காஞ்சிபுரம்
புலவர் த.கு. பத்மநாபன்
காஞ்சிபுரம்
காஞ்சி மாநகர் வரலாறு
வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன்.சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர்.
புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.
நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.
ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.
முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.
சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களின் தரிசனம் காண, இந்நூலை உங்கள்முன் படைக்கிறேன்.
மேலும் காஞ்சி மாநகரில் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்து வரும் கயிலைக்குருமணி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் அனுதினமும் அருள்பாலித்து வருகிறார்கள். தமிழகத்தின் தொன்மைவாய்ந்த தொண்டை மண்டல ஆதீன குரு மஹா சன்னிதானமும் அருள்பாலித்து வருகிறார்கள்.
அனைத்து மக்களுக்கும் பல உதவிகளும், இலவச மருத்துவப் பணியும் செய்துவரும் ஸ்ரீ நாராயண சேவஸ்ரமம் அமைந்துள்ளது.
காஞ்சிக்கு அடுத்த காரைப்பேட்டை அருகில் (சென்னை - பங்களூர் நெடுஞ்சாலையில் பக்தவச்சலம் பாலிடெக்னிக் எதிரில்) அமைதிப் பூங்காவாகப் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கொள்கைகளைப் பரப்பிவரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது.
அகிலமே புகழும் அறிஞர் அண்ணா பிறந்த இல்லமும், வைணவப் பெருங்கடலாக விளங்கிய பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் வாழ்ந்த இல்லமும் இக்காஞ்சியிலே இருக்கின்றன.
ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலய வரலாறு
இப்படிப்பட்ட திருநகரில் திருவேகம்பநாதர் ஆலயத்தின் சிறப்புகளை உங்களுக்கு அளிக்கிறேன்.ஏகாம்பரநாதர் ஆலயம்
முக்தித் தலங்கள் ஏழனுள் ஒன்று காஞ்சிபுரமாகும். நான்கு வேதங்களும் மா உருவாக பூசித்த தலம் கச்சி ஏகம்பமாகும். ஸ்ரீ சங்கர மடத்தின் அருகிலும், பேருந்து நிலையத்திலிருந்து 1-1/2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது திருவேகம்பம். பஞ்சபூதத் தலங்களுள் மண்ணாக (பிருத்திவி) அருள் பாலிக்கும் ஆலயம் இதுவே. ஏலவார்குழலி உடனாகிய திருவேகம்பப் பெருமான் ஒற்றை மாவடியின் கீழ் எழுந்தருளி இவ்வுலகைக் காத்து வருகிறார்.இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 192 அடி உயரமுடையது. கோபுரத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கி.பி. 1509ஆம் ஆண்டு இக்கோபுரம் கட்டப்பட்டது. கோபுரத்தின் கீழே மேற்குப் பக்கத்தில் ஆறுமுகப் பெருமானும், கிழக்குப் பக்கத்தில் விநாயகரும் மிகப்பெரிய உருவில் இருந்து அருள் பாலிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.
இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது சரபேஸ்வரர் மண்டபம் என வழங்கப்படும் வாஹன மண்டபம் ஆகும்.
இடது பக்கமாக கம்பா தீர்த்தம் அமைந்துள்ளது. கங்கை, யமுனா, சரசுவதி ஆகிய நதிகளில் நீராடிய புண்ணியம் இத்தீர்த்தத்தில் கிடைக்கிறது.
அதற்கடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் சில தூண்கள் இல்லையென்றாலும் ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் அருளால் மிகத் தூய்மையாகப் பாதுகாக்கப்பட்டு ஆன்மீக நிகழ்ச்சிகள், ஆகம வகுப்புகள் இங்கே நடைபெற்று வருகின்றன.
அடுத்து விகட சங்கர விநாயகர் சந்நதி இருக்கிறது. இங்குதான் இரட்டைப் புலவர்களால் மிகப்பெருமைவாய்ந்த திருவேகம்ப நாதர் உலா பாடப்பட்டது.
கொடிக்கம்பத்தின் அருகில் மேற்குப் பார்த்த சந்நிதி திருக்கச்சி மயானம் ஆகும். இதற்கு எதிரில் வள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்களால் 16 தூண்களை உடைய கல்யாண மண்டபம் நிறுவப்பட்டுள்ளது. கொடிக்கம்பத்திற்கு வடக்கில் சிவகங்கை தீர்த்தம்அமைந்துள்ளது. இவ்வாலயத்துள் நல்லகம்பர், வெள்ளக்கம்பர், கள்ளக்கம்பர், கச்சிமயானம், வாலீச்சுரம் எனும் ஐந்து தலகள் உள்ளன. இவை முறையே ருத்ரன், பிரம்மா, விஷ்ணு, பண்டாசூரன், வாலி பூசித்தவையாகும்.
நவராத்திரி காலங்களில், மக்களால் சிறப்பாக அபிஷேக ஆராதனைகளுடன் விளங்கும் பிரளயகால சக்தி சந்நிதி அமைந்துள்ளது. உலக அழிவின்போது மக்களைக் காத்து இரட்சித்த அம்பாளாகையால் இந்த அம்பாளுக்குப் பிரளயகால அம்மன் எனப் பெயர் வழங்கப்படுகிறது.
ஆதையடுத்து பிரகாரத்தில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். அதற்கருகில் 108 தனி லிங்கங்களும், ஒரே லிங்கத்தில் 1008 சஹஸ்ரலிங்க சந்நதியும் அமைந்துள்ளன. சஹஸ்ரலிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்தால் நினைத்தது நடக்கும்! கேட்டது கிடைக்கும்!
ஏகாம்பரநாதர் ஆலயத்துள் தட்சணாமூர்த்தி சந்நிதி கிடையாது. இவ்வாலயத்திற்கே சிறப்புத் தரும் பெரிய ஆலமரம் ஒன்று சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாமரத்தை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் வழிபட்டதாக வரலாறு!
மாவடியின் கீழ் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரப் பெருவிழாவில் சுவாமி திருக்கல்யாணத்தின்போது மாவடியின் கீழே ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெறக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அம்பலவாணர் (நடராஜர்) சந்நிதி இங்கு உள்ளது. நடராஜர் உருவம் ஐம்பொன்னால் ஆகிய மிகப்பெரிய திருமேனியாகும். ஆலயத்தின் உள்ளே ஏலவார்குழலியாகிய அம்பிகை இறைவனை அடையும் பொருட்டு கம்பா நதியில் மணலால் லிங்கம் உருவாக்கி, தவம் செய்து வழிபட்டாள். அப்போது இறைவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை உருவாக்க, அம்பிகை பயந்து மணல் லிங்கத்தை மார்புரத் தழுவினாள் என்பது வரலாறு.
எனவே இன்றும் அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையார்க்கே நடைபெறுகின்றன. மணல் லிங்கமாக எழுந்தருளியிருக்கும் திருவேகம்பப் பெருமானுக்குச் சாந்து சாத்தித்தான் இன்னமும் வழிபாடு நடைபெறுகிறது.
ஆலயத்தின் பிர்காரத்தில் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்சந்நிதி இருக்கிறது. மூலவருக்கு நிலாத் திங்கள் துண்டத்தான், சந்திர சூடப்பெருமாள் எனத் திருநாமங்கள் உண்டு. சந்திர புஷ்கரணி தீர்த்தத்தை உடைய இங்கு வீற்றிருக்கும் தாயருக்கு நேர் ஒருவரில்லா வள்ளி, நிலாத் திங்கள் துண்டத் தாயார் எனப் பெயர்கள் வழங்குகின்றன. பார்வதி தவத்தைச் சோதிக்க சிவபெருமான் மாமரத்தை எரித்தார். அன்னை தன் தங்கையின் பொருட்டு மாமரத்தைத் தழைக்கச் செய்தார். அவள் தாபத்தைத் துண்டித்தபடியால் நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இரு விழிகளை இழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வாலயத்திற்கு வந்து இடக்கண் பெற்றார். நாயன்மார் மூவராலும் பட்டிணத்து சுவாமிகளாலும் பாடல் பெற்ற தலமாகும். இவ்வாலயத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
23.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவேகம்பநாதர் ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உருவானாய் போற்றி
என்று வழிபட்டு வருவோர்க்கு வாழ்வு என்றும் நிறைவாகும்.
தொகுத்தளித்தவர் புலவர் த.கு.ப.
மேலும் விவரங்களுக்கு
தமிழ்ப் பயணி
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













