-
அறுபத்து மூவர் - 13
- கீதா சாம்பசிவம்
அரசனால் வளர்க்கப் பட்டிருந்தாலும் நம்பி ஆரூரர் அந்தணர்க்குரிய நெறிமுறைகளைக் கைவிடாமல் இருந்தார். பெண்ணின் தந்தையான சடங்கவி சிவாசாரியார் மாப்பிள்ளையின் சுந்தர ரூபத்தையும், தம் பெண்ணின் அதிர்ஷ்டத்தையும் எண்ணி மகிழ்ந்திருந்தார். சீர் வரிசைகள் இருபக்கமும் ஏராளமாய்ச் செய்யப் பட்டன. மணமகனுக்குரிய வரவேற்பும் முறையாகச் செய்யப் பட்டது. ஈசன் இதைக் கண்டு புன்னகை புரிந்தான். இந்தச் சுந்தரன் பூமிக்குச் சென்றதுமே நம்மை மறந்தானோ? அவன் செய்ய வேண்டியதும், மணக்க வேண்டியவர்களும் வேறாய் இருக்க, இப்போது திருமணத்திற்குத் தயாராகி விட்டானா? சரிதான், இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டியது தான். இறைவன் நினைத்தால் அதற்கு மாறாய் ஏதும் நடக்குமோ?
நடையிலே தள்ளாட்டம், சொல்லிலே தடுமாற்றம், வெண்ணிற முடி மட்டுமில்லாமல் உடலெங்கும் வெண்ணீறணிந்த கோலம், கையிலே கைத்தடி, வெண்ணிற உடை, மார்பிலே முப்புரிநூல், இவர் என்ன சிவனடியாரா? அல்லது ஆதிசிவனேயா? பார்ப்பவரில் சிலருக்கு இந்த எண்ணம் தோன்றியது. அந்தணக் கோலம் தரித்து ஈசன் பந்தலினுள் நுழைந்தார். பந்தலில் திருமணச் சடங்குகள் மிகவும் விமரிசையாக நடைபெற ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. மங்கலமுரசம் ஓங்கி ஒலிக்க அதை மீறி முதிய ஒரு குரல், "யார் அங்கே? நிறுத்துங்கள் இந்தத் திருமணத்தை, நான் சொல்லுவதைக் கேளுங்கள்!" என்று கூறியது. அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே முதிய ஒருவர் கையிலே கைத்தடியை ஓங்கிக் கொண்டு நின்றிருந்தார். முகமோ திவ்ய ஜோதிப் பிரகாசமாய்க் காட்சி அளித்தது. தன்னை அறியாமல் மணப்பந்தலில் வீற்றிருந்த சுந்தரர் எழுந்து அவர் அருகே சென்று நமஸ்கரித்துக் கைகளைக் கூப்பிக் கொண்டு வணக்கத்துடன் பேசலானார், “ஐயா, தாங்கள் யாரோ தெரியாது, இருந்தாலும் தங்கள் வரவு நல்வரவாகுக. என் பேரதிர்ஷ்டமே தாங்கள் இன்று இங்கே எழுந்தருளியது.” என்று விநயமாகச் சொன்னார். முதியவரோ, “அது இருக்கட்டும், சுந்தரா, உனக்கும் எனக்கும் இன்னும் தீராத ஓர் வழக்கொன்று உண்டு. அதை முடித்து விட்டல்லவோ நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்?” என்று சொன்னார்.
சுந்தரர் திகைப்புடன், “ஐயா, தாங்கள் யாரெனத் தெரியாது எனக்கு. இருந்தாலும் வழக்கொன்று இருப்பதாய்ச் சொல்லுகின்றீர். அவ்விதம் வழக்கு இருந்தால் அதைச் சொல்லும். அதைத் தீர்த்துவிட்டே நான் திருமணம் செய்து கொள்ளுவேன்.” என்று சொல்ல, கூடி இருந்த சபையோரைப் பார்த்து முதியவர், “அனைவரும் நன்றாய்க் கேளுங்கள். இந்த நாவலூரான், நம்பி ஆரூரன் எனக்கு அடிமை! ஓர் அடிமை எஜமானைக் கேளாமல் திருமணம் செய்வது எங்கனம்?” என்று சொல்லிவிட்டுப் பெரியதாய் நகைத்தார். ஆரூரருக்கோ வியப்புத் தாங்கவில்லை. என்ன சான்று எனக் கேட்ட அவரிடம் தம் கையில் இருந்த நறுக்கோலை ஒன்றைக் காட்டினார் முதியவர். “நாவலூரா, இது இப்போது எழுதவில்லை. உன் பாட்டன் காலத்திலேயே அவனால் எனக்கு எழுதிக் கொடுக்கப் பட்டது.” என்றும் சொன்னார்.
திகைப்பு மேலிட்ட நம்பி ஆரூரர் என்னும் சுந்தரர் கூட்டத்தினரைப் பார்த்து, “யார் இவர்? உங்களில் யாரேனும் அறிவீரா? பார்த்தால் பெரும் பித்தனாய் இருக்கின்றாரே?” என்று சொல்ல, முதியவராய் வந்த இறைவனோ, “ஆம் நாம் பித்தனே தான். நம்பி ஆரூரா, உனக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை. நான் பித்தனோ அல்லது பேயனோ, நீ என்னைப் பற்றி எவ்வளவு இழிவாய்ப் பேசினாலும் நான் கவலைப்படவில்லை. நான் சொல்லுவதை உன்னால் அறிய முடியவில்லை. மணவறையில் அமர்ந்தவண்ணம் வீண் பேச்சுக்கள் பேசாதே. உன் தந்திரம் ஏதும் என்னிடம் பலிக்காது. நீ எனக்கு அடிமைதான். எனக்குத் தொண்டு செய்யவே பிறந்தவன் நீ.” என்று சொன்னார்.
ஆரூரருக்கு என்ன காரணத்தினாலோ பெரியவரிடம் கோபம் வரவில்லை. மாறாக ஒரு மரியாதை உணர்வும், பக்தியுமே தோன்றியது. அவரிடம் கோபம் வருவதற்குப் பதிலாக அன்பே பெருக்கெடுத்தது. ஆனால் அவர் தம்மை அடிமை என்று சொன்னது மட்டுமே அவர் மனதை அறுத்தது. ஆகவே முதியவரிடம், ”எங்கே அந்த ஓலை நறுக்கு? காட்டுங்கள் பார்ப்போம்!” எனக் கேட்டார். முதியவர் மறுத்தார். “உன்னிடம் தனியாகத் தரமாட்டேன்,” என்றார்.
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














