தாயென்று கும்பிடடி பாப்பா
- பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பாட்டி
அத்தியாயம் 27
மிதிலையை ஆண்டு வந்த ஜனகராஜாவின் அரண்மனை தர்பார். அனைத்து மந்திரி பிரதானிகள் புடைசூழ மன்னன் கொலுவீற்றிருந்தான். அப்போது அந்த அவைக்குள்ளே நாரதர் நுழைந்தார். எந்த இடத்துக்கும், எந்த நேரத்திலும் பிரவேசிக்கக் கூடிய உரிமையைப் பெற்ற அவர் காரணம் ஏதும் இல்லாமலா வந்திருப்பார்? இல்லை, காரணம் இருந்தது. ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே நுழைந்த நாரதரை அனைவரும் வணங்க, மன்னன் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து நாரதரை வரவேற்கவில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே அவரை வரவேற்றான். எனினும் மன்னனை மனமார ஆசீர்வதித்தார் நாரதர். “மன்னா, நீ விரும்பிய அனைத்துச் செல்வங்களும் , மற்ற வளங்களும் உனக்குக் கிடைக்க இறைவன் அருள் புரிவான்.” என்றார். ஜனகருக்குக் கொஞ்சம் அலக்ஷியம். ஏளனமாய்ச் சிரித்தார். “நாரதரே, இதை வேறே யாரானும் சொல்லி இருந்தால் இன்னும் சிரித்திருப்பேன். அனைத்தும் அறிந்த நீர் சொல்லலாமா? நான் என்ன கல்லாதவனா? அனைத்தும் அறியாதவனா? கொடுப்பவன் யார்? எடுப்பவன் யார்? கொடுப்பவனும் நானே! எடுப்பவனும் நானே! எல்லாம் வல்லவ அந்த இறைவனும் நானே! ஜனகன் என்ற மன்னனும் நானே! அவற்றை வேண்டாமெனில் நானே வெறுத்து ஒதுக்கவும் செய்வேன்! அனைத்தும் நான்! நானே பிரம்மம்! பிரம்மமே நான்!” என்றான் மன்னன்.
நாரதருக்கு தீர்க்கதரிசனம் தெரியும் என்றாலும் மன்னனின் இந்த அகம்பாவமான பேச்சு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. வாய் திறவாமல் வெளியே வந்தார். நேரே கெளண்டிய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார். கெளண்டின்ய ரிஷி தான் அருகம்புல்லின் மகிமையை உலகுக்குத் தன் மனைவி மூலம் காட்டியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் ஆசிரமத்தில் இருந்த விநாயகர் கோயிலில், ரிஷி வழிபட்ட விநாயகர் முன்னே நின்று, “விநாயகா, இது என்ன? ஜனகனுக்கு புத்தி பேதலித்துவிட்டதா? உண்மையான பிரம்மம் என்னும் தத்துவம் அறியாமல் பேசுகின்றானே! கர்வம் வந்துவிட்டதே! நாடாளும் மன்னனுக்கு இறை உணர்வில் இத்தனை கர்வம் வந்தால் குடி மக்கள் எப்படி நல்வாழ்வு வாழமுடியும்? மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் அன்றோ? இந்த ஜனகனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டிய காலமும் வந்துவிட்டது. நீயே அருள் புரிவாய், வேழமுகத்தோனே!” என்று வேண்டிக் கொண்டார்.
ஜனகரின் அரண்மனை வாயில். அந்தணர் ஒருவர், தள்ளாத வயது, உடலெல்லாம் குஷ்ட நோயால் பீடிக்கப் பட்டு, நடக்கக் கூட முடியாத நிலை, அரண்மனை வாயிலில் வந்து நின்றுகொண்டு, “பசி, பசி” என புலம்பிக் கொண்டு இருந்தார். காவலர்கள் செய்வதறியாமல் மன்னனுக்குத் தகவல் தர, மன்னன் அவரைத் தன்னிடம் அழைத்துவரச் செய்தான். அந்தணர் உள்ளே வந்ததும், “என்ன வேண்டும்?” என மன்னன் கேட்க, “பசிக்கு உணவு!” என்றார் அந்தணர். மன்னனுக்கு ஒரு வழியில் நிம்மதி! அப்பாடா, நம்மால் முடிந்ததைக் கேட்டாரே!” பூ, இவ்வளவு தானா? யாரங்கே, இந்த அந்தணனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடுங்கள்!”
“உத்தரவு மன்னா!” அந்தணர் சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். உணவும் பரிமாறப் பட்டது. அந்தணரும் இலையில் கை வைத்தாரோ இல்லையோ உணவு மொத்தமும் காணோம், காணவே காணோம்! சுற்றி இருந்தவர்கள் ஏதும் புரியாமல் மீண்டும் பரிமாற, மீண்டும் அந்தணர் கைவைக்க, மீண்டும் அதே கதை! சமைத்த அனைத்து உணவுகளும் வர, மிச்சம், மீதி வைக்காமல் அனைத்தும் பரிமாறப் பட அனைத்தும் இப்படியே காணாமல் போயின. ஆனால் அந்தணரின் பசி மட்டும் தீரவில்லை. பரிமாறியவர்கள் களைத்துச் சோர்ந்து போய், “திரும்பச் சமைத்துத் தான் போடவேண்டும். பொறுங்கள்.” என்று கூற, அந்தணருக்குக் கோபம் தலைக்கு ஏறியது. “பசி என வந்தவனுக்கு முதலில் பசியைத் தீருங்கள். அப்புறம் சமைக்கலாம்.” என்று சொல்ல, பணியாளர்கள் செய்வது அறியாமல் தானியங்களைப் பச்சையாக அப்படியே எடுத்துக் கொடுக்க அதுவும் போதவில்லை என அந்தணர் சொல்ல, நெற்களஞ்சியம், தானியக் களஞ்சியம், பால், பழங்கள், காய்கறிகள் என அனைத்தும் சேமிப்பில் இருந்தவை எல்லாம் கொடுத்தும் அந்தணருக்குப் போதவில்லை.
இனி தானியம் விளைந்து வந்து சேமித்தால்தான் அரண்மனைக் களஞ்சியத்தில் தானியம். அரசனுக்குத் தகவல் போனது. தலைநகரில் இருந்த குடிமக்கள் அனைவரிடம் இருந்தும், உணவுப் பொருட்கள், உணவு வகைகள், தானிய வகைகள், பழ வகைகள், காய்கள் வரவழைக்கப் பட்டன. எங்கிருந்து எத்தனை வந்தாலும் அந்தணர் கை வக்கும்போதே மாயமாய் மறைந்து கொண்டிருந்தது. அனனவரும் நடுங்கினார்கள். மன்னனுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது! யாரிவன்? ஏதோ பூதமாய் இருப்பானோ? பிசாசோ? பிரம்ம ராக்ஷசோ? இவனை எப்படியாவது நல்ல வார்த்தை சொல்லி வெளியே அனுப்ப வேண்டும் என நினைத்த வண்ணம் அரசன் முதலில் அந்த அந்தணனை நாட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் எனக் கட்டளை இட்டான். அந்தணன் அரசனைப் பார்த்து, “பசி என வந்தவனுக்கு உணவு கொடுக்காமல் நாட்டை விட்டுத் துரத்துகின்றாயே? நீ ஒரு பெரிய மஹாராஜா! அதுவும் அன்றொரு நாள் நாரதர் வந்தபோது சபையில், “நானொரு பிரம்மம். என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். கொடுப்பதும், நான், எடுப்பதும் நான்! என்னால் முடியாதது எதுவும் இல்லை.” என்றெல்லாம் பேசினாயே? இந்த ஏழைப் பிராமணனின் பசியைப் போக்க முடியாத நீயும் ஓர் அரசனா?“ என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. தன் அகங்காரத்தை நினைத்து மனம் நொந்தான். தவறை உணர்ந்து அதற்குப் பிராயச் சித்தமும் செய்ய விரும்பினான்.
இதனிடையில் பசி, பசி என்று பறந்த அந்தணர் மிதிலாபுரியை விட்டுத் தள்ளி ஒரு குடிசையில் வசித்து வந்த திரிசிரன் என்பவனின் குடிசை வாயிலுக்கு வந்திருந்தார். திரிசிரனின் மனைவி விரோசனை. இருவரும் விநாயகரின் பக்தர்கள். அன்றைய வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றைக்குக் கிடைத்த ஒரே ஒரு அருகம்புல் இட்ட நீரை விநாயகருக்கு நிவேதனம் செய்து, அந்த ஒற்றை அருகம்புல்லைக் கணவனுக்கு உணவாய் அளித்துவிட்டுத் தான் அந்த நீரை அருந்தலாம் என விரோசனை எண்ணி இருந்தாள். அப்போது தான் அந்தணர் அங்கே போய்ச் சேர்ந்தார். சோர்வோடு இருந்த அந்தணரைப் பார்த்த திரிசிரனும், அவன் மனைவியும் அந்தணரை வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்டனர். அந்தணரும், தனது தாளாத பசியைச் சொல்லி, தான் ஜனகனின் அரண்மனைக்குச் சென்றதாகவும், அங்கே அளித்த உணவு போதவில்லை. ஏதோ போட்டான் அரை மனதாக என்றும் சொன்னார். திடுக்கிட்டனர் திரிசிரனும், விரோசனையும். அத்தனை பெரிய மஹாராஜா உணவளித்தே பசி ஆறாதவர் இங்கே வந்து சாப்பிட்டா பசி ஆறப் போகின்றார்? கவலையுடனே அவரைப் பார்த்து, உள்ள நிலைமையைத் தெளிவாய் எடுத்து உரைத்தார்கள். முதல் நாள் வரையிலும் யாசகம் எடுத்து உணவு உண்டு வந்ததையும், அன்றைக்கு யாசகத்திலும் எதுவும் கிட்டாமல், விநாயகருக்கு வழிபாடு செய்து, அருகை நிவேதனம் செய்து, அதுவும் ஒரே ஒரு அருகம்புல்! அந்த அருகைக் கணவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுத் தான் நீர் அருந்த இருந்ததையும் விரோசனை கண்ணீர் பொங்கக் கவலையுடனே தெரிவித்தாள்.
அந்தணரோ குதித்தார்! “ஆஹா, அருகும், அந்த அருகு இருந்த நீருமா? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்னுடைய குஷ்ட நோய்க்கான மருந்தல்லவோ அருகு? அதைத் தீர்க்க இந்த அருகு ஊறிய நீரைவிடச் சிறந்த மருந்து உண்டோ? மேலும் ஜனகன் உள்ளன்போடு எனக்கு உணவு படைக்கவில்லை. அவனிடம் உள்ள செல்வத்தைக் காட்டவும், அவனுடைய செல்வாக்கைக் காட்டவுமே உணவு படைத்தான். உள்ளன்போடு ஒரு கைப்பிடி உணவு கொடுத்தால் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைந்துவிடுமே. அதுவும் தும்பிக்கையானுக்கு நீங்கள் இருவரும் நம்பிக்கையோடு படைத்தது வீண் போகுமா?” அந்தணர் அந்த அருகைக் கிட்டத் தட்டப் பறித்து வாயில் போட்டுக் கொண்டு நீரையும் அருந்தினார். என்ன ஆச்சரியம்? அங்கே காட்சி கொடுப்பது யார்? தலை ஆட்டிக் கொண்டு, மத்தள வயிறுடன் உத்தமி புதல்வன் அன்றோ வந்துவிட்டான்? இது என்ன விந்தை? இது மட்டுமா? மேலும், மேலும் விந்தைகள் நடந்தன. திரிசிரனின் மண்குடிசை இருந்த இடத்தில் இப்போது மாளிகை ஒன்று முளைத்தது. களஞ்சியம் நிரம்பி வழிந்தது. தங்கமும், முத்தும், பவளமும், வைரமும் மாளிகையில் காணக் கிடைத்தன. திரிசிரன் தம்பதிகளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பலவாறு விநாயகரைப் போற்றித் துதித்தனர். அத்தோடு நில்லாமல் திரிசிரனுக்கு வந்த பாக்கியம் ஜனகனுக்கும் தெரிய வேண்டாமா?
மிதிலாபுரியே செல்வத்தில் மிதந்தது. அந்தணரால் உண்ணப் பட்ட உணவுப் பொருட்களைப் போல் பல மடங்கு உணவுப் பொருட்கள், மேன்மேலும் செல்வங்கள், நிறைந்தன. திடீரென வந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்ட மன்னன் விவரம் விசாரித்து அறிந்து கொண்டு திரிசிரனைக் காண வந்தான். அங்கே இருந்த விநாயக மூர்த்தியை வணங்கித் தன் மமதையை அடக்கித் தனக்குப் பாடம் புகட்டியதற்கு நன்றி சொன்னான். விநாயகரும் அவன் முன்னால் தோன்றி, அவனுடைய அறியாமை நீக்கி நல்ல குருவை நாடி ஞானத்தைத் தரக் கூடிய அறிவைப் பெற அருள் புரிந்தார். அதன் பின்னரே ஜனகரும் யாக்ஞவல்கிய மஹரிஷியை நாடி உபதேசம் பெற்று ராஜரிஷியாக மாறினார். அருகம்புல் தோல் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. முக்கியமாய் குஷ்டநோய்க்கு அருகம்புல் மிகச் சிறந்த மருந்து என இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறியுள்ளதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
கீதாசாம்பசிவம்
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















