வாழ்வின் லட்சியம் - பாகம் 4
அசலம்
விசாரத்தின் அழிவு
ஏகாக்கிர சித்தத்துடன் நாம் இந்த "நான்" என்ற விசாரத்தை உற்று நோக்குவோமானால் அது ஒளிந்தோடிவிடுகிறது. கடைசியில் மறைந்து போய் விடுகிறது. அப்போது நமக்கு என்ன புலப்படுகிறது? எல்லாமாக, ஒன்றாக ஓர் இருப்பு மட்டுமே புலப்படுகிறது. அல்லாது ஒன்றுமில்லா சூனிய அவஸ்தை எற்படுவதில்லை. எப்படி? சூனியம் என்றால் ஒன்றும் இன்மை. ஆனால் ஏதோ நமக்குப் புலனாகிறது. அது என்ன? நம் இருப்பு சத்தியம் தானே? நாம் இருப்பது புலப்படுகிறது? விசாரமே இல்லாமல், மனம் அடங்கிவிட்ட அத்தருணத்தில் ஏதோ புலப்படுவது ஏன்? அதைத்தான் நாம் "Consciousness", "அறிவு", "ஞானம்" எனக் கூறுகிறோம். இந்த அறிவு புறமிருந்து வரவில்லை. அது நம்முள் உள்ள "உணர்வு" எனக் கூறப்படும் தன்மை என்றே கூற வேண்டும். இதைத்தான் "GOD" எனச் சொல்கிறோம். ஆக, "நான்" என்ற முதல் விசாரத்தை அடக்கிவிட்டால் நம் சுய வடிவம் (உருவம் இல்லை) அதாவது நமது "இருப்பு" என்ற தன்மை புலப்படும். இந்த இருப்பு தான் நம் "Real Nature". இதைப் பல பெயரிட்டு அழைக்கிறோம்.
ஜீவன்முக்த நிலை:
இந்த இருப்பு நீடிக்குமானால், அதாவது நாம் இந்த உலகில் வாழ்ந்துகொண்டே இந்த இருப்பில் ஸ்திரமாக இருப்போமானால், அதுதான் "ஜீவன் முக்தன்" நிலை எனக் கூறப்படுகிறது. ஒரு தரம் இந்த இரகிசியம் புரிந்து விட்டால், அதாவது இந்த நிலை கிடைத்து விட்டால், நம் ஜீவிதக் குறிக்கோளை அடைந்துவிடுகிறோம். பிறகு ஜீவிப்பது எதற்கு என வினவலாம். இந்த ஜெடமானது அதன் கர்ம வினைகளை அனுபவித்தே தீர வேண்டும். மன நிலையில் நாம் ஜீவன் முக்தர்கள் ஆனாலும் உடல் நிலை வேறு அல்லவா? உடல் நமது உடமைப் பொருள். அது நாம் அல்ல. ஆனால் அது நம்முடைய வாகனம். அதன் வினையை அதுவே அனுபவிக்க வேண்டும். ஆனால், அப்பொழுது ஜீவன் முக்தர்கள் அந்த அனுபவத்தில் இருக்க மாட்டார்கள். ஏனெனில் உலகிலுள்ள எல்லா உடலையும் போல இந்த உடலை பாவிப்பார்கள். அவர்கள் நிலை ஒரு ஸம பாவனையில் இருக்கும். அதாவது "நான்" எல்லாற்றிலும் உள்ளேன், எல்லாம் என் வசம் என்ற நினைவில் இருப்பார்கள். இப்பொழுது "நான்" என்ற நினைப்பு ஓர் விசாரமல்லவா என்று தோன்றலாம். அல்ல. இந்த "நான்" ஆத்மாவைக் குறிக்கிறது. அதாவது "இருப்பு" என்ற நிலையில் உலகெல்லாம் நிறைந்து இருக்கும் ஓர் தன்மையைக் குறிப்பிடுகிறது. இறைவன் என்று கூறுவதும் ஜீவன் முக்தர்கள் கூறும் "நான்" என்பதும் ஒன்றே.
அப்படியானால் நாம் இறைவனாகி விடுகிறோமா? நாம் வேறு இறைவன் வேறு என்று இருந்தால் தானே "நாம்" இறைவனாகிவிட முடியும். இங்கு நமக்கு உதயமாகும் அறிவு என்னவென்றால் நாம் வேறு இறைவன் வேறு என்றில்லை, எல்லாம் ஒன்றாக இருக்கும் இருப்பு தான் "சத்தியம்". இதைத்தான் "அத்வைதம்" சுட்டிக் காட்டுகிறது. ஒன்று மட்டுமாக உள்ள இருப்பு. வேறொன்றும் இல்லாத தன்மை. இந்த வாழ்வின் இரகசியம் புலப்பட்டு அதற்குப் பின் வாழும் வாழ்வு உடலளவில் வேறாகத் தோன்றினாலும் ஸம பாவனையுடன் இருக்கும். அதாவது எல்லாம் ஒன்றாக, வேறொன்றில்லா அவஸ்தை.
மூல வடிவு:
இப்படி நம் மூலஸ்தானத்தை அடைவதைத்தான் "நம் ஜீவிதக் குறிக்கோள்" அல்லது "நம் வாழ்வின் நோக்கம்" என்று கூறியுள்ளேன். எல்லோரும் இந்த நிலையிலிருந்து வந்தவர்கள் தான். அதே நிலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஏனெனில், நாம் நம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஓர் இடத்திற்குச் சென்றால் திரும்ப நம் இடத்திற்கே வந்து விடுவது வழக்கம். அதுபோல், சத்திய நிலையிலிருந்து அசத்திய நிலைக்கு வந்த நாம், திரும்ப நம் இருப்பிடமாகிய சத்திய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியம் தானே? இதுவே "நம் ஜீவிதக் குறிக்கோளாக" அல்லது "நம் வாழ்வின் நோக்கமாக" இருக்க வேண்டும். அப்பொழுது தான் நம் ஜென்மம் ஸாபல்யமாகும்.
நன்றியுரை:
இதைத் தமிழில் இயற்ற உறுதுணையாக இருந்தது 'அழகி' எனும் "Tamizh Transliteration Software". அதன் பெருமயை சொற்ளால் முழுக்கக் கூற முடியாது. யூனிகோட் எழுத்துக்களை உபயோகித்து எல்லோராலும் தங்கள் தளங்களில் பார்க்க உதவக்கூடிய வகையில் அதை அமைத்துத் தந்திருக்கிறார் ஸ்ரீ விஷி எனப்படும் விஸ்வநாதன். அழகியின் பெருமை உலகளவில் தோன்றவைத்தது "Microsoft" நிருவனம், அண்மையில் இந்தப் பேரழகிக்கு "Manthan" பரிசு அளித்து அதை ஒரு உலகம் போற்றூம் "Software" ஆக உயர்த்தியுள்ளது. என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் அழகிக்கும் விஷிக்கும் தெரியப்படுத்துகிறேன்.
எமக்கு இந்தத் தளத்தில் பங்குகொள்ளத் தூண்டிய ஸ்ரீ AKR அவர்களுக்கும், இதைப் பிரசுரித்த மழலைஸ்.காம் தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரியப் படுத்துகிறேன்.
"எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும்
அதற்கு ஈசன் கணேசன அருளல் வேண்டும்"
முற்றும்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













