ஐந்தும், அடக்கமும்
காயத்ரி
"கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்." பொருள் பொதிந்த பழமொழி.
பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை இறை வழிபாடு என்பது மனித வாழ்வோடு கலந்து விட்ட ஒன்றாகும். நாம் பல பழங்கால கோவில்களுக்குச் சென்றுள்ளோம். பெரும்பாலான கோவில்கள் பெரிதாகவும், ஐந்து பிரகாரங்களை உடையதாகவே இருக்கும். கடவுளைப் பார்க்க ஐந்து பிரகாரங்களையும் தாண்டித்தான் செல்ல வேண்டும். புற உலகில் மனிதனாகப் பிறந்த நாம் இன்பம், துன்பம் இரண்டையும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள் மூலம் அனுபவிக்கிறோம். இந்த ஐம்புலன்கள் மூலம் ஐந்தறிவு பெறுகின்றோம். நமக்கு ஆறறிவு உள்ளது. அந்த ஆறாம் அறிவின் துணை கொண்டுதான் கடவுளை அறிய முடியும். அதற்கு இந்த ஐம் புலனும் துணை புரிய வேண்டும். புலன்களை நாம் அடக்க வேண்டும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஐம் புலன்கள்தாம் நம்மை அடக்கி ஆள்கின்றன. இந்த ஐம்புலன்களின் அனுபவத்திலேயே மனிதன் சிக்கிவிடுகிறான்.
வலிமை வாய்ந்த ஆண் யானையை குழியில் விழ வைக்க பெண் யானையைப் பயன்படுத்துவது போல், மனிதன் தன் உடலால் துய்க்கும் மெய்யின்பத்திற்கு அடிமையாகி விடுகிறான். யயாதி, விசுவாமித்திரர் மற்றும் கைகேயிக்கு தசரதன் வரம் கொடுத்து மாண்ட கதைகளெல்லாம் நமக்கு இதனை அழகாக எடுத்துரைக்கின்றன. தூண்டிலில் உள்ள புழுவுக்கு ஆசைப்படும் மீன் இறுதியில் தூண்டிலில் மாட்டிக் கொள்கிறது. அது போல மனிதனும் நாவைக் கட்டாமல் அல்லல் உறுகிறான். விட்டில் பூச்சி விளக்கின் ஒளியால் கவரப்பட்டு மடிவது போல் மனிதனும் கண் போன போக்கிலே சென்று துன்பச் சேற்றில் மாட்டிக் கொள்கிறான். மலர்களின் மணத்தால் கவரப்பட்ட வண்டு தேனை எடுக்க மலரினுள் சென்று மாட்டிக் கொள்கிறது. அதே போல் மனிதனும் நாசி மூலம் வாசனை என்னும் வலையில் மாட்டிக் கொள்கிறான்.
நல்ல இசைக்கு ஏங்கும் அசுணமா என்ற பறவையைப் பிடிக்க, வேடர்கள் புல்லாங்குழல் இசைப்பார்கள். இசையில் மயங்கும் நேரம் கீழே தீமூட்டி பறை என்னும் கருவியை முழக்க, அது தடுமாறி நெருப்பில் வீழ்ந்து மடிந்து விடும். அதே போல் பல வித ஓசையினால் ஈர்க்கப் படும் மனிதன், பாதை மாறிச் சென்று விடுகிறான். விளைவு? மனித மனம் துன்பத்தில் ஆழ்ந்து விடுகிறது. இந்த ஐந்து யஜமானன்களையும் ஆத்ம பலம் கொண்டே அடக்க முடியும். அப்படி அடக்கினால்தான் மனிதன் இறைவனை அடைய முடியும். இந்த ஆத்ம பலத்தை தருவது இறை வழிபாடு. அதனால்தான் கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லி வைத்தனர்.
நம் பாரத பூமியில் எண்ணற்ற கோவில்கள். அவற்றில் பெரும்பாலானவை ஐந்து பிரகாரங்களை உடையதாக இருக்கும். அந்த ஐந்தையும் கடந்த பின்தான் இறைவனை தரிசிக்க முடியும். இந்த ஐந்தும் மனிதனின் ஐம்பொறியைக் குறிக்கும். ஒவ்வொரு புலன் தரும் நுகர்ச்சியை விட்டு விட்டு சென்றால்தான் இறைவனை நெருங்க முடியும். அதேபோல், ஒவ்வொரு பிரகாரமாகக் கடந்து வந்தால், நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரம் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். இதனை மனிதனுக்கு நினைவு படுத்தவே பழங்காலத்தில் ஐந்து பிரகரங்களுடன் கோவிலகள் கட்டப்பட்டுள்ளன.
பிரகாரம் ஐந்தையும் கடப்போம். இறைவனை அடைவோம். அல்லது அந்த முயற்சியை நோக்கி ஓரடி வைத்து வைப்போம்.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















