Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

  என்னைப் பற்றி

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
உத்தியோகம்
காயத்ரி



தற்பொழுது எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் க்ளோபல் ரிசஷனால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து தவிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களின் மனத்துயரைக் குறைக்க இயலும் என்பதின் தாக்கமாக எழுந்ததே இந்தக் கட்டுரை.

பொதுவாக ஒரு ஆண் மகனின் உயர்வை அல்லது அந்தஸ்தை நிர்ணயிக்கும் அளவு கோலாகத் திகழ்கிறது வேலை. அதில் ஏதேனும் பாதிப்பு நிகழ்ந்தால், அவன் மட்டுமின்றி அவன் குடும்பமும், உறவுகளும் பாதிக்கப்படுகின்றன. தற்பொழுது பெண்களும் இந்தப் பட்டியலில் உள்ளார்கள். இப்பொழுது அநத சூழல்தான் நிலவி வருகிறது. பலபேர் மன வலிமை இழந்து தவிக்கிறார்கள். இதைப் படித்துக் கொண்டிருக்கும் சில பேருக்கு ஒரு சந்தேகம் எழலாம். வேலை இல்லாமல் திண்டாடும் நிலை பற்றி எழுதுதுவது எளிது. ஆனால் அதை அனுபவித்தவர்களல்லவா அதன் வலியும் வேதனையும் தெரியும்? ஆம். நானும் அந்தப் பட்டியலைச் சேர்ந்தவள்தான். 1994 செப்டம்பர் முதல் 1997 பிப்ரவரி வரை சஸ்பென்ஷன் என்ற துன்பத்தையும், 2004 செப்டம்பரில் டெர்மினேஷன் என்ற புயலையும் கடந்து வந்துள்ளேன். அப்பொழுது எழுதி வைத்த என் படைப்புக்கள் இந்தச் சூழலுக்கும் பொருந்தும் என்பதால், அவை வேலை இல்லாமல் அல்லல் படுபவரின் மனவேதனையை குறைக்க உதவும் என்ற நம்பிக்கையில் என் படைப்புகளை சமர்ப்பிக்கிறேன்.

சாணை பிடிக்கலையோ சாணை!

அன்றாடம் நம் பயன்படுத்தும் கத்தி அல்லது அருவாள்மணை பல நேரங்களில் மழுங்கிப் போய் விடுகிறது. நாம் அதனை சாணை பிடித்து மீண்டும் கூராக்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதே போன்ற நிகழ்வு நம் வாழ்வில் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது! ஆனால் நாம்தான் அதனை உணர்வதில்லை! இயல்பாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். திடீரென்று ஒரு பிரச்னை முளைக்கும். சிறிது நேரம் அல்லது சிறிது காலம் நாம் மழுங்கிக் கிடப்போம். நம் திறமைகள் என்னவென்று நமக்குத் தெரியாது. பிறகு சுதாரித்துக் கொண்டு, எழுந்து நாம் இருக்கும் சூழலை ஆராய்வோம். இதனைஎப்படி தீர்க்க இயலும் என்ற சிந்தனைக் கதவு தானே திறந்து கொள்ளும். நம்மிடம் உள்ள நிறைகுறைகளைப் பற்றிய கணக்கெடுப்பு துவங்கும். அதுமட்டுமா? எந்தெந்த வழியில் இதனை அணுகலாம், முன்பு இதே போல் பிரச்னை யாருக்கேனும் வந்துள்ளதா? அதனை எந்த வழியில் தீர்த்தார்கள் என்கிற சிந்தனை மேலோங்கும். ஒரே கேள்விக்கு மூன்று விதமாக விடை சொல்லலாம் என்பது போன்று, மூன்று விதமான தீர்வுகள் உண்டு.

முதலாவதாக, சிலவற்றை உணர்வுகள் அல்லது உறவுகள் என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு தேடலைத் துவங்குங்கள். சட்டென்று சில விடைகள் கிடைக்கும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக இயங்குபவர்கள் தாம்! உறவுகள் என்ற கயிறால் இணைக்கப் பட்டவர்கள்தான்! இரண்டாவதாக, பிரச்னைகளைத் தீர்க்க வயது ஒரு ப(பா)லமாக அமையும். ஏனெனில் இளமை எதனையும் துடிப்போடு நோக்கும். முதுமை எதனையும் பொறுமையோடு கையாளும். இந்த இரண்டும் பல தீர்வுகளைத்த் தரும். மூன்றாவதாக வருபவை காலமும் அதன் மூலம் பெறும் அனுபவமும். சாணை பிடிக்கும் கல் வட்டமாக இருக்கும். அதே போல் மனித வாழ்விலும் பல நேரங்களில் அதே போன்ற சவால்கள் மீண்டும், மீண்டும் வந்து கொண்டிருக்கும். ஆனால் முதல் முறை கையாண்டது போல், அடுத்த முறை நாம் அதனைக் கையாள்வதில்லை. ஏனெனில் மனிதன் பெறும் அனுபவத்தின் படிமங்கள் மனதில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதனால் முன்பு செய்த தவறுகள் அல்லது குறைகள் மறு முறை நேராத வண்ணம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அணுகுவதால் தீர்வுகள் எளிதாகிவிடும்.

சாணை பிடிக்கும் போது பொறி பறக்கும்! அது தவிர்க்க இயலாதது. ஆனால் அதற்காக நாம் சாணை பிடிக்காமல் இருப்பதில்லை. அதே போல் நாமும் சில பிரச்னைகளைத் தீர்க்கும் போது சில இழப்புகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும். அது தவிர்க்க முடியாத ஒன்று. சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். பல கண்டு பிடிப்புகள், சாதனைகள் ஆகியவற்றிற்கு சொந்தக்காரர்களாகத் திகழ்பவர்களின் வாழ்வில் துன்பம் அல்லது வேதனையின் சாயல் எங்கேனும் ஒளிந்து கொண்டுதான் இருக்கும். அதனையும் மீறி அவர்கள் சாதித்துக் காட்டினார்கள். ஆம்! வாழ்க்கை துன்பம் என்பதின் மூலம் நம்மை நம் திறமைகளை சாணை பிடித்துக் கொண்டுதானிருக்கிறது! சாணை பிடித்த பின் கத்தி மீண்டும் வெட்டத் தயாராகி விடுகிறது.

வாருங்கள், அதே போல் நம்மை கூராக்கிக் கொண்டு மீண்டும் பிரச்னைகளை வெட்டத் தயாராகி விடுவோம். புதிய பாதை தானே அமையும். சாணை பிடிக்கலையோ சாணை!

உருளைக்கிழங்கும், மனிதர்களும்!

" குருவே. மனிதனின் வாழ்வில் பல வேறு வகையான மனிதர்கள் வந்து சேர்கின்றனர். எல்லோருமே ஒன்றாக இருப்பதில்லை. அவர்களை இனம் பிரிப்பது கடினமாக இருக்கிறது.மேலும் அதற்கென்று நேரமும் ஒதுக்க முடிவதில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்" என்றார் சீடர்.

குரு "அவ்வளவுதானே? எளிய வழி நான் சொல்கிறேன்." என்றார். "காய்கறி விற்கும் சந்தையில் நம் ஆசிரமத்திற்கு வரும் ஒருவர் கையாளும் முறையை நான் சொல்கிறேன். அதுவே உனக்கான விடை. உருளைக் கிழங்குகளை மற்றவர் போல் அவர் தரம் பிரிப்பதில்லை. அதற்கு அவர் ஒரு நூதனமான முறையைக் கையாள்கிறார். என்ன தெரியுமா? பல இடங்களுக்கு அவர் காய்கறிகளை வழங்க வேண்டும். அதனோடு உருளைக் கிழங்குகளுக்கு என்று தனியாக ஒரு தடுப்புச்சுவர் வைத்து அந்த இடத்தில் அனைத்தையும் கொட்டிவிடுகிறார். பிறகு காய்கறிகளை ஒரு வாகனத்தில் ஏற்றுகிறார். அவரின் பயணம் ஆரம்பமாகிறது. பல ஏற்றங்கள், பல இறக்கங்கள், வளைவு, நெளிவு இவற்றைக் கடந்து பயணம் செய்யும் அவர் காய்கறிகளை விநியோகம் செய்த பின், உருளைக்கிழங்கு இருக்கும் பகுதியைத் திறக்கிறார். அங்கு என்ன நிகழ்ந்திருக்கும்?" என்று சீடனைக் கேட்டார்.

சீடர், "எனக்கு ஒன்றும் தோன்றவில்லை குருவே" என்றார்.

குரு," விஞ்ஞானம் படித்திருக்கிறாய் அல்லவா? பல உருளைகள் மேடான பகுதி வரும் போது குதித்து வெளியே எகிறிவிடும். இறக்கம் வரும் போது பல சிறிய உருளைகள் ஒன்று சேர்ந்து, சில உருளைகளை நசுக்கிவிடும். இதைத் தாண்டி மீதம் இருக்கும் உருளைகள் எடையின் அடிப்படையில் கனமானவை முதலில் அடிப்பாகத்தில் சேர்ந்துவிடும். மேலாக எடை குறைவானவை இருக்கும். ஒவ்வொரு பயணத்திலும் அவர் இந்த முறையைத்தான் கையாள்கிறார். வாழ்க்கை பயணமும் இப்படித்தான். பல ஏற்றம், இறக்கம், வளைவு, நெளிவுகளைக் கொண்டது. அது போல்தான் மனிதர்கள். இன்பம் அல்லது உயர்வு என்ற நிலையில் இருக்கும் போது பெரும்பாலும் நம்மை விட்டு விலகிவிடுவார்கள். இறக்கம் அதாவது துன்பம் வரும் போது பலர் நசுங்கி விடுவார்கள். சிலரே மிஞ்சுவார்கள். நீயும் அதே போல் ஒவ்வொரு அனுபவத்திற்கும் முன்னும் பின்னும் உன்னோடு இருப்பவர்களைப் பார். எந்த ரகம் என்று கண்டுபிடித்துவிடலாம்" என்றார் குரு.

சரிதானே?

அன்புடன், காயத்ரி பாலசுப்ரமணியன்.

மழலைகள் ஆசிரியர் குழு என் படைப்புகள்



             




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants