தாயென்று கும்பிடடி பாப்பா
- பாம்பும், ஏணியும்!
ஜோதிடர் காயத்ரி
விடுமுறை நாட்கள் வந்தாலே பிள்ளைகளுக்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்! பதுக்கி வைத்திருந்த பம்பரம் முதல் பட்டம் வரை அனைத்தையும் ஒரு கை பார்ப்பதில்தான் எத்தனை சந்தோஷம்? நம்மால் பரம பத சோபானம் என்றும், பிள்ளைகளால் ஸ்நேக்&லேடர் என்றழைக்கப்படும் பாம்பு, ஏணி ஆட்டம் விறுவிறுப்பானது. பகடைக்காயை உருட்டிப்போட்டு விழும் எண்ணின் அடிப்படையில் காய்கள் நகரும். சர்ரென்று ஏணியில் ஏறும் போது மகிழ்ச்சி பொங்கும். பாம்பின் வாயின் வழியே இறங்கும் போது உற்சாகம் குன்றி விடும்.
பல நேரங்களில் பிள்ளைகள் ஐந்து விழுந்தால் வெற்றி, இரண்டு விழுந்தால் வெற்றி என்று சொல்லி ஆடி வெற்றிப் பெறுவர். இநத விளையாட்டின் தத்துவத்தை வாழ்க்கைக்கும் பொருத்திப் பாருங்கள். பல உண்மைகள் விளங்கும். வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி, இன்ப துன்பம், ஏற்ற இறக்கம் அனைத்தையும் கொண்ட ஒரு சுவாரசியமான ஆட்டமாகும். பாம்பு, ஏணி ஆட்டத்திலாவது பாம்பு எங்கிருகிறது, ஏணி எங்கிருக்கிறது என்று நமக்குத் தெரியும். எவ்வளவு போட்டால் வெற்றி பெற முடியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் வாழ்விலோ பல ஆச்சரியங்கள், பல திருப்பு முனைகள் இருக்கும். அவை எப்போது வரும்? அந்தத் தேடல்தான் நம்மை உந்தித் தள்ளும் சக்தியாகும். அதைத் தெரிந்து கொள்ளும் பயணத்தில்தான் மனிதன் பல பாடங்களைக் கற்கிறான்.
பல நேரங்களில் ஏணியில் ஏறியிருப்போம். உடனே பாம்பின் வாயில் மாட்டிக் கொள்வோம். அதாவது ஒரு இன்பம் அல்லது மகிழ்ச்சியை அனுபவித்து வெளி வரும் முன் அடுத்த சங்கடமான நிகழ்வு வந்து விடும். பிறகு மீண்டும் ஏணி, மீண்டும் பாம்பு. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும். இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை. இதில் இன்பம் நம்மைத் திணற வைக்கும். ஆனால் அது நம் பயணத்தின் வேகத்தைக் குறைத்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பது நல்லது. துன்பம் நம்மை வீழ்த்தி விடாமல் பார்த்துக் கொண்டால், நம்முள் மறைந்து கிடைக்கும் பல ஆற்றல்கள் வெளிப்பட்டு பிரச்னையின் வேரைக் களைந்து விடும். மீண்டும் நம் பயணம் தொடரும். அது மட்டுமல்ல. பாம்பின் வாய் போல் நம்மை, நம் திறமையை விழுங்கி விட பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அறிவு, நம்பிக்கை, தைரியம் ஆகிவற்றின் துணை கொண்டு இந்த பாம்புகளை வீழ்த்தி நாம் வெல்ல முடியும்.
நம் வாழ்வில் ஏணி போல் நம்மை ஏற்றிவிட, நம் பெற்றோர், நல்ல நண்பர்கள், நல்ல ஆசிரியர்கள் என்று பலர் உள்ளனர். அவர்கள் சொல்லும் நல்லவற்றின் படி நடந்தால், படிப்படியாக முன்னேற்றம்தான்! பகடைக்காய்தான் நம் முயற்சி. அதை உருட்டி ஆடும் லாவகத்தில்தான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. படம் இருக்கிறது, காய்கள் இருக்கின்றன. ஆடாமல் இருந்தால் வெற்றி ஏது? தோல்வி ஏது? முயற்சி செய்பவருக்கே வாழ்க்கை நன்றாக அமைகிறது. அது மட்டுமல்ல. மற்றொரு பாடமும் நம் கற்றுக்கொள்ள முடியும். நேர்மையாக ஆடுபவர்க்கு வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விடும். அப்பொழுது நடு நிலையாக செயல்பட முடியும். வாழ்க்கையைப் பற்றி த் தெளிவான சிந்தை இருக்கும்.
வெற்றி பெறும் வரை வரை நாம் ஓய்வதில்லை. அதே போல் தோற்றாலும் நாம் விடுவதில்லை. மீண்டும் வெற்றி பெறும் வரை நாம் முயற்சி செய்வோம். சுவாரசியமான ஆட்டம் ஏணியும், பாம்பும்! ஆடிப்பாருங்கள் வாழ்க்கை பலவற்றை நமக்கு கற்றுத்தரும்!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















