எந்தையும் தாயும்
- ஆகிரா
கல்விக் கண்
தாயோடறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம்சேயோடு யாம் பெற்ற செல்வம்போம்
எங்கள் இளமைக் காலங்களில் எங்களுக்கு குருவாகவும் உற்ற தோழனாகவும் விளங்கிய என் தகப்பனார் தமிழறிவு மிக்கவர். தேவாரம், திருவாசகம் இரண்டிலும் உள்ள அருந்தமிழ்ப் பாடல்களை இசையுடன் பாடி அன்றாடம் தெய்வ வழிபாடு செய்த பின்னரே அலுவலகம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர் அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் பாடங்களில் நான் கேட்கும் சந்தேகங்களுக்குத் தகுந்த விளக்கம் சொல்லி அவ்விஷயங்களை உதாரணத்துடன் எடுத்துரைத்தார். முக்கியமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு பாடங்களிலும் எனக்கு எழும் சந்தேகங்களை மிகத் தெளிவாக விளக்கக்கூடிய குரு அவர் ஒருவர்தான்.
1969ஆம் வருடம் S.S.L.C. (11ஆம் வகுப்பு) தேறிய என்னை கோவை பெரியநாயக்கன் பாளயத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (P.U.C.) இயற்கை விஞ்ஞானப் பிரிவில் சேர்த்தார் என் தந்தை. இக்கல்லூரி ராமகிருஷ்ண மடத்துக்கு இந்திய் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு பெற்றவரும், சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் வழங்கப்பட்டு மிகச் சிறப்பாக அன்று முதல் இன்றும் பணியாற்றி வருகிறது. கல்லூரியின் உள்ளே ஆங்காங்கே நிழல் தரும் மரங்களும் பல கட்டடங்களும், அவற்றை இணைக்கும் பாதைகளும் செவ்வனே அமைந்துள்ளன.
வாரந்தோறும் வெள்ளிக் கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் குரு பூஜை நிகழ்ந்த பின்னரே வகுப்புப் பாடங்கள் தொடருவது அங்கு வழக்கம். வருடந்தோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை குரு பூஜை ஒரு பெரிய விழாவாகக் கொண்டாடப் படுகிறது. இதற்கென அறிஞர்கள் பெருமக்கள் பலர் வரவழைக்கப்பட்டு அவர்களது சொற்பொழிவும், இசை வல்லுனர்களின் இசைக் கச்சேரியும் இடம்பெறுவது வழக்கம். நான் படித்த ஆண்டு முத்தமிழறிஞர்களான கி.ஆ.பெ. விஸ்வநாதம், கி.வ. ஜெகந்நாதன் ஆகியோரின் சொற்பொழிவைக் கேட்டேன். ஔவையார் புகழ் திருமதி கே.பி, சுந்தராம்பாள் அவர்களின் பாட்டுக் கச்சேரியும் கேட்டேன்.
எனது பாடங்களில் தோன்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது மற்றுமன்றி, தமிழ் இலக்கியத்திலுள்ள விஷயங்களையும் என் தந்தையிடம் என்னால் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழ் இலக்கியத்தில் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகப் புலவர், ஔவையார் போன்ற பலரின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களை அவர் எனக்கு அவ்வப்போது எடுத்துக்கூறித் தமிழ் இலக்கியத்இல் எனக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமானார். தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றை வாங்கி அவற்றை தினமும் படிப்பது அவரது வழக்கம். அத்தகைய நூல்களை நானும் என் ஓய்வு நேரத்தில் தவறாமல் படித்தேன்.
மாணவர்களுக்குக் கல்வியை மட்டுமன்றி நல்லொழுக்கத்தையும், பொது அறிவை வளர்க்கும் விஷயங்களையும், இனிய கலைகளையும் புகட்டும் விதமாகச் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ண வித்யாலாவில் பயின்றது எனக்கு ஒரு வரப்ரசாதம். தினமும் காலையில் மஹாத்மா காந்தியின் சத்திய சோதனை நூலிலிருந்து ஒரு அத்தியாயத்தை என்னை வாசிக்கச் சொல்லி வகுப்பிலிருந்த பிற மாணவர்களும் ஆசிரியரும் கேட்ட பின்னரே பாடங்கள் தொடர்ந்து நடப்பது வழக்கமாக இருந்தது. இயற்கையாகவே கணீரெனும் குரல்வளம் எனக்கிருந்ததால் இவ்வாய்ப்புக் கிட்டியது. வேறு எவ்விதத்திலும் நான் சத்திய சோதனை நூலைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில்லை. அதிலுள்ள கருத்துக்களும் அண்ணல் காந்தியின் வாழ்க்கை முறையும் என்னை மிகவும் கவர்ந்தன. அவரைப்போலவே நானும் எப்பொழுதும் உண்மையையே பேசுவதைக் கடைப்பிடிக்கலானேன்.
இந்நிலையில் என் தந்தை பொள்ளாச்சியில் தனக்கு அரசு அளித்த ஒரு சிறு நிலத்தில் அரசாங்கத்தில் கடனுதவி பெற்று எங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டினார். அருகிலேயே வாடகைக்கு வேறொரு வீடு பார்த்து அனைவரும் பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து பொள்ளாச்சிக்குக் குடியேறினோம். வீடு கட்டும் பணியில் பணியாட்களுடன் சேர்ந்து நானும் என்னால் இயன்ற பணிகளைச் செய்ததால் வீடு கட்டும் கலையில் எனக்கு ஓரளவு அறிவு ஏற்பட்டது. விரைவிலேயே வீடு கட்டும் பணி நிறைவுற்றது. அதில் உல்லாசமாய்ப் பொழுதைக் கழிக்க ஊஞ்சலொன்றை அமைத்தார் என் தந்தை. பெரியநாயக்கன் பாளையத்தில் என்னுடன் படித்த ஒரு நண்பன் வீட்டில் வளர்ந்த பூனையின் குட்டி ஒன்று எங்களுடன் பொள்ளாச்சிக்குக் குடி பெயர்ந்தது. அது மிகவும் அழகாக இருந்ததால் ஒரு விளம்பரத்தில் காணப்பட்ட "லல்லு", "புலு" எனும் இரு குழந்தைகளின் பெயர்களில் "புலு" எனும் பெயரை அதற்குச் சூட்டி அருமையாக வளர்த்தோம். என் தந்தையும் புலுவிடம் மிகவும் பிரியம் காட்டி அதனையும் தனது குழந்தைகளில் ஒன்றாகக் கருதிப் பேணிவந்தார். வீட்டில் எலிகள் இல்லாதிருந்தபோதும் அது வெளியிலிருந்து எலிகளைப் பிடித்து வந்து அதனை ஓடவிட்டுத் துரத்திப் பின்னர் கொன்று தின்பது ஒரு வேடிக்கையான சம்பவம், ஆனால் பாவம் எலி.
தொழிற்கல்வி
நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் பெற்ற பயிற்சியின் துணையால் பொறியியல் பட்டப் படிப்புப் பெற எனக்கு எளிதில் இடம்கிடைத்து, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்வி அனைவருக்கும் இலவசமாக இருந்த காலம் அது.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












