-
சங்கர விஜயம் - 3
- கீதா சாம்பசிவம்
கெளடர் பிரம்ம ராக்ஷஸ் ஆகியே தீரவேண்டும். ஆனால் அது தீருவதற்கும் விமோசனம் சொல்லுவோம் என நினைத்தார் பதஞ்சலி. எப்படி எனில் பிரம்ம ராக்ஷஸ் வேதம் அத்யயனம் செய்தவர்களைத் தானே கேள்வி கேட்டு, பதில் சொல்லவில்லை எனில் அடித்துத் தின்ன வேண்டும் என இருந்தது? அப்படி இந்தக் கெளடர் ஆன பிரம்ம ராக்ஷஸும், கேள்விகள் கேட்டுப் பதில் வாங்கும்போது வ்யாகரணம் சம்பந்தமாகவும் ஒன்று கேட்க வேண்டும். அதற்கு யார் பதில் சொல்கின்றார்களோ அவர்களே மஹா பாஷ்ய உபதேசம் பெறத் தகுதி பெற்றவர் ஆவார். கெளடர் பதஞ்சலியின் அனுகிரஹத்தின் உதவியால் கற்றுக் கொண்டா மஹாபாஷ்யம் முழுதையும் அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி அவர் கற்றுக் கொடுக்கத் தகுதியான நபரை பிரம்மராக்ஷஸாக இருந்து கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தகுதியான நபரிடம் தாம் தெரிந்து கொண்டதை ஒப்படைத்த உடனேயே கெளடருக்குப் பழைய தேகம் வந்துவிடும். இப்படியாகப் பதஞ்சலி தீர்மானம் பண்ணினார். பின்னர் கெளடர் ஆகிய பிரம்ம ராக்ஷஸ் கேட்க வேண்டிய கேள்வியையும் தீர்மானம் பண்ணி அதையும் அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்.
வடமொழி இலக்கணத்தில் விகுதியைப் ப்ரத்யயம் என்று சொல்லப் படுகிறது. இந்தப் ப்ரத்யயத்தில் நிஷ்டா ப்ரத்யயம் என்ற ஒன்று உண்டு. மூலச் சொல்லான பகுதியோடு இந்த நிஷ்டா ப்ரத்யயத்தைச் சேர்த்தால் வினைச் சொல்ல செய்யப் படும் பொருளாகும். புஜ் என்ற சாப்பிடும் சொல்லோடு நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்தால் புக்தம் என ஆகும். இதே போல் ரக்தம், ஸிக்தம் எனச் சொற்கள் மாறுபடும். ஆனால் இதிலே உள்ள ஒரு விலக்கு என்னவெனில் பச் என்னும் சமையல் செய் என்னும் அர்த்தம் வரும் வார்த்தையில் நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்தால் பக்தம் என வராமல் பக்வம் என்று தான் ஆகும். பக்குவம் எனத் தமிழில் சொல்லும் வார்த்தை பக்வம் என வடமொழியில் சொல்லப் படும். “பச்” என்னும் தாதுவோடு நிஷ்டா ப்ரத்யயம் சேர்ந்தால் “க்வ” என்று தான் வரும் என்பதைப் பாணினியின் வ்யாகரண சூத்திரத்தில் இதற்கெனத் தனியான ஒரு சூத்திரமே இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. “பசோ வ:” என்பதாக “க்த” வில் வரும் “த” வுக்குப் பதில் இங்கே மட்டும் “வ”. இந்த சூத்திரமும் இந்த மாறுபாடும் பலருக்குத் தெரியாது. ஆதலால் பதஞ்சலி கெளடர் பிரம்ம ராக்ஷஸ் ஆன பின் இதைப் பற்றியே கேள்வி கேட்க வேண்டும் என நினைத்து அதன் வழியாகவே சாப விமோசனத்தையும் ஏற்படுத்தினார்.
கெளடரிடம், “ அப்பா, நீ என்னிடம் உத்தரவு வாங்காமல் வெளியே போய்விட்டாய். ஆகையால் நீ பிரம்ம ராக்ஷஸ் ஆவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனாலும் உனக்கு இதற்கான நிவர்த்தியையும் சொல்லித் தருகிறேன். நீ கேள்வி கேட்டுப் பதில் சொல்லும் நபர்களில் எவருக்குப் “பச்” என்னும் தாதுவுக்கு நிஷ்டா ரூபம், “பக்தம்” என்று சொல்லாமல் “பக்வம்” எனச் சொல்லத் தெரிகின்றதோ அவருக்கு நீ மஹா பாஷ்யம் முழுதையும் கற்றுக் கொடு. பாத்திரம் அறிந்து வித்தையைக் கொடுத்த புண்ணியத்தினால் உன் சாபத்திற்கும் விமோசனம் ஏற்படும். ராக்ஷஸ உரு மறைந்து போய் உண்மையான உருவம் பெறுவாய். சரியாகப் பதில் சொல்கின்றவர் வரும் வரைக்கும், நீ மற்றவர்களை பிரம்ம ராக்ஷஸாக இருந்து அடித்துச் சாப்பிடத் தான் வேண்டும். சென்று வா. “ என்று சொல்லி அனுப்பினார்.
கெளடர் பிரம்ம ராக்ஷஸாக மாறினார். அப்படியே காற்றில் இஷ்டத்துக்குப் பறக்க ஆரம்பித்தார். பறந்து, பறந்து நர்மதா நதி தீரத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஓர் பழமை வாய்ந்த அரச மரம் இருந்தது. அந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டார். நர்மதா நதி தீரத்தின் அந்த இடம் தேசத்தின் மத்தியில் இருந்தது. வடக்கின் பஞ்ச கெளட தேசங்களுக்கும், தெற்கின் பஞ்ச திராவிட தேசங்களுக்கும் அதன் வழியாகத் தான் போய்க் கொண்டிருந்தனர். வித்தையை நாடிச் செல்கின்றவர் அனைவரும் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். ஆகையால் பிரம்ம ராக்ஷஸாக இருக்கும் வரையில் தனக்கு ஆகாரமாக ஏற்ற வேத அத்யயனக் காரர்களும், பிரம்ம ராக்ஷஸ ரூபத்தை விட்டு விலகவேண்டிய அளவுக்குத் தகுதி பெற்ற உயர் படிப்பாளிகளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். வழிப்போக்கர்களைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்பார். குரு சொல்லிக் கொடுத்த கேள்வியைக் கேட்டதுமே எவருக்கும் பதில் சொல்லத் தெரியாது. “ நீ நான் சாப்பிடத் தகுந்த பக்குவத்தில் இருக்கிறாய்!” என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொருவரையும் அடித்துப் போட்டுச் சாப்பிட்டு வந்தார். இப்படியே பல வருஷங்கள் சென்றன. ஒரு நாள் சர்வ லக்ஷணத்தோடு பிரம்ம தேஜஸோடு கூடிய ஒரு பிரம்மச்சாரி இளைஞன் அவ்வழியே சென்றான். காஷ்மீரத்தைச் சேர்ந்தவன் அவன். அவன் காதில் சிதம்பரத்தில் பதஞ்சலி மஹாபாஷ்யம் பாடம் சொல்லித் தரும் செய்தி விழுந்து, அவரிடம் பாடம் கேட்க வேண்டித் தன் நாட்டிலிருந்து தென்னாட்டிற்குச் சிதம்பரம் போய்க் கொண்டிருந்தான். பார்த்தார் பிரம்மராக்ஷஸ்.
மனதுக்குள் சந்தோஷம். அழகான இளைஞன். சாப்பிடத் தகுந்தவன் இவனும். இன்றைக்கு நல்ல விருந்து தான். பிரம்ம ராக்ஷஸ் உருவில் இருந்து பிராம்மண உரு எடுத்துக் கொண்டு அந்த இளைஞன் முன் நின்றார். வழக்கமான கேள்விகளைக் கேட்டுவிட்டு, நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்து அநேக தாதுக்களின் ரூபத்தைக் கேட்டுவிட்டு உடனேயே “பச்” சின் நிஷ்டா ரூபத்தையும் கேட்டார். பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்தப் பிள்ளையோ வழக்கத்துக்கு மாறாக சற்றும் உளறாமல், பதட்டப்படாமல், நிதானமாகவே “பக்வம்” என்று சரியான பதிலைச் சொல்லிவிட்டான்.
கீதா சாம்பசிவம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















