள்ளது போலிருக்கு. எது எப்படியோ நல்ல கத்திரிக்காய் அதன் மருத்துவ குணங்கள் சில இதோ:

1. ஊதா நிற பிஞ்சு கத்திரிக்காய் சூப் ஈரற்குலை(liver) க்கு நல்ல மருந்து. செயலற்ற, மந்தமான ஈரற்குலையை சரிப்படுத்தும்.

2. கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து அந்ததண்ணீரில் 14 தினங்கள் கையை அலம்பினால் அதிகமாக வேர்க்கும் (excessive perspiration) தன்மை குறையும்.

3. வேகவைத்த (cooked) கருஞ்சிவப்பு பிஞ்சு கத்திரிக்காயை வெண்ணையுடன் கலந்து ஒன்று அல்லது இரண்டு மாதம் சாப்பிட வைடமின் 'ஈ" கிரகிக்கும் தன்மை தேகத்தில் அதிகரிக்கிறது. ப்ரொஜெஸ்ட்றோன் ஹார்மோன் (Progestrone Hormone) சுரப்பதை தூண்டுகிறது, கருச்சிதைவு அபாயத்தை தடுக்கிறது. இது மலட்டுத்தன்மையின் காரணத்தை விலக்க மருந்தாக பயன்படுகிறது.

4. சிறு துண்டுகளான பிஞ்சு கத்திரிக்காயை பிசைந்த தண்ணீரை இரண்டு டேபில் ஸ்பூன் மணிக்கொரு முறை உட்கொள்ள(நச்சு பூண்டை உண்டதால்) ஏற்ப்பட்ட விஷத்தின் விளைவுகள் நீங்கிவிடும்,

கத்திரிக்காய் இலைகள்

கத்திரிக்காய் இலையின் சாறு ( Fresh juice)) 1/2 டேபில் ஸ்பூன் தேனுடன் கலந்து தினம் மூன்று வேளை சாப்பிட்டால் கக்குவாய் இருமல், ப்ராங்கிடிஸ் (Bronchitis), கபம், கோழை வெளிப்படுவதில் சிரமம், food pisonining இவை குணமாகும். இந்த சாற்றுடன் வேரின் சாற்றையும் கலந்தால் இதன் வீரியம் அதிகம் ஆகும். காய்ச்சலின் பொழுது தாகத்தின் அவஸ்த்தையை போக்க இந்த இலை, வேர் இவற்றின் சாறை (fresh juioce) இளநீரில் கலந்து குடித்தால் தவிப்பு குறையும்.

கத்திரிக்காய் விதை

1/2 - 1 க்ராம் விதையை மூன்று நாளைக்கு சாப்பிட்டால் ஒரு வருடத்திற்கு அம்மை நோய் வராமல் தடுக்கலாம். மூலம்--உணவுகளின் மருததுவத்தன்மை இதைத்தவிர நாய் கடிக்கு கத்திரிக்காயுடன் கடுகும் சேர்த்து தின்றால் குணமாகும் என்று ஒரு செய்தி பல வருடங்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் படித்துள்ளேன்.

பார்வணி

பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி (மூலப் புத்தகத்தின் ஆசிரியர் யார்?)

ஆனால், நாய்க்கடி குறித்த விஷயத்தில் மட்டும், "... .... மருத்துவரிடம் சென்று 'உடனடி' சிகிச்சை எடுத்துக்கொண்டபின், கத்திரிக்காயுடன் கடுகும் சேர்த்து தின்றால் விரைவில் குணமாகும் ... ..." என்று இருத்தல் நலம். இல்லையா?

விஸ்வநாதன்

அன்புள்ள ஆகிரா,

இதோ அந்தப் பாடல்.

புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்கிற ஒரு எளியவன் விருப்பத்தோடு ஔவையாருக்கு மிக எளிய உணவைப் படைத்தான். வரகு அரிசியைக் கொண்டு சமைத்த சோறு; கத்தரிக்கய்ப் பொரியல்; முரமுர வெனப் புளித்த மோர்; இதுதான் அவன் இட்டது. பசிக்கு ருசியான, ஆனால் மிக எளிமையான உணவு படைக்கப் பட்டபோது, (கவிஞருக்கு உணவின் தரம் பெரிதல்ல. அளிக்கும் மனமே முக்கியம் என்பதால்) கவிஞருக்கு எல்லா உலகங்களையும் ஈடாகக் கொடுத்தாலும் அந்த விருந்துக்கு இணையாகச் சொல்ல முடியவில்லையாம்! கவிதை பிறக்கிறது:

வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவென் றேபுளித்த மோரும் புல்வேளூர்ப்
பூதன் புகழ்பரிந் திட்டசோ
றெல்லா வுலகும் பெறும்!!

(வழுதுணங்காய் - கத்தரிக்காய்; புரிந்து - விரும்பி)

அன்புடன் செபரா.

அருமை! அருமை! செபரா, பார்வமணி அடி பின்னி எடுக்கிறார்கள். என்ன மாதிரி ஆழமான் ஆதாரம். அதே சமயம் எளிமை!

வழுதுணங்காய் கத்தரிக்காய்தான்.

சரி கத்தரிக்காய் பச்சடி சாப்பிட்டிருக்கிறீர்களா? யோகியற்கு பிடித்த ஒன்று.

(நாளைக்கு பிறகு கணிணி (கம்ப்யூட்டர்) அருகில வர இயலாது. இன்றே உங்களிடம் ஆசை தீர பேசி விட்டு போகிறேன்.)

kaazhi yuran

அன்பு உள்ளங்களே,

ஒரு கத்தரிக்காய பின்னால் இவ்வளவு விஷயமா! நிறைய புது புது விஷயங்கள் தெரிய வந்தது. அதோடு அன்பு பர்வமணி அவர்கள் அதன் மருத்துவப் பலனும் கொடுத்துள்ளார் திரு செபரா, அன்பு வேந்தன், திரு ஆகிரா முதலியவர்களும் எழுதியவைகள் என் தமிழ் அறிவை வளர்க்க கருவியாகின அன்பு விஜய் கருத்தும் சரியாகப் படுகிறது

நன்றி
அன்புடன் விசாலம்

அன்பு காழியூரர்ர் அவர்களுக்கு,

அடுத்த தடவை உங்களுக்கு கத்தரிக்காய் பச்சடி தரலாம் என்று நினைக்கிறேன். வழுதுணங்காய் என்ற சொல் இப்போதுதான் தெரியும். சீககிரமாக வந்து விடுங்கள்.

அன்புடன் விசாலம்

மஞ்சள், வேம்பு, மிளகு போன்ற பல பொருட்களின் மருத்துவ குணங்களை தாங்கள் தான் கண்டறிந்ததாக அமெரிக்கா கூறி அதை பேடண்ட் செய்யவும் முயலவில்லையா?

வான்கோழியும் அந்த கதைதான்.

பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளை ஆய்ந்தால் நிறைய குறைபாடுகள் தெரியும். யாரும் அவ்வளவு ஆழ்ந்து பார்ப்பதில்லை என்ற தைரியத்தில் பெரும்பாலான் ஆராய்ச்சிகள் உள்ளன.

பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி குறிப்பு என்று சொன்னதும் நமுட்டு சிரிப்பு சிரிப்பதை பல முறை கண்டிருக்கிறேன். சிரத்தையோடு செய்யப்பட்டும் ஆராய்ச்சிகள் மிக குறைவு. அதுவும் முன் கூட்டியே ஒன்றை தீர்மானிக்காமல் மெய்யை கண்டறியும் பொருட்டு ஆராய்பவர்கள் மிக குறைவு. அவ்வாராய்ச்சிகள்தான் இன்று வரை நமக்கு உபயோகமாக இருக்கின்றன.

சரி, வான்கோழி விஷயத்திற்கு வருவோம். இதன் பெயர் துருக்கியோடு சம்மந்தப்பட்டு இருக்கிறது. சரி, துருக்கியில் இதை என்னவென்று அழைக்கிறார்கள்? ஹிந்தி என்று அதாவது இந்திய கோழி. இவர்கள் சிவப்பிந்தியர்களை குறிப்பிடுகிறார்களோ என்று பார்த்தால் சிவப்பிந்தியர் வெளியே தெரிவதற்கு முன்னமிருந்தே இந்த பெயர் தான் துருக்கியில்.

ஸ்பெயின் தேசத்தில் இருக்கும் கடெலன் மொழியில் "கால் டிண்டி"...அதே இந்திய கோழி.

பழமையான ஹீப்ரு மொழியில் டார்னெஜல் ஹோடு...அதே இந்திய கோழி. ஹோடு என்றால் இந்தியா.

ரஷ்ய மொழியில் இண்டிக்.

சரி...வான்கோழி மயிலை விட ஒரு விதத்தில் சிறந்தது. ஆண்கோழி துணையின்றி, புணர்ச்சியின்றி முட்டையிட அதனால் இயலும். ஒரு வேளை விந்தை சேகரித்து வைத்துக் கொள்ளுமோ?

இன்னொரு வேடிக்கையான் விஷயத்தையும் பார்ப்போம்.

எகிப்தில் இதன் பெயர் கிரேக்க பறவை. ஆக இது கிரேக்கத்திலிருந்து இவர்களை இதை அறிந்தனர்.

கிரேக்கத்தில் இதன் பெயர் ஃப்ரென்சு பறவை. ஆக ஃப்ரான்ஸிலிருந்து வந்திருக்க வேண்டும்.

ஃப்ரான்ஸில் இதன் பெயர் போலே டெ இன்டி. இந்தியாவில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் மாத்திரமே இந்த கோழி எந்த தேசத்தின் பெயரையும் குறிப்பிடாமல் சொல்லப்படுகிறது. அதுவும் முக்கியமாக தமிழில்.

அமெரிக்காவில் மர்மமான‌ மாயன் கலாசாரத்தில் இந்த கோழி ஒரு முக்கிய அங்கம் வகித்திருக்கிறது.அவர்கள் கண்டம் விட்டு கண்டம் சுலபமாக பிரயாணித்தவர்கள். எனவே அப்படி இந்த கோழி அங்கிருந்து வந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பே வந்திருக்கலாம்.

kaazhi yuran

அன்பு செபரா,

அருமையான பாடல்.

அதற்குப் பரிசாக இதோ வழுதுணங்காய் சாதம்:

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொத்துமல்லி விதைகள், சில வரமிளகாய்கள் இவற்றுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து மிஃஸியில் பொடி செய்துகொள்ளவும். இதுதான் கத்தரிக்காய் சாதப் பொடி. இதை ஒரு பாட்டிலிலோ, தகர டப்பாவிலோ மூடி வைத்து சிறிது சிறிதாக உபயோகித்துக் கொள்ளலாம்.

வாணலியில் சிறிது பசுநெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை தாளிதம் செய்து அதில் கத்தரிக்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கிப் போட்டு நன்றாக வெந்தபின் சிறிதளவு மேற்சொன்ன பொடியைப் போட்டுக் கலக்கியபின் நன்றாக வெந்து வடித்த சாதத்தைப்போட்டு ருசிக்கேற்ற அளவு உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கி சாப்பிட்டால் சலிக்கவே சலிக்காது.

குழந்தைகள் இப்பதார்த்தத்தை மிகவும் விரும்பி உண்பர்.

நீல நிறமுள்ள விதைகள் அதிகம் இல்லாத கத்தரிக்காய் தான் கத்தரிக்காய் சாதத்திற்கு உகந்தது.

வெள்ளை நிறத்தில் விதைகள் நிறைந்திருக்கும் கத்தரிக்காய் எண்ணெய்க் கத்தரிக்காய் செய்ய உகந்தது.

ஆகிரா

Brinjal additional information

அன்பு நேயர்களே.

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள் எழுதியதில் முக்கிய எச்சரிக்கை விடுபட்டு விட்டது. அதை இப்பொழுது தருகிறேன், சேர்த்துக்கொள்ளவும்.

பச்சை-மஞ்சள் நிற கத்திரிக்காயை அதிகமாக உண்ணுவது ஆரோக்கியமல்ல. அது அமிலத்தை நம் systemல் ஏற்படுத்தும். குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படும் உடல்தன்மை உடையவர்கள் (Allergic diathesis), மேலும் உஷ்ண தேகம் உடையவர்களும் குறைவாக உண்ணுவது நல்லது.

கர்பிணிகள் கத்திரிக்காயை தவிர்கவும்.

அன்பு விஷி,

மூல புத்தகத்தின் விவரம்

Medical aspects of your food
by
Oscar Laureate Sir. Prof. Dr. AMAN. K.C.R.K.J
(Knight commander of Royal Knights of Justice)

பார்வமணி

க்த்திரிக்காய் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அதுவும் முள்ளிருக்கும் கத்திரிக்காய். பம்பாயில் கண்டங் கத்திரியின் நிறத்தில் ( வெள்ளைக் கோடுகளுடன் பச்சை). அதுவும் மிக ருசியாக இருக்கும். எப்போது நான் கறிகாய் வாங்கினாலும் அதில் கத்திரிக்காய் உண்டு.

பாவம் கத்திரிக்காய். அதற்கு எதிரிகளும் உண்டு. அவர்கள் கத்திரிக்காய் சாப்பிட்டால் சரும வியாதிகள் வரும் என்று கதை திரிப்பார்கள். சுட்ட கத்திரிக் காய் பச்சிடி, துவையல், வட இந்திய தயாரிப்புகளான பகாரா பைங்கன் மற்றும் பைங்கன் பார்த்தா இவற்றை நினைத்தாலா நாக்கில் ஜலம் ஊறும்.

நடராஜன் கல்பட்டு

கத்தரிக்காயைபற்றி எல்லோரும் ஒவ்வொரு அபிப்பிராயம் எழுதியதை படித்தபின் எனக்கு கத்தரிக்காயில் செய்யும் சிதம்பரம் கொத்ஸு நினைவுக்கு வருகிறது. செய்முறை விளக்கம் இங்கே,

தேவையானவை;

பிஞ்சு கத்தரிக்காய் - கால்கிலோ.
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் அளவு
உப்பு - தேவையான அளவு
சமயல் எண்ணை (தாளிக்க) 4 டீ ஸ்பூன்
ந்.எண்ணை - 2 டீ ஸ்பூன்
பொடி (மசலா) அரைக்க - தனியா 2 ஸ்பூன்,
க.பருப்பு- 1 1/2 டீஸ்பூன்
- உ.பருப்பு 1/2 டீ ஸ்பூன்
- பெருங்காய பொடி
வர மிளகாய் - தேவைக்கு ஏற்ப 4 அல்லது 5

கரு வேப்பிலை

செய் முறை

மசாலா சமாங்களை எண்ணை விட்டு சிவக்க வருத்து, பொடி செய்யவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கத்திரிக்கயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும் எண்ணை விட்டு காய்ந்தவுடன், கடுகு தாளித்து பின் அதன் மேல் உரித்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியவுடன், கத்திரிக்கயை இட்டு வதக்கவும்.

பிறகு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கவும். சிறிது வெந்தவுடன், பொடித்த மசாலா பொடியை தூவி வதக்கவும். 2 நிமிடம் வதங்கியதும், கெட்டியாக கரைத்து வைத்த புளியை அதன்மேல் ஊற்றி (அடுப்பு simல் இருப்பது நல்லது). கொதிக்கவைக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் கருவேப்பிலை போடவும். (மிகவும் தண்ணியாக் இருந்தால் கொஞ்சம் அரிசிமாவை கரைத்துஇடவும்). இறக்குவதர்க்கு 2 நிமிஷகள் முன், ந. எண்னை சிறிது ஊற்றி, கொதித்தவுடன் இறக்கவும்.

இது, இட்லி, தோசை, மற்றும் சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

என் மாமியாரின் 'ஃபவெரிடெ' ரிசிப்பி.

செய்ய நீங்கள் தயாரா?

புஷ்பா ராகவன்

adangonniyaa! kaththarikkaai endrae oru mega serial ezuthalaam polullathae! ezhuthi vidugiren mazhalaigal thalaththil. naan enathu Laptop kaniniyilirundhu kathaikkiren. innum azgagu Install seiyavillai.

ஆகிரா

அட! நான் இரண்டு, மூணு நாளா வரவே முடியலை, அதுக்குள்ளே கத்திரிக்காய் பத்தி ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்திருக்கே? கடைசியிலே கதையும் முடிஞ்சு கத்தரிக்காயும் காய்ச்சிருக்கு போல. சிதம்பரம் கொத்சு பத்தி நம்பிக்கைக் குழுமத்தில் நானும் போட்டிருக்கேன். வேணும்னா இங்கேயும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants