S.P. Ramamoorthy
Team Mazhalaigal
செ.ப.ரா - செனப்பிரட்டி பசுபதி ராமமூர்த்தி
அறிமுகம்
பல முறை விஷி என்னை எழுதச் சொல்லி வற்புறுத்தியும், இன்றுவரை எழுதவில்லை. இது போன்ற ஒரு குழுவிற்கு, என்னை அறிமுகம் செய்து கொள்வது என்பது எனக்குப் புதிய அனுபவம். சுய விளம்பரம் போலத் தோன்றினால், அது எனக்கு எழுதத் தெரியாததன் பிழை. தற்பொழுது L&T Group Company ஒன்றில் கணிணித் துறையில் நிர்வாக அதிகாரியாகப் பணி புரிகிறேன். 37 வருட சேவைக்குப் பின், இன்னும் ஆறு மாதத்தில் பணி ஓய்வு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் என்றாலே வயது பற்றி கணிக்க முடியும். வயது 57.எனது தந்தையார் திரு S.R. பசுபதி ஆசிரியப் பெருந்தகையாய், வடமொழி அறிவதனில் வல்லுநராய், பேசுமொரு சிறப்பின் நட்பைப் பேணி வளர்த்தவராய், மாசில்லா வாழ்வதனில், நல்ல மறையவர் வழியொட்டி, நேசமுடன் எனை வளர்த்தார் அவர்தம் (திரு. பசுபதியின்) நினைவதனைப் போற்றுவனே!
ஒரு பெரியப்பா தமிழ்ப் பண்டிதர்; மற்றொருவர் புல்லாங்குழல் கலைஞர்; ஒன்றுவிட்ட பெரியப்பா தமிழிசைமணி ஆதிசேஷன் (கே.பி சுந்தராம்பாளின் தனித்திருந்து வாழும் தவமணியே இவரது பாடல்தான்) ஒரு பாடலாசிரியர்.
எனது தாய் திருமதி V.K. நாமகிரி இலக்குமி இனியவள் எந்தாய்; இதயமுவந்து பிறர்க்குதவும் பாங்கின், தனியொருத்தியாய்த் தனைநிறுத்தும் தகைமையினால் நட்பு வளர், கனிமொழி பேசாள் எனினும் (பிறரைக்) கடிந்து ஒரு வார்த்தை சொல்லாள்! நனி சிறப்பின் (எந்தாய் இங்கு) நான் வணங்கும், நாமகிரி இலக்குமியே!! (அந்தக் காலத்திலேயே தனது தந்தை initial ஆன V.K என்பதனை தன் பெயருக்கு முன்னால் போட்டு புரட்சி செய்தவர் - எனது தந்தையும் பெருந்தன்மையாய் அதனை ஒத்துக் கொண்டது மற்றுமொரு சிறப்பு)
எனது மனையாள் திருமதி R.ஜெயந்தி மனை விளங்க வந்ததனால் (என்) மதிப்பினிலே உயர்ந்தவளை, எனை ஆளும் சிறப்பினிங்கு எந்தனது மனையாள்தன்னை, அனைவரும் அறிந்திடவே அழகு தமிழ்க் கவிதையொன்றை, புனைந்திட்டேன்; பொன்னில் வைரம், பொதிந்து வைத்த அழகே போல!!
ஜெயந்தி என் மனைவி - "மனை மாட்சி அது என் மனையாள் மாட்சி" என்ற எனது படைப்பின் கதாநாயகி. இதனை விஷியின் முயற்சியினால் நண்பர் ஜவஹர் மூலம் வலைத் தளத்திலே வெளியிட்டேன்.
இரண்டு பெண்கள்; எனதிரு கண்கள். மூத்தவள் அனுராதா (B.Com, CWA,CA & CPA) மணமாகி, அமெரிக்காவில் நிலைத்தவள்; இரண்டாமவள் ஆர்த்தி B.Com முடித்து MBA (Fin) படித்துக் கொண்டிருக்கிறாள்.
நான் வர கவி அல்ல; (எழுத) வந்தால் மட்டுமே, கவி.
வடமொழியின் பொருள் தெரிந்து வேண்டுவது சிறப்பு என நினைத்ததால் உருவாகியது "பொன்மழை பொழியத் துதி" (பாடல் வடிவில் கனகதாராவின் தமிழ் மொழிபெயர்ப்பு - மங்கையர் மலரில் வெளிவந்தது). வடமொழியில் உள்ள ஆதி சங்கரரின் இதர சக்திப் பாமாலையினையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது அவா. என்று முடியும் எனத் தெரியவில்லை.
"அன்னமளிக்கும் அன்னையைத் துதி" (அன்னபூர்ணாஷ்டகம் - இன்னும் 7 ஸ்லோகம் மீதம் இருக்கிறது). இதைத் தவிர அருள்மிகு லலிதா தேவியின் ஐம்பொன்னாரம் (லலிதா பஞ்சரத்னம்), ஆதி சக்தியின் அருளமுதம், காஞ்சிப் பாமாலை, அருள்மிகு செல்லாண்டியம்மன் 108, கந்தரலங்காரம் (புதியது) என்பன எனது பக்திப் படைப்புக்களில் சில.
எல்லோரும் ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பொழுது நான் சற்றே வித்தியாசமானவனாக இருக்க எண்ணியதால், "முருகனுக்கு முன்னூறு" என்ற தலைப்பில், காலையில் முதன் முதலில் நான் கேட்ட சொல், அன்றைய நாளில் முதன் முதலில் என் நினைவுக்கு வந்த ராகம் இதனை அடிப்படையாகக் கொண்டு (பெரும்பாலும் கர்நாடக இசையில் அமைந்தது) இன்றுவரை, ஏறக்குறைய 600+ பாடல் இயற்றியுள்ளேன். இதைத்தவிர ஸ்ரீ ராகவேந்திரர் (15 பாடல்கள்), விநாயகர் (12 பாடல்கள்), திருமால், சிவன் என்றும் என் மனைவி (37 பாடல்கள்), என் மகள், அன்னை (59 பாடல்கள்) மேலும் சில தனிப்பட்ட பாடல்களுமாக ஏறக்குறைய 1500+ பாடல்கள் இயற்றியுள்ளேன். ஆனால் முறையாக சங்கீதம் பயிலாத காரணத்தால், இப்பாடல்களின் ராகம், தாளம் இவையெல்லாம் சரியாகக் குறிப்பிட முடியவில்லை. எந்த ராகத்தில் பாடுவது என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. சங்கீதம் அறிந்த ஒருவர் உதவிக்கு வரும் பொழுது இவை முறைப்படுத்தப்படும் என நம்புகிறேன். நாள் எந்நாளோ அறியேன்!
இவை அனைத்துமே எனக்காக, என் மன நிறைவிற்காக மட்டுமே இயற்றியதால் எவரிடமும் சொன்னதில்லை; முறையாக எழுதியும் வைத்ததில்லை. என் மனைவிக்குக் கூடச் சமீப காலம் வரை தெரியாது!
முரசு அஞ்சல், பாரதி, ஸ்ரீலிபி என பல தமிழ் செயலியினையும் பயன்படுத்திப் பார்த்த காரணத்தால், "அழகி" யினைக் கண்ட பின்னர் மற்றவை அவ்வளவு சிறப்பாகத் தோன்றவில்லை. அது முதல் எனது படைப்புக்களுக்கு எனது அழகியும் (என் மனைவி) அழகியுடன் உறுதுணையாக இருக்கிறாள். இப்பொழுது கணிணியில் பதிகிறேன். எனது மனைவியும் அழகியினைக் கற்றுச் சில பாடல்களைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளாள். எனது காலத்திற்கு முன் அவற்றை குறுந்தகடில் பதிவு செய்து வெளியிட விருப்பம். ஆண்டவன் சித்தம் அதுவே நடக்கும்.
அழகன் (விஷி) என்னை அவ்வப்பொழுது ஊக்குவிக்கின்ற காரணத்தால், பகுதி நேர மொழி பெயர்ப்பாளனாக இருக்கும் நான் பணி ஓய்விற்குப் பின் முழு நேர மொழி பெயர்ப்பாளனாக எண்ணியுள்ளேன்.
படைத்தவன் இறைவனென்றால் (மனப்)பாரம் தீர்ப்பதவன் கடனே!
இடைப்பட்ட காலத்து இங்கு எனக்கேன் இனிக் கவலை;
இறையொன்று உண்டு என இதயத்துக் கொண்டதனால்
குறையொன்றுமில்லை; (நாளும்) குமரன் இங்கெனைக் காப்பான்!!
இதுவே எனது நம்பிக்கையாக, (விஷியனைய) நண்பர்கள் உடனிருக்க, இனி வரும் நாளதும் நன்னாளே என நம்பும்
அன்பின்,
செபரா.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













