தாயென்று கும்பிடடி பாப்பா
- அமுதசுரபி!
ஜோதிடர் காயத்ரி
விஞ்ஞானத்தின் துணை கொண்டு மனிதன் தன் வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொண்டான். பழைய வாழ்க்கை முறையை மெல்ல மறந்தான். பிறகு அதனை ஒதுக்கித் தள்ளி விட்டு, பரபரப்பான வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றிக் கொண்டான். பொருள் வளம் பெருகியது. மன வளம்? சந்தேகமே! இப்பொழுது உள்ள வாழ்க்கை முறை மனிதனின் மன அழுத்த த்தை அதிகரிக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். வசதி வாய்ப்புகள் அதிகமாகும் போது அதிக சந்தோஷம் அடைய வேண்டுமே? ஆனால் நிலைமை அப்படியில்லை. செய்தித்தாளைப் பாருங்கள். அதிகமா அளவில் தற்கொலை, கொலை செய்திகளே இடம் பெற்றுள்ளன. மனிதனின் மனப் பாங்கு இன்றைய காலகட்டத்தில் கேள்விக் குறியாகவே உள்ளது.
இளம் வயது முதல் அவன் அறிந்த செய்திகளின் அடிப்படையிலேயே அவனுடைய மனப்பாங்கு மற்றும் வாழ்வின் கண்ணோட்டம் அமைகிறது. சென்ற தலைமுறை வரை இந்த செய்திகள் நாள் தோறும் அவன் கேட்ட கதைகள் மூலமாக அவனுக்குக் கிடைத்தன. அவை அவன் மனதில் பல மாற்றங்களையும், பல ரசவாதங்களையும் நிகழ்த்தின. அன்னையர் சொன்ன அருமையான கதைகளை கேட்டே வீ ர சிவாஜியும், விவேகானந்தரும் வளர்ந்து வந்தனர். அவர்களுக்கு வீரமும், ஆன்மீகமும் கதைகள் மூலமாகப் போதிக்கப்பட்டன. அன்றாட வாழ்வில் மனிதன் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றிற்குரிய தீர்வுகள், அவன் வாழ வேண்டிய வழி முறைகள் முதலியன கதைகள் மூலமாகச் சொல்லப்படும்போது அவை மனதில் ஆழமாகப் பதிந்து விடும். இவை பிற்காலத்தில் குழந்தைகள் வளரும் போது வழிகாட்டியாய் விளங்கின.
ஐந்திலேயே மனம் கதையில் லயித்தனால், ஐம்பதிலும் வாழ்க்கை சுகமாகவே இருந்தது. எதனையும் சாதிக்க முடிந்தது. இதனை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் கதை கேட்பதில் ஒரு ஒரு நுட்பமான விஷயத்தை கடைபிடித்தனர். கதை கேட்கும் பிள்ளைகள் "ம்" என்று சொல்ல வேண்டும். ஹிரண்ய கசியுவின் மகனாகிய பிரகாலதன் தன் வயிற்றின் இருக்கையிலேயே, "ம்" சொல்லி நாரத மகரிஷியின் உபதேசங்களைக் கேட்டதாக நாம் படித்திருக்கிறோம். "ம்" நின்று விட்டால், கதையை நிறுத்தி விடுவர். ஏனெனில் மனம் முழுவதும் கதையில் லயித்தால்தான் "ம்" வரும். மனம் லயிக்கவில்லை என்றால் "ம்" வராது. ஆதலால்தான் நம் முன்னோர்கள், வாழ்க்கை தத்துவத்தை எடுத்துச் சொல்லும் காவியம், காப்பியம் அனைத்தையும் கதை வடிவமாகவே வைத்தனர். இள வயது முதலே கதை கேட்ட பழக்கத்தால் கருத்துக்கள் மனதி ஊன்றி, ஊறி விடும்.
பிரச்னை என்று வரும் போது மனம் தேவையான வழி முறையை, தீர்வை எடுத்துக் கொள்ளும். ஆதலால்தான் அள்ளக் அள்ளக் குறையாத அமுதசுரபியாய் வேடிக்கை கதைகள், பக்தி கதைகள், புதிர் கதைகள், நன்னெறிக் கதைகள் என்று பல விதமாக எளிய வடிவில் வாழ்க்கைக் கல்வியைப் போதித்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் நவீன கருவிகளின் பயன்பாட்டால், கதை சொல்லும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. மனித மனத்தை வடிவமைப்பது என்பது ஒரு நாளில் முடியும் செயல் அல்ல. இது தொடராக நிகழக் கூடிய ஒன்று. வடிவமைக்கும் பணியை எந்த சிரமும் இன்றி கதைகள் செய்து வந்தன. அமுத சுரபியை நிரப்ப நாம் தயாராக உள்ளோமா? பாடத் திட்டத்தில், கதைக்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க முடியுமா?
சிந்தியுங்கள்!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||


















