மனமகிழ்ச்சி தரும் மதுரகாளீ!
N. ஷைலஜா
மதுரகாளீ!
ஆதிபராசக்தி தான் க்ரியாஷக்தி (துர்கை), இச்சாஷக்தி (லக்ஷ்மி), ஞானஷக்தியாய் (சரஸ்வதி) விளங்குகிறாள்.
துர்கை தனது அம்சமான அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்ள வருபவள். அதில் ஒன்று தான் 'காளிகாதேவி'யின் அம்சம். இவளின் புறத்தோற்றம் மிகுந்த சர்ச்சைக்குறியதாகவும், அதிர்ச்சியூட்டுவதாயும் அமைந்திருக்கிறது. அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், 'திகம்பரி'யாய் வலம் வருகிறாள். 'ஷாக்தம்' அல்லது ஷக்தி வழிபாட்டின் முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக விளங்குகிறாள். ஐம்பது மண்டையோடுகளின் மாலைகளை அணிந்து, ரத்தவெறியுடன் மயானப் பிரதேசங்களில் உலா வருகிறாள். தலைமுடி கட்டுக்கடங்காமல் விரிந்து இருக்க, அழிவின் பிரதிபிம்பமாய் புனையப்படுகிறாள்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டபோது, துர்கை தனது அதீத ஷக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய்ச் சொல்லப்படுகிறது. காளிகாதேவி அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து, மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன் கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உருக் கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.
காளியே பின்பு 'பத்ரகாளி'யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள். 'பத்ர' என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள் கொள்ளலாம். கோப வடிவமாக இருக்கும் அன்னையை ப்ரீதி செய்தால் உடனே இளகி அருள்பாலிக்கிறாள். இதனால் காளிகாதேவிக்கு ஷக்தி அதிகம்.
திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில், 'மதுரகாளியம்மன்' கோவில் இன்றும் பல பக்தர்களின் வழிபாட்டுடன் சிறந்து விளங்குகிறது. பலருக்குக் குலதெய்வமாய் விளங்கும் இவள் திருக்கோவில், திங்கள், மற்றும் வெள்ளிகளில் மட்டுமே திறந்திருக்கிறது. கோவிலின் உள்ளே கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
மதுரகாளியின் ஸ்தல வரலாறு, சுவாரஸ்யமாகவும், மூன்று வித்தியாசமான கதைகள் கொண்டதாயும் இருக்கிறது.
சிலர், மதுரையை கண்ணகி எரித்த பிறகு மதுரையில் வாழ் காளிதேவி, மதுரையை விட்டு சிறுவாச்சூரில் கோவில் கொண்டாள் எனக் கூறுகின்றனர்.
வேறொரு கதைப்படி, ஐந்து ரிஷிகள் மலையில் தவமியற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளிகாதேவியை வணங்கி வந்தனர். அவளும் இறங்கி இவர்களுக்கு அருள் பாலிக்க, அவளை மரத்தடியில் குடிகொண்டு தாங்களின் பூஜையை ஏற்க வேண்டும் என்று கூறினர். ஒவ்வொரு நாளும் பூஜிக்கும் போது, மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்த தேன் ரிஷிகள் வாயில் விழுந்ததாகவும், அதனால் 'மதுர' காளி என்ற பெயர் வழங்கப்பட்டதாய் இன்னொரு கதை கூறுகிறது. எனினும், பலரால் நம்பப்படுவதாக இருக்கும் ஒரு புராணக்கதைப்படி, செல்லியம்மன் என்ற தெய்வம் தான் முன்பு காளியின் இக்கோவிலில் குடிகொண்டிருந்தாள். அவள் ஒரு முறை மந்திரவாதியின் மாயத்தில் சிக்கி அவனுக்கு அதிக வரம் கொடுத்துவிட்டு, அவனிடம் அவதியுற்று அடிமையாய் இருந்து வந்தாள்.
மதுரையை எரித்துக் கால்போன போக்கில் சுற்றிக்கொண்டிருந்த கண்ணகிக்கு, சிறுவாச்சூரில் அவள் தேடிய நிம்மதி கிடைத்தது. செல்லியம்மனின் இந்த நிலையைக் கண்டதும், காளியிடம் முறையிட்டு, செல்லியம்மனை வேறு இடத்திற்குத் தாற்காலிகமாய்ச் சென்றுவிடுமாறு கூறியிருக்கிறாள். செல்லியம்மனும் சம்மதித்து, பெரியசாமி மலையில் கண்ணகியுடன் இருக்க, அத்திருக்கோவிலில் அன்று காளி குடிகொண்டிக்கிறாள். அன்றிரவு காளி, மந்திரவாதியை சம்ஹாரித்து அருள்பாலித்த பிறகு, செல்லியம்மன் காளியை அங்கேயே தங்குமாறு விழைந்து, தான் மீண்டும் பெரியசாமி மலைக்கே சென்று விட்டதாய்க் கூறுகின்றனர்.
இன்றும் வரும் பக்தர்கள், மலையில் இருக்கும் செல்லியம்மனையும் தரிசித்துவிட்டுத் தான் செல்கின்றனர்.
காளி என்பவள் கொடுமைகளையும், அரக்க குணங்களையும் ஈவு இரக்கமின்றி அழிப்பவள். கேட்டினை அழிக்கும் வடிவத்தின் உருவகமே காளிகாதேவி. உக்ர தெய்வங்களிடம் பக்தியுடன் முறையிட்டால், அவர்கள் விரைவில் அருள்பாலிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
காத்து நிற்கும் பகதர்களுக்கு கேட்கும் வரம் தரும் அன்னையைக் கண்டு, அவளின் அருளுக்குப் பாத்திரமாவோம்.
ஒம்சக்தி ஓம்சக்தி ஓம்
பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!
அன்புடன் - ஷைலஜா
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||

















