எந்தையும் தாயும்
- ஆகிரா
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
இல்லறத்தின் மகிமையை எங்களுக்கு உணர்த்தும் வகையில் 59 வருடங்கள் என் தாயுடன் இல்லறம் சிறக்க நடத்தி, இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி, தனது எண்பதாம் வயது நிறைவு விழாவை மனைவி, மக்கள், பேரன்கள், பேத்திகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து
"உயிர்களிடத்திலன்பு வேண்டும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்
வயிரமுடைய நெஞ்சு வேண்டும் இவை
வாழும் முறைமையடி பாப்பா"
எனும் மஹாகவி பாரதியின் வாக்கின்படி எள்ளளவும் பிசகாமல் மன நிறைவான வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்த, "திருவாசகம் ஐயர்" என்று திருக்குடந்தை சிவனடியார்களால் அன்புடன் அழைக்கப்பட்ட என் தகப்பனார் ஆதியூர் வை. கிருஷ்ணமூர்த்தி 2006ஆம் வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தனது 84வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
தன் வாழ்நாள் முழுதும் ஒரு அரசாங்க அலுவலராக நேர்மையாகப் பணியாற்றிய என் தந்தை நாள் தவறாமல் சிவபூஜை செய்வார். தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, கந்தர் சஷ்டி கவசம், விநாயகர் அகவல், திருவருட்பா முதலிய தெய்வத்தமிழ்ப் பாசுரங்களை கணீரென்ற தன் இனிய குரலில் இசையுடன் தினந்தோறும் பாடி இறைவனை வழிபட்ட அவர் என்றென்றும் தன் நெற்றியிலும் மற்றும் மேனியெங்கிலும் திருநீறணிவதை ஒரு நோண்பாகக் கொண்டிருந்தார்.
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.
எனும் ஔவையின் பொன்மொழியை அடிக்கடி எடுத்துரைத்து என்னையும் திருநீறணியச் சொல்வார். எனக்கு அதில் ஈடுபாடில்லாததால் நான் தினசரி திருநீறணிவதில்லை. ஆனால் பல முறை அவர் என்னை அருகில் அழைத்து, திருநீற்றை நீரில் குழைத்து என் நெற்றியில் இட்டுவிடுவார். அப்பொழுது தன் மகனான என் அழகை ரசித்துக் கொண்டே,
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீரும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே"
என்று அந்த நாராயணனையே தன் கணவனாகக் கண்ட ஆண்டாளின் பாடலை இசையுடன் பாடி அந்த ஸ்ரீமந் நாராயணனையே தன் மகனாகக் கண்டு மகிழ்வார். எனக்குத் திருநீறணிவித்து ரசிக்கும் அவரது அவாவுக்கு நான் என்றும் மறுப்புச் சொன்னதில்லை. அவர் மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன். சமீபகாலத்தில் அவரது பேரனான என் மகனுக்குத் தன் திருக்கரத்தால் திருநீற்றைக் குழைத்து இட்டு அதே பாடலை அவர் அடிக்கடி பாடி மகிழ்ந்திருந்தார்.
"ப்ராம்மண்யமானது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா?"
என்று தேவர்களில் ஒருவரான எமதருமன் கேட்டதற்கு பஞ்ச பாண்டவர்களின் மூத்த சகோதரனும் எமதருமனின் புத்திரனுமான தருமபுத்திரன் சொன்ன,
"எவன் ஒருவன் ஒழுக்கத்துடன் வாழ்கிறானோ, அவனே அந்தணனாவான். எவ்வளவு உயர்ந்த குடியில் பிறந்தாலும் ஒழுக்கம் கெட்டவன் ப்ராம்மணன் ஆக மாட்டான்"
என்ற பதிலுக்கிணங்கவும்
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
எனும் திருக்குறளின் வழிநின்றும் ஒழுக்கசீலரான ஒரு அந்தணராக வாழ்ந்ததுடன், பிற மதத்தைச் சார்ந்தவர்களையும் அன்புடன் அரவணைத்து, தன்னை நாடி வருவோர் அனைவருக்கும் தான் செய்ய வேண்டிய கடமைகளையும் உதவிகளையும் சாதி, மதம், இனம், மொழி என்ற எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் செவ்வனே செய்த அவர் எங்களுக்கும் உலகில் வாழும் வழியை உணர்த்தினார்.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












