நேரு நூறு
இணையப் பாட்டி
நேரு நூற்றாண்டு விழா
இந்தப் படத்தில் வரிசையாக நின்று ஒரே மாதிரி வெள்ளைப்புடவைகள் அணிந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். கீழே ஒருவர் ஹார்மோனியம் வாசிக்கிறார், பார்த்தீர்களா? இவர்கள் அனைவரும் ஆசிரியைகளுடன் சில மாணவர்கள், கீழே அமர்ந்து ஹார்மோனியம் வாசிப்பது நான் தான், உங்கள் அம்மம்மா.இது நடந்தது சாச்சா நேருவின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் அன்று. பெரிய மேடை, நடந்த இடம் ஜவஹர்லால் ஸ்டேடியம் தில்லியில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் அமரலாம், அவ்வளவு பெரிது, நல்ல வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கிறது. பாரதீயம் என்ற விழாவும் அங்குதான் நடந்தது. ஜவஹர்லாலின் நூறாவது பிறந்த நாள் விழா டி.வி.யில் உலகம் முழுவதும் நேராக {direct telicast} காட்டப்பட்டது. எங்கள் பள்ளியும் அதில் கலந்து கொண்டது. எங்கள் பள்ளியின் தலைவர்கள் அனைவரும் கேபினெட் மினிஸ்டர்கள், ஒய்.பி. சவான், வசந்த சாத்தே, எஸ்.பி. சவான் போன்றவர்கள். ஆகையால் எந்த முக்கிய விழாக்கள் வந்தாலும் எங்கள் பங்கும் அதில் உண்டு. இந்த விழாவில் எங்களை 4 பாடல்கள் பாடச்சொன்னார்கள். விழாவின் ஆரம்பமே நாங்கள் தான், ஆனால் அதில் பங்கு பெற்றுக்கொண்ட பின் தினம் அதற்கு பயிற்சி, பள்ளி 4 மணி வரை என்றால் 6 மணி வரை பயிற்சி. இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பமாகி விட்டது, அப்ப்ப்பா! போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஏனென்றால் காலையிலிருந்து பள்ளியில் பாடம் எடுக்க, பின் நோட்டுக்கள் திருத்த, இதிலேயே பாதி சக்தி போய்விடும், பின் பாட்டு, அதன் பின் வீடு. வீட்டில் அருமை மகன், அவனுக்கு படிப்பில் உதவ, பின் இரவு சாப்பாடு என்று ஒரே ஓட்டம் தான். ஆனாலும் நாட்டிற்காகப் பாடப்போகிறோம், அதை உலகம் முழுவதும் பார்க்கும் என்ற எண்ணம் வந்தவுடன் எதாவது சாதிக்க வேண்டும் என்ற வேகம் களைப்பைப் போக்கிவிடும்.
எங்கள் பயிற்சி முடிய சில சமயம் மாலை 7 கூட ஆகிவிடும், என் மனம் என் மகனைப் பற்றி செல்லும் அவன் சரியாகச் சாப்பிட்டானா? ஹோம் ஒர்க் செய்திருப்பானோ? சரியாக வாசல் கதவைச் சாத்திருப்பானோ? என்று மனம் ஓடும், நானும் ஒரு அம்மா தானே, உங்கள் அம்மாவும் உங்களைப் பற்றி நினைத்துகொள்வார் இல்லையா? என் மகனுக்க்காக சூடு பெட்டியில் சமைத்ததை வைத்து விட்டு வந்திருப்பேன்.
நாங்கள் பாடவேண்டியப் பாடல்கள், "ஸாரே ஜஹான் செ அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா", "இத்னி சக்தி ஹமே தேனா தாத்தா {dhaththa}", "ஹே மாலிக் தெரே பந்தெ ஹம்" ஆகியவை. கிட்டத்தட்ட ஒருமாதம், பல பேர்கள் பாடினாலும் ஒரே குரலில் பாடுவது போல் வந்து விட்டது. எல்லோருக்கும் மிக திருப்தி, பின் வாத்ய குழுவினர் அதிகமாக இருந்தனர். 4 வயலின்கள், இரண்டு கிடார், தபலா என்று அதிகமாக இருந்ததால் சுருதி அன்று எல்லோருக்கும் ஒன்றாக சேர வேண்டுமே என்ற கவலை. ஏன் என்றால் அது ஓபன் ஏர் ஸ்டேடியம், திறந்தவெளி மைதானமாக இருந்ததால் வயலின் தபலா போன்றவர்களின் சுருதி அடிக்கடி கலைய வாய்ப்பு இருந்தது. எங்களுக்கு கொடுத்த நேரம் முப்பது நிமிஷம் தான். அதில் தபலாவைச் சுருதி சேர்க்க "டொக்கு டொக்கு" என்று அடித்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது என்று ஒரு ரிகார்டிங் ஸ்டூடியோ வரச்சொன்னார்கள். ஒரு நல்ல நாள் அங்கு போய் எல்லா பட்டையும் வாத்தியங்களுடன் ரிகார்ட் எடுத்தோம்.
அந்த நாள் வருவதற்கு இரண்டு நாட்கள் முன் ஹார்மோனியம் வாசித்தவருக்கு சுரம் வந்து விட்டது. என்ன செய்வது? எனக்கு ஹார்மோனியம் தெரியும் என்று அவர்களுக்குத் தெரியுமாதலால் என்னக் கேட்டார்கள். நானும் சரி என்று ஒப்புத்துக்கொண்டேன், அதான் முதலிலேயே ரிகார்ட் எடுத்தாயிற்றே! சுமார் அன்றைய தினம் கை வைத்தால் கூட போதும் இல்லையா? அந்த நாளும் வந்தது, எலோருக்கும் ஒரே மாதிரி புடவை, சட்டை கிடைத்தன. சட்டையில் ஒரு பெரிய வட்டமான வில்லையும் தான். அதில் மூவர்ண கலவையுடன் நமது கொடி பறந்தது.
இத்தனை நாள் பயிற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை. ஒரே கைத்தட்டு, பாராட்டுக்கள், கரகோஷம் எங்கள் காதில் விழ, எங்கள் களைப்பெல்லாம் போய் விட்டது. இந்த இடத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் ராஷ்ட்ரபதி பவனில் குடியர்சுத்தலைவர் முன் விருந்து கொடுக்கப்படது. அதில் மதிப்புக்குரிய திருமதி இந்திரா காந்தியும் இருந்தனர் .
இது எனக்கு பசுமையாக என் மனதில் பதிந்து விட்டசம்பவம்.
இப்போது நாங்கள் பாடிய ஒரு பாட்டின் மொழிபெயர்ப்பு தமிழில்:
இத்தனைச் சக்தி கொடு,
மனதின் நம்பிக்கை தளராமல் இருக்க, சக்தி கொடு
நல்வழியில் நாங்கள் நடக்க வேண்டும்
தவறிக்கூட ஒரு தவறும் வர வேண்டாம்
அக்ஞானத்தில் இருக்கும் இருளுக்கு
நீ ஞான ஒளி தர வேண்டும்,
கெட்ட பழக்கம் இல்லாமல் காக்க வேண்டும்
வாழ்க்கை பயணம் குறைந்ததோ நீண்டதோ
நல்வாழ்க்கை அமைய வேண்டும்
சத்ரு பாவம் இல்லாமல் இருக்க, சக்தி கொடு
என்ன கிடைக்கும் என்று நினைக்காமல்
எத்தனை அர்ப்பிக்க வேண்டும் என்று நினைப்போம்
மகிழ்ச்சியைப் பகிர்வோம்
எல்லா வாழ்க்கையிலும் பூந்தோட்டம் குலுங்ககட்டும்
கருணை என்ற நீர் பாய்ச்சுவோம்
மனதின் ஒவ்வொரு மூலையும் புனிதமாகட்டும்,
இத்தனைச் சக்தி கொடு.
அன்புடன் அம்மம்மா



Your Feedback









