Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத் கீதா சாரம்
அசலம்


கீதா தியானம்

ஏதொரு காரியத்தில் ஈடுபடும்போதும் முதலில் நம் மனதை அதில் நிலைநிறுத்த வேண்டும். இல்லையேல் நம் கவனம் அந்தக் காரியத்தில் செல்லாது. லோக சம்பந்தப்பட்ட காரியமானாலும் சரி, ஆத்மீக விசாரமானாலும் சரி, முதலில் இறை வணக்கம் சைய்வது முறை. உலக சம்பந்தப்பட்ட காரியங்களுக்கே இந்த நியதியானால் தெய்வ காரியங்களுக்குக் கேட்க வேண்டுமோ? உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கி அலைபாயும் மனதை ஓர் நிலைக்குக் கொண்டுவந்து நாம் செய்யப்போகும் காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் காரியம் பலிதமாகும். மனம் நிலயிலில்லாமால் ஒரு காரியமும் செய்ய இயலாது. மனம் தான் முதல் தோழன். அதுதான் முதல் எதிரியும் கூட. ஆகையால் இந்த மனதை நம் வசம் கொண்டு வருவது மிக அவசியம். மனதை ஒரு நிலைப் படுத்த அதை ஒர் ஸத் விசாரத்தில் நிலையாக இருத்த வேண்டும். ஏனெனில் விசாரக்கோர்வை தான் மனம். விசாரத்தை நாடியே மனம் இயங்குகிறது.. விசாரமில்லையேல் மனமும் இல்லை. நீங்கள் பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிப்பதற்கு முன் பகவானை தியானம் செய்யும் பொருட்டு உங்களுக்குத் தெரிந்த நித்திய ஸ்லோகங்களில் சிலவற்றைச் சொல்வீர்களானால் நீங்கள் படிக்கும் புத்தக விஷயம் எளிதில் உங்களுக்கு விளங்கும். காரணம், நம்மை இறைவன் அருளுக்குப் பாத்திரமாகச் செய்யவேண்டும். நாம் செய்யப்போகும் காரியத்தில் கருத்தாக இருக்க இறைவனின் அருளும் குருநாதரின் க்ருபையும் வேண்டியது அவசியம்.

அதுபோல் இங்கு கீதை ஸாரத்தை நாம் உணர்வதற்காக இந்த இறை குரு வணக்க ஸ்லோகங்கள் தரப்பட்டுள்ளன. இதன் பிறகு வரும் ஸ்லோகங்கள் மூலமாகவே நமக்கு கீதை எங்கிருந்து, யாரால், எவருக்காக, எப்போது படைக்கப்பட்டது, அதன் விசேஷம் என்ன, அதில் தந்துள்ள தத்துவம் ஏது, அதனால் நமக்கு என்ன பயன் போன்ற விஷயங்கள் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. இதுவே கவியின் சாமர்த்தியம். கவிகள் தாம் சொல்லப் போகிற விஷயத்தைச் சுருக்கமாக முன்னதாகவே வெளியிடுவது வழக்கம். பின் வரும் ஸ்லோகங்களைக்கொண்டு கிரந்தகர்த்தா தாம் கையாளப் போகும் காரியத்தைப் பற்றியும் அதற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மிக அழகாகத் தந்துள்ளார். 9 தியான ஸ்லோகங்கள் தரப்பட்டுள்ளன. கீதையைப் படிப்பதற்கு முன்பு இந்த 9 தியான ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டியது மிக அவசியம். அப்போதுதான் நம் மனம் அதில் ஈடுபட்டு நம்மால் இந்த கீதோபதேச அம்ருதத்தைத் தடையில்லமல் பருக முடியும்.

ஓவ்வொரு ஸ்லோகத்தின் கீழும் தந்துள்ள பொறியில் ஸ்லோகத்தை கேட்கலாம்.

தியான ஸ்லோகங்கள்

பார்த்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம்
வ்யாஸேன க்ரதிதாம் புராணமுனினா மத்யே மஹாபாரதம்
அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்டா தசாத்யாயினீம்
அம்பத்வாம் அனுஸந்ததாமி பகவத் கீதே பவத்வேஷிணீம்

கேளுங்கள்

ஸாரம்:

பரம்பொருள் நாராயண பகவானால் நேரடியாக அர்ஜுனனுக்கு உபதேசமாக அளிக்கப்பட்டு ஆத்மபோதம் அளித்த, ஆதியில் ஸ்ரீவியாஸ முனியால் தொகுக்கப்பட்ட மஹாபாரதம் எனும் மஹாகாவ்யத்தின் மத்தியில் தரப்பட்டுள்ள ஹே பகவத்கீதே! அத்வைத ஸித்தாந்தமெனும் அம்ருதத்தைப் பதினெட்டு அத்தியாயங்களில் பொழிந்து, அழிவுறக்கூடிய இந்த ஸம்ஸாரம் எனும் உலகில் வந்து போகும் நிலையில்லா அனுபவங்களிலிருந்து எமைக் காக்கும் சக்தி படைத்த ஹே அம்பிகே! உன்னில் நான் நிரந்தரமாக தியானத்தை நிலைநிறுத்துகிறேன்.

விளக்கம்:

முதலில் வேதாந்த விஷயமாகிய இந்த கீதையைப் படிக்குமுன் அதன் மூல தேவதையான கீதையைப் பெண்பாலாக, அம்பாளாக நினைத்து அவள் அருளைப் பெறவேண்டியது அவசியம். இதன்மூலம் கிரந்தகர்த்தா இந்தக் காவியத்தின் சிறப்புகளையும், அதன் மூல காரணத்தையும், அதன் வடிவத்தையும், அதன் காரணகர்த்தாவைப் பற்றியும், யாரால், யாருக்கு, எங்கு, எப்பொழுது, எப்படி இது வழங்கப்பட்டது எனும் விஷயங்களைப் பற்றியும் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் உரைத்துள்ளார். அதே சமயம் இது ஒரு தியான ஸ்லோகமாகவும் அமைந்துள்ளது.

நமோஸ்துதே வ்யாஸ விசால புத்தே புல்லாரவிந்தாய தபத்ர நேத்ர:
யேன த்வயா பாரததைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப:

கேளுங்கள்

ஸாரம்:

விசாலமான புத்தியும், தாமரை இதழ்கள்போல அமைந்த தபசக்தியுடன் விளங்கும் கண்கள் படைத்தவரும், அறிவு என்ற விளக்கை ஏற்றி, அதற்கு பாரதம் எனும் தைலத்தால் ஒளிவிடச் செய்த ஹே வியாஸ மஹருஷே! உமக்கு எமது நமஸ்காரம்.

விளக்கம்:

முதலில் கிரந்தத்திற்கு தேவதா வணக்கம் செய்த பிறகு, கிரந்தகர்த்தாவுக்கு நம் கிருதார்த்தத்தை அறியப்படுத்த வேண்டும். இது கீதையை உருவாக்கி நமக்கு அளித்த ஸ்ரீ வியாஸ பகவானுக்கு நமது வணக்கத்தைத் தெரியப்படுத்தும் ஸ்லோகம். குரு கிருபை இல்லையேல் நமக்கு அறிவு வளராது. குருவருள் மிக அவசியம். கல்வி கற்பதற்கு முதலில் குருதான் நமக்கு முதற்கண். ஆகையால் நமக்கு இந்த விலை மதிக்க இயலாத அம்ருதத்தைத் தந்த குருவுக்கு வணக்கம் செலுத்தும் வண்ணம் இது அமைந்துள்ளது.

ப்ரபன்ன பாரிஜாதாய தொத்ர வேத்ரைகபாணயே
ஞான முத்ராய கிருஷ்ணாய கீதாம்ருத துஹே நம:

கேளுங்கள்

ஸாரம்:

பக்தர்களுக்குப் பாரிஜாத விருக்ஷமாக விளங்கக் கூடியவரும், தன் கையில் வைத்துள்ள கோலால் மாடுகளை வீடு நோக்கிச் செலுத்துபவரும், கையால் ஞான முக்தியைக் காண்பிப்பவரும் கீதை எனும் அம்ருதத்தைக் கறந்தெடுத்தவரும் ஆகிய பரம்பொருள் ஸ்ரீ கிருஷ்ண பகவானே! உமக்கு எமது கோடி நமஸ்காரங்கள்.

விளக்கம்:

அடுத்ததாக இந்த விலை மதிப்பற்ற கீதோபதேசத்தை அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு நாம் உய்வதற்காக எல்லோருக்கும் உதவக்கூடிய, வாழ்வின் இரகசியம் அடங்கிய, வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்ற தத்துவத்தை, மிக எளிதாகவும், விரிவாகவும் எடுத்துக் கூறிய கீதாசாரியன் எனப்போற்றப்படும் ஸ்ரீ பரம்பொருள் கிருஷ்ண பகவானுக்கு நாம் வணக்கம் தெரிவிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் இந்த உபதேசம் இக்காலத்திலும் நம் எல்லோருக்கும் ஜாதி மத வித்தியாசமில்லாமல் எல்லா சமயத்திலும், வாழ்க்கை வாழ்வது எப்படி என்று தெள்ளத் தெளியத் தந்துள்ளது. கையிலுள்ள வழிகாட்டியாக அமைந்த சாட்டை நம் மனதிலோடும் எண்ணங்களாகிய கன்றுகளை அதனிடத்தில் போய்ச்சேர (எண்ணங்கள் மூலத்தில் போய் ஒடுங்க) உதவுகிறது. அதே சமயம் கையால் காண்பிக்கும் ஞான முத்திரை நமக்கு அருள் புரிவதாகக் காணப்படுகிறது. எவ்வளவு பொருத்தமாக வரையப்பட்ட சித்திரம்!

ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன:
பார்த்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹது

கேளுங்கள்

ஸாரம்:

உபநநிஷதுக்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துத் திரட்டி ஒரு பசுவாக அமைத்து, அர்ஜுனனை அதன் கன்றாகக் கருதி, அம்ருதமான கீதையைப் பாலாக அமைத்து, அதைக் கறப்பதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை வைத்து உலகிலுள்ள நாம் எல்லாம் உய்ய இந்த அம்ருதத்தை நாம் பருக வழிவகுத்தது மிக மஹத்தான காரியம்.

விளக்கம்:

இது எழுத்தாளரின் திறமயைக் காண்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எவ்வளவு கருத்துடன் கூடிய ஸ்லோகம்! இந்த ஸ்லோகத்தால் வியாசர் கீதையின் மஹிமையைத் தெள்ளத் தெளிய எடுத்துரைத்திருக்கிறார். இது நமக்காகவே தரப்பட்டுள்ள உபதேசம் என மிக உள்ளங்கை நெல்லிக் கனியாக அமைந்துள்ளது இந்த கீதோபதேச காவியம். ஒரு பொருளின் விலை மதிக்க முடியாத ஸாரத்தைத் தெளிவுபடுத்த நம் அறிவிற்குட்பட்ட விஷயங்களை வைத்தே விளக்க எண்ணி எழுத்தாளர் தந்துள்ள உபமானம் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. இதிலிருந்தே நமக்கு விளங்குவது என்ன? இந்த கீதை ஓர் அமரகாவ்யம். இதில் சகல வேத வேதாந்த உபநிஷத்தின் கருத்துக்கள் அத்தனையும் ஒன்றுகூடி அமைந்துள்ள காவியம் எனத் தெளிவாகிறது. நம்மால் வேதத்தைப் படிக்கவோ உணரவோ முடியாது. அதற்கு கிரந்தாக்ஷரம், ஸம்ஸ்க்ருதம் பாஷைகளில் ஞானம் வேண்டும். எத்தனை நாட்கள் படித்தாலும் முடிவு காண முடியாத அத்தனை பெரிய கிரந்தம் அது. வேதம், வேதாங்கம், வேதாந்தம், உபநிஷத், புராணம், வியாக்யானம் முதலிய கிரந்தங்கள் அதில் அடங்கியுள்ளன். ஒரு ஜீவ தசையில் அதைப் படித்து முடிக்க முடியாது. ஆனால் கீதை 18 அத்தியாங்களில் அந்த ஸாரங்களையெல்லாம் மிக எளிய பாஷையில் அடக்கியுள்ளது.

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கேளுங்கள்

ஸாரம்:

வஸுதேவரின் புதல்வனும், கம்ஸன், சாணூரன் முதல்வரை ஒழித்தவனும், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுத்தவனும், ஜெகத்திற்கே குருவாக விளங்கக்கூடியவனும் ஆகிய ஸ்ரீ கிருஷ்ணனை வணங்குகிறேன்.

விளக்கம்:

கீதாசார்யனின் பெருமையைக் காண்பிக்கும் ஸ்லோகம். கீதையில் நமக்கு நம்பிக்கை வர இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. ஒரு உபதேசகர்த்தா எப்படித் திறமைசாலியாக இருக்க வேண்டும், அவர் உபதேசம் செல்லுபடியாகுமா எனப் பார்ப்பதற்கும், அவர் குணாதிசயங்களை உணர்த்துவதற்குமே இது அமைந்துள்ளது. கீதோபதேசம் ஸ்ரீ கிருஷ்ணனை உலக குருவாக உயர்த்திக் காண்பிக்கிறது. எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் எல்லா தேசத்திலும் ஒன்றுபோல் எல்லாராலும் கடைப்பிடிக்க உதவும் ஸனாதன தருமத்தை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்த ஸ்ரீ கிருஷ்ணனை உலக குரு என்றல்லாமல் என்னவென்று அழைப்பது? மிகப் பொருத்தமான விளக்கம்.

பீஷ்ம த்ரோணதடா ஜயத்ருதஜெலா காந்தார நீலோல்பலா
சல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ கர்ணேன வேலாகுலா
அச்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனா வர்த்தினீ
ஸோத்தீர்ணாகலு பாண்டவைர் ரணந்தி கைவர்த்தக: கேசவ:

கேளுங்கள்

ஸாரம்:

பீஷ்மர், த்ரோணர் முதலிய மஹாகுருக்கள் இரண்டு நதிக்கரைகளாகவும், ஜயத்ரதன் அதில் ஓடும் ஜலமாகவும், காந்தார தேசத்து ராஜா நீலோற்பலம் எனும் பூவாகவும், சல்லியன் திமிங்கலமாகவும், க்ருபாசார்யாள் ஜலத்தின் ஒழுக்காகவும், கர்ணன் (அலையைத் தடுத்து நிறுத்தும்) தடுப்பாகவும், அச்வத்தாமன், விகர்ணன் முதலியோர் ராக்ஷஸ முதலைகளாகவும், துர்யோதனன் நீரிலுள்ள சுழலாகவும் அமைந்துள்ள யுத்த நதியைப் பாண்டவார்கள் மிக எளிதாக, கிருஷ்ணன் எனும் படகோட்டியின் உதவியால் கடந்தார்கள்.

விளக்கம்:

இந்த ஸ்லோகம் பாரத யுத்த வேதியை ஓர் மஹா நதிபோல் உருவம் அமைத்து, அதில் கௌரவ சேனையைச் சார்ந்தவர்களின் மஹத்வத்தை எடுத்துக்காட்டும் விதம் வர்ணனை அமைந்துள்ளது. இது கவியின் மனப்போக்கை எடுத்துக் காட்டுவதாக அமந்துள்ளது. இதன்மூலம் ஸ்மரிக்க முடியாத ஓர் யுத்த களத்தின் வர்ணனையை மிகச் சுலபமாக அறிய ஒரு சித்திரம் போல் தந்துள்ளார். இதற்கு விளக்கம் தேவையில்லை.

பாராசர்ய வச ஸரோஜம்மலம் கீதார்த்த கந்தோத்கடம்
நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம்
லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ பேபீயமானம் முதா
பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸின ச்ரேயஸே.

கேளுங்கள்

ஸாரம்:

பராசர முனிவரின் புத்திரனாகிய வ்யாஸ பகவானின் வாயிலிருந்து வரும் உபதேசமாகிய ஜலப்ரவாஹத்திலிருந்து உருவாகிய மஹாபாரதம் எனும் தாமரை, கீதையின் மஹத்வமாகிய நறுமணத்தைச் சுமந்து, அதில் தந்துள்ள வ்யாக்யானங்களை அதன் உள்ளே உள்ள இதழ்களாகக் கொண்டு, ஹரியின் கதையால் பூரணமாக மலர்ந்து, அதன் இனிப்பை மனமுவந்து பருகும் ஆறு கால்களுடைய தேனீக்களான உலகிலுள்ள ஸாத்வீக மக்கள், தங்கள் உள்ளங்களில் உள்ள மலினத்தை அகற்றி நற்பணியில் ஈடுபட உதவட்டும்.

விளக்கம்:

மஹாபாரத காவ்யத்தை ஒரு தாமரையாக உருவமைத்து, வியாஸ பகவானின் வாயிலிருந்து வரும் உபதேசத்தை ஜலப்ரவாஹமாக நினைத்து, கீதையிலுள்ள தத்வார்த்தங்களையும், அதிலுள்ள கதாஸாரத்தையும் தாமரைப் பூவின் இதழ்களாகவும் அமைத்து, அதிலிருந்து வரும் நறுமணத்தை கீதையின் மஹத்வமாகக் கொண்டு அதைக் கேட்கும் மனிதர்களுக்கு வண்டுகளாக உருத் தந்து இந்த அம்ருதத்தைப் பருகி, மனதிலுள்ள மலினத்தைக் களைந்து உத்தம பதவியை அடைய உதவுவதாக மிக உருக்கமாகப் படம் வரைத்து காட்டியுள்ளார். கவியின் சதுர்யமான இந்த சித்திரப் படைப்பு நமக்கு மிக எளிதாக அறிய உதவுவதாக அமைந்துள்ளது. ஒரே ஸ்லோகத்தில் முழுக் கருத்தையும் தந்துள்ளார்.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
ய்த் க்ருபாதம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

கேளுங்கள்

ஸாரம்:

யாதொரு பரமாந்னதமாகிய மாதவனின் க்ருபை, ஊமயைப் பேசவைக்கவும், முடவனை மலயேற வைக்கவும் செய்ய வல்லதோ அந்த மதவனை நான் வணங்குகிறேன்.

விளக்கம்:

பகவான் மாதவனின் (கிருஷ்ண பகவான்) நித்திய நிரந்தர ஸத்திய ஸ்வரூப மஹிமையையும், அவன் ஏகாந்த பரமானந்த நிலையயும் எடுத்துக்காட்டுகிறது. கவி இங்கு நமக்கு பகவத் ஸ்வரூபத்தை வர்ணிக்கும் அழகே அழகு. இது அத்வைத ஸவ்ரூபத்தின் நிலையை எடுத்துரைக்கிறது. ஞானிகள் பகவானை நிற்குணனாகப் பார்க்கிறார்கள் எனத் தெளிவுபடுத்துகிறது.

யம்ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவைஸ்தவை:
வேதை: ஸாங்கபத க்ரமோபநிஷதை: காயந்தியம் ஸாமகா:
த்யானாவஸ்தித தத்கதேன மனஸா பச்யந்தியம் யோகினோ
யஸ்யாந்தம் நவிது: ஸுராஸுரகணா: தேவாய துப்யம் நம:

கேளுங்கள்

ஸாரம்:

யாதொருவனை ப்ரஹ்மா, வருணன், இந்திரன், ருத்திரன், வாயு முதலிய தேவதைகள் தங்கள் திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ, யாரைக் குறித்து வேதம், உபநிஷதம் முதலிய கிரந்தங்களின் தத்துவங்களை ஸாமகானத்தால் ஸத்துக்கள் க்ரமமாகவும் சரிவரவும் துதிக்கிறார்களோ, நியம நிஷ்டைகளால் மனதை அடக்கி யாதொருவனை முநிவர்கள் தியானம் செய்து அறிந்து கொள்கிறார்களோ, யாருடைய விஸ்தீரண அளவு தேவர்கட்கும் அஸுரர்கட்கும் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லயோ அந்தப் பரம்பொருளுக்கு என் நமஸ்கரரங்கள்.

விளக்கம்:

கடைசியில், பரம்பொருளை விவரிக்கும் பாணியே மிக அலாதியானது. பரம்பொருளுக்கு உருவம் கிடையாது, பேர் கிடையாது, எல்லை இல்லாததும், எங்கும் நிறைந்திருப்பதும், நித்தியமானதும், அழிவில்லாததும், ஸத்திய ஸ்வரூபமானதும், பரமானந்த நிலையிலுள்ளதும், ஆதியோ அந்தமோ இல்லாததும், மனிதரின் புறக் கண்களுக்குப் புலப்படாததும், ஏகமானதும் ஆகிய அந்தப் பரம்பொருளின் தன்மயை இங்கு எடுத்துக்காடடுகிறார் வியாஸர். சகல தேவதைகளாலும் துதிக்கப்பட்டு, வேத, வேதாந்த உபநிஷத தத்வமாக விளங்குவதும், முனிவர்கள் தியான நிஷ்டையில் உணரக்கூடியதுமான அந்தப் பரம்பொருளின் தன்மையை மிகச் சுலபமாக விளக்கியுள்ளார். முடிவில் பகவானின் ஸ்வரூப குணங்களை வர்ணிக்கும் இந்த ஸ்லோகம் கவியின் சாதுர்யத்திற்கும் அவர் திறமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த ஸ்லோகம் கீதா ஸாரத்தின் வடிவமாகவே திகழ்கிறது. காரணம் நாம் இனிப் பார்க்கப்போகும் கீதாஸாரத்தின் முழுத் தத்துவம் இந்த ஸ்லோகத்தால் விளக்கப்படுகிறது. இதுதான் ஸ்ங்க்ரஹமாக கீதை சொல்லும் தத்துவம்.

பின் குறிப்பு

இந்த 9 தியான ஸ்லோகங்கள் ஸ்ரீமதுஸூதனஸரஸ்வதி என்பவர் இயற்றியதாகக் கருதப்படுகிறது. கீதை படிப்பதற்கு முன் இந்த 9 ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டியது மிக அவ்சியம். ஏனெனில் இவை நம் மனதை ஒரு நிலையில் நிறுத்த உதவுகின்றன. தவிர, கீதையின் முழு ஸாரமும் இதிலுள்ளதால் நம்மைப் பின் வரும் கருத்துக்களை கிரஹிக்க உதவுவதாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த 9 ஸ்லோகங்களை உருப்போட்டு தினமும் பாடப் புஸ்தகங்களைப் படிக்குமுன் சொன்னால், படிக்கப்போகும் விஷயம் மிக எளிதாகப் புரிய உதவியாக இருக்கும்..

கீழே தந்துள்ள ஸ்லோகத்தையும் உருப்போட்டு, பாடப் புஸதகங்களைப் படிப்பதற்கு முன் சொன்னீர்களானால், உங்கள் படிப்பு வளமாக அமையும்:

அஸதோமா ஸத்கமய,
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஹரி: ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

கேளுங்கள்

மாயாவாழ்விலிருந்து விடுபட்டு ஸத்திய நிலையை எய்தி, அஞ்ஞானத்திலிருந்து ஞானநிலை பெற்று, அழிவிலிருந்து அழிவில்லா நிலை அடைந்து (நாம்) சாந்தி பெறுவோமாக எனப் பொருள். இப்பொழுது நாம் மாயையால் சுற்றுண்டு, நம் சத்திய வடிவு தெரியாமல், அறிவில்லாமையில் உழன்று ஜெனன மரணச் சுழலில் சிக்கி வாழ்கிறோம். இதிலிருந்து விடுபட இந்த ஸ்லோகத்தை உருப்போட்டால், சத்திய நிலையை அடைந்து, ஞானம் பெற்று, அழிவில்லா ஆத்மானுபூதியில் லயித்து சாந்தி பேருவோமாக. மூன்று தரம் சாந்தி சொல்வதின் நோக்கம்: நாம் வாழ்வது உணர்வு, உறக்கம், கனவு என்ற மூன்று நிலைகள் மாறி மாறி வரும் ஸ்திதியில் உள்ளதால், எப்பொழுதும் அமைதியான வாழ்வு பெற இந்த மூன்று நிலைகளிலும் சாந்தமாகத் திகழ வேண்டும் என்ற கருத்தில் அமைந்துள்ளது.

இத்துடன் தியானம் பூர்த்தியாகிறது. இப்பொழுது நம் மனம் தெளிவாகவும், நளினமாகவும், சுத்தமாகவும ஆகிவிட்டதை உணர முடியும். இப்படி நிர்மலமான மனத்தில் தான் நம்மால் இனி வரப்போகும் கீதாம்ருத பானத்தைப் பருக முடியும். தியான ஸ்லோகங்கள் நம்மை ஞானத்தை கிரஹிக்க உதவுவதாக உள்ளன.

அடுத்த இதழ் முதல் கீதாஸாரமெனும் அம்ருதத்தை பானம் செய்வோமாக.

ஹரி ஓம்

தொடரும்...

கருத்துரை அத்தியாயம் 1

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button