-
சங்கர விஜயம் - 5
- கீதா சாம்பசிவம்
இந்தச் சந்திர சர்மா வேறே யாருமே இல்லை. பதஞ்சலி ரிஷியே தான். கெளடருக்குப் பாடமும் கற்பித்து, சாபமும் கொடுத்தாரல்லவா பதஞ்சலி? அதன் பின் பல வருடங்கள் வரையிலும் கெளடப் பிரம்ம ராக்ஷஸிடம் தகுந்த சிஷ்யன் வரவே இல்லை என்றும் பார்த்தோமல்லவா? அப்போது பதஞ்சலிக்குக் கவலை பிடித்துக் கொண்டது. என்னடா இது? யாரேனும் தகுந்த சீடர் வருவார் எனப் பார்த்தால் ஒருத்தரையுமே காணோமே? மேலும் கெளடருக்கும் சாபவிமோசனம் கிடைக்கணும். அதே சமயம் பாடமும் தகுதியான நபருக்குப் போய்ச் சேரணுமே? யோசித்து யோசித்து அவரே சந்த்ர சர்மாவாகப் பிறந்தார். தாம் யாருக்குக் குருவாய் இருந்து போதித்தோமோ அவரிடமே சீடனாய்ச் சேர்ந்து பாஷ்யங்களைக் கற்றுக் கொண்டு அரசிலைகளில் எழுதிக் கொண்டு அவற்றை மூட்டையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினார். மனித உடலில் வந்ததால் அதன் குறைபாடுகள் இருக்கும் தானே? அதனால் பூர்வாசிரம நினைவுகள் அவரிடம் இல்லை. ஆகவே பாடம் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. மரத்திலிருந்து இறங்கி இலைகள் அடங்கிய மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்.
அநேக நாட்களாய்ச் சாப்பாடோ, தூக்கமோ இன்றிப் பாடம் கேட்டது அவரை ஒரே அசத்தாக அசத்திக் கொண்டிருந்தது. நடக்கக் கூட முடியவில்லை. ஒரு பக்கம் மூட்டை தானாய்க் கீழே விழ, அவரும் பூமியில் விழுந்து சாய்ந்து நன்றாய்த் தூங்க ஆரம்பிதது விட்டார். அப்போது அங்கே மேய வந்த ஒரு ஆடு, மூட்டையில் இருந்த இலைகளைக் கண்டதும், அதன் ருசியில் மயங்கி மேய ஆரம்பித்தது. இலை மூட்டையில் ஒரு பாகம் சாப்பிட்டாயிற்று. சந்திர சர்மா திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் இலை மூட்டை ஒரு பாகம் ஜீரணம் செய்யப் பட்டிருக்கவே மனம் வருந்தினார். இனி களைப்பைப் பார்க்கக் கூடாது என நினைத்தவராய் மிகுதி இருந்தவற்றைக் காப்பாற்றும் எண்ணத்தோடு மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார். உஜ்ஜையினி வந்து சேர்ந்தார்.
களைப்பு மீண்டும். ஒரு வைஸ்யனுடைய வீடு, அங்கே மூட்டையை வைத்துவிட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டார். மீண்டும் தூங்க ஆரம்பித்தவர் நன்றாகத் தூங்கிப் போய்விட்டார். தூக்கம்னா அப்படி ஒரு தூக்கம், ஒரு நாள், இரண்டு நாள் எல்லாம் இல்லை, பல நாட்கள் ஆயிற்று. எழுந்திருக்கவே இல்லை. விடாமல் அடித்துப் போட்டாற்போல் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த வைச்யனுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பலநாட்களாய்த் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞனைக் கண்டாள். அவள் உள்ளத்தில் அன்பு ஊற்றெடுத்தது. எழுந்திருக்கவே இல்லை. ஆனால் முகத்தில் தேஜஸ் மட்டும் குறையவில்லை. என்ன இது? யாராயிருக்கும்? இப்படித் தூங்குகிறாரே? வெளி உலகப் பிரக்ஞையே இல்லாமல் தூங்கும் இவர் அன்ன, ஆஹாரமும் இல்லாமல் இருக்கிறாரே? பிராணனை விட்டுவிட்டால்? இவரை எவ்விதமேனும் காப்பாற்ற வேண்டும். வைத்தியம் நன்கு தெரிந்த அவள் தயிரும் சாதமுமாக நன்றாக வெண்ணெய் போல் பிசைந்தாள். அதை எடுத்து வந்து சந்திரசர்மாவின் வயிற்றில் பூசித் தேய்க்க ஆரம்பித்தாள். மயிர்க்கால்களின் வழியாக அன்னத்தின் சாரம் உள்ளே இறங்கலாயிற்று. இந்நாட்களில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகிறதல்லவா? அந்நாட்களில் அப்படி எல்லாம் இல்லை. புதிதாகத் துவாரம் செய்து அதில் ஊசி மூலம் குத்துவதற்குப் பதிலாய் வைத்ய முறையிலேயே இயற்கையாய் உடலில் உள்ள மயிர்க்கால்களின் வழியாய் மருந்தின் சத்தை உள்ளே இறக்கி இருக்கிறார்கள். இன்றைக்கும் கேரளாவில் நவரக்கிழி என்ற பெயரில் இந்தச் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இப்படி விடாமல் சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள் அந்தப் பெண். சில நாட்களில் உடலில் தெம்பும், தூக்கம் கலைந்து விழிப்பும் ஏற்பட்டது சந்திர சர்மாவுக்கு. விழித்துக் கொண்டவர் முதலில் பாஷ்யம் எழுதி வைத்த இலை மூட்டையை பத்திரமாய் இருக்கா எனப் பார்த்துக் கொண்டார். பின்னர் அந்தப் பெண்ணிற்கு நன்றி தெரிவித்துவிட்டு இலை மூட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். வைச்யன் பார்த்தான். “என்னப்பா இது? கிளம்பிவிட்டாய்? என் பெண் எவ்வளவு கஷ்டப் பட்டு உன்னைக் காப்பாற்றி உயிர் கொடுத்திருக்கிறாள்? அவளுக்கு உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு உன்னோடு குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசை. நீ என்னவென்றால் அவளைக் கவனிக்காமல் கிளம்புகிறாயே?” என்று கேட்டான். இது அந்தக் காலங்களில் வழக்கமாய் இருந்தது. நல்ல மனக்கட்டுப்பாட்டுடனும், பிரம்ம தேஜஸ் நிரம்பியவனுமாக ஒரு பிராமணன் இருந்தால் அவன் மூலம் நம் குலத்திலும் சத்புத்திரர்கள் தோன்றி, நம் குலத்தையும் மேன்மை அடையச் செய்வார்கள் என எண்ணி மற்றக் குலத்தவர்கள் இம்மாதிரியான சத்துக்கள் நிரம்பிய பிராமணனுக்குத் தங்கள் கன்னிகைகளை விவாஹம் செய்து கொடுக்க விரும்புவார்கள். அந்த ப்ராமணர்களுமே விவாஹம் செய்து கொண்டு வம்சத்தை விருத்தி செய்து வந்தாலும் தங்கள் ஆசார அக்னியின் வீர்யம் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். மேலும் குறிப்பிட்ட பெண்ணுடன் திருமணம் ஆனதும் குழந்தை பிறந்ததும், உரிய வயசுக்கு வளரும்வரை இருந்து வித்யாப்பியாசம் செய்து வைத்துவிட்டு அங்கிருந்து குடும்பத்தில் எந்தப் பற்றும் இல்லாமல் கிளம்பிவிடுவார்கள்.
ஆகவே வைச்யன் கேட்டதும் ஆச்சரியம் இல்லைதான். ஆனாலும் சந்திரசர்மாவுக்கோ கல்யாணத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் விருப்பம் இல்லை. மஹாபாஷ்யத்தைப் பிரசாரம் செய்ய வேண்டிய முக்கிய வேலை இருக்கக் கல்யாணம் செய்து கொள்ளுவது ஒரு விலங்கு என நினைத்தார். அந்தப் பெண்ணோ மணந்தால் இவரைத் தான் மணப்பேன் என்று சொல்கிறாள். வைச்யனுக்கோ அருமைப் பெண்ணின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபம். உடனே சந்த்ர சர்மாவைப் பார்த்து, உன் உயிர் என் பெண்ணுக்கு உரியது, வாரும் அரச சபைக்கு. அங்கே வந்து இந்த வழக்கைத் தீர்த்துக் கொள்ளலாம். என்று சொல்லிவிட்டு தீர்ப்புக்காக ராஜாவிடம் சென்றனர். ஆனால் விஷயமே வேறு விதமாய் ஆகிவிட்டது. சந்த்ரசர்மாவின் தேஜஸைப் பார்த்த அரசனுக்கு அரசகுமாரியை அவருக்கு மணம் புரிவிக்கும் எண்ணம் தோன்ற, அதைப் பற்றி விசாரிக்க மந்திரியை அழைத்தான். மந்திரியும் வந்தான் சந்திரசர்மாவைப் பார்த்தான். அவனுக்கும் ஒரு பெண் இருந்தாள். அவளைச் சந்திர சர்மாவுக்கே கொடுத்து விடலாம் என எண்ணினான். ராஜாவே தம் பெண்ணுக்காக இவனைத் தேர்ந்தெடுத்திருப்பதாய் மந்திரி எண்ணினான். ராஜாவோ தன்னுடைய பெண் விஷயமாய் தர்ம சாஸ்திரம் சொல்லுவதை மந்திரியிடம் கேட்டான். சாஸ்திரத்தின் அநுமதிப்படி பிராமணன் நான்கு வர்ணங்களைச் சேர்ந்த பெண்களை ஒரே முஹூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னான். தன்னுடைய பெண்ணைக் கொடுக்க விரும்புவதாயும் தெரிவித்தான்.
நல்ல வேளையாய்ப் போயிற்று என நினைத்த வைச்யன் தன்னுடைய வழக்கையும் ராஜாவின் முன் வைக்க, அவன் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தீர்ப்புச் சொன்னான் ராஜா. ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொன்ன சந்திர சர்மா இப்போது ஒரே சமயத்தில் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானான். நான்காம் வர்ணத்திலும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும் என நான்கு பெண்களையும் திருமணம் செய்து கொண்ட சந்திர சர்மா ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு புத்திரன் பிறக்குமாறு செய்தார். இதில் அரசனின் மகளுக்குப் பிறந்த பிள்ளையே விக்கிரமாதித்தன் என்றும், மந்திரி பெண்ணுக்குப் பிறந்த பிள்ளையே வரருசி என்னும் பேரறிவாளரும், விக்கிரமாதித்தனின் அரசவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவரும் ஆவார். வைசிய மனைவிக்குப் பிறந்த பிள்ளையே விக்கிரமாதித்தனுடன் இணை பிரியாமல் சொல்லப் படும் பட்டி என்னும் மதிமந்திரிஆவான். கடைசியாக நான்காம் வர்ணத்தில் பிறந்த பிள்ளையே பர்த்ருஹரி ஆவார்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















