அன்னைக்கு ஆராதனை
இரு பாட்டிகள்
ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று காலை 10-30 மணி அளவில் விசாலம் அவர்கள் வீட்டுக்குப் போனோம். நாங்கள் செல்லும் முன்னரே திரு சிங்கை குமார், தன் மைத்துனருடன் வந்திருந்தார். விசாலம் அன்னையின் படத்தையும், அரவிந்தரின் படத்தையும் வைத்துப் பூக்களால் கோலம் போட்டு வைத்திருந்தார். பின்னர் நாங்கள் கொண்டு சென்ற ரோஜாப்பூக்களும் வைத்து அலங்கரிக்கப் பட்டது. விசாலம் அவர்களின் குடியிருப்பில் குடி இருக்கும் அவர் நண்பர்களும் கலந்து கொண்டனர். சிறிது நேரத்துக்கெல்லாம், "நம்பிக்கை ராமர்" வந்தார். காழியூராரின் செய்தியை அனைவருக்கும் தெரிவித்தார். அனைவருக்குமே சிறிது நப்பாசை, காழியூரார் வருவார் என்ற எதிர்பார்ப்பில்! ஆனால் அவர் வரவில்லை. ராமாவுக்கு எப்போதும் போல் காட்சி கொடுத்துவிட்டுப் பின் விஷி, டாக்டர் சங்கர்குமார் போன்றோரைச் சந்தித்துவிட்டுப் போனார் என்பது பின்னர் தெரிய வந்தது. டாக்டர் சங்கர்குமாரும், அவர் மனைவியும் லாவண்யாவுடன் வந்தார்கள். லாவண்யாவின் எழுத்தில் இருக்கும் வேகமும், அழுத்தமும் அவர் உருவில் தெரியவில்லை. மிக மிக மென்மையாக வார்த்தைகளை அளந்தே பேசுகிறார். தேவையான ரத்தினச் சுருக்கமான பதில்கள். ஊர்மிளைக்கும், கர்ணனுக்கும் இன்னும் காவியங்களிலும், இலக்கியங்களிலும் அதிகம் பேசப் படாத மனிதர்களுக்காகப் பரிதவித்த பெண்ணா இவர் என்றே தோன்றுகிறது.
திரு குமார் அவர்களும் சரி, டாக்டர் சங்கர் குமார் அவர்களும் சரி புதிதாய்ப் பார்க்கிற மனிதர்கள் என்ற எண்ணமே வரவில்லை. மிகப் பழகிய, தினம் தினம் சந்திக்கும் ஒருவர் போலத் தான் இருந்தனர். திரு குமார் அவர்களின் எழுத்தின் மூலம் அவரும் கொஞ்சம் "சீரியஸ் டைப்" என்றே எண்ணி இருந்தேன். ஆனால் நகைச்சுவை உணர்வில் குறைந்தவர் இல்லை எனப் புரிந்தது. டாக்டர் ஐயா பற்றி அனைவரும் அவர் தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் என்றே எண்ணி இருந்தனர். அவர் மருத்துவர் என்பது தெரிந்ததும் அவரின் வேலைகளுக்கு நடுவில் இவ்வளவு தமிழ்த்தொண்டாற்றுவது குறித்து அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்ததோ இல்லையோ, நாங்கள் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். மிக மிக சாதாரணமாய், சகஜமாய் அனைவருடனும் உறவினரிடம் பழகுவதைப் போலவே பழகினார்கள் டாக்டரும் அவர் மனைவியும். டாக்டர் மனைவி திருமதி சந்திரா மிக மிகப் படித்தவர் என்றும், டாக்டரைப் பின்னிருந்து ஊக்குவிக்கின்றார் என்பதும் வெளிப்படையாகப் புரிகிறது. அவரின் பேச்சில் அவர் விசாலமான அறிவும், புத்திக்கூர்மையும் பளிச்சிட்டது. இருவரும் அமெரிக்காவில் பல வருடங்களாய்த் தங்கி இருப்பவர்கள் என்பதைச் சத்தியமே செய்து சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே நான் எங்கள் வீட்டுக்கு அவர்களை அழைக்க மிகத் தயங்கினேன். அங்கெல்லாம் இருந்தவர்கள் இந்த அம்பத்தூரின் அவலத்தைப் பார்த்தால், இப்படி ஓர் இடத்துக்கு அழைக்க நேரிட்டுவிட்டதே என்ற எண்ணத்தினாலேயே அழைக்கவில்லை. என்றாலும் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார்கள். வர வேண்டும்.
பின்னர் திரு தமிழ்த்தேனி அவர்கள் வந்ததும் வழிபாடு தொடங்கிற்று. முதலில் அனைவரும் ருத்ரம் சொன்னார்கள். அதிலும் டாக்டர் ஐயாவின் மனைவி ஒரு முறை கூடப் புத்தகத்தைப் பார்க்காமல் சொன்னார்கள். வெளிநாட்டில் இருந்தாலும், இந்தியக் கலாசாரத்தையும், நம் வழிபாட்டு முறைகளையும் இங்கே இருக்கும் நம்மை விட அங்கே இருப்பவர்கள் தான் கட்டிக் காக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. பின்னர் திரு குமார் அவர்களும், டாக்டரும் நாவுக்கரசர் பதிகம் பாடினார்கள். பின்னர் தியானம் தொடங்கிற்று. பின்னணியில் பஜன் ஒலிக்க அந்த இசையோடு மின் விளக்குகள் அணைக்கப் பட்டு ஏகாந்த சூழ்நிலை உருவாக்கப் பட்டு தியானம் தொடங்கியது. கிட்டத் தட்ட 15 நிமிஷங்கள் தியானம் நடந்தது. அவரவர் அவரவர் மனதிலே தோன்றும் எண்ணங்களுடன் என்ன உருவகங்கள் தோன்றின என்று திரு தமிழ்த்தேனீ அனைவரையும் கேட்டு அறிந்தார். அப்போது தான் டாக்டர் ஐயா அவர்கள் தனக்கு தியானத்தின்போது திரு காழியூரார் தோன்றியதாய்ச் சொன்னதும் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் தோற்றங்களைச் சொன்னார்கள். அதில் கவனம் செல்ல முடியாமல் என் மனதில் காழியூரார் டாக்டருக்குத் தோன்றியதே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. டாக்டரைக் கேட்டால் காழியூரார் வந்திருந்ததாயும், டாக்டரை அவர் இருப்பிடம் சென்று பார்த்ததாயும் இருவரும் கலந்து உரையாடியதாயும் சொன்னார்.
இரண்டு சித்தர்கள் பேசிக் கொண்டது என்னவாய் இருக்கும்? எப்படியும் டாக்டராவது எழுதுவார் என நம்புகிறேன். அப்போது திருமதி விசாலம் காழியூராரைத் தான் தொடர்பு கொள்ள முடியாமை பற்றியும் எப்படியாவது அவர் செய்தி அல்லது அவர் தோற்றம் தெரிய வேண்டும் எனத் தான் நினைத்ததற்கு ஏற்ப டாக்டருக்கு அவர் தோற்றம் தெரிந்தது பற்றி அனைவரும் வியப்படைந்தோம். பின்னர் திரு தேனி ஐயா அவர்கள் தன்னுடைய "தொலைக்காட்சித் தொடர்கள்" அனுபவம் பற்றியும், திரு குமார் அவர்கள் சிங்கப்பூரில் அவர்கள் செய்து வரும் தமிழ்த்தொண்டு, மேலும் தமிழ் பேசும் குழந்தைகளுக்கு அங்கே தேவாரம், திருவாசகம், போன்றவற்றை உரிய ஓதுவார்களை வைத்துச் சொல்லிக் கொடுக்கப் படுவதாயும் தெரிவித்தார். டாக்டர் அவர்கள் அனைவருக்கும் இளையராஜாவின் திருவாசகம் சிம்பனி ஆடியோ காசெட் பரிசளித்தார். திருமதி விசாலம் அம்மனின் உருவம் கிரிஸ்டலில் வாங்கிப் பரிசளித்தார். தற்செயலாக டாக்டருக்கு மாரியம்மன் உருவம் வந்தது, உடனேயே அவரின் மாரியம்மன் தாலாட்டு பற்றிப் பேச்சு நடந்தது. திரு பிரசன்னா, திரு சுரேஷ், காந்தி, ஜெயந்தி போன்றோருக்காகக் காத்திருந்தனை அனைவரும் சாப்பிடப் போக, 1-30 வரை யாரும் வரவில்லை. பிரசன்னா வரவில்லை என ராமாவிடம் தகவல் கொடுத்திருந்தார் என நினைக்கிறேன். ஜெயந்தி எப்படியும் அலுவலகத்தில் இருந்து வர வேண்டும். அனைவரும் சாப்பிடக் கிளம்பினர். நானும், என் கணவரும் சாப்பிடவில்லை, அம்பத்தூர் திரும்பினோம். நினைவுகள் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இதில் எதுவாவது எழுதாமல் விட்டுப் போயிருந்தால் சந்திப்பில் இடம் பெற்ற மற்ற நண்பர்கள் எழுதுவார்கள்.
வீட்டுக்கு வந்தும் சற்று நேரம் சந்திப்பைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். மனதைத் தொட்டது.
கீதா சாம்பசிவம்
அன்பர்களே,
இது நம்பிக்கையுடன் படிப்பவர்களுக்கு .... உள்ளம் உருக ஒன்று நினைத்து அதைக் கடவுளிடம் ஒப்படைத்தால் அவர் நிச்சியம் அதை நிறைவேற்றுவார். நான் அன்னையிடம் புஷ்பாஞ்சலி செய்வதைச் சொல்லி, என் உடலுக்கு ஒரு தெம்பு கொடுத்து, அதை நடத்தி வைப்பது உன் பொறுப்பு என்றும் வேண்டிக் கொண்டேன். பூக்கள் எல்லாம் ஒரே விதமாக்த் தேர்ந்தெடுத்து, பின் சிம்பலமைக்க வேண்டும். என் முன் பலவிதமான பூக்களின் பைகள் உட்க்கார்ந்து எனக்கு எப்படி முடிக்கப்போகிறோம் என்று மலைப்பாக இருந்தது.
அதற்குப் பின் செய்த வேலைகள், நான் இல்லை நிச்சியமாக, ஒரு தெய்வ சக்திதான் என்னிடம் புகுந்துஇருக்கும். என்னால் ஒரு மணிக்கு மேல் கீழே அமர முடியாது. ஆனால் அன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை என் நினைவு என்னிடம் இல்லை, எல்லாம் அன்னையின் நினைவுதான், வாய் ஆனந்தமயீ சைத்தன்யமயீ என்று சொல்லிக்கொண்டேயிருந்தது. 6 அடி நீளம் கொண்ட வட்டம், அதற்குள் 12 பாகங்கள், அதற்குள் இரண்டு வண்ணப் பூககளின் கலவைகள், என்று செய்து முடித்தபின் சிறு அலங்கார விளக்கும் போட அன்னை மிக அழகாக் வந்து அமர்ந்து விட்டாள் என்பது என் மனதிற்குத் தெரிந்தது.
பின் திரு காழியூராரை நினைத்தேன், அவர் வந்து bless செய்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று.
இரவு தூக்கம் வரவில்லை. மறு நாள் முதலில் வந்தவர் திரு கே. குமார், மிக உயர்ந்த எண்ணங்கள் simple living high thinking என்பது உண்மை. அன்பொழுகப் பேசினார். அவருடன் அவரது சகலையும் வந்திருந்தார், அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனில் படித்தவர், ஸ்லோகங்கள், வேதங்கள் அப்படியே ஊற்றாகிக் கொட்டுகின்றன, பெரிய ஜிப்பாவுடன் நல்ல உயரமாக நல்ல பர்ஸனாலிடியாக இருந்தார், மிகுந்த பாசத்துடன் பழகினார். பின் நமது கீதா அம்மாவும் வந்தார், அவர் மானசரோவர் போய் வந்தவர், அவரை வணங்கினாலே நல்ல பலன், எனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது, அவர் தாராளமாக மிக்சரும், வாழைப்பழமும், சோன்பப்டீ என்ற இனிப்பும் வாங்கி வந்தார். திரு தமிழ்த்தேனி மதருக்குப் பிடித்த சாக்கலேட்டும் நிறைய மலர்களும் வாங்கிவந்தார். திரு ராமா அனுமார் பிரசாதமும் படங்களும் கொட்டுத்தார். டாகடர் சங்கர் எலோருக்கும் இளையா ராஜாவின் திருவாசகம் சிடி வழங்கினார். அவரது மனைவி மிகவும் சிறப்பாக வேதம் எங்களுடன் சொன்னார். ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம், துர்காசூக்தம், சாந்திமந்திரம் என்று ஓதியதில் அந்த ஒலி அந்த அறையில் வியாபித்து எல்லோருக்கும் ஒருவிதமான புது சூழ்நிலையை உண்டாக்கியது. நற்றலைகள் பரவுவதை உணர்ந்தோம். பின் தமிழுலும் ருத்ரம் போல் கே. குமார் படித்தது மிகவும் அருமை.
பின் மதரின் ப்ரெயர், ஜகஜீத்சிங்கின் மா என்ற ஒலிநாடா போட்டேன். ஆதில் ஆரம்பம் ஒரு நிமிடத்திற்கு வெறும் தபலா ஒலிதான் ஆஹா என்ன் அழகு! அப்படியே மெய் மறந்து அந்த நாதம் நம்மை இழுக்கும். நடராஜாவின் நர்த்தனம் தான் நினைவுக்கு வரும், அதேபோல் தமிழ்த்தேனிக்கு உண்மையாகவே நடராஜா நர்த்தனம் ஆட, பின் ராதா கிருஷ்னர் ஆட, இதை அவரே விவரித்தால் நன்றாக இருக்கும், அவரவர் அனுபவம், கீதா அம்மா சொல்லி விட்டார்.
நான் காழியூரார் வர வேண்டும் என்று மெயில் போட்டிருந்தேன் ஆனால் அவர் அதைப் பார்க்கவில்லை தொலைபேசியிலும் கிடைக்கவில்லை. மனதில் அவர் இன்று வந்து ஆசி வழங்க வேண்டுமே என்று ஆழமாகப் பதிந்து இருந்தது, ஆனால் ராமா அவர் இன்று வருவது சந்தேகம், வேறு ஒரு இடத்தில் இருக்கிறார் என்றதும் கொஞ்சம் மனம் கலங்கினாலும் உள்ளுக்குள் அவர் வருவார் என்றே இருந்தது. அதே போல் டாக்டர் சங்கர் அவர்களின் பிரார்த்தனையின் சமயம் அவர் வந்து விட்டதை உணர்ந்திருக்கிறார். அதைக் கூறியதும் எனக்கு உடல் சிலிர்த்தது, அதன் பின் அந்தச்சூழல் அந்த ஆன்மீக அனுபவங்கள் எங்களை அங்கேயே இருக்கச் செய்தது. ஆனாலும் எனக்கு 4 மணிக்கு சிலர் வருவதாக இருந்ததால் அவர்களுடன் கிளம்பினேன் எங்கே? வயிறு பூசைக்குத்தான், ஆனால் திருமதி கீதாவும் அவர் கணவரும் வர மறுத்துவிட்டார்கள், வீட்டில் சாப்பிட்டு வந்து விட்டதாகச் சொன்னார்கள். அவர்களும் சாப்பிட வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பின் ராஜஸ்தானின் மெல்லியதாக ரொட்டி, அத்துடன் அவர்களது ஆலு மட்டர், டால் கடீ,கீரை பயறுடன், காலிபிளவர் சப்ஜி என்று வந்தது. ஆனால் பாவம் லாவண்யா சரியாக சாப்பிடவில்லை. அவளுக்கு தமிழ் நாட்டு சமையல் பிடித்திருக்குமோ என்னவோ? பின் வந்தது குல்பி (kulphi). எனக்கு அது மிகவும் பிடித்தாலும் என் உடல் நிலை காரணமாகத் தவிர்த்து அதற்கு பதிலாக சூடான குலோப்ஜாமூன் சாப்பிட்டேன். என் கட்சியில் கே. குமாரும் த்மிழ்த்தேனியும் சேர்ந்துகொண்டார். பின் கீழே வந்து அங்கு வந்தும் கொஞ்சம் பேசிவிட்டு, போக மன்மில்லாமல் பிரிந்தோம். என் வீடுவரை சிங்கை குமார் காரில் கொண்டுவிட்டார். இன்றைய தினம் மனதிலே பசுமையாகப் பதிந்து விட்டது. இப்போது கிளைமேக்ஸ், சுமார் ஒரு 51/2 மணி இருக்கும். ராமாவிடமிருந்து எனக்கு போன் வந்தது, ஸ்ரீ காழியூரார் அவர்கள் உங்கள் வீடு வருகிறார், அவருடன் நானும் வருகிறேன். ஆஹா! என்ன அருமையான செய்தி, ஓடிப்போய் கடவுளிடம் நன்றி தெரிவித்தேன். அவரும் சரியாக 6-30க்கு வந்தார்.
மாடியில் மண்டபத்திற்குப் போனோம். அதன் பின் ஒரு மணி போனதே தெரியவில்லை. அத்தனை அழகாக ஆன்மீகத்தில் உடல், ஆத்மா, மனம் என்பதின் தத்துவங்களும், மரணபயம் பற்றியும், ஒரே குருவைப் பற்றிக்கொள்ளுவது பற்றியும் சிறுகுழந்தைக்குப் புரியும்படி {நான் ஒரு குழந்தை} சொன்னதில் எனக்கு மனம் மிக திருப்தி. எப்படி அவர் வந்தார்? எது அவரை வரவழைத்தது.
நான் செய்த பாக்கியம் தான் அவர் வருகைத் தந்தது.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
அன்புடன்
விசாலம்



Your Feedback










