-
புதுக்கார் வாங்கலாமா?
- தேனீ மாமா
1996ம் ஆண்டு பிறந்த என்னுடைய பழைய மாருதி காரை என் பிள்ளைகளின் நண்பர்கள் அனைவரும் பீஎம் டபிள்யூ என்று செல்லமாக அழைத்து மகிழ்வர், மிகவும் ராசியான கார். நான் அதற்கு இரண்டாவது சொந்தக்காரன் ஆனாலும் நான் வாங்கியது முதல் எனக்கும் அந்தக் காரை மிகவும் பிடித்தது. அந்தக் காருக்கும் என்னை மிகவும் பிடித்ததுப் போலிருக்கிறது. மிக நன்றாக என் வீட்டில் நிகழ்ந்த திருமணங்கள், மற்றும் பல முக்கியமான தருணங்களில் என்னுடன் ஒத்துழைத்து எனக்கு மிகவும் வேண்டப்பட்ட உறவினர் போல ஆயிற்று. நானும் அவ்வப்போது கார் சர்வீஸ் செய்யும் நிறுவனங்களில் கொண்டு போய் என்ன பிழைகள் இருந்தாலும் சரி செய்து ஓட்டிக்கொண்டிருந்தேன்.
என் காரினால் பல கார் சரி செய்யும் நிறுவனங்களும் மற்றும் நடைபாதைப் பொறியாளர்கள் அனைவரும் முன்னுக்கு வந்தனர், நானும் முன்னுக்கு வந்தேன், ஏனென்றால் எப்போதும் நான்தானே அந்தக் காரை ஓட்டுவேன். அதனால் முன்னாலே தான் இருந்தேன். என் பிள்ளைகள் அப்பா இந்தக் காரை விற்றுவிட்டு புதியதாக ஒன்று வாங்குங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர். நானும் பொருளாதார நிலையை மனதில் கொண்டு புதுக்கார் வாங்கும் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்.
இனி வேறு வழியில்லை என்னும் நிலையில் சரி, இந்தக் காரை விற்றுவிட்டுப் புதுக்கார் வாங்கி விடுவோம் என்று முடிவுக்கு வந்து விற்பதாக அறிவித்தேன். அப்பப்பா! என்ன போட்டி என் காரை வாங்குவதற்கு! எனக்கு எனக்கு என்று நிறைய பேர் வந்தனர். அவர்கள் எல்லாமே என் காரை இருசக்கர வாகனத்தின் பாதி விலைக்குக் கேட்டதால் மிகவும் யோசித்து, பிறகு அடிக்கடி என் காரை சரிசெய்து கொடுத்த நடைபாதைப் பொறியாளரை அழைத்து அவருக்கு ஒரு நியாயமான விலைக்கு அளித்தேன். மனதுக்கு சற்றே நிறைவாக இருந்தது. அவரிடம் காரை அளிக்கும் போதே என் காரைத் தட்டிக்கொடுத்துவிட்டு, பிரியா விடை பெற்றேன்.
சரி, இப்போது புத்துக்கார் வாங்கும் படலம் ஆரம்பம்.
"என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்" என்று ஒரு பழைய பாடல் காதிலே ஒலித்தது. அது போல என்ன காரு வாங்கலாம் எப்பிடி வாங்கலாம் என்று பாட ஆரம்பித்தேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு காரைத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் சில கார்கள் நம்முடைய நிதி நிலைமைக்கு ஒத்து வரவில்லை. நம்முடைய நிதி நிலைமைக்கு ஒத்து வரும் கார்கள் மனதுக்குப் பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் டாடா நிறுவனத்தின் புதிய நேனோ கார் வாங்கலாம் என்று நினைத்து அவர்களிடம் கேட்டேன். அவர்கள், "ஐயா, ஏற்கெனவே சென்ற ஏப்ரல் மாதத்தில் பதிந்து வைத்திருப்பவர்களுக்கே இந்த ஜூலை மாதத்தில்தான் கார் வழங்கப் போகிறோம். மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோம். அதைப் பார்த்துப் பதிந்து கொள்ளுங்கள். கூடிய விரைவில் அளித்துவிடுகிறோம்." என்றனர்.
ஓ, அதற்கு இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தோன்றியது. நம்முடைய உடல் இருக்கிறதே அது நாயைப் போல, எப்படிப் பழக்குகிறோமோ அப்படி இருக்கும். நான்கு சக்கர வாகனம் இல்லாமல் இனி இருக்க முடியாது என்னும் சுகத்துக்குப் பழகிவிட்ட நான் உடனே வேறு நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டிய கட்டாயத்தால் சரி வாங்கிவிடுவோம் என்று முடிவு செய்தேன். நம்மைப் போன்ற நடுத்தர வர்கத்துக்கேற்ற நான்கு சக்கர வாகனம் தயாரிக்கும் நான்கு சக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்துக்குச் சென்று, காரை ஓட்டிப் பார்க்க அனுமதி வாங்கிக் கொண்டு, ஓட்டிப் பார்த்துப் பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்து அங்கே போனேன். அதற்கு முன்பாக இணையதளத்திலுள்ள அவர்களது தளத்துக்குச் சென்று நிறம், மற்றும் விலை எல்லாம் எழுதி ஒரு பட்டியலே தயார் செய்து கொண்டேன்.
நான்கு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும் பல நிறுவனங்களுக்குச் சென்று பேட்டி எடுக்க வேண்டும் என்று கூறி அவர்களது தொழில் எப்படி நடக்கிறது, எவ்வாறு அவர்கள் வாடிக்கையாளரை த்ருப்திப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கேட்டுவிட்டு, அதிக அளவில் பழுது பார்க்க வரும் நான்கு சக்கர வாகனங்களின் பட்டியலைத் தயார் செய்தேன். அந்தப் பட்டியலை வைத்து எந்த நான்கு சக்கர வாகனத்தை வாங்க்கக் கூடாது என்று முதலில் முடிவு செய்தேன். பிறகு எந்த வாகனத்தை வாங்கலாம் என்று தேர்ந்தெடுத்தேன்.
இணைய தளத்தில் அவர்கள் போட்டிருக்கும் விலையை விட அதிகமான விலையை அவர்கள் கூறினர். அதற்குப் பெயர் சாலையின் மேல் ஓடும் தகுதி என்று பெயர் கொடுத்து ஒரு கணிசமான தொகையை அந்த வாகனத்தின் மேல் ஏற்றி வைத்திருந்தனர். ஆனாலும் நாம் வாங்கும் போது மொத்தமாக முழுப் பணத்தையும் செலுத்தப் போகிறோமா, அல்லது கடனில் வாங்கப் போகிறோமா என்று கேட்கிறார்கள். கடனில் வாங்க அவர்களே ஏற்பாடுகளும் செய்து தருகிறார்கள். நானும் வங்கிகள் அளிக்கும் கடனுக்காக நம்மிடமிருந்து அவர்கள் வட்டியாக எவ்வளவு வசூலிக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தேன். கிட்டத்தட்ட வாகனத்தின் விலையைவிட ஒரு லக்க்ஷ ரூபாய் வட்டியாக வசூலிக்கிறார்கள் என்று உணர்ந்தேன், அதனால் மொத்தத் தொகையைக் கட்டுவதாகக் கூறினேன். அவர்கள் உடனே மொத்த விலையிலிருந்து 15000 ரூபாய்கள் கழித்துக்கொள்வதாகக் கூறினர், ஆயினும் அவர்கள் கூறிய தொகையை மற்றொரு விற்பனையாளரிடம் சற்றே மிகைப்படுத்தி அவர்கள் எனக்கு 17000 ரூபாய் கழித்துக்கொள்வதாகக் கூறினேன். அப்போது அந்த விற்பனையாளர் சரி நாங்கள் 18000 ரூபாய் கழித்துக்கொள்கிறோம் என்று கூறினர். இப்படியாகப் பல விற்பனையாளர்களிடம் பேசி, கடைசியில் 20000 ரூபாய் கழித்துக்கொள்வதாகக் கூறிய நிறுவனத்திடம் வாகனம் வாங்க ஒப்புக்கொண்டு மொத்த பணத்தையும் செலுத்தினேன் காசோலையாக.
ஒரு ஆசையில், "என் வாகனத்துக்கு என்ன எண் அளிப்பீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உங்களுக்கு பல எண்கள் அளிக்கிறோம், அதிலே உங்களுக்கு விருப்பமான எண்ணை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்" என்றனர். நானும் மகிழ்ந்து போய், "சரி, எண்களைக் கூறுங்கள்" என்றேன். அதற்கு அந்த விற்பனையாளரின் ப்ரதிநிதி, "அது இங்கே கிடைக்காது, வாகனங்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தில்தான் கிடைக்கும், அதற்கு நீங்கள் தனியாக ஐயாயிரம் ரூபாய்கள் செலுத்த வேண்டும், அப்போதுதான் அந்தச் சலுகை கிடைக்கும்" என்றார்.
அதற்குப் பிறகு அவர் என்னை அந்த நிறுவனத்தின் மாடிக்கு அழைத்துச் சென்றார். நீங்கள் புதிய வாகனம் வாங்குகிறீர்கள், அதனால் அந்தப் புதிய வாகனத்துக்கு வேண்டிய முக்கியமான சாதனங்களான பாடும் கருவி, அதை ஒலிபெருக்கும் கருவி, மற்றும் இருக்கைக்கு மேல் போடும் உறை போன்ற சாதனங்களையெல்லாம் காண்பித்தார். நானும் ஆசையோடு தெரிந்தெடுத்து அவைகளைப் பொறுத்தச் சொன்னேன்.
எல்லாம் பொருத்திய பிறகு அவர் கூறிய தொகையை அளித்தேன். கணக்குப் போட்டுப் பார்த்தால் அவர்கள் நாம் வாங்கும் போது கழித்த தொகையைவிட அதிகமான தொகையை நான் செலவு செய்திருப்பது தெரிந்தது.
நல்ல வியாபாரிகள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













