பூரண நிலவு
தமிழ்த்தேனீ
அன்புக் குழந்தைகளே,
21/03/2008 வெள்ளிக் கிழமை பூரண நிலவு நாள். பௌர்ணமி, அதுவும் மிகச்சிறந்த நாள் ஆமாம், சர்வஜித் வருஷம் பங்குனி மாதம் 8 ம் தேதி பௌர்ணமி தினமே விசேஷம். அதிலும் 21/03/2008 வெள்ளிக் கிழமை உத்திர நக்ஷத்திரம்,அதாவது பங்குனி உத்திரம் என்று சொல்லக்கூடிய புனிதமான தினம்.
இந்த நாளில் அனைத்து ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. சாதாரணமாக சிறு குழந்தைகளுக்கு வெள்ளிக் கிண்ணத்திலே பால் சாதம் ஊட்டுகின்ற அன்னை, நிலாவைக் காட்டி பால்சாதம் ஊட்டும் வழக்கம் உண்டு. அப்பேர்ப்பட்ட பௌர்ணமியிலும் வெகு சிறப்பான பௌர்ணமி. இந்த நாளில் மீன ராசியில் நிலவு இருப்பதால், ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று உத்திர நகஷத்திரத்துடன் கூடி நின்று மிகுந்த ஒளியுடன் எவ்வித களங்கமும் இல்லாமல் ஒளியுடன் சந்திரன் திகழும்.
இந்த நாளில் சந்திரன் வழங்கும் இந்த ஒளி,அனைத்து ஜீவராசிகளுக்கு, மிகுந்த சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தரும், ஏனென்றால் இந்த நாளிலேதான் சந்திரன் 27 மனைவியரை, அதாவது 27 நக்ஷத்திரங்களை அடைந்தான், அதனால் சந்திரனும் சந்தோஷமாக இருந்து நம்மையும் சந்தோஷமாக இருக்க வைக்கும் நாள்.
பாற்கடல் கடையப்பட்ட போது மஹாலக்ஷ்மி இந்த நாளில்தான் தோன்றி மஹாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்தாள்.
ஈச்வரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிகழ்ந்த அற்புத நாளிது. கற்பகாம்ப்பாள், கபாலீஸ்வரரையும், ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கனாதரையும், ஸ்ரீவில்லிபுத்தூர்ச் செல்வி கோதைஆண்டாள் அவள் கண்ணன் வடபத்ரசாயியையும், சீதா தேவிக்கும் ஸ்ரீ ராமனுக்கும் திருமணம் நடந்த நாள், ஊர்மிளாவுக்கும் ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணனுக்கும் திருமணம் நடந்த நாள். மாண்டவிக்கும், பரதாழ்வார் என்று சொல்லக்கூடிய பரதனுக்கும் திருமணம் நடந்த நாள். ஸ்ருதகீர்த்திக்கும்,சத்ருக்குனனுக்கும் திருமணம் நடந்த நாள்.
இந்திரனின் வளர்ப்பு மகளாக முருகப் பெருமானின் மனைவி தெய்வானை ஏற்கப்பட்ட நாள், திருப்பரங்குன்றம் திருமுருகன் தெய்வயானையையும் திருமணம் செய்த நாள். ஸரஸ்வதி தேவியை தன்னுடைய நாவில் வைத்துக் கொள்ளும்படியான வரத்தை ப்ரும்மா பெற்றது இந்த நாள். பிரிந்திருந்த இந்திராணியுடன் இந்திரன் மீண்டும் இணைந்த நாள் இந்த நாள்.
அது மட்டுமல்ல, இந்த பௌர்ணமி தினத்தில் மத நல்லிணக்கமாக இஸ்லாமியர்களின் மிலாடி நபி,கிரிஸ்தவர்களின் புனித நாளான புனித வெள்ளி அனைத்தும் ஒரே நாளில் கூடியிருக்கும் நன்னாள்.
நாமும் கொண்டாடுவோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ



Your Feedback








