எந்தையும் தாயும்
- ஆகிரா
செல்லப்பிள்ளை
என் தந்தைக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த என்னை அவர் மிகவும் அன்புடன் கொஞ்சி மகிழும் அதே நேரத்தில் அவ்வப்போது கோபம் வந்தால் கடிந்துகொள்வதும், அடிப்பதும்கூட உண்டு. அவ்வாறு கடிந்துகொண்டால் நான் அவரிடம் கோபித்துக்கொள்வேன். அவர் சற்று நேரத்திற்குப் பின்னர் தான் கடிந்து கொண்டதை மறந்த நிலையில் என் கோபத்தை அறியாது மீண்டும் என்னைக் கொஞ்சி மகிழும் எண்ணத்தில் அழைக்கையில், "நீ ஏன் என்னை அடிச்சே, யதனாலே நான் வர மாட்டேன் பூப்பா" என்று நான் வர மறுத்து மறுமொழி சொன்னதாக அவர் பிற்காலத்தில் என்னிடம் அடிக்கடி சொன்னார்.
குழலினிது யாழினிது என்பார்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
எனும் குறளைச் சொல்லி, தாம் மழலைச் சொல் கேட்டு மகிழ்ந்த அனுபவத்தை மனதில் மீண்டும் கொண்டுவந்து அதை எங்களுக்கும் கூறி மகிழ்வார்.
நான் சிறு குழந்தையாக இருந்தபொழுதே மிகநன்றாகப் பாடுவேனாம். வானொலியிலும் பிற பொது ஒலிபெருக்கிகளிலும் ஒலிக்கும் திரைப்படப் பாடல்களையும் பிற பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து அவற்றைத் திரும்பப் பாடும் பழக்கம் எனக்கு இருந்தது. நான் மூன்று வயது சிறுவனாக இருந்த பொழுது வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான "மக்களைப் பெற்ற மகராசி" எனும் திரைப்படத்தில் டி.எம். சௌந்தரராஜன் குரலில் ஒலிக்கும், "மணப்பாரே மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டே உழுதுபோடு செல்லக் கண்ணு" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
அந்த சமயங்களில் என்னைத் தன் தந்தை கோபத்தில் அடிக்க நேர்ந்தால் நான் அழுதுகொண்டே இருப்பேனாம். அழுகையின் இடையில் "மணப்பரே மாடு கட்டி" பாடல் எங்காவது ஒலித்தால் அப்பாடல் முடியும் வரை அழுகையை நிறுத்திவிட்டு, பாடல் முடிந்ததும் விட்ட இடத்திலிருந்து அழுகையைத் தொடர்வேனாம். அலுவலகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஏதேனும் செய்யும்படி யாரேனும் கூறினால் என் தந்தை மறுத்துவிடுவார். அத்தகைய சம்பவங்களால் கோபம் ஏற்பட்டு வீட்டுக்கு வரும்பொழுது மகிழ்ச்சியற்ற மன நிலையில் இருப்பார். அப்பொழுது நான் ஏதேனும் குறும்பு செய்தால் அடித்துவிடுவார். சற்று நேரத்தில் மனநிலை மாறி மகிழ்ச்சியான எண்ணங்களில் மூழ்கி என்னைக் கொஞ்சி மகிழ அழைக்கையில் நான் முரண்டு செய்தால் மிகவும் முயன்று என்னை சமாதானப்படுத்தி என்னோடு அளவளாவிய பின்னரே உறங்கச் செல்வார்.
"அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும்" என்பதன் பொருளை நான் அடிக்கடி அனுபவித்தில் உணர்ந்திருக்கிறேன். ஊரிலுள்ள மற்ற சிறுவர்கள் பலர் காகிதத்தில் பட்டம் (காற்றாடி) செய்து அதைப் பறக்க விடுவதைக் கண்ட நானும் காகிதத்தில் தென்னங்குச்சியை வைத்து ஒட்டி, அதில் நூலைக் கோர்த்து, அந்தப் பட்டத்துக்கு நீளமான வாலையும் ஒட்ட வைத்து, நுலைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிகையில் கழுதை ஒன்று பட்டத்தின் வாலைக் கடித்துத் தின்றதாம். உடனே நான் அழுதேனாம்.
இவ்வாறு நான் மற்றவர் செய்வதைப் பார்த்து நானும் அவ்வாறே காகிதப் பட்டங்கள் செய்வதைக் கண்ட என் தந்தை என்னை, "ஏக சந்த கிராகி" என்றும், "கண்பார்த்தால் கை செய்வான்" என்றும் என் செயல் திறனைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார்.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












