தாயென்று கும்பிடடி பாப்பா
- உண்மையின் பெருமை
இணையப் பாட்டி
என் செல்லக் குழந்தைகளே,
நீங்கள் எப்போதும் உண்மையே பேச வேண்டும். உண்மை பேச பயமே இருக்கக் கூடாது. உண்மை பேசினால் எப்போதும் உங்களுக்கு நன்மையே கிடைக்கும், நல்ல பெயர், புகழ் கிடைக்கும். இதற்கு ஒரு சின்னக் கதைச் சொல்லவா?
ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு அருமையான, உண்மையே பேசும் மந்திரி தேவைப்பட்டது. அதனால் அவர் எல்லோரிடமும் இதைப் பற்றிப் பேச அழைத்தார். எல்லோரும் அவர் குறிப்பிட்ட நாளில் கூடிவிட்டனர். அப்போது அவர் எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு விதையைக் கொடுத்து அதை நன்கு வளர்த்த பின் வந்து காட்டும்படிக் கூறினார். யாருடைய செடி செழிப்பாக இருக்கிறதோ அவருக்கு மந்திரி பதவி என்றும் சொன்னார்.
விதையினால் முளைத்த செடியைக் காட்டுவதற்கு ஒரு நாளும் குறிப்பிட்டார். எல்லோரும் விதைகளை வாங்கிச் சென்றனர். அவர் சொன்ன அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது. ராஜா வருகிறார் பராக் பராக் என்ற ஒலியுடன் ராஜா நுழைந்தார், சிம்ஹாசனத்தில் அமர்ந்தார். எல்லோரும் அவரவர் செடியைக் காட்டினர். என் செடி காய்க்க ஆரம்பித்து விட்டது என்றான் ஒருவன். என் செடி ஐந்து அடி வளர்ந்து விட்டது என்றான் மற்றொருவன். இதே போல் நிறையப் பேர் சொன்னார்கள். கடைசியில் ஒரு பையன் வந்தான். ராஜாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தான். பின் சொன்னான், அரசர் அவர்களே, இதோ என் மண் சட்டி, இதில் நான் நீங்கள் கொடுத்த விதையை நட்டேன், ஆனால் இரண்டாம் நாளே அழுகி விட்டது செடி வளரவில்லை. மற்றவர்கள் கனவு நிலையில் இருந்தனர். தனக்குத்தான் மந்திரிப் பதவி என்று கற்பனையில் மிதந்தனர். அரசர் பையனிடம் கேட்டார், "ஏன், நீ சரியாகத் தண்ணீர் விடவில்லையா?"
"அது இல்லை மன்னா, ஒரு நாளிலேயே அந்த விதை தண்ணீருடன் சேர்ந்து அழுகிப் போயிற்று" என்றான் அவன். அரசர் அவனை அணைத்துக் கொண்டார். பின் எழுந்து நின்று சொன்னார், "இவன் தான் என் வருங்கால மந்திரி" என்று. கேட்டவர்கள் எல்லோரும் விக்கித்து நின்றனர். பிறகு அரசரிடம் கேட்டனர், "அரசே, இது ஞாயமா? நாங்கள் இவ்வளவு செழிப்பாய் வளர்த்து கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் பையன் வெறும் காலி மண் சட்டியைக் காட்டினான். இவனுக்கா மந்திரி பதவி?" என்று எல்லோரும் கசமுச என்று கத்த ஆரம்பித்தனர்.
"நிறுத்துங்கள், நான் சொல்லப் போவதைக் கேளுங்கள்" என்று மன்னர் சொல்ல சத்தம் நின்றது. ராஜா சொன்னார், "அட முட்டாள்களா? நான் கொடுத்த விதைகளெல்லாம் வேக வைத்துக் காய்ந்தவை. அவை எப்படி முளைக்கும்? ஆகையால் நீங்கள் செடி வளர்ந்தது என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். இந்தப் பையன் தான் உண்மை பேசினான் அவனுக்குத்தான் மந்திரிப் பதவி. இப்போது புரிகிறதா?"
எல்லோரும் வெட்கத்தால் தலைக் குனிந்தனர்.
குழந்தைகளே, இப்போது தெரிந்ததா? உண்மை பேசுவதின் பரிசு.. இந்தக் கதை நம் பகவான் பாபா அவர்கள் சொன்னது. அவருடைய 81வது பிறந்த நாள் நவம்பர் 23 அன்று வருகிறது. குழந்தைகள் என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எப்போதும் அவரது ஆசிகள் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அன்புடன் உங்கள் அம்மம்மா விசாலம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














