புது வருடப்பிறப்பு
தமிழ்த்தேனீ
அன்புக் குழந்தைகளே,
ஏப்ரல் 13 தேதி, சித்திரை மாதம் 1ம் தேதி பிறக்கிறது. இந்த சித்திரை மாதப் பிறப்பில் சர்வஜித்து ஆண்டு முடிந்து, சர்வதாரி வருஷம் பிறக்கிறது.
நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம். சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள். காலை, நடுப்பகல், பிற்பகல் என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும் இடமாயிருக்கும் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்தரம், இத்வத்ஸரம் ஆகிய ஐவகை வருஷங்கள், அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்.
இளவேனில் (வசந்த ருது), ருதுவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது), முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது). ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள். காயத்திரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, திருஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி ஆகிய ஸப்த சந்தஸ்ஸுகள் ஏழு குதிரைகளாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன, துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு. தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. சூரியனே `தேவயான மார்க்கம்’ அது அர்ச்சிராதி மார்க்கம் எனவும் சொல்லப்படும். புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும்.
வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.
சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.
இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.
நாமும் வருஷப் பிறப்பன்று இறைவனைத் தரிசித்து இந்த வருஷம் நமக்கெல்லாம் இனியதாக இருக்கப் ப்ரார்த்தனை செய்வோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ






Your Feedback








