-
ஒட்டியும், ஒட்டாமலும்!
- காயத்ரி
குரு ஒருவர் ஒரு கிராமத்தில், சிறு ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். அவரிடம் உபதேசம் கேட்க பலர் வருவார்கள். தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மன வேதனை தீரும் வழி வகைகளைப் பற்றிய உபதேசங்களை பெற்றுக் கொண்டு செல்வார்கள். ஞானி அவர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள இன்ப துன்பங்களை கேட்டுக் கொண்டு அதற்கான வழிமுறைகளைச் சொல்வார். அதன் பிறகு வேறு வேலைகளில் ஈடுபடுவார்.
அவரை கவனித்துக் கொண்டிருந்த சீடர் ஒருவர், "குருவே ஒரு சந்தேகம்."
"கேள்" என்றார் குரு.
"குருவே தங்களிடம் பல பேர் வந்து தங்கள் இன்பம், துன்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.நீங்கள் இன்பத்தைக் கண்டு மகிழ்வதுமில்லை. துன்பத்தைக் கண்டு துவளுவதும் இல்லை. ஆனால் நாங்களோ இன்பத்தைக் கண்டு மகிழ்கிறோம். துன்பத்தைக் கண்டு துவண்டு போகிறோம். ஆனால் நீங்கள் பட்டும் படாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றிர்கள். இது எப்படி குருவே சாத்தியம்?" என்று கேட்டார்.
குரு சீடரிடம், "நம் ஆசிரமத்திற்கு வந்த கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் அல்லவா? நான் எழுதி வைத்த கடிதங்களையும், தபால் உறைகளையும் கொண்டு வா" என்றார். "அவரவர்க்கு உரிய விலாசமிட்ட உறையில் இந்தக் கடிதங்களை வைத்து ஒட்டு" என்றார்.
சீடர் உடனே பரபரப்பாக அனைத்திலும் பசையைத் தடவி ஒட்டி, அது பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதன் மேல் ஒரு பாரத்தையும் வைத்தார். 10 நிமிடம் கழித்து அனைத்து உறைகளையும் பரிசோதித்து பார்த்தார். அனைத்தும் நன்றாக ஒட்டி இருந்தது. குரு அனைத்து விலாசங்களையும் சரி பார்த்தார்.
"அடடே ஒரு விலாசம் தவறாகி விட்டதே. இதில் உள்ளது வேறு ஒருவருக்கு செல்ல வேண்டுமே. என்ன செய்ய?" என்றார்.
சீடர், "குருவே அந்தத் தபால் உறையை பிரித்து விட்டு உள்ளே இருக்கும் கடித்தத்தை எடுத்து விடலாம் அல்லவா?" என்றார்.
குரு "நீயே அதனைச் செய்" என்றார்.
சீடர் அந்த உறையை பிரிக்க முயன்றார். முடியவில்லை. "குருவே உறையைப் பிரிக்க முடியவில்லை" என்றார்.
"சேதமில்லாமல் உறையைப் பிரிக்க முடியவில்லை அல்லவா? சரி. உறையின் வாயைக் கிழித்து விடு. அல்லது வெட்டி எடுத்துவிடு" என்றார்.
சீடர் உறையின் வாயைக் கிழித்து எடுக்க, கூடவே கடிதமும் சற்று கிழிபட்டு வந்தது.
"என்ன கடிதமும், அது இருந்த உறையும் கிழிந்து விட்டதா" என்றார் குரு. ஆம் குருவே" என்றார் சீடர்.
குரு, "நீ 10 நிமிடம் பாரம் வைத்து அழுத்தியதற்கே சாதாரண உறையும், கடிதமும் இவ்வளவு கிழிகிறது. துன்பம், இன்பம் இரண்டும் மனதை அழுத்திக் கொண்டே இருந்தால், அது என்ன பாடு படும்?"என்றார்.
"உண்மைதான். அப்படியானால் ஒட்டவே கூடாது என்கிறீர்களா குருவே?" என்றார் சீடர்.
"இல்லை. ஒட்டியும் ஒட்டாமலும் இரு." என்றார் குரு.
"புரியவில்லை குருவே" என்றார் சீடர். "புதிய உறையையும், வேறு கடிதத்தையும் கொண்டு வா" என்றார் குரு.
சீடர் கொண்டு வந்த உறையில் பசையைத் தடவி சாதாரணமாக ஒட்டி வைத்தார். 10 நிமிடம் அதனை அப்படியே வைத்தார். பிறகு சீடனை உறையைப் பரிசோதிக்கச் சொன்னார். உறையின் வாய் ஒட்டியிருந்தது.
"சரி. குருவே. இந்த உறையைப் பிரிக்க என்ன செய்ய வேண்டும்?" என்றார் சீடர்.
சிறிது தண்ணீர் துளியை முனையில் வை. இரண்டு நிமிடம் கழித்து லேசாக முனையைப் பிரி." என்றார். அப்படியே செய்தார் சீடர். சேதமின்றி உறை பிரிந்து வந்தது. "இரண்டையும் அதிகம் அழுத்தாமல் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் பிரித்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கும் விதம் புரிந்ததா?" என்றார் குரு.
சீடருக்குப் புரிந்தது போல் நமக்கும் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














