கண்ணே மணியே! கவிதை கேளு!
என்.வி. சுப்பராமன்
எனது கவிதை நூல்
அன்பு நெஞ்சங்களேகாலம் விரைவாக மாறி வருகிறது. சமுதாயம், உலகம், மக்கள், உயிரினங்கள், அனைத்துமே, அனைவருமே மாபெரும் மாற்றங்களைக் கண்டு வருகின்றனர். ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் இருந்த குழந்தைகள், சிறுவர், சிறுமியர் போன்று இக்காலத்தவர் இல்லை. இப்பிராயத்தில் அறிவுத்திறன், அணுகுமுறை, கூர்ந்து நோக்கும் திறன் அனைத்தும் மிகப்பெரிய அளவில் இன்று மாறியிருப்பதைக் காண்கிறோம். இம் மாற்றங்களை மனத்தில் கொண்டு மழலையர்க் கான கவிதை உலகத்தைப் புதியதாகப் படைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்; கவிஞர்களின் பொறுப்பு.
"கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் திங்கலாம் கை வீசு"
காலம் மாறி விட்டது. இது பள்ளிக்குச் செல்லும் காலம்!
"நிலா நிலா ஓடி வா
நில்லாமலே ஓடி வா
நிலாச் சோறு தின்னவா
பாலும் தேனும் கொண்டு வா"
காலம் மாறி விட்டது. இது நிலாவினுக்குள் கால் வைக்கும் காலம்!
"தங்கையே பார் தங்கையே பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்
அக்காவும் தங்கையும் போல்
அவை செல்லும் அழகைப் பார்"
காலம் மாறி விட்டது. இது கணினியைக் காணும் காலம்!
"மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்"
காலம் மாறிவிட்டது.அந்த மாஞ்சோலைகளைக் காப்பது நம் கடமை எனக் குழந்தைகள் மனத்தில் பதிய வைக்க வேண்டிய காலம்!
இந்த யுகம் புதிய யுகம்! கணினி யுகம் -இந்தப் புதிய யுகத்தின் தேவைக்கேற்ப, குழந்தைகள், சிறுவர் சிறுமியர் எண்ணத்தின், சிந்தனையின் மாற்றங்களுக்குத் தக்கவாறு கவிதைகள் எழுதப்பட வேண்டும்.
தலை சிறந்த குழந்தைக் கவிஞர்கள் அழ. வள்ளியப்பா, சக்திக் கனல், நீல. பகவன் ஆகியோரது குழந்தைக் கவிதைகள் என்னை ஆட்கொண்ட காலம் உண்டு. அவர்களது கவிதைத் திறம் கண்டு, குழந்தைகளை ஈர்க்கும் திறன் கண்டு, வியந்து நானும் அவர்களைப் போன்று, சிறுவர்களுக்கு ஏற்றவாறு கவிதைகள் புனைய வேண்டும்; காலத்திற்கேற்ற கருத்துக்களையும், கண்ணோட்டங்களையும் கவிதை மூலம் அவர்களுக்குத் தர வேண்டும் என்ற உந்துதலின் விளைவே இக்"கண்ணே மணியே! கவிதை கேளு!" என்ற குழந்தையர்க்கான கவிதைத் தொகுப்பாகும்!
60 கவிதைகள் கொண்ட இத் தொகுப்பை எட்டுப் பகுதிகளாக ஆக்கியுள்ளேன். சிறு பிராயந்தொட்டே, நல்லனவற்றைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு, இந்தப் பகுதிகளின் தலைப்புக்கள் "இறைவன் போற்று!", "இயற்கை போற்று!", "சான்றோர் போற்று!", "உயிர்கள் போற்று!", "மனித நேயம் போற்று!", "நாட்டைப் போற்று!", "புதுமை போற்று!", "ஆளுமை போற்று!" என அமைக்கப்பட்டுள்ளன.
இந்நூல் வெகு விரைவில் அச்சிடப்பட்டு, புத்தகமாக வெளிவர உள்ளது. இக்கவிதை நூல் உருவாகத் துணை நின்ற திருமிகு காஞ்சிக் கவிஞர் நீல. பகவன் அவர்களுக்கு எனது உளமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எனது முந்தைய ஏழு நூல்களையும் மகிழ்வொடு ஏற்ற தமிழ் கூறு நல்லுலகம், இக்கவிதைத் தொகுப்பையும் வரவேற்று, என்னை ஊக்குவிக்கும் என்ற முழுநம்பிக்கையோடும், மன நிறைவோடும்..
என்.வி சுப்பராமன்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















