மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
அன்புச் செல்வங்களே,
புத்தாண்டு வந்து விட்டு இப்போது பொங்கல் திருநாள் வருகிறது. உங்கள் யாவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள். இந்தத் திருநாளைப் பற்றிப் பார்போமா? சூரியன் மகர ராசியில், அதாவது பூமத்திய ரேகையிலிருந்து வடக்குப் பக்கம் போக ஆரம்பிக்கும் முதல் நாள் நமது பொங்கல் திருநாள். சூரியன் இத்தகைய நிலையிலுள்ள காலத்தை சமஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள். மஹாபாரதப் போரில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் பாட்டனாரான திரு பீஷ்மர் துரியோதனின் பக்கம் இருந்தார். அவர் உடம்பில் சண்டையின் போது அர்ஜுனனின் அம்புகள் பாய்ந்ததால் கீழே விழுந்தார். அப்பொழுது தக்ஷிணாயண காலமாக இருந்தது, அதாவது சூரியன் கடக ரேகைக்கும் பூமத்திய ரேகைக்கும் இடையில் இருக்கும் காலம். பீஷ்மர் தன் உயிரை உத்தராயண காலத்தில் துறக்க எண்ணி அதுவரையில் தன் உடம்பில் தைத்த அம்புகளாலான முள் படுக்கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தார். பின் இந்த சங்கராந்தியின் போது உயிர் நீத்தார். அவ்வளவு புண்ணியக் காலமான இது மிகச் சிறந்த நாள். இந்தியா விவசாயத்தை முக்கியமான தொழிலாகக் கொண்ட நாடு. நாட்டின் எல்லாப் பசுமைக்கும் காரணம் சூரிய வெளிச்சம் ஆகும். சூரிய வெப்பத்தினால் தான் செடிகள் வளருகின்றன. ஆகையால் விவசாயிகள் நன்கு பயிர் வளர்ந்து பறிக்கத் தயாரான நிலையில், முதல் சாகுபடியைத் தங்கள் கடவுளுக்கும் சூரிய பகவானுக்கும் படைக்கிறார்கள். இதுவே பொங்கல் திருநாள். இத்திருநாளன்று விடியற்காலையில் குளித்து, புது உடைகளையும் உடுத்தி, சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறார்கள். இந்த நாளில் ஆதித்ய ஹிருதயம் என்ற ஸ்லோகம் சொன்னால் மிகவும் நல்லது. பாலுடன் வெல்லமும் கலந்து, அரிசியையும் போட்டுப் பின் கொதித்துப் பொங்கும் நேரம் வீட்டில் எல்லோரும் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியுடன் கூவி ஆனந்தம் அடைக்கிறார்கள். அந்தப் பொங்கல் பானையின் மேல் மஞ்சளின் இலைகளும் கிழங்கும் சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு வைப்பார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகி என்று வீட்டைச் சுத்தம் செய்து வெளிக் குப்பைகளையும் சேர்த்து எரிக்கிறார்கள். அதுபோல நம் மனம் அழுக்கில்லாமல் இருக்க நாமும் கெட்ட பழக்கங்களை எரித்து விட வேண்டும். பொங்கல் நாளுக்கு மறுநாள் கனு என்றுச்சொல்லும் திருநாள். அன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்காக அவர் நலதிற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். அதற்காக சாத உருண்டைகளை மஞ்சள் குங்குமத்துடன் பிசைந்து உருட்டிப் பின் ஒரு வாழை இலையில் வெளியில் வைக்க, அது காக்கை குருவிகளுக்கு ஆகாரம் ஆகிறது. கிராமங்களில் காளையின் கொம்புகளில் வர்ணம் பூசி, பசுவிற்கும் பூஜை செய்து, மாலை ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்கிறார்கள். ஜல்லிக்கட்டு என்பது முரட்டுக் காளையின் கொம்பைப் பிடித்து அடக்க வேண்டும், அதற்குப் பரிசும் உண்டு. அதற்கு மறு நாள் காணும் பொங்கலில் ஊர் சுற்றிக் கூட்டமாக பீச், சினிமா, நதியின் கரை என்று பிக்னிக் வைத்துக் கொண்டு மகிழ்வார்கள். இந்த நாலு நாட்களும் மஜாதான். ஒரே கொண்டாட்டம் தான். நீங்களும் மகிழுங்கள்.
பொங்கல் கவிதை
மகர சங்கரந்தியில் ஆதவன்
ஒளியுடன் பவனி வருகிறான் அவனில்லாமல் உலகில்லை, ஒரு செடியில்லை, கொடியில்லை தை பிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் திருநாள் மிகச் சிறக்கும், பொங்கலோ பொங்கல் என்ற சத்தம் மகிழ்ச்சியில் மலரும் நம் சித்தம், விவசாயிகள் மகிழும் திருநாள் ஆதவனுக்கு நன்றி சொல்லும் நாள் உழும் காளைகளுக்கும் பூசை வீர "ஜல்லிக்கட்டில்" ஆசை, காணும் பொங்கலில் உறவினர் கூட்டம், பாசமும் அன்பும் தீர்க்கும் வாட்டம் பொங்கல் வாழ்த்துத் தந்து மகிழ்வோம் ஏழையின் வாழ்வில் ஏற்றம் தருவோம் அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |