குருவருள்
அசலம்
குருவருள் நம்மை தேடி வரும்
குரு அருள் எப்படிக் கிடைக்கும் என்று நாம் முந்தைய “ஸ்வானுபவம்” என்ற தொகுப்பில் எழுதினோம். ஆனால் ஒருபடி மேலே சென்றால், குரு அருள் நம்மை நாடி வரும். நாம் குருவைத் தேடிப் போக வேன்டிய அவசியம் இராது. ஆனால் அதற்கு நாம் நம்மைத் தகுதியுள்ளாவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். எமக்கு நிகழ்ந்த இந்த அனுபவத்தை இங்குக் கூற விரும்புகிறோம்.8 வயது முதல் பஜனையில் கருத்துக் கொண்டு நாம் ஸ்ரீ நூறணி அப்பு அவர்களின் பஜனைக் குழுவில் சிறு அங்கத்தினனாக பஜனையில் ஈடுபட்டு வந்தோம். சுமார் 6 வருடக் காலம் கேரளாவில் பல இடங்களீல் எங்கள் குழு திவ்யநாமம், பஜனைகள் செய்து வந்தது. பிறகு பம்பாய் வந்த பின் எமது தமையனார் ஸ்ரீ நூறணி சுப்பாமணி குழுவில் ஒரு முக்கிய அங்கமாக பஜனைகளில் கலந்து வந்தோம்; நாம் நாட்டிய அபிநயங்கள் கருத்துடன் செய்து வந்தோம். பம்பாய்க்கு வரும் பல குழுக்களின் பஜனைகளில் பங்கு கொள்வதுண்டு. அப்படி இருக்கும்போது, புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர் (பக்தர்களால் அன்பாக “அப்பா” என அழைக்கபட்டவர்) அவர்கள் பம்பாய் விஜயம் செய்தபோது, அவர்கூட எல்லா தினமும் பஜனை, திவ்யநாமம், டோலோத்ஸவம் முதலியவைகளில் கலந்துகொண்டோம். அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. அவர் பத்ததிதான் நாங்களும் பின்பற்றி வந்தோம். ஆனாலும் நேரில் அவருடன் கலந்துகொண்டு பல நுட்பங்களையும் அறிய முடிந்தது.
முதன் முதல் பஜனைக்கு ஒரு பத்ததியைத் தொகுத்துத் தந்தவர் ஸ்ரீ மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள். ஹிமயம் முதல் குமரி வரை சென்று பல ஊர்களில் உள்ள பக்தர்கள் பல பாஷைகளில் இயற்றிய பாட்டுக்களை ஒன்று திரட்டி தக்ஷிண பஜன ஸம்பிரதாயம் என் ஒரு பத்ததியைத் தந்தவர் அவர். ஸ்ரீ அப்பாவும் இந்தியா முழுதும் சுற்றுப்பிரயாணம் செய்து, பல பாஷைகளில் பல புதிய பாடல்களைத் திரட்டி, இந்த சம்பிரதாயத்தை விரிவுபடுத்தி, அதைக் கையாண்டு பிரச்சாரம் செய்துவந்தார். அவர் பரதநாட்டியம் கற்று, பஜனையில் அபிநயம் பிடித்து, பாட்டுக்கு மெருக்கேற்றி வந்தார். அவர் பாகவத தர்மப்படி நித்திய வ்ருத்தி செய்து, நித்தியம் உஞசவ்ருத்தி, பஜனை, டோலோத்ஸவம் முதலியவற்றை விடாது செய்துவந்தார். பவ்வளீம்பு உத்ஸவ ஸம்ப்ரதாயத்திலிருந்து பல பாட்டுக்களை எடுத்துத் தன் நித்திய டோலோத்ஸவத்தில் சேர்த்து ஸ்வானுபவத்துடன் செய்துவந்தார்.
பம்பாய் முகாமில் ஒரு நாள் நாம் அவரிடம் சென்று எமக்கு டோலோத்ஸவம் அபிநயத்துடனும் சொற்பொழிவுடனும் பார்க்க ஆசையாக இருக்கிறது எனக் கூறீனோம். அப்பொழுது அவர் வலது பாதத்தில் ஒரு கட்டிருந்தது. வெய்யிலில் உஞ்சவ்ருத்தியின்போது கால் சுட்டதால் வந்த வ்ருணம்தான் அது. அதையும் சட்டை செய்யாது அவர் எமது வேண்டுகோளுக்கிணங்க அன்று இரவு 2 மணி முதல் டோலோத்ஸவம் செய்தார். ஒவ்வொரு பாட்டையும் பதம் பிரித்து எமையும் பாடச் சொன்னார். அதற்கு அர்த்தமும் சொல்லிக்கொடுத்தார். அவர் ஒரோர் பாட்டிற்கும் அபிநயத்தாலேயே நம்மைக் கவர்ந்துவிடுவார். அவ்வள்வு நளினமாக நாட்யமும் அபிநயமும் செய்வார். அன்று டோலோத்ஸவத்திற்கு முன் எம்மை ஒரு இருட்டின ரூமிற்குத் தனியே அழைத்து அவர் பருகிய பானத்தின் மிச்சப் பகுதியை எமக்குத் தந்து பருகச் சொன்னார். நாம் மிக வினயமாக, “நாம் உணவருந்தி விட்டோம், தங்களுக்கு இருக்கும் இந்தச் சிறிதளவு பானத்தில் எமக்குத் தந்தால் தங்களூக்குப் பசி தீராதே, வேண்டம்” என்றோம். அவர் எம்மைக் கட்டாயபடுடத்தி அதைப் பருகவைத்தார். அதைப் பருகிய எமது கண்ணில் நீர் மல்கியது. ஏனென்றால் அது அவல் கஞசி, அதுவும் உப்போ சர்க்கரையோ இல்லாதது. “இதையா தாங்கள் பருகுகிறீர்கள், இவ்வளவு போதுமா?” என வினவினோம். அதற்கு அவர், “இதுவே மிக அதிகம்” எனக் கூறினார். இப்படி குருவின் பிரசாதம் எமக்கு நினைக்காமல் கிடைத்ததுபற்றி பூரிப்படைந்தோம். எமக்கு மயிர்க்கால்கள் விறைத்து நின்றன.
இப்படி 15 நாட்கள் அவர் இருக்கும் இடத்திலேயே இருந்து அவருக்குப் பணிவிடை செய்து அவ்வப்போது பஜனயில் எமக்கிருந்த சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். சாயம் வேளையில் பக்தர்கள் அவரைப் பாத பூஜைக்கு அழைத்துச் செல்வார்கள். எம்மை அபபா அழைத்தபோது நாம் விறைப்பாக, “எமக்கு நேர் பாதபூஜயில் விருப்பம் இல்லை. அவர்கள் உங்களை உட்கார்த்தி உங்கள் பாதத்தைக் கழுவி பூஜை செய்வது சரி என்று எமக்குத் தோன்றவில்லை, ஆகையால் நாம் இதில் கலந்து கொள்வதற்கில்லை” என மறுத்துவிட்டோம். அவரும் ஒரு புன்சிரிப்புடன் நிறுத்திக்கொண்டார். இப்படி 15 நாட்கள் கட்ந்துவிட்டன.
கடைசி நாளன்று அவர் எம்மை அருகில் அழைத்து, “ஏலே பயலே, இதுவரை நமக்கு மிருதங்கம் வாசித்த ஒரு பையன் அவன் வீட்டில் ஒரு பஜனை ஏற்பாடு செய்திருக்கிறான். சாயம் வேலையில் நீயும் வருவாயாக” எனக் கூறினார். பஜனைதானே சரி என்று போனோம். அங்கு சென்றதும் ஒரு தட்டில் பூஜைக்கு வேண்டிய சகல சாமான்களும் தயாராக இருந்தன. அந்த மிருதங்க வித்வானைக் கூப்பிட்டு இன்னுமொரு தட்டில் அதேபோல் பூஜா ஸாமக்ரிகளைக் கொணரச்சொன்னார். பிறகு எம்மை நோக்கி, “அவனுக்கு ஸூத்ரோபதேசம் செய்ய வேண்டுமாம். அதற்கு முன் பாத பூஜை செய்ய வேண்டியது மிக அவசியம். அவனுக்கு உபதேசம் செய்யுமுன் உனக்குத் தரவிருக்கிறோம். முதலில் குருவிற்குப் பாத பூஜை செய்ய வேண்டும்” எனச் சொன்னார். நாமும் தயங்கியபடியே, “எமக்கு அதற்குத் தகுதியில்லை, ஏனென்றால் நாம் அப்பொழுது நித்திய வ்ருத்தி செய்துவரவில்லை, நித்தியம் ஜெபிக்க நேரமும் கிடையாது, ஆகையால் பாபம் ஏற்ப்பட்டால் அது குருவைச் சேரும்” என்று மறுப்புத் தெரிவித்தோம்.
அதற்கு அவர், “யார் சொன்னது, நித்தியம் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று? நீ உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும் ஸதா ஸர்வ நேரமும் ராமநாமம் ஜெபிக்கலாம், உன்னுள் 24 மணி நேரமும் ராமநாமம் திகழ வேண்டும், இதற்கு சுத்தம் தேவை இல்லை” எனக்கூறி, எமது பதிலுக்குக் காத்திராமல், தன் பாதத்தைத் தட்டில் வைத்துத் தயாரனார். எமக்கு ஒன்றும் தோன்ற்வில்லை. பொம்மையை போல் நாம் பாத பூஜை செய்தோம். எமக்கு முதலில் ஸூத்ரோபதேசம் செய்துவைத்தார். அப்பொழுது ரூ 5.25 தக்ஷிணை தர வேண்டும். அதையும் அந்தப் பையனிடமிருந்து வாங்கி எம்மிடம் தந்து, அதைப் பெற்றுக்கோண்டு, “பலம் வேண்டுமானால் இந்த ரு 5.25 அந்தப் பையனுக்குப் பின்னொரு தினம் திருப்பித் தருவாயாக” எனக் கூறினார், ஏனென்றால் என்னிடம் அப்பொழுது அதுகூட இருக்கவில்லை. நாமும் அப்படியே செய்தோம். 24 மணி நேரம் ஜபம் எப்படி நம் மனதில் திளங்கும் என்று யோசித்தோம். அப்பொழுது விளங்கவில்லை. ஆனாலும் நித்தியம் ஜெபித்துவந்தோம்.
அதற்குப் பிறகு எங்கிருந்து எமக்கு பஜனையின் தத்துவங்களும், நாமே தொகுத்த பாட்டுக்களும் வந்தன என்று வியப்பாகவே இருக்கிறது. இன்று நாம் சொந்தமாக ஸ்ரீ ராதா கல்யாணம், ஸ்ரீ ஸீதா கல்யாணம், ஸ்ரீ ருக்மிணீ கல்யாணம் எனத் தொகுத்தளித்திருக்கிறோம். அதையே சில பாகவத கோஷ்டிகள் பின்பற்றுகிறார்கள். நாமே நம் கையால் மின்தளம் படைத்து அதில் தக்ஷிண சம்பிரதாய பஜனை என்று ஒரு தொகுப்பை மிக விரிவாகத் தந்துள்ளோம். அதில் பஜனையின் தத்துவக்கம், நாம மஹிமை, பத்ததி கிரமம், நாமாவளிகள், பத்ததி பஜனை, திவ்யநாமம், டோலோத்ஸவம், மேல் கூறின் கல்யாணங்கள். அஷ்டபதி, பவ்வளீம்பு என்ப்படும் பத்ததி கிரமத்தையும் அவையிலுள்ள வேதாந்தக் கருத்துக்களையும் பற்றி வெகு விரிவாகவே தந்துள்ளோம். வெறும் பஜனையில் கலந்துவந்த எமக்கு இப்பொழுது ஒரு பஜனைக் குழுவிற்கு வழிகாட்டியாக அமையும் பாக்கியம் கிடைத்தது என்றால், இவ்வள்வு விஷயங்கள் புரிந்தது என்றால் அதற்கு என் குருநாதரின் அருளேயன்றி வேறென்ன சொல்வது.
இப்படி குருவின் அருள் நம்மைத் தேடி வரும், குருவாகவே நம்மைத் தேர்ந்தெடுத்து உபதேசம் தருவார், ஆனால் நாம் நம்மை அதற்குத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்ற சொல்லுக்கு நாமே ஓர் எடுத்துக்காட்டு.
ஸத்குரு பாதுகை (குஞ்சலம்) என்மேல் பட்டபொழுதுதானே - நாம் நிம்மதி அடைந்தோம் உலகம் மறந்தோம் ஆனந்தம் தான் அடைந்தோம்.
இப்படி வேதாந்த ஞானத்திற்கு ஒரு குருவும் (ஸ்ரீ ரமணமஹர்ஷி) பஜனைவ்ருத்திக்கு ஒரு குருவும் (புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலகிருஷ்ணபாகவத ஸ்வாமி) ஒருங்கே சேர்ந்து கிடைத்த யாம் வாழ்வின் பேற்றைப் பெற்றுவிட்டோம் என்று சொல்லவும் வேண்டுமோ!
அசலம்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














