தாயென்று கும்பிடடி பாப்பா
- கிருஷ்ணா முகுந்தா - 04
பிள்ளையார் பாட்டி
ஒரு இடைவெளி வேண்டும் என்பதாலும் 700-க்கு மேலே பதிவுகள் போய்விட்டன. ஆகவே எழுதிக் கொண்டிருப்பதில் ஓரளவுக்காவது அர்த்தம் இருக்கணும் என்பதற்காகவும் எழுதி வைத்த பல பதிவுகளையும் போடவில்லை. இந்த எழுதி வச்சுக்கற பழக்கமே கடந்த ஆறு மாதமாய் ஆர்காட்டார் தயவால் ஏற்பட்டது. இனி எழுதப் போவது ஒரு திருடனின் கதை. சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை மத்தியானத்திலும் , திருடனின் கதையை இரவிலும் கேட்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இப்போ எழுதப் போற கதையில் சூதாடியும் வருவார், திருடனும் வருவார், பெண்ணும், சொல்லப் போனால் பெண்களும் வருவார்கள். இது ஒரு சிறிய முன்னுரை. இனி கதை ஆரம்பிக்கும். நேரம் கிடைத்தால் மதியமே ஆரம்பிக்கின்றேன். வழக்கம்போல் அவ்வப்போது சிறிய மொக்கைகளும் தேவையான நேரம் அனுமதிக்கப் படும்.
முழுக்க முழுக்கக் கதையாகவே எழுத முயற்சித்தாலும் அவ்வப்போது இலக்கிய ஒப்பீடுகளையும் தவிர்க்க முடியலை. இலக்கியவாதி இல்லை என்றாலும் சில, பல ஆதாரங்களுக்காகப்படிக்க நேர்ந்ததையும் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுவேன். வழக்கம் போல் மெளனமாய்ப் படிக்கிறவங்களும், பின்னூட்டம் கொடுத்து ஆதரிக்கிறவர்களும் என்னுடைய இந்தத் தாக்குதலுக்குத் தயாராய் இருக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி. வணக்கம்
விநாயகப் பெருமான் அருளால் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் வேலை நிறைவாக முடிவடையப் பிரார்த்திக்கின்றேன். இப்போ எழுதப் போறது மகாபாரதத்தில் இருந்தும் பாகவதத்தில் இருந்தும் வரும் சில பகுதிகள் மட்டுமே. முக்கியமாய் திரெளபதி சுயம்வரம் பற்றியும், அது நடந்த போது இருந்த அரசியல் நிலைமை பற்றியும், எந்த ஒரு சூழ்நிலையில் திரெளபதி பஞ்ச பாண்டவர்கள் ஐவரையும் மணக்க நேர்ந்தது என்பது பற்றியும், அதற்கு அவளின் உண்மையான மன நிலைமை இருந்த விதம் பற்றியும் ஒரு அலசல். இது ஒரு முன்னுரை மட்டுமே. முழுக்க முழுக்க மகாபாரதம் எழுதவும் போறதில்லை. பயப்படாதீங்க! இதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்த திரு வெங்கட்ராம் திவாகருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திரு கே.எம். முன்ஷியின் இந்தப் புத்தகங்கள் பற்றிக் கேட்டதோடு சரி. அதுவும் திரெளபதியின் திருமணம் பற்றிய கேள்விகள் எழும்போதெல்லாம் அப்பா குறிப்பிட்டதோடு சரி. ராஜாஜியின் வியாசர் விருந்து தான் படிச்சிருக்கேன்.
மகாபாரதம் படித்திருப்பது என்பது வேறு. இம்மாதிரியான உளவியல் ரீதியான புரிதலோடு படிப்பது வேறு. மகாபாரதம் பல முறை படித்திருப்போம் அனைவருமே. தொலைக்காட்சியில் தொடராகவும் பார்த்திருக்கின்றோம். அம்மாதிரியான நீதிகளோ, நியாயங்களோ, யுத்தங்களோ, மனவேற்றுமைகள், திருமணங்கள் என அனைத்துமே ஒரு வரலாற்றுக் கதையின் நோக்கத்தோடு ஆய்வு செய்து சொல்லப் பட்டிருப்பது இப்போதே படிக்கின்றேன். இதில் இன்னும் படிக்க மிச்சம் இருந்தாலும், நான் படித்தது முதலில் ஐந்து சகோதரர்களின், திரெளபதியின் திருமணம் எந்தவிதமான நிர்ப்பந்தங்களுக்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றது என்பதை அறியும் ஆவலிலேயே.
சாண்டில்யன் அவர்களுக்குச் சற்றும் குறையாமல், கல்கி அவர்களின் எழுத்தைப் போல் சரளமாகவும் உள்ளார்ந்த கிருஷ்ண பக்தியுடனும் , கிருஷ்ணன் மேல் தான் கொண்ட பக்தியானது எவ்வாறு இம்மாதிரியான ஒரு தொடரைத் தர நேர்ந்திருக்கின்றது என்பதையும் விவரித்துள்ளார். கிருஷ்ணனின் பரம்பரையைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள திரு முன்ஷி அவர்கள் முதலில் எழுதியதில் கம்சனின் வதத்தோடு முடிவடைகின்றது. இரண்டாவது பாகம் ருக்மிணியை சுயம்வரத்தின் போது அவள் பூரண சம்மதத்துடன் கிருஷ்ணர் கவர்ந்து வந்தது பற்றியும், ஜராசந்தன் என்னும் மகத நாட்டுச் சக்கரவர்த்தியானவன் தன் மருமகன் ஆன கம்சனைக் கண்ணன் கொன்றதால் ஏற்பட்ட தீராப் பகைமை பற்றியும் விவரிக்கின்றது. அடுத்து உள்ள மூன்றாம் பகுதி ஐந்து சகோதரர்களையும் துரியோதனன் பிடிவாதத்தால் நாடு கடத்த நேர்ந்ததையும், அவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி ஒளிந்து வாழ்ந்ததையும், திரெளபதி சுயம்வரத்தோடு அது முடிவதையும் குறிக்கின்றது. என்றாலும் அதற்குள் தான் எத்தனை எத்தனை பிரச்னைகள், சண்டைகள், ஒளிந்து வாழ்ந்தவர்களைக் கண்டு பிடிக்கக் கிருஷ்ணர் பட்ட கஷ்டம், ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்து, அந்த அந்த நிலைமைக்கும், அரசியல் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு முடிவெடுத்தல் என அனைத்தும் கிருஷ்ணரைச் சுற்றியே பின்னப் பட்டிருக்கின்றது. இதில் கிருஷ்ணர் ஒரு அவதாரமாய்ச் சொல்லப் படவில்லை. ஒரு மரியாதைக்குரிய யாதவ இளவலாகவே காட்டப் பட்டிருக்கின்றார். என்றாலும் அவரின் தோற்றமும், பேச்சும், உடல் மொழியும், அனைவரையும் கவரும் உடை அலங்காரமும், சிரிப்பும், எதற்கும் யோசித்து முடிவெடுக்கும் தன்மையும், எது வந்தாலும் தர்மம் என்பது என்ன என்று யோசித்து அதன் வழியிலே செல்ல முடிவெடுப்பதும், அதனாலேயே மக்களால் புகழப் படுவதும், ஒரு சக்கரவர்த்திக்குக் கொடுக்கும் மரியாதையை விடக் கூடுதலாய் மக்கள் கிருஷ்ணருக்குக் கொடுப்பதும், அதைக் கண்டு சிலர் புழுங்குவதுமாக முற்றிலும் மனித மனத்தின் போராட்டங்களை விவரிக்கும் ஒரு கதையாகவே இது திகழும் என நினைக்கின்றேன்.
எல்லாரும் பிசி, பிசிங்கறாங்க, நாமளும் சொல்லவேண்டாமா?? ஆகவே கொஞ்சம் பிசி, பதில் கொடுக்க முடியலை. இன்னிக்கு முடிஞ்சால் கொடுக்கிறேன். ஆற்காட்டார் வேறே நினைச்ச நேரம், வந்து ஒரே தொந்திரவு! :
முதலில் கே.எம். முன்ஷி அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், என்றாலும் தெரியாதவங்களுக்காக. படம் கிடைக்கவில்லை, தேடிட்டேன். கூகிளாரும் உதவவில்லை. கனையாலால் மனேகாலால் முன்ஷி என்பது முழுப் பெயர். பல்முனைத் திறமைகள் படைத்தவர். 1887-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பரூச் நகரில் டிசம்பர் 3--ம் தேதி பிறந்தார். இவரின் படிப்பு பரோடாவில் நடந்தது. அரவிந்தரிடம் இவர் கல்லூரியில் பயின்றிருக்கின்றார். மும்பை ஹைகோர்ட்டில் வக்கீலாய்த் தொழிலைத் தொடங்கினார். காந்தியின் இந்திய வருகைக்குப் பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்து முழுமூச்சுடன் ஈடுபட்டார். பலமுறைகள் சிறை சென்றிருக்கும் இவர் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் போது சர்தார் படேல் இவரைக் கவர்ந்தார். படேலின் தீரமும், மன உறுதியும் இவரைப் பெருமளவு ஈர்த்தது. 1930-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட செண்ட்ரல் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளியில் உறுப்பினராய் இருந்தார். 1938-ம் ஆண்டு மும்பையில் பாரதீய வித்யா பவனைத் தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்த சமஸ்தானங்களை படேல் இணைக்கும்போது அவருக்கு உறுதுணையாக இருந்து பல உதவிகள் புரிந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை அமைக்கும்போது அம்பேத்கர் தலைமையில் இருந்த குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அனைத்துக்கும் மேலே குஜராத்தில் சோம்நாத் சிவன் கோவிலைப் புனரமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடந்து மக்கள் தரிசனத்திற்குத் தயார் செய்யும் வேலையை சர்தார் படேல் செய்ய ஆரம்பிக்கும்போது இவர் பின்னிருந்து அதற்கு ஆவன செய்து கோயிலைச் சீரமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்து, சோம்நாத் கோயிலை மீண்டும் மக்களுக்கு அர்ப்பணித்தார்.
நேருவுடனான சிறு சிறு உரசல்களாலும், நேருவால் நிர்வாகம் செய்யப் பட்ட காங்கிரஸில் இருக்க இஷ்டம் இல்லாமலும், இவர் பின்னர் ராஜாஜி அவர்களால் ஏற்படுத்தப் பட்ட சுதந்திரா கட்சியில் சேர்ந்தார், என்றாலும் இந்தக் கட்சி மக்களிடையே அவ்வளவு முக்கியத்துவம் பெறாத காரணத்தால் பின்னர் ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1952-57 வருஷங்களில் உத்தரப் பிரதேசத்தின் கவர்னராக இருந்து வந்தார். அரசியல் தவிர, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் இயற்கையை நேசிக்கும் ஒரு ரசிகரும் ஆவார். இவர் மத்திய அரசில் விவசாய மந்திரியாக இருந்தபோது இவரால் 1950-ல் தொடங்கப் பட்ட வன மகோத்சவம் பின்னர் பல வருடங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் ஜூலை மாதம் பல இடங்களிலும் பல்வேறு மரங்களை நட்டு மகிழும் ஒரு விழாவாக நடை பெற்று வந்தது.
இவற்றைத் தவிர இவர் ஒரு பெரும் இலக்கியவாதியாகவும் இருந்து வந்தார். தம் சொந்த மாநிலம் ஆன குஜராத்தின் மேல் பெரும் ஈடுபாட்டுடன் இவர் அதன் வரலாற்றையும் பதிவு செய்திருக்கின்றார். சிறு வயது முதல் கிருஷ்ணர் பற்றிய பல்வேறு கதைகளைக் கேட்டு வந்த இவர், அதன் அடிப்படையில் கிருஷ்ணாவதாரம் பற்றிய ஏழு புத்தகங்களை எழுதி உள்ளார். இவர் இறந்து விட்டதால் இவரால் இவற்றை முடிக்க முடியவில்லை. ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை. அதிலிருந்து சில பகுதிகளை மட்டுமே எனக்குப் புரிந்த கோணத்தில் பார்க்கப் போகின்றோம். ஒரு நாலைந்து நாட்களுக்கு உள்ளவற்றை முன்கூட்டியே போட்டு வச்சிருக்கேன்
சீனு மாமாவிடமிருந்து..
எனது வாலிபப் பருவத்திலிருந்தே நான் வெகுவாக மதித்து வந்த, தற்புகழ்ச்சைச் சிறிதும் விரும்பாது வாழ்ந்த, உண்மையான சுதந்திரத் தியாகி திரு முன்ஷி அவர்களைப் பற்றி எழுதுவதற்கு திருமதி கிதா சாம்பசிவம் அவர்களுக்கு மிக்க, மிக்க நன்றி.
அந்த மகான் உருவாக்கிய 'பாரதிய் வித்யா பவன்' வெளியிட்டு வரும் 'Bhavan's Journal' பத்திரைக்கையை அக்காலங்களில் விடாமல் படித்து வ்ந்தேன். ஓரு பத்திரிக்கயில் மிகப் புகழ் பெற்ற சேங்காலிபுரம் (என் தாயின் ஊர் தடுத்தாட்கொண்டபுரத்திற்குப் பக்கத்திய ஊர்!) அனந்தராம தீக்ஷிதர் அவர்களின் சம்ஸ்கிருத உச்சரிப்பை வெகுவாகப் புகழ்ந்திருந்தைப் படித்தது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. முன்ஷி அவர்களின் அருமையான கருத்துக்களை அடிக்க்டிப் படித்து வந்ததினால் தான் சற்றும் தவரில்லாது சம்ஸ்கிருதச் சொற்களை உச்சரிப்பதில் மிக கவனம் செலுத்தத் துடங்கினேன்.
இவ்வளவு போரடித்தற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மேலும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு (முன்பே கூறியிருக்கிறேன் 'எனது இளைய சகோதரியென்று) நன்றி கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.
அடடா மறந்துவிட்டேனே
டிசம்பர் 30 அம்மகானின் பிறந்த நாளன்றோ! 1988ம் ஆண்டு அவரது 101வது பிறந்த நாளன்று அவரது ஞாபகார்த்தத்திற்காக அவரது படத்துடன் வெளியிடப் பட்ட தபால்தலை (postal stamp)ப் படத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















