தாயென்று கும்பிடடி பாப்பா
- ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோவில்
அன்பர்களுக்கு வேண்டுகோள்
திருப்பணி: பாலாலயம் படங்கள்
நாங்கள் யாராவது ஊருக்குப் போனால் தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின் வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம் ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். . மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல் கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம். அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய் ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?
தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார். அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம் கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க. இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள் அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்தோம். .
அதுக்கு அப்புறம் இந்தப் படத்தில் மூலவருக்கு முன்னே இருக்கும் உற்சவ விக்கிரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டது. பெருமாளுக்கு அரைவேலி நிலம் இருந்தும் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டுட்டு இருந்தார். இப்போ அவரோட உற்சவரையே தூக்கிண்டு போயிட்டாங்க! நிலத்தில் விளைந்ததை எல்லாம் இந்தக் கோயிலின் உள்ளேயே வைத்துக் கொண்டு பெருமாளுக்கு ஒரு பிடி அரிசி கூடக் கொடுக்காமல் சாப்பிட்டிருக்காங்க. எப்படி மனசு வந்தது? இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் பிறக்கும்?? மனசு கொதிச்சுப் போய் எழுதி இருக்கேன். இதுக்கு என்ன நீதி? எப்போ கிடைக்கும்? கண்ணீருடனே எழுதினேன்.
அதன் பின்னர் என் கணவரும் இந்தச் சிலைக்கொள்ளைகளை விசாரிக்கும் திருமதி திலகவதியை நேரே அவருடைய அலுவலகத்திற்குச் சென்று எங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தோம். அதற்கு என் சித்தப்பா திரு அசோகமித்திரன் அவர்கள் திலகவதியிடம் எங்களுக்காக ஒரு அறிமுகம் கொடுத்தார். திலகவதி அவர்களும் ஏற்கெனவே இது பற்றி விசாரித்து வருவதாகவும், நடவடிக்கையை துரிதப் படுத்தும்படி ஆணை கொடுப்பதாகவும் சொல்லி, எங்கள் முன்னாலேயே அதற்கான உத்தரவுகளையும் கொடுத்தார்.
பின்னர் சென்ற வருடம் தீபாவளிக்குப் பின்னர் சிலைகள் கிடைத்துவிட்டதாய்த் தகவல் வந்தது. ஊரின் முக்கியஸ்தர்கள் போய்ப் பார்த்து அடையாளம் காட்டி இருக்கின்றனர். ஆனால் வருத்தத்துக்கு உரிய செய்தி என்னவென்றால் பெருமாளின் கை உடைக்கப் பட்டு இருக்கிறது. தற்சமயம் சிலைகள் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது. இந்தச் சிலைத் திருட்டுக்குப் பின்னர் ஊரிலும் ஒரு உத்வேகம் வந்து சென்ற வருடம் கார்த்திகை மாதம், (நவம்பர்) திருப்பணி வேலையை ஆரம்பித்து வைத்தனர். தற்சமயம் திருப்பணி நடைபெற்று வருகிறது. மேலே காணப்படும் படங்கள் திருப்பணிக்கு முன்னர் எடுத்தவை. தற்சமயம் கோபுரத்தைப் புதுசாக் கட்டச் சொல்லி இருக்கிறோம். கட்டி சுதை வேலை முடிந்துவிட்டது. தளம் போட்டாகி விட்டது. தரை போட்டுவிட்டுப் பின்னர் பெயிண்டிங் வேலையும், மின் விளக்குகள் பொருத்தும் வேலையும் இருக்கிறது. தற்சமயம் மழை பெய்து வருவதால் பெயிண்டிங் வேலை கொஞ்சம் தாமதமாகி வருகிறது.
தற்போதைய நிலைமையை அடுத்த மாதம் செல்லும்போது படம் எடுத்து வரவேண்டும். அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||












