வாழ்க்கைத் தத்துவம் - பாகம் 5
அசலம்
பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்
த்வயி மயி சான்ய த்ரைகோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: ஸர்வஸ்மின் அபி ப்ச்யாத்மானம் ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஞானம்
ஸாரம்:உன்னிலும், என்னிலும், எலலாற்றிலும் ஒரே சக்தியாக விஷ்ணு (இறைவன்) வீற்றிருக்கிறார். பொறுமையிழந்து நீ எனனிடம் கோபம் கொள்கிறாய். எல்லாற்றிலும், எல்லோரிலும் நீ அந்த இறைவனை (SELF) பார். வ்யக்தி பேதங்களை உருவாக்கும் அந்த அஞ்ஞானத்தைத் துற.விளக்கம்:ஸமபாவனை வருவதற்கு வழி காட்டுகிறார். நம் எல்லோரிலும், உலகிலுள்ள எல்லா வஸ்துக்களிலும் உயிராக ஓர் சக்தி திகழ்கிறது. அதைத்தான் இறைவன் எனக் கூறுகிறோம். அப்படியானால் ஒருவன் மற்றொருவன் பால் காண்பிக்கும் க்ரோதம் (கோபம்) சரியல்லவே. கோபம் ஏன் வருகிறது? பொறுமை இல்லாததால். பொறுமை ஏன் இல்லாதாகிறது? நான் வேறு, நீ வேறு, மற்றவைகள் தனித்தனி என அஞ்ஞானத்தால் உண்டாகும் வ்யக்தி பேதமே. உலகில் எல்லா வஸ்துக்களிலும் திகழும் சக்தி (இறைவன்) ஒன்றேதான். அப்படியானால் இந்த வ்யக்தி பேதம் ஏன் வருகிறது? அதுதான் அஞ்ஞானம் (அறிவீனம்) எனப்படுவது. இந்த அஞ்ஞானம் அகன்றால் இந்த வ்யக்தி பேதமும் அகலும். மேலே சொன்ன உண்மை புரியும். அப்படிப் புரிந்தால் எல்லாற்றிலும் இறைவனைக் காண முடியும். இந்த நிலைக்கு ஸமபாவனை எனப் பேர். இந்த நிலையயைத்தான் ஸ்ரீ கிருஷ்னன் யுத்தக்களத்தில் அர்ஜுனனுக்கு ஞானக்கண் தந்து தன் விஸ்வரூப தரிசனத்தில் கண்கூடாகக் காண்பித்தார். அங்கு அர்ஜுனன் இந்த உலகம் முழுவதும், அதிலுள்ள சராசரங்கள், தான், கிருஷ்னன், யுத்தக்களம், அதில் நிறைந்து நிற்கும் வீரர்கள் எல்லாவற்றையும் கண்டான். பிறகு அவனுக்கு ஞானோதயம் வந்தது. ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்ம்மேந்த்ர ஸ்வாமிகள் தான் இயற்றிய பஜனைப் பாடல்கள் ஒன்றில் இதை ”ஸர்வம் ப்ரஹ்ம மயம்” என எடுத்துரரைத்திருக்கிறார். அவர் பெரிய ஞானி. ஸ்ரீ தியாகராஜ ஸ்வமிகள் தன் க்ருதிகளில் இதைத்தான் “எல்லாம் ராமமயம்” எனப் பாடினார். அவர் பக்திமான். எல்லாவற்றிலும் அவர் இறைவன் ராமனையே கண்டார். ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் இரண்டிலும் இதைத்தான் தந்திருக்கிறார்கள் பெரியோர்கள்.
சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மாகுரு யத்னம் விக்ரஹஸந்தௌ பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம் வாஞ்சஸ்யசிராத் அதிவிஷ்ணுத்வம்
ஸ்லோகம் 25:
ஸாரம்:சத்ருக்களுடனும் மித்ரர்களிடமும், புத்திரனிடமும், பந்துக்களிடமும் (மற்றெல்லாரிடமும்) சத்ருதயோ, சினேகமோ கொள்ளாதே. (உனக்கு) அதிவேகம் விஷ்ணுபதம் (ப்ரஹ்மதவம் அல்லது ஆத்ம ஸாக்ஷாத்க்காரம்) கிடைக்க வேண்டுமானால், எல்லவற்றிலும் இறைவனைக் காணும் ஸமபாவனை நிலையை அடைவாயாக.விளக்கம்:ஸத்திய நிலை பெற, ஆசாபாசத்தை விட்டால் மட்டும் போதாது, எல்லாற்றிலும் ஏக சக்தியாக விளங்கும் அந்தப் பரமாத்ம தத்துவத்தை உணர வேண்டும். இதற்கு சத்ருத்வம், மைத்ரி, ஸுகம், துக்கம், நான், நீ முதலிய த்வந்த்வ பாவம் போய், எல்லாம் ப்ரஹ்ம மயம் என்ற ஸமபாவம் வர வேண்டும். அதைத்தான் இங்கு வலியுறுத்துகிறார். இங்கு சத்ருக்கள், மித்ரர், புத்திரன், பந்துக்கள் என்று மட்டும் சொல்லவில்லை. இப்படிச் சொல்வதிலிருந்து, எல்லா ஜீவராசிகளும் உள்படும். உதாரணத்திற்காக இவை நான்கை மட்டும் குறிப்பிடுகிறார். இதில் எல்லா வித பந்தங்களும் அடங்கிவிட்டன்.
காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாSத்மானம் பாவய கோSஹம் ஆத்ம ஞான விஹீனா மூடா: தே பச்யந்தே நரக நிகூடா:
ஸ்லோகம் 26:
ஸாரம்:காமம், க்ரோதம், லோபம், மோஹம் முதலிய (துர்குணங்களை) குணங்களை விட்டு உன்னுள் “நான் யார்” என்று விசாரம் கொள். ஆத்மஞானம் இல்லாதவர்கள் மூடர்கள், அவர்கள் இவ்வுலகிலேயே நரக வேதனைக்குள்ளாவார்கள்.விளக்கம்:நம்மை நயிப்பது காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யம் என்ற 6 துர்குணங்கள். காமம் என்பது கீழ்த்தர ஆசை (EGOCENTRIC DESIRE), க்ரோதம் என்றால் கோபம் (ANGER), லோபம் என்பது கஞ்சத்தனம் (GREED), மோஹம் என்பது அஞ்ஞானம் (DELUSION), மதம் என்றால் கர்வம் (SELF CONCEIT), மாத்ஸர்யம் என்பது விரோதம் (ENMITY). இப்படிப்பட்ட் துர்குணங்கள் நம்மை ஆட்டிப் படைப்பதால் நாம் நம் சுய நிலையை மறந்து உலகத்தில் ஸுக துக்காதிகளில் நலிந்து நரகவேதனைப் படுகிறோம். இதிலிருந்து விமுக்தி வேண்டுமானால், இந்த குணங்களை விட்டு, முதலில் நான் யார் என்|ற் உண்மையை அறிய வேண்டும். அப்படி ஆத்ம ஞானம் அடையாதவர்கள் இந்த உலகிலேயே நரகவேதனைப் பட்டு உழலுகிறார்கள் என்று எடுத்துரைக்கிறார். இப்படி அஞ்ஞானத்தில் மூழ்கி இந்த ஸம்ஸார ஸாகரத்தில் பல கஷ்டங்களும் படுபவர்கள் ஞனம் பெ|றாதவர்கள். இதிலிருந்து தப்ப, நம்முள் நான் யார் என்ற சிந்தனையில் மூழ்கி ஆத்மஸ்வரூப ஞானம் பெற வேண்டும்.. இதை ஸ்ரீ ரமண மஹருஷி “உன்னை நீயே உணர்ந்துகொள்” எனச் சொல்லியிருக்கிறார்.
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம் நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம் தேயம் தீனஜனாய ச வித்தம்
ஸ்லோகம் 27:
ஸாரம்:(பகவத்) கீதையைப் படி, (கீதாசார்யனின்) 1000 நாமத்தைச் சொல், லக்ஷ்மீபதியின் (விஷ்ணுவின்) ரூபத்தை மனதில் தியானம் செய், ஸத்துக்களுடன் (ஸஜ்ஜனங்களுட்ன்) கூட்டுறவு கொள், தீனஜனங்களூக்கு தனத்தை தானம் செய்.விளக்கம்:நம் ஆசாபாசத்தையும் துர்குணங்களையும் விட்டால் மட்டும் போதாது, நல்ல காரியத்தில் ஈடுபட வேண்டும். அவை யாவை? கீதை என்பதை ஸகல சாஸ்திரங்கள் எனக் கொண்டு சாஸ்த்ர படனம் என இதற்கு அர்த்தம் கோள்ள வேண்டும். பகவான் நாமாவை உச்சரிப்பது, பூசை செய்தல் என விஸ்தாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனதில் இறைவன் ஸ்வரூபம் காணுதல் தியானம் எனக் கொள்ள வேண்டும். பிறகு ஸத்ஸங்கம், தான தர்மாதிகள் செய்வது என இப்படி உடல், மனம், புத்தி மூன்றையும் நல் வழியில் செலுத்தல் வேண்டும். அதற்கு, பாராயணம், ஜபம், சத்ஸங்கம், தனதர்மாதிகள் என வழி வகுத்திருக்கிறார்கள் பெரியோர்கள். இப்படிச் செய்யும்போது, அஹம்காரம், மமாகாரம் போய், எல்லொரும் ஒன்றே என்ற பாவம் வரும். இது ஆத்ம சிந்தனைக்கு உதவியாக அமையும்.
ஸுகத: க்ரியதே ராமாபோக:
பஸ்சாத்தந்த சரீரே ரோக: யத்யபி லோகே மரணம் சரணம் ததபி ந முஞ்சதி பாபா சரணம்
ஸ்லோகம் 28:
ஸாரம்:இந்திரிய ஸுகத்தை நாடுகிறோம். அதன் விளைவாக உடல் ரோகத்தில் தத்தளிக்கிறது, மரணம்தான் எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி என்று அறிந்தும், (மனிதன்) பாபச் செயக்ளிலிருந்து விலகுவதில்லை.விளக்கம்:அஹோ என்ன பரிதாப நிலை! மனிதன் இந்திரியத்தால் கிடைக்கும் ஸுகங்களை அனுபவிக்கிறான். அதன் விளைவாக உடல் நலமற்று வியாதியில் உழலுகிறான். மரணம் இந்த உலக வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி எனத் தெரிந்தும், தான் செய்யும் பாபச் செயல்களிலிருந்து விலகுவதில்லை. இதை என்னவென்று சொல்வது. அஞ்ஞானம் என்றல்லாமல் வேறென்ன? ஒரு புறம் ஆத்மஞானத்திற்கு வழி காட்டி இன்னொரு புறம் உலக வாழ்க்கைத் தரத்தைச் சுட்டிக் காட்டுவதிலிருந்து நமக்கு நல்வழி எது, ஆபத்தான வழி எது என்று இரண்டையும் எடுத்துரைக்கிறார் குருநாதர். மனித இயல்பு என்ன, அதை எப்படி நல்வழியில் திருப்ப வேண்டும் என இரண்டு பக்கத்தையும் புரட்டிப் பார்த்த பலன் கிடைக்கிறது.
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் புத்ராதபி தனபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ஸ்லோகம் 29:
ஸாரம்:ஸொத்து (இருப்பது) நல்லதல்ல. இதை எப்பொழுதும் நினை. அதிலிருந்து ஸுகம் கிடைப்பதில்லை, இதுதான் சத்தியம். தனவான்கள் தங்கள் புத்திரர்களால் பீதி அடைகிறார்கள். இதுதான் உலகத்தில உள்ள நியதி.விளக்கம்:என்ன ஒரு சத்தியம்! ஸொத்திருந்தால் கூடவே பயம் வரும். அதைக் கட்டிக் காக்க வேண்டும். யரும் திருடக்கூடாது. அது குறையாமல் இருக்க வேண்டும் என்ற பேராசை வரும். அதிலிருந்து ஏக்கம், பயம், அனுமித்தனம் முதலிய குணங்கள் வந்து சேரும். மன நிம்மதி இராது. ஸொத்திருந்தால் ஸுகம் வரும் என்று இப்போ சொல்ல முடியுமா? இல்லை. துக்கம் தான் வரும் இல்லயா? தனவான்கள் தங்கள் பிள்ளைகளையே கண்டு பயப்பட வேண்டியதாகும். ஏனென்றால் அவர்களுக்கு தனம் தரவில்லையேல் அவ்ர்கள் தொல்லை செய்வார்கள், சண்டை சச்சரவு எழும். அவர்களுக்குள் மோதல் வரும். கூடாது அவர்களிடமிருந்து தனவான்களுக்கு மரண பயம் கூட வரும். இதை நாம் பத்திரிகை வார்த்தைகளிலிருந்து தெரிந்து கொண்டுள்ளோம். “பணம் ஆளைக் கொல்லும்” என்ற பழமொழி சரியாகிவிட்டது.
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாSநித்ய விவேக விசாரம் ஜாப்யஸமேத ஸமாதிவிதானம் குர்வவதானம் மஹதவதானம்
ஸ்லோகம் 30:
ஸாரம்:ப்ராணாயாமம் செய்தல், இந்திரிய அடக்கம் கொள்தல், நித்திய அனித்திய வஸ்துக்களை வகைதிரித்து ஆறிதல், ஜபம்செய்து மனதை அடக்குதல் இத்யாதிகளை மிக கவனமாக செய்.விளக்கம்:நல்லது கெட்டதுகளை சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும் தந்து, ஆத்ம விசாரம் செய்து கடைத்தேறு என்று சொன்னால் மட்டும் போதுமா? ஆத்ம விசாரம் எப்படிச் செய்ய வேண்டும்? ஆத்ம விசாரத்திற்கு முன்னோடியாக நாம் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்களை எடுத்துரைத்ததோடு நில்லாமல், ஆத்ம ஞானத்திற்கு என்ன வழி என்றும் தெள்ளத் தெளியத் தருகிறார். ப்ராணாயாமத்தால் விசாரங்களை அடக்குவதும் (மனோ நியந்தரணம்), ப்ரத்யாகாரத்தால் இந்திரியங்களை அடக்குவதும் (உடலுருப்புகளை), நல்லது கெட்டது என வகை திரித்தறிவதினால் விவேகமடைவதும் (புத்தி ஸுக்ஷ்மதை), ஜபம் மூலம் ஏகாக்ர சித்த்த்துடன் இருப்பதும் (தியானம்) கடைசியில் ஆத்மஸாக்ஷாத்காரம் எனும் ஸமாதி நிலையில் கொண்டு சேர்க்கும். தியானம் நிலையாக எப்பொழுதும் இருப்பது ஸமாதி நிலை. இந்த வழியை மிக கவனமாகவும் கருத்துடனும் செய்ய வேண்டும்.
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராதSசிராத்பவ முக்த: ஸேந்த்ரியமானஸ நியமாதேவம் த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
ஸ்லோகம் 31:
ஸாரம்:குருவின் சரணாரவிந்தத்தை நிரந்தர பக்தி ச்ரத்தையுடன் இறுகப் பற்றி (மேல்சொன்ன படி) மனோநியந்த்ரணம், இந்திரிய தமனம் முதலிய வழிகளைப் (பின்பற்றி) இந்த (ஜனன மரண) ஸம்சாரத்திலிருந்து விடுபட்டு உன் இதயத்துள் நிரந்தரமாகப் பிரகாசிக்கும் அந்த இறைவனை (ஆத்மஸ்வரூபத்தை – SELF) அடைவாயாக.விளக்கம்:நாம் ஏதொரு காரியம் செய்யும்போதும் குருவின் அருள் கிடைக்க வேண்டும். அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். குரு க்ருபை இல்லயேல் நம் பிரயத்னம் பலன் தராது. நம்மால் இறைவனைக் காண முடியாது (ஆத்ம ஸாக்ஷாத்காரம்). அதற்கு குரு வழி காட்ட வேண்டும். “குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை” என்ற மகாவாக்கியம் இங்கு கவனத்திற்கு வர வேண்டும். அந்த குருவிற்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். அவர் சொல்லில் ந்ம்பிககை வைத்து, அவர் சொல்படி இயங்கினால் அவர் அருள் கிடைக்கும். அப்புறம் நமக்கு வெற்றிதான். இந்த மஹா தத்துவத்தைக் கடைசியில் வைத்திருக்கிறார். நம்பிக்கையுடன் குருவின் பாதகமலத்தைப் பிடித்து அவர் காண்பித்தபடி மனோலயம், இந்திரிய அடக்கம், ஜபம் வழி தியானம் இப்படிச் செய்தால் ஸமாதி நிலை கிடைக்கும். இப்படி தியான் நிலை நீடித்திருந்தால், அதாவது உலக நினைப்பு இல்லாமல் எப்பொழுதும ஆத்ம ஸ்வரூப அனுபூதி நிலையில் இருந்தால் அது தான் ஸமாதி எனப்படும். இது தான் ஆத்ம ஸாக்ஷாத்க்காரம் எனப்படும் நிலை. இது தான் மனித ஜாதியின் வாழ்வின் நோக்கம். இதுவேதான் வாழ்வின் ரகசியம் கூட.முடிவுரை:பவகத்கீதை எப்படி ஐந்தாவது வேதமென்று கொண்டாடுகிறோமொ அதேபொல் பஜகோவிந்தம் அத்வைத ஸிந்த்தாந்தத்தின் ஸாரம் முழுவதும் அடங்கியிருக்கும் ஒரு திவ்ய காவ்யம். ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் இதை தன் ஸ்வானுபத்திலிருந்து கடைந்தெடுத்துத் தந்திருக்கிறார். இதைப் படித்து அதன் படி வாழ்க்கை வாழ்ந்தால் ஆதமானுபூதி கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.எம்மால் முடிந்த மட்டும் நாம் புரிந்துகொண்டபடி இந்த ஸ்லோகங்களுக்கு ஸாரமும் விளக்கமும் தந்திருக்கிறோம். இதில் வல்ல தவறும் இருந்தால் பெரியோர்களும் ஞானிகளும் எம்மை மன்னித்தருளும்படி வேண்டுகிறோம். அதேபொல் எமக்குத் தெரிந்தமட்டில் Audioவுக்கு ராகங்களை சேர்த்திருக்கிறோம். அந்த ராகங்களில் பிசகு ஏதேனும் இருந்தால் ஸ்ங்கீதஸ்தர்கள் பொறுத்தருளுமாறு வேண்டுகிறோம். அச்சுப்பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்குமாறு கோருகிறோம். நன்றியுரை:இதை மழலைகள் மின்தளத்தில் பிரசுரிக்க முன்வந்த ஸ்ரீ ஆ.கி.ரா. அவர்களுக்கும், இந்த நூலை யூனிகோட் தமிழில் தயார் செய்ய உதவியாயிருந்த அழகி என்ற Software தந்த ஸ்ரீ விஸ்வநாதன் என்பவருக்கும் எமது நன்றி உரித்தாகும். இதைப் பொறுமையுடன் படித்துவரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றியை ரேகைப்படுத்துகிறோம். இந்த நூலைப் படித்து அது யாருக்கேனும் வாழ்க்கை வழி அமையக் காரணமாக பாவித்தால் அதுவே நாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். வணக்கம்.முற்றிற்று : ஹரி ஓம்:
|
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||




கேளுங்கள்
Your Feedback









