தாயென்று கும்பிடடி பாப்பா
- அருள் மணக்கும் அவதாரங்கள்
A.K. செல்வதுரை
சிறுவயதில் என்னையும் அறியாமல் நான் ஈடுபாடுகொண்ட அரிபஜனைகளும் தெருக்கூத்து நாடகங்களும், எண்ணற்ற ஆன்றோர்களின் சமயச்சொற்பொழிவுகளும் இன்று என்னை ஒரு நூலாசிரியனாக உயர்த்தியுள்ளன.
அறியாப்பருவத்தில் ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையில் இறைவனின் பத்து அவதாரங்களைச் சிந்திக்கும் பேறுபெற்றேன்.
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், முப்பத்து முக்கோடி அமரர்க்கும் முன்சென்ற மீனமாகவும், வங்கக் கடல் கடைந்த மாதவனாகவும், மாமேரு கணகணப்ப திருவாகாரம் குலுங்க வந்த ஏனமாகவும், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த சீரிய சிங்கமாகவும், ஒங்கி உலகளந்த உத்தமனாகவும், மாற்றாரை மாற்றழீக்க வந்த பலராமனாகவும், தென்னிலங்கைக் கோமானைச் செற்ற ஸ்ரீராமனாகவும், செம்பொற்கழலடி செல்வன் ஸ்ரீ பலராமனாகவும், கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனாகவும், தோற்றமாய் நின்ற சுடராய் வர இருக்கும் கல்கியாகவும் சிந்தை மகிழ சிந்தித்து மகிழ்ந்துள்ளேன். அன்றே எழுந்த என் சிந்தனைகளின் வெளிப்பாடாகத் தான் இன்று இந்நூல் உருவாகியுள்ளது.
இளமைக் காலங்களில் ஆழ்ந்து படித்து சிந்திப்பது ஒரு சுகமான அனுபவம் மட்டும் இல்லை, சுயமாக வெற்றிப் படிக்கட்டுக்களை அமைத்துக்கொள்ளும் ஆற்றலும் கூட என்றால் அது மிகையில்லை.
ஒவ்வொரு அவதாரத்தையும் என்னுடைய தனிமை சாம்ராஜ்யங்களில் நானே நடிகனாகவும், நானே ரசிகனாகவும் இருந்து நடித்துப் பார்த்துக் கொண்டதன் விளைவுதான் நாடகம், தெருக்கூத்து, மகாபாரதப் பிரசங்கம், வில்லுப்பாட்டு அரிகதை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம் என என்னுடைய பன்முக வெளிப்பாடாக விரிவடைந்துள்ளது எனக் கருதுகிறேன்.
ஆன்மீகத்தில் எனக்கு அமுத்தமான பக்தியும் ஈடுபாடும் ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்ததும் இந்த தசாவதாரக் கதைகள் தான்!
நான் மகாபாரதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது முன்னுரையாக நான் பேசுவது தசாவதாரக் கதைகள் தான். அதன் சுவாரசியங்களில் நான் என்னையும் மறந்து அதிலேயே லயித்து, கேட்பவர்களும் பெரிதும் இரசிக்கின்றார்கள் என்ற உணர்வு எனக்குக் கிடைத்ததால் தான் அருள் மனக்கும் அவதாரங்கள் என்ற இந்நூலைப் படைக்கும் எண்ணம் என்னுள் எழுந்தது.
இந்நூலை உருவாக்க என்னைக் கடந்த சில ஆண்டுகளாகத் தூண்டுதல் செயததோடு மட்டும் இன்றி ஊக்கமும் கொடுத்த இளவரசி பதிப்பக உரிமையாளர் திரு. திருஞானசம்பந்தம் அவர்களுக்கு நான் என நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் என் வாழ்க்கையில் அத்தியாவசியமான ஓர் அங்கமாகத் திகழும் காஞ்சி கம்பன் கழகச் செயலாளர் 'பைந்தமிழ் பாமணி', 'தண்டமிழ் ஞாயிறு' திரு. முத்து இராமமூர்த்தி அவர்களுக்கு நான் அளவில்லாத நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். இந்நூலின் பின் அட்டையில் கவிதை வடிவில் உயரிய விலாசம் அளித்து என்னை உயர்ந்ததொரு பீடத்தில் அமர்த்தியுள்ளார். நானும் அவரும் கடந்த சில ஆண்டுகளாக சாஞ்சியில் நடத்தி வரும் மிகப்பெரிய வைணவ விழாவான "அரையர் சேவை விழா" தான் எங்கள் நாட்புக்கு மிகப்பெரிய பலமாகவும் பாலமாகவும் திகழ்ந்தது
எல்லாவற்றிற்கும் மேலாக இந்நூலுக்கு மங்களாசாசனம் செய்துள்ள ஸ்ரீ வரதேத்திராஜ ஜீயர் அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கும் என் அடிவீழ்ச்சி விண்ணப்பத்தால் சேவித்து என் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.
காஞ்சிபுரம் வரும்போதெல்லாம் என்னை அன்போடு அழைத்து உரையாடி மகிழ்ந்து என்னைப் பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் என்னை நூலெழுத வேண்டும் என்று பணித்து, ஊக்கமளித்து, இந்த எளியவனின் நூலுக்கும் அணிந்துரை செய்ததோடு மட்டும் அல்லாமல் எனக்கு 'செந்தமிழ் வாரிதி' என்றும் பட்டம் கொடுத்துப் பாராட்டி மகிழும் நாவரசர் ஐயா திரு. டாக்டர் அவ்வை நடராசன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
தன் குடும்பத்தில் ஒருவனைப்போல் பாவித்து, இந்நூலை முழுமையாகப் படித்து, இதில் உள்ள சிறப்புக்களையெல்லாம் ஒன்று விடாமல் சுட்டிக்காட்டி, என்னைப் பெரிதும் புளகாங்கிதமடையச் செய்த பேராசிரியர் டாகடர் தெ. ஞானசுந்தரம் அய்யா அவர்களுக்கும், என்மீது அளவில்லாத அக்கறை கொண்டு, நான் பல கலைகளிலும் வித்தகனாக மிளிர உறுதுணையாக இருந்து, என்னை இந்த அளவிற்கு வளர்ச்சியடையப் பெரிதும் துணை நின்றதோடு மட்டும் அல்லாது இந்நூலுக்கு அணிந்துரையும் வழங்கியுள்ள சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் வி. அரசு அய்யா அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
என் வேண்டுகோளை ஏற்று இந்நூலில் பிழைத்திருத்தம் செய்து தந்த புலவர் வே. கணேசன் அவர்களுக்கும், இந்தப் புத்தகத்தை சிறந்த முறையில் உருவாக இது அச்சுக்கோப்பா தச்சுக்கோப்பா என வியக்கும் வண்ணம் ஒளி அச்சு செய்து, சிறப்பான நூலாக வருவதற்குப் பெரிதும் உறுதுணையாக நின்ற காஞ்சிபுரம் குரு இராஜகுமார் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அவரோடு சேர்ந்து இன்னும் பல நூல்களை உருவாக்கும் வாய்ப்புகள் கிடைக்க இறைவனை நான் பெரிதும் வேண்டுகிறேன். குறுகிய காலத்தில் இந்த நூலை சிறப்பான அமைப்புகளோடு என்னுடைய ஆலோசனைகளுக்கு ஏற்ப அட்டைப்படமும் வடிவமைத்துக் கொடுத்த சென்னை சக்தி பிராசஸ் நிறுவனத்தார்க்கும் என் நன்றி உரித்தாகும்.
என்னை நூலாசிரியனாகச் செயத பெருமை ஆற்காட்டில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இவ்வாண்டு நிகழ்ந்த 92 நாட்கள் தொடர்ச்சியான மகாபாரதப் பிரசங்கத்தில் என்னுடைய பிரசங்கத்தினைக் கேட்டு, அர்ச்சுனன் தரிசித்த அற்புதத் திருத்தலங்கள் என்ற நூலை எழுதப்பணித்து, மேலும் மேலும் நான் நூலாசியனாகத் திகழப் பணித்த ஆயிரக்கணக்கான தாய் உள்ளங்களுக்கும் ஆற்காடு செட்டியார் மிட்டாய்க் கடை திரு. பி.டி. சுந்தரம் அவருடைய துணைவியார் மற்றும் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். இறைவனின் 10 அவதாரங்களில் எப்போதுமே தர்மம் வெல்லும் என்பதை அழுத்தம் திருத்தமாக மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் நல்ல ஆன்மீக நூலின் குறிக்கோள். என்னுடையதும் அதுவே.
தொடரும்...
| Give your Feedback Take a Quiz Get Mazhalaigal Toolbar | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day Happy Birthday Free world Clock | |||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















