தாயென்று கும்பிடடி பாப்பா
- அறூபத்து மூவர் - 11
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
இடம் திருக்கயிலை, ஈசனும், அம்மையும் அம்மையப்பனாய்த் தரிசனம் தந்து கொண்டிருந்தனர். அடியார்கள் அனைவரும் இருவரையும் துதித்துப் போற்றிப் பாடிக் கொண்டிருந்தனர்.
ஈசனடி போற்றி!
எந்தையடி போற்றி!
தேசன் அடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!
என்ற குரல்களின் வாழ்த்தொலிகள் மேலோங்கி நிற்கும் கயிலை மலையில் முக்கண்ணனான எம்பெருமான் உமை அம்மையுடன் எழுந்தருளி இருந்தார். தேவாதி தேவர்களும் வந்து தொழுது, ஏத்திப் பணிந்து கொண்டிருந்தனர். பிரமனின் அன்னத்தையும் பழிக்கும் வெண்மை நிறம் கொண்ட திருக்கயிலையில் மலை அடிவாரத்திலே ரிஷி, முனிவர்களின் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பிரதானமாய் விளங்கியவர் உபமன்யு முனிவர் ஆவார். பிரம்ம ரிஷியான வியாக்ரபாதரின் புதல்வர் ஆன இந்த உபமன்யு சிறு குழந்தையாக இருந்தபோது பசித்துப் பாலுக்கு அழ, வியாக்ரபாதர் ஈசனை வேண்ட, ஈசன் திருப்பாற்கடலையே உபமன்யுவுக்காக இந்த பூமிக்குக் கொணர்ந்தார். திருமால் கண்ணனாக அவதாரம் எடுத்த போது அவன் திருமுடி மீது தன் திருவடியை வைத்து, அவனுக்கு சிவ தீட்சை செய்து வைத்த குருநாதர் உபமன்யு ஆவார்.
எந்நேரமும் ஈசனின் திருக்கழல்களையே நினைத்து தியானித்து வரும் உபமன்யு தன் முன்னே கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களுக்கு ஈசனின் எல்லை இல்லாப் பெருங்கருணையைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஓர் அதிசயம் நடந்தது. திடீரெனப் பேரொளி ஒன்று தோன்றியது. அம்மா! அந்த ஒளியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லையே! ஆயிரம் கோடிச் சூரியர் வந்தாலும் இந்தப் பேரொளிக்கு நிகராகுமா எனத் தோன்றும் வண்ணம் பெரிய ஒளிப் பிரவாகம். அனைவரும் வியந்தனர். உபமன்யுவிடம், ”என்ன இது அதிசயம்? ஒன்றும் புரியவில்லையே?” எனக் கேட்டனர். உபமன்யுவும் திகைத்தார். இத்தகைய சுந்தரப் பேரொளியைத் தாம் இன்று வரை தரிசித்ததில்லையே எனக் கூறினார்.
ஈசனின் தாள் பணிந்து வணங்கி, “ஐயனே! திடீரெனத் தோன்றிய இந்த சுந்தரப் பேரொளியின் காரணம் என்னவோ?” என வினவ, ஈசனும் குறுநகையுடன் கூறினார். “உபமன்யு, இந்தத் திருக்கயிலை மலையினின்றும் நீங்கித் தென்னாட்டில், திரு அவதாரம் செய்து தான் அவதாரம் செய்த பணியைச் செவ்வனே முடித்த சுந்தரர், இன்று கயிலை திரும்புகின்றார். இந்தப் பேரொளியின் காரணம் புரிந்ததா?” என வினவ, உபமன்யுவுக்கும் உண்மை புரிய, அவரும் அந்தப் பேரொளியைக் கண்டு இறைஞ்சி வணங்கலானார்.
கூடி இருந்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். “உபமன்யு முனிவரே, ஈசன் ஒருவனைத் தவிர மற்றொருவர் தாள் வணங்காத நீவிர், இந்தப் பேரொளியைக் கண்டு வணங்கியதன் காரணம் என்னவோ?” என வினவினார்கள். உபமன்யு சொன்னார், ”நம்பி ஆரூரர் என்னும் பெயர் பெற்ற இந்தச் சுந்தரர், ஈசனைத் தம் உடலால் மட்டுமின்றி, உள்ளத்தாலும் தொழுது, அவரே இவருக்குப் பணிவிடைகள் செய்யும் பேறு பெற்ற பெரியார் ஆவார். நாம் அனைவரும் வணங்கத் தக்க தூயவர்.” என்று சொல்ல, கூடி இருந்தவர்கள் அனைவரும் வணங்கி நின்றனர். உபமன்யுவும் சுந்தரரின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
எம்பெருமானாகிய சர்வேஸ்வரன் எளிமையாகக் காட்சி அளிப்பதும், புலித்தோலை அரைக்கசைத்து, பாம்பு ஆபரணங்கள் பூண்டிருப்பதும், மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்திருப்பதும், உமை அம்மையின் மனதை வருத்தியது. அதே போல் தேவாதி தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், இறைவனின் இத்திருக்கோலத்தில் மனம் அமைதி அடையவில்லை. முழுமுதற்கடவுளும், ஆதி தம்பதிகளில் முதன்மையானவரும் ஆன ஈசன் அலங்கார சொரூபனாய் இருக்க வேண்டும் என விரும்பினர். அவ்வாறே இருக்க ஈசனும் திருவுளம் கொண்டார். புலித் தோலுக்குப் பதில் பட்டுப் பீதாம்பரம் அணிந்து கொண்டு, பிறை நிலவையும், கங்கையையும் தாங்கும் சடாமுடியில் வைரக் கிரீடத்தையும், முத்துக்கள் அதில் குஞ்சம் போல் தொங்கும் வண்ணமும் அணிந்தார். தங்கத்திலே கோர்க்கப் பட்ட ருத்திராட்ச மாலைகள், அழகுக்கு அணிசெய்ய, நவரத்தின மாலைகளும் துணை புரிந்தன.
இந்தத் திருக்கோலத்துடன் ஈசன் நிலைக்கண்ணாடி முன் நின்று தன் அழகைத் தானே பார்த்து ரசிக்கும் வேளையில், நிலைக்கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைப் பார்த்து ஈசன், “சுந்தரா, வருக” என அழைக்க, ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடனே அந்தப் பிம்பம் ஒரு மூர்த்தி வடிவில் நிலைக்கண்ணாடியில் இருந்து வெளியே வந்தது. ஈசனை வணங்கி நின்றது. ஈசனும் அந்தப் பிம்பத்திற்கு சுந்தரர் எனப் பெயரிட்டுத் தன் அன்புக்குப் பாத்திரமானவன் எனச் சொன்னார். எந்நேரமும் ஈசன் அருகிலேயே இருக்கும் பேற்றையும் அருளினார். சுந்தரர் ஆகிய பிம்பமும் மனம் மகிழ்ந்து ஈசனுக்குத் திருத்தொண்டுகள் புரிந்து வர ஆரம்பித்தார். ஈசனுக்காக மலர்கள் பறித்து வந்து மாலை தொடுத்துக் கட்டி ஈசனுக்கு அணிவிக்கும் பேறும், எந்நேரமும் அவருக்கு அருகேயே இருந்து அணுக்கத் தொண்டராய் திருநீற்றுப் பாத்திரத்தை ஏந்தி நிற்கும் பேறும் பெற்றார். அப்போது ஒரு நாள் தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான மந்தர மலையைக் கடைந்து அமுதம் எடுக்கும் எண்ணம் ஏற்பட்டது.
வாசுகி என்னும் பாம்பைக் கயிறாய்க் கொண்டு, மந்தர மலையை மத்தாய் வைத்துக் கொண்டு ஒரு பக்கம் தேவர்களும், மறுபக்கம் அசுரர்களுமாய் திருப்பாற்கடலைக் கடைந்தனர். கடையும் வேகம் தாங்க முடியாமல் வாசுகி தன் விஷத்தைக் கக்க, ஏற்கெனவேயே திருப்பாற்கடலில் இருந்து வெளியே வந்த விஷமும் இதோடு சேர உருவானது “ஹாலாஹாலம்” என்னும் விஷம். அந்த விஷத்தின் வேகமும், வீரியமும் தாங்காமல் வாசுகிக்கே மயக்கம் வர, தேவர்களும், அசுரர்களும் மயங்கி வீழ்ந்தனர். பால் போன்ற வெண்மை நிறத்தில் இருந்த மஹாவிஷ்ணுவோ விஷக்காற்றுப் பட்டதும் கரிய நிறத்தை அடைந்தார். அனைவரும் அஞ்சி நடுங்க, பிரமனோ ஈசனைச் சரணடைவோம் என ஈசனைச் சரணடைந்தனர். ஈசனும் நடந்த நிகழ்வைக் கேட்டு விட்டு, சுந்தரரை அழைத்து, “சுந்தரா, அவ்விடத்தை, இவ்விடம் கொண்டு வா.” எனப் பணிக்க, சுந்தரரும் சென்று அந்த ஹாலாஹலம் என்னும் விஷத்தை எடுத்து வந்து ஈசனிடம் கொடுக்கின்றார். ஈசனும் அந்த விஷத்தைத் தன் வாயில் போட, விழுங்கினால், அனைத்து உலகங்களும் அழியும் என்பதாலும், துப்பினாலும் அழிவே ஏற்படும் என்பதாலும் விஷத்தைத் தன் யோக சக்தியால் கண்டத்திலேயே நிலை நிறுத்தினார். சிலர் உமை அம்மை ஈசனின் தொண்டையைப் பிடித்து நிறுத்தினார் எனச் சொல்லுவதும் உண்டு. ஆனால் யோகத்திற்கே ஆசான் ஆன ஈசன் யோக சக்தியால் நிறுத்தினார் என்பதே சரியானது என்று சொல்கின்றனர். இவ்விதம் ஈசனுக்கு அவரின் ஆணையின் பேரில் கொடிய விஷத்தைக் கொண்டுவந்த சுந்தரருக்கு அன்று முதல் “ஆலால சுந்தரர்” என்னும் பெயரும் சூட்டப் பட்டது ஈசனால்.
ஒரு நாள் சுந்தரர் திருக்கயிலையில் வழக்கம்போல் மலர் கொய்து ஈசனுக்கு மாலை அணிவித்துச் சூட்டுவதற்கென நந்தவனம் சென்றார். அப்போது அங்கே அன்னையின் தோழியர் இருவரும் அன்னைக்கான மலர் அலங்காரத்துக்காக மலர்கள் பறித்துக் கொண்டிருந்தனர். இருவரும் அழகியர். ஒருத்தி பெயர் கமலினி, இன்னொருத்தி பெயர் அநிந்திதை. சுந்தரர் இருவரையும் கண்டார். சொல்லொணோ ஏக்கம் எழுந்தது உள்ளத்தில். பெண்கள் இருவரும் சுந்தரரைக் கண்டதும் அவ்வாறே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். ஆசைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது மூவர் உள்ளத்திலும். சுந்தரர் மனதிலே இந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, மங்கையர் இருவருக்கும் அவ்வாறே சுந்தரருடன் கூடி வாழ வேண்டும் என்ற அவா மேலிட்டது. நங்கையர் திரும்பினர். ஆலால சுந்தரருக்குத் தான் பெரும் பிழை செய்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றியது அப்போது. ஆஹா! மன்மதனை எரித்துச் சாம்பல் ஆக்கிய திருக்கயிலையில் நமக்கு இப்படி ஓர் எண்ணம் தோன்றியதே என வருந்தினார்.
திரும்பி மாலைகளோடு ஈசனை அடைந்த சுந்தரர் முகம் வாட்டமுற்றிருந்ததைக் கண்ட ஈசனுக்குத் தன் ஞான சக்தியால் நடந்தவை என்னவெனப் புரிந்தது. சுந்தரரைப் பார்த்து, “சுந்தரா, நடந்ததை நாம் அறிவோம்!” என இயம்ப, பதறிக் கலங்கிய சுந்தரர், “ஈசனே, எனை ஆளும் அரசே, அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து அருளும். இனி இம்மாதிரியான எண்ணங்கள் எனக்குத் தோன்றாவண்ணம் நடந்து கொள்வேன்.” என இறைஞ்சுகின்றார். ஈசனோ, “சுந்தரா, காமனை எரித்த திருக்கயிலையில் இவ்வாறான எண்ணம் தோன்றிய பின்னர் நீ என் அருகே இருந்து எனக்கு அணுக்கத் தொண்டனாய் இருக்க முடியாது. அதே சமயம் அந்தப் பெண்களை மணந்து அவர்களோடு கூடி வாழவும் இது உகந்த இடம் அல்ல. ஆகவே நீ பூலோகத்தில் சென்று, தென் திசையில் அவதரித்து, அம்மாதர்கள் இருவரையும் மணந்து இன்ப, துன்பங்களை அனுபவித்துப் பின் எம்மை வந்து சேர்வாயாக! இது எம் ஆணை!” என்று கூறினார்.
சுந்தரர் மனம் பரிதவித்துப் புலம்பினார். தாங்கொணாத் துயரத்தில் ஆழ்ந்தார். ஈசனே, எமை ஆளும் அரசே, மானிடனாய்ப் பிறந்து மானுட வாழ்க்கையின் மயக்கத்திலும், மாதர்களின் மயக்கத்திலும் நான் ஆழ்ந்து போகாமல் இருக்கவும், அப்படி ஒருவேளை மயக்கமுற்று வருந்தினேனானால் எம்மை வந்து ஆட்கொள்ளும்படியும் வேண்டிக் கொள்கின்றேன். நீவிர் வந்து எம்மைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்.” என்று கேட்க இறைவனும் அவ்வாறே ஆகட்டும் என வரமளிக்கின்றார். அதன்படிக்கு தென்னாட்டில் பிறந்து விரும்பிய இரு மாதர்களையும் திருமணம் செய்து கொண்டு இன்ப, துன்பங்களை அனுபவித்த சுந்தரர் தான் தற்சமயம் திரும்பிக் கயிலை வருகின்றார் எனச் சொன்னார் உபமன்யு.
சுற்றி இருந்த மற்ற முனிவர்கள் தென்னாட்டில் அவதரிக்கும் காரணம் என்ன? மேலும் சுந்தரர் தென்னாட்டில் அவதரித்து என்ன, மாதிரியான இறை சேவையில் ஈடுபட்டார்? அவரின் அவதாரத் திருத்தலம் யாது? விரும்பிய பெண்களை மணந்தாரா? எனக் கேள்வி மேல் கேட்க உபமன்யுவும் அதற்குத் தக்க மறுமொழி கொடுக்கலானார். இனி அடுத்து வருவது சுந்தர மூர்த்தி நாயனார் கதை.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















