மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

பகவத் கீதா சாரம் - அசலம்

அத்தியாயம் 1, பாகம் 6

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: eprarthana.com

ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அத்தியாயம் 1, பாகம் 6

அதர்மோபி பவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:

ஸ்லோகம் 41: கேளுங்கள்

ஸாரம்:

அதர்மம் உண்டானால் (அதாவது தைவவிச்வாஸம் குலைந்தால் ஓ கிருஷ்ண, குலஸ்த்ரீகள் ஒழுக்கம் கெட்டுப்போவார்கள், (அப்படி) ஸ்த்ரீகள் ஒழுக்கம் கெட்டால் ஹே வ்ருஷ்னி குலத்தில் வந்தவனே! ஜாதிக்கலப்புகள் நிகழும்.

விளக்கம்:

இதுவரை அர்ஜுனனின் வாதத்தில் மனம் இளகாத கிருஷணனைக் கண்டு, அர்ஜுனன் மீண்டும் தன் தீர்மானம் சரி என உறப்பிப்பதற்காக இவ்வண்ணம் தொடர்ந்தான். நம் சமுதாயத்தில் ஸ்த்ரீகள் ஒழுங்காக இருந்தால்தான் குடும்பம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்ற நியதி நிலவிவருகிறது. யுத்தத்தில் குடும்பத் தலைவர்கள் இறந்துவிட்டால் அந்தக் குடும்பம் நாதியற்றுப் போகும். அப்பொழுது குடும்ப பாரம் தாளாமல், குடும்பத்தை நயிக்கக் குடும்ப ஸ்த்ரீகள் தவறான வழியில் சென்று பணம் திரட்டிக் குடும்பத்தை காக்க நேரிடும். அப்படிப் போனால் ஜாதிக்கலப்பு நேரிடும்.

இன்றைய ஸமுதாய நியதிப்படி ஜாதி பேதம் மிக இழிவான நிலையில் இருக்கிறது. முந்தைய வருணாசிரம தர்மப்படி, படிபபதிலும் மற்றவர்க்கு போதிப்பதிலும் திறமை கொண்டவர்கள் பிராஹ்மணர்களாகவும், வீரத்தால் நாட்டைக் காக்க சாகஸ வேலைகளில் ஈடுபடும் துணிச்சலுள்ளவர்கள் க்ஷத்திரியர்களாகவும், விவசாயம், வியாபாரம் இத்யாதிகளில் நாட்டமுள்ளோர் வைச்யர்களாகவும், இவை ஒன்றிலும் கலக்காமல் மற்றவருக்குப் பணிவிடை செய்ய முன்வருபவர் சூத்திரர்களாகவும் வர்ணாச்ரம தர்மம் வகை திரித்திருக்கிறது. இன்றைய நிலையில் புரோகிதர்கள், கலாசாலை, பள்ளிக்கூடம் முதலிய ஸ்தாபனங்களில் ப்டிப்பு சொல்லித் தருபவர்கள் பிராஹ்மணர்கள் ஆவார். ராஜ்ய பரிபாலனத்திலும் பட்டாளத்திலும் உள்ளவர்களை க்ஷ்த்திரியர்களாகக் கருதலாம்..விவசாயம், வியாபாரம் முதலிய வழியில் இயங்குகிறவர்கள் வைச்யர்களும், அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் ப்ருத்யவேலை செய்பவர்கள் சூத்திரர்களாகவும் திகழ்கிறார்கள். இப்படி அவரவர்கள் தர்மத்தைச் செய்வதர்க்கு பதிலாக மற்றவர்கள் தர்மங்களில் கலப்பதால் ஜாதிக்கலகம் எழலாம். குடும்பாங்கங்கள் இறந்தால் ஸ்த்ரீகள் குடும்பப் பொறுப்பைச் சரிவர செய்ய முடியாமல் த்ரவ்யத்திற்காகப் பல வேலைகளில் நுழைய நேரிடுவதால் தங்கள் தர்மத்தை விட நேரிடும். இப்படி ஜாதிக்கலகம் நிகழும். அத்துடன் தெய்வ விச்வாஸம் ந்லியும், குடும்ப கௌரவம் குலையும், கூட்டுறவு பாதிக்கப்படும், சமுதாயக் கட்டுப்பாடு இல்லாமலாகும். இப்படி குலக்ஷயம் நேரிடும்.

ஸம்கரோ நரகாயைவ குலக்னானாம் குலஸ்யச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த பிண்டோதகக்ரியா:

ஸ்லோகம் 42: கேளுங்கள்

ஸாரம்:

ஜாதிக்கலகம் முற்றிக் குடும்பங்களைக் குலைப்பவர்களுக்கு நரகம் கிடைக்கும், அவர்கள் மூதாதையர்கள் தங்களுக்குப் பிண்டம் வைக்க வாரிசுகள் இல்லாததால் தங்கள் நிலையிலிருந்து விழுந்துவிடுவார்கள்.

விளக்கம்:

அர்ஜுனன் மீண்டும் தன் வாதத்தைத் தொடர்கிறான். ஜாதிக்கலகம் ஏற்பட்டால், சமுதாயத்தில் குழப்பம் நிகழும். அந்தக் குழப்பத்தின் விளைவாகக் குடும்பங்கள் நாசமாகும். அப்படிக் குடும்பங்களைக் குலைப்பவர்களுக்கு நரகம் லபிக்கும், அவர்கள் மூதாதையர்கள் தங்கள் குடும்பாங்களின் வாரிசுகள் கலகத்தில் நாசமாவதால் தங்களூக்குக் கிடைக்கவேண்டிய எள்ளும் தண்ணீரும் கிடைக்காமல் தவிப்பார்கள். நம் ஹிந்து தர்ம விச்வாஸப்படி இறந்தோர்கள் மனதும் புத்தியும் உடலிலிருந்து வேறுபட்டு சொர்க்கம் அல்லது நரக லோகங்களில் இருந்துகொண்டு தங்கள் வாரிசுகள் தங்களுக்கு அளிக்கும் ச்ராத்த பிண்டங்களையும் இறைக்கும் நீரையும் சாப்பிட ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்களுக்கு அது கிடைக்காமல் அவர்கள் மிக சிரமப்படுவார்கள் என்ற நம் விச்வாஸத்தைப் பற்றி விரிவாகத் தந்தூள்ளார்கள் இங்கு. இதைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லையானால் ஏளனத்திற்கு இடம் தரும்.

நம் பெற்றோர்கள் நம்மை வளர்க்கப் பாடுபட்டு நமக்கு நம் தர்ம சிந்தனையைப் புகட்டி, குல தர்மம், நியதி, கூட்டுறவு போன்ற தார்மிக வழிகளீல் செல்ல நம்மை நயித்திருந்தார்கள். அவர்கள் இறந்த பிறகும் அவர்கள் ஆவி நம் முன்னேற்றத்தையும் நாம் நயிக்கும் ஜீவித முறயையும் மேல் லொகத்திலிருந்து பர்த்து சந்தோஷப்படுவார்கள். அவர்கள் கற்றுத்தந்த குலதர்மத்தை நாம் போறறி அதன்படி நடக்கவில்லையேல் அவர்கள் வருத்தப்படுவார்கள். அப்படித் தந்த குலதர்மப்படி அவர்களை நினைந்து இன்றும் நாம் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு அமைந்தது இந்த ச்ராத்தம் எனப்படும் கிரியை. இதன் பொருளைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கற்றுத்தந்த தர்ம வழியில் நாம் செல்கிறோமா என்று தெரிந்துகொள்ளவே இந்தக் கிரியைகள் உள்ளன. இறந்துவிட்டால் பெற்றோரை மறந்துவிடக் கூடாது. அவர்கள் தந்த வழிகளில் சென்று குல தர்மத்தை, குல ஆசாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் மிகச் சிரமப்பட்டு அவ்ர்கள் தர்ம வழியில் வாழ்க்ககை ந்டத்தி நம்மையும் அவ்வழி செல்லக் கற்றுக்கொடுத்தார்கள். அதை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மதபரமாக இந்த நியதியைப் பெரியோர்கள் வைத்துள்ளார்கள். அதை நாம் அனுசரிக்க வேண்டும் என்பதற்காக இந்த குலாசாரம், குலதர்மம் என்ற நியதியைத் தந்துள்ளார்கள். இப்படி குலக்ஷயமாகிவிட்டால் ஸ்த்ரீகள் குடும்ப பாரம் மிகுந்து குலதர்மத்தைக் காக்க இயலாமல் போவதால் ஜாதிபேதக் கலகம் முற்றி, குடும்பங்கள் தங்கள் தர்மத்தைக் காக்க இயலாமல் போய்விடும் எனப் பொருள். அப்படியாகும்போது, பெரியோர்களுக்கு நாம் செய்யவேண்டிய பிண்டப்ரதானம் போன்ற ஆசாரங்கள் தெய்வ விச்வாஸம் தர்மசிந்தனை என்பன நம்மை விட்டு அகன்றுவிடும். அதை வலியுறுத்தவே இந்த ஸ்லோகம் அமைந்திருக்கிறது.

தோஷைரேதை: குலக்னானாம் வர்ணஸம்கர காரக:
உத்ஸாத்யந்தே ஜாதி தர்மா: குலதர்மாச்ச சாச்வதா:

ஸ்லோகம் 43: கேளுங்கள்

ஸாரம்:

குடும்ப நாசம் இழைப்பவர்களின் செயலால் ஜாதிக்கலப்பு ஏற்ப்படும், அப்படி ஜாதிக்கலப்பு ஏற்பட்டால் தொன்றுதொட்டு நடந்துவரும் குல ஆசாரங்களும் குலதர்மங்களும் ந்லிந்து போகும்.

விளக்கம்:

ஒரு யுத்த்திற்குப் பிறகு குடும்பங்க்ளும் சமுதாயங்களும் எப்படி நிலை குலைந்துவிடும், எங்ஙனம் குடும்பாங்கங்களின் அழிவு ஒரு குடும்பத்தை, ஒரு சமுதாயத்தை நிலைகுலயச் செய்யும் என்பது நாம் கண்டறிந்ததே. குலதர்மம், குல ஆசாரம் என்பதை வேதாந்தபூர்வமாக நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு குலத்தின் தர்ம சிந்தனைகள் எப்படிச் சீரழிந்துபோகும் எனபதை நாம் அறிந்ததே. அதே கருத்தை இங்கு அர்ஜுனன் வலியுறுத்துகிறான். நேரடியாகத் தெரியும் இந்த உண்மை நிலையை வலியுறுத்தினால் ஒருகால் கிருஷ்ணன் சம்மதம் தெரிவிப்பானோ என்ற நப்பாசை அர்ஜுனனுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அதுதான் அவன் திரும்பத் திரும்ப குலநாசம், குலதர்மம், குலாசாரம் என்பதை வலியுறுத்துகிறான். ஆனாலும் அதர்மத்தை ஒழிப்பதில் இதுபோல் சில இடையூறுகள் இருப்பது ஸஹஜம். அதைப் பொருட்படுத்தாது தம் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தத்துவத்தை அர்ஜுனன் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இப்படி அர்ஜுனன் வாதிப்பதிலிருந்து அவன் மனம் எவ்வளவு தூரம் விசாரத்தால் நிலைகுலைந்திருக்கிறது எனத் தெரிகிறது.

உத்ஸன்ன குலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்தன
நரகேSநியதம் வாஸோ பவதீத்யனு சுச்ரும

ஸ்லோகம் 44: கேளுங்கள்

ஸாரம்:

யாதொருவருடைய குடும்பத்தில் குலாசாரம் நசித்துவிட்டதோ அந்தக் குடும்பத்தலைவர்கள், ஓ ஜனார்த்தனா! நரகத்தில் அளவிட முடியாத அளவு பல வருடங்கள் வசிப்பார்கள் எனக் கேட்ட்துண்டு.

விளக்கம்:

கிருஷ்ணனின் மௌனம் அர்ஜுனனைத் தாக்கியது. வாதத்தில் தோற்றதுபோல் ஆகிவிட்ட அர்ஜுனன் தன் வாதத்தைத் தொடர்கிறான். வாக்யார்த்தத்தை மட்டும் பாராமல் இந்த ஸ்லோகத்திலுள்ள நுட்பமான கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு சமுதாயம் அதன் ராஜ்யத் தலைவர்கள் கையில் உள்ளது. அவர்கள் தங்கள் சுய நலனுக்காகப் பல நியதிகளையும் கொணரும்போது, அதை ஏற்காத ஜனங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கலகம் செய்வார்கள். இதில் சுயநலவாதிகள் செய்யும் காரியத்தினால் வதைக்கப்பட்டு ஜனங்கள் ராஜ்யத்திற்கு எதிராகக் கொதித்து எழும்போது பல உயிர் நாசம், தனநாசம் முத்லியவை ஏற்படக்கூடும். அதனால் பல குடும்பங்கள் தவிக்க நேரிடும். குடும்பங்கள் குலையும்போது, குல தர்மத்தைக் கடைப்பிடிக்க யாரும் முன்வர மாட்டர்கள். அப்படிக் குலாசாரம் நலியும்போது, குடும்பங்கள் சீரழியும். இந்த ஸ்லோகத்தால் எழுத்தாளர் மிக அழகாக, எப்படிக் குலாசாரம் குலையும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். இப்படிக் குலாசாரம் ந்லியும்போது குடும்பத் தலைவர்கள் குலதர்மம் க்ஷயிக்கக் காரணமாவார்கள். அதனால் வரும் விளைவுதான் குலாசார நலிவு. இதைத்தான் நரகவாஸம் எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர்.

சில முற்போக்கானவர்கள், மரணசேஷம்தானே நரகம் கிடைக்கும். அதை அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது என் வாழ்வில் வளமுண்டாகுமானால் ஏன் நான் அதை அனுபவிக்கக்கூடாது? விளைவைப் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என வாதிப்பார்கள். அவர்களுக்காகத்தான் மேல் சொன்ன விளக்கம். அதாவது மரணத்திற்கு பிறகு நரகம் என இல்லை. அந்த நரக வேதனை இந்த வாழ்விலேயே கிடைக்கும். குலதர்மம் குலைந்தால் உடனே சமுதாயம் நாசமாகும். அதனால் ஜனங்கள் எல்லோரும் பீடிக்கப்பட்டுத் துன்புறுவார்கள் என்ற உண்மைத் தத்துவத்தை இங்கு நாம் உணர வேண்டும். இப்படி நேரடியாகச் சொல்லாமல் ந்ரகலோகம் கிடைக்கும் என்று ஸம்க்ரஹமாகக் கூறியிருக்கிறார் எழுத்தாளர். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: “எக்காரணத்தாலும் நாம் நம் குலாசாரத்தை, குலதர்மத்தை விடக் கூடாது. அப்படி விட்டுவிட்டால் இந்த ஜென்மத்திலேயே நரக வேதனைப் படும்படியாகும்” என்பதே..

அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவஸிதா:வயம்
யத்ராஜ்ய ஸுகலோபேன ஹந்தும் ஸ்வஜனம் உத்யதா:

ஸ்லோகம் 45: கேளுங்கள்

ஸாரம்:

அஹோ! நாம் மஹாபாபம் செய்யத் துணிந்துவிட்டோம், ராஜ்யசுகத்திற்காக நம் உற்றார் உறவினர்களையே வதிக்கத் துணிந்துவிட்டோம்.

விளக்கம்:

புத்தி பேதலித்து, மனோபலம் க்ஷயித்து, தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் அர்ஜுனனின் சராசரி மனிதனின் நிலை தெள்ள தெளியத் தெரிகிறது. தன் வீரத்தை மறந்து, தன் தர்மத்தை யோஜியாமல் பேடித்தனத்திற்கு வசப்பட்டு உழலும் ஒரு மனிதனின் அவல நிலையில் இருக்கிறான் அர்ஜுனன். பந்தபாசத்தில் கட்டுண்டு அதைர்யம் ஆட்கொண்டு தவிக்கும் அர்ஜுனன் தன் வாதத்திற்குச் சாதகமாக தயை என்ற போர்வையை அணிந்துகொண்டு வருத்தப்படுவது விள்ங்குகிறது. தன் வீரத்தில் தன்னம்பிக்கை இருந்தால் வரும் விபத்தை எதிர்கொள்ளும் வீரச்செயலில் ஈடுபட்டு, தான் எந்த நிலையிலும் அதன் தலைவனாகத் திகழ்வேன் என்ற திட நிச்சயம் இல்லாமல் இந்த அவல நிலையால் தாக்கப்பட்டவனைப்போல் பரிதவிக்கிறான் அர்ஜுனன். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்தாவது: “எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு அதன் விரோதமான விளைவைத் தவிர்க்கும் ஆற்றலுள்ளவர்களாகத் திகழ வேண்டுமே தவிர அந்த நிலை நம்மை ஆட்கொன்டு பரிதவிக்க இடம் தரக்கூடாது” என்பதுதான்.

யதி மாம் அப்ரதீகாரம் அசஸ்த்ரம் சஸ்த்ர பாணய:
தார்த்ரராஷ்ட்ரா ரணே ஹன்யு: தன்மே க்ஷேமதரம் பவேத்

ஸ்லோகம் 46: கேளுங்கள்

ஸாரம்:

கையில ஆயுதங்களுடன் த்ருதராஷ்டிரரின் பிள்ளைகள், எதிப்புத் தெரிவிக்காமலும் கையில் ஆயுதம் ஏந்தாமலும் இருக்கும் என்னை இந்த யுத்தத்தில் கொல்வார்களேயானால் அதுதான் எனக்கு க்ஷேமத்தைத் தரக்கூடியது.

விளக்கம்:

இப்படி அர்த்தமில்லாமல் வாதாடின அர்ஜுனன் கடைசியில் தன் திடமான அபிப்பிராயத்தை இவ்வண்ணம் தெளிவுபடுத்துகிறான். இவ்வளவும் வாதாடிய பிறகு தான் யுத்தத்திலிருந்து பின்வாங்க ஒரு வாதத்தைக் கையாளுகிறான். ஆயுதபாணிகளாக உள்ள த்ருதராஷ்டிரரின் புத்திரர்கள், அவர்களை எதிர்க்காமலும் ஆயுதம் தரிக்காமலும் நான் இருந்து அவர்கள் என்னை வதிப்பார்களேயானால் அது எனக்கு க்ஷேமத்தை தரும் என்று முடிக்கிறான். என்னே அவன் தயை! க்ஷேமம் என்ற வார்த்தை உட்ல் சம்பந்தப்பட்ட, பொருளாதார சம்பந்தப்பட்ட சுகத்தைக் குறிக்கிறது. மோக்ஷம் என்பது ஆத்மீக சுகத்தை குறிக்கிறது. அர்ஜுனன் தன் வாதத்தில் ஆத்மீகக் காரணங்களை எடுத்துக் காட்டினாலும் இங்கு அவன் சொன்ன சொல்லில் லௌகீக சுகத்தை அடைய வழி காண்பது தெரிகிறது. ஏனென்றால் யுத்தத்தில் தனக்குள்ள பேடித்தனத்தையும் தன்னம்பிக்கை இல்லாமையையும் மறைக்கும் விதம் லௌகீக க்ஷேமத்திர்க்கு வழி வகுக்கும் விதம் வாதித்துவந்தான் என்பது தெரிகிறது. ஆத்மீகக் காரணங்களை காட்டினாலும் அவை வ்யாஜமே தவிர அவன் மன நிலை இந்த ஸ்லோகத்தில் தெளிவாகிறது. யுத்தத்திற்கு தைர்யத்துடன ஆயத்தமாக நிற்கும் மிக பெரிய கௌரவ ஸேனையைப் பார்வையிட்ட அர்ஜுனன் யுத்ததில் தனக்கு வெற்றி கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஐயத்திற்குப் பாத்திரமாகி மனோ தைர்யம் இழ்ந்து தவிக்கும் நிலையை ந்ன்றாகச் சித்திரித்திருக்கிறார் எழுத்தாளர். இப்படி ஒரு வழியாக அர்ஜுனன் தன் வாதத்தை முடித்துக் கொள்கிறான்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்தானது: “சந்தேஹம் மனோபலம் இழக்க ஹேதுவாகும், அப்படி மனோபலம் இழந்தால் நம் தர்மம் என்ன எனத் தெரியாது, அத்துடன் நம் வீரமும் தைர்யமும் குலைந்துவிடும், அதனால் வாழ்க்கைப் போராட்டத்தில் நம்மால் ஈடுபட இயலாது” என்பதே.

ஸஞ்சய உவாசா

ஏவம் உக்த்வார்ஜுன: ஸம்க்யே ரதோபஸ்த உபாவிசத்
விஸ்ருஜ்ய ஸசரம் சாபம் சோக ஸம்விக்ன மானஸ:

ஸ்லோகம் 47: கேளுங்கள்

ஸாரம்:

ஸஞ்சயன் இவ்வண்ணம் கூறினார்: இவ்வண்ணம் உரை செய்த அர்ஜுனன், யுத்தக் களத்தின் மத்தியிலுள்ள தன் ரதத்தில், காண்டீபத்தையும் அம்பையும் துறந்து ரதத்தின் பின் ஆஸனத்தில் மனமுடைந்து (துக்க ஸம்மூடனாக) அமர்ந்தான்.

விளக்கம்:

இதுவரை யுத்தக் களத்தில் நடக்கும் விஷயங்களை த்ருதராஷ்டிருக்கு எடுத்துச் சொல்லிவந்த ஸ்ஞ்சயன் அவரிடம் அர்ஜுனன் மனமுடைந்து அதைர்யத்துடன் யுத்தக் கள்த்தில் அம்பையும் சாபத்தையும் எறிந்து ரதத்தின் ஆஸனத்தில் அமர்ந்தான் எனக் கூறி முடித்தார். இதுவரை அர்ஜுன விஷாத யோகம் என்ற தலைப்பில் அர்ஜுனனின் நிலையையும் அவன் அர்த்தமற்ற வாதத்தையும் கூறினார் எழுத்தாளர். இனி பகவான் கிருஷ்ணனின் வாதங்களையும் உபதேசத்தையும் அடுத்த அத்தியாயங்களில் பார்ப்போமாக.

ஓம் தத்ஸத்

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸூ
ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே
ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே
அர்ஜுன விஷாதொ நாம: ப்ரதமோத்யாய:

இறுதி ஸ்லோகம்: கேளுங்கள்

ஸாரம்:

இத்துடன் ஸ்ரீ பகவத்கீதா என்ற உபநிஷத்தின், ப்ரஹ்ம வித்யா என்ற பிரிவில், யோக சாஸ்திரம் என்ற உப பிரிவிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த வாதத்தின் “அர்ஜுன விஷாத யோகம்” என்ற முதல் அத்தியாயம முடிவுறுகிறது. இனி அடுத்த இதழ் முதல் இரண்டாம் அத்தியாயம் துவங்குகிறது. பின்வரும் அத்தியாயங்கள் ஸ்ரீகிருஷ்ணனின் உபதேசங்கள ஆகும்.

ஹரி ஓம்

தொடரும்...

அத்தியாயம் 1, பாகம் 5

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

YOUR FEEDBACK FOR THIS EPISODE OF GEETHA
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com