தாயென்று கும்பிடடி பாப்பா
- நதி நவின்ற பாடம்!
காயத்ரி
சீடர் ஒருவர் தன் குருவிடம் சேவை செய்து வந்தார். தினந்தோறும் குருவைப் பார்க்க பலதரப்பட்ட மக்கள் வருவர். சில நேரம் அரசர் வந்து ஆசி பெற்றுப் போவார். மனக்கவலை உள்ளவர் தன் மனக்குறை தீரும் மருந்தை பெற்றுக் கொண்டு போவர். அக்கம்பக்கத்திலுள்ள ஏழை மக்கள், தொழிலாளிகள் என அனைவரும் வந்து போவர். குரு அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வதைப் பார்த்தார். அரசன் என்று அதிக மரியாதையும் காட்டுவதும் இல்லை. மற்றவரிடம் பாராமுகமும் காட்டுவது இல்லை.
சீடருக்கு ஆச்சரியம். "குருவே தங்களை ஒன்று கேட்கலாமா?
"தாராளமாகக் கேள்".
"எப்படி குருவே அனைவரையும் அரவணைத்து செல்வதுடன் அனைவரிடமும் ஒரே விதமாக அன்பு செலுத்துகிறீர்கள்? இந்த ரகசியத்தை அடியேன் அறியலாமா?"
"தாராளமாகச் சொல்கிறேன். அதற்கு முன் நீ நம் ஆசிரமத்தின் அருகில் இருக்கும் நதிக்கரையில் மர நிழலில் காத்துக் கொண்டிரு. நான் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கு வந்து விடுகிறேன்" என்றார் குரு.
சீடரும் நதிக்கரைக்குச் சென்று, அங்கிருக்கும் காட்சிகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினார். ஒருவர் நதியில் வாசனை மலர்களைத் தூவி வழிபட்டுக் கொண்டிருந்தார். மற்றோரிடத்தில் குழந்தைகள் நீரை இறைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். சற்றுத் தொலைவில் மாடு கன்றுகள் நீரருந்திக் கொண்டிருந்தன. நடுவே ஒரு மரக்கட்டையும், வாடிய மலர்மாலை ஒன்றும் மிதந்து போனதையும் பார்த்தார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் குருவும் வந்து விட்டார். குருவின் கையில் ஒரு குச்சி இருந்தது. வந்தவுடன் நதியின் கரையை ஒட்டி ஒரு பள்ளம் பறிக்க ஆரம்பித்தார். பள்ளம் பறிக்க ஆரம்பித்தவுடன் நதியின் நீர் அங்கும் நிரம்பி விட்டது.
சீடர்" குருவே நான்...." என்று ஆரம்பிக்கும் முன்னே, குரு அவரை நிறுத்தி, "இதோ பார்" என்று சிறிய பள்ளத்தை சுட்டிக் காட்டினார். "அன்பும் இது போலவே இயன்றவரை கிடைத்த இடத்தில் எல்லாம் முதலில் வியாபித்து விடும். நீர் யாருடைய கட்டளைக்காகவும் காத்துக் கொண்டிருப்பதில்லை. அது வியாபிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. அன்பும் இதைப் போலத்தான். முதலில் உன் அன்பால் அனைவரையும் அரவணைத்து விடு. புரிந்ததா?" என்றார் குரு.
"புரிந்தது குருவே" என்றர் சீடர்.
"ஆனாலும் உன் மனதில் இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதையும் கேள்." என்றார் குரு.
"பல விதமான பொருட்களும் ஆற்றில் மிதக்கின்றன. அது பற்றி குருவே?" என்றார் சீடர்.
"அவை வித விதமான மனிதர்களையும், அவர்களின் இயல்பையும் குறிக்கிம்றன. சந்தனம் போன்று வாழ்க்கை மணம் வீச வேண்டுமென்று பாடுபடுவர்கள் உண்டு. வாழ்க்கையை விளையாட்டாய் எடுத்துக் கொள்பவரும் உன்டு. உறுதியாய் இருக்கும் மரக்கட்டை நீரில் ஊறியவுடன் மென்மையாய் ஆவது போல், அன்பில் ஊறிய மனிதனும் மென்மையாகி விடுகிறான். வாடிய மலர் மாலை கரை ஓரம் ஒதுங்கி வேறோர் செடிக்கு உரமாகும்.வாழ்வென்றால் பல அனுபவங்கள் மற்றும் பலதரப்பட்ட மனிதர்கள் இருப்பார்கள். சில பொருட்கள் மற்றும் மனிதர்கள் மூலம் நமக்குப் பயன் கிட்டும். சிலவை மற்றவருக்கு பயன் தரும். இங்கிருக்கும் மரத்தின் கனி வேறோர் இடத்தில் மற்றவரின் பசியாற்றும். வேறோர் இடத்திலிருக்கும் கனி இங்கு மிதந்து வரும். அனைத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு நதியைப் போல் நிற்காமல் போய்க் கொண்டே இரு" என்றார் குரு.
நதியாய் மாறிப்பாருங்கள்! அன்பின் வலிமையும், ஆழமும் புரியும்!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















