அரங்க நாயகி
N. ஷைலஜா
வணக்கம். நவராத்திரியை முன்னிட்டு திருவரங்கத்து அன்னையின் கோயிலைப் பற்றி நானறிந்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
அரங்கத்து அன்னை!
பாற்கடலிடைப் பிறந்தாள் - அதுபயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்குமோர் தாமரைப்பூ - அதன்
இணை மலர்த்திருவடி இசைந்திருப்பாள்
நாற் கரந்தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திரு உடையாள்
வேற்கரு விழி உடையாள் - செய்ய
மேனியர் பசுமையை விரும்பிடுவாள்.
- பாரதியார்.
அரங்கமாநகரின் அருள் நிறைச் செல்வி, தனிப்பெரும் தேவி, பெரிய பிராட்டி, படிதாண்டாப் பத்தினி, ரங்கநாயகி என்றே பல பெயர்கள் இருந்தாலும் கருணைக் கடலாய், காக்கும் தெய்வத்திடம் நமது குறைகளை எடுத்துக்கூறிப் பரிந்து அருள் பாலிக்கச் சொல்வதால் அவள் தாயார் ஆகிறாள். தாயார் சந்நிதி என்றுதான் அவளது இருப்பிடம் தேடி பக்தர்கள் செல்கிறார்கள்.
தங்க விமானம் ஜொலிக்க, பெரிய கோயிலில் அவளுக்கென்று ஓர் இடம். வில்வமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்டு, வினயத்துடன் அவள் மூலதெய்வமாய், முக்திக்கு வழி காட்டுபவளாய் கர்ப்பக்கிரஹத்தில் அமர்ந்திருக்கிறாள்.
முன்னே உற்சவர், பின்னே மூலவர், அதன் பின்னே மீண்டும் மூலவர் என்று எங்கும் இலாத திருக்கோலம் இந்தத் தாயார் சந்நிதியில் மட்டும் எப்படி?
முன்னர் முகமதியர் படையெடுப்பின் போது அவர்களுக்கு அஞ்சி, கோயில் மூலவரை (பள்ளி கொண்டவரை) கல்திரை வைத்து மூடிவிட்டனர். அன்னை படிதாண்டாப் பத்தினி என்பதால் ஸ்தல் விருட்சமாகிய வில்வ மரத்தடியிலேயே குகை போல் அமைத்து அதில் வைத்துவிட்டனர். உற்சவ மூர்த்தியான நம்பெருமானுக்கு மட்டும் நித்ய ஆராதனை செய்து ஊர் ஊராக எடுத்துச் சென்றனர்.
பிறகு கலகங்கள் முடிந்து மீண்டும் கோயிலைத் திறந்து ஆராதனை செய்ய புது உற்சவரைச் செய்து வைத்துவிட்டு, பிராட்டியாரையும் வைத்துவிடலாமென நினைத்துத் தேடியபோது அங்குப் பிராட்டி இல்லை.
என்ன செய்வதெனக் குழம்பினர். புதிய மூலவர் (தாயாருடையது) செய்து வைத்துவிட்டனர்.
இப்படியே நூறு வருடங்கள் கடந்தன. ஊரூராகச் சென்ற நம்பெருமாளை மீட்டுவந்து அரங்கநகர்க் கோயிலில் எழுந்தருளச் செய்தனர்.
அப்போது அங்கிருந்தவர்களின் கனவில் வந்த அன்னை தான் வில்மரக் குகையில் இருப்பதாகவும் தன்னையும் எழுந்தருளச் செய்ய வேண்டுமெனவும் சொல்ல, அவர்கள் உடனே ஓடிச் சென்றனர்; அன்னையைக் கண்டுபிடித்தனர். புதுப்பெருமாளோடு சேராது நம்பெருமாள் வந்த பிறகே தோன்றிய அரங்க நாயகியின் பத்தினித் தன்மையை எப்படி வியப்பது?
எனவேதான் இங்கு தாயார் சந்நிதியில் மூன்று மூலவர்கள்.
அரங்கனின் மிதமிஞ்சிய கள்ளத்தனத்தில் ஒன்றாகிய உறையூர் பக்தை கமலவல்லி என்னும் துலுக்க நாச்சி யாரைச் சந்தித்துவிட்டு வரும்போது மட்டும் தாயார் பொறுக்க இயலாமல் கண்டிக்கிறாள். இதனால் பங்குனிப் பெருவிழாவில் பெருமாளுக்கு 'மட்டையடி உற்சவம்' உண்டு! பிறகு 'சேர்த்தித் திருவிழா'.
வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் தாயாரும் பெருமாளும் சேர்ந்து சேவை தரும் பங்குனி உத்திரத்திருநாள் மிகவும் விசேஷமானது.
நவராத்திரி உற்சவத்தில் தாயாருக்கு அலங்காரமும் மகா விசேஷமாக இருக்கும். ஏழாம் நாள் விழாவின்போது தாயாரின் ஒரு பாதம் தெரிவதுபோல் அலங்கரித்து நவராத்திரி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். தாயாரின் பாத தரிசனத்திற்கு பக்தர் கூட்டம் அலை மோதும். தனது சந்நிதி வளாகத்திற்குள்ளேயே தனக்கென நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் எனத் தனி சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டிருக்கிறாள், அகில உலகையும் காக்கும் அன்னை அரங்கச்செல்வி.
தமிழ் வளர்த்தப் பெரு நகரங்களில் மதுரைக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ, அவ்வளவு ஸ்ரீரங்கத்திற்கும் உண்டு. கவிச்சக்கரவர்த்தி கம்பன் தாயார் சந்நிதிக்கு எதிரே அன்னையைப் பார்த்தபடியேதான் தனது கம்ப ராமாயணத்தை அரங்கேற்றினான் என்கிறது வரலாறு.
கம்பர் மண்டபம் அங்கே இன்னமும் கம்பீரமாக உள்ளது.
கவிச் சிம்மம் எனப்படும் நிகமாந்த மஹாதேசிகனின் சந்நிதியும் தாயார் சந்நிதிக்கு எதிரேதான் உள்ளது. தேசிகன் சம்ஸ்கிருதத்தில் தாயாரின்மீது ஸ்ரீஸ்துதி பாடி உள்ளார்.
தேசிகனின் கவிப்புலமையைப் பாராட்டி அவருக்கு 'ஸர்வதந்த்ர ஸ்வதந்திரர்' எனப்பட்டம் அளித்தாள் அரங்கப் பிராட்டியார்.
அன்பர்களின் குற்றங்களைப் பொறுத்தாண்டு, பெருமாளிடம் நமக்காக மன்றாடி, மன்னித்து அருளும்படிக் கேட்டுக்கொண்டு பிறகு தானும் பகவானுமாய் சேர்ந்திருந்து நம்மை ஆட்கொள்கிறாள் அரங்கநகர் அன்னை.
நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தலிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர் தன் தோளிலும் - உடல்
வியர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந்தருள் புரிவாள்.
-- பாரதியார்.
ஷைலஜா
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||

















