-
திரை இசைத் திலகம்
- தமிழ்த் தேனீ
"மானுடராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டுமென்பார்"
அப்படி மனிதராய்ப் பிறந்த பலரில் சிலர் மட்டுமே பிறந்த பயனை, காரணத்தை, அவர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள், காலமும் நேரமும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து சாதனைகளைச் செய்ய அனுமதிக்கிறது.
திறமைகள் இருந்தும் காலமும் நேரமும் ஒத்துழையாமையினால் பல கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்காய் அந்தக் குடத்தினுள்ளேயே தன்னுடைய ஒளி முழுவதையுமே வீசிக் களைத்து அப்படியே ஒளி மங்கிப் போயிருக்கிறார்கள், ஆனால் அதிருஷ்ட தேவதை கண்திறந்து கடைக்கண் பார்த்ததின் விளைவாகவும், அதற்கு மேலும் தங்களுடைய இடையறாத முயற்சியினாலும் வாழ்க்கையில் ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அந்த இலக்கை அடைந்தே தீருவது என்னும் மனோ உறுதியுடனும் சோதனைகளை எதிர்கொண்டு இலக்கை அடைந்து வெற்றி பெற்றவர்களே சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.
அப்படிப்பட்ட திறமையான அதிருஷ்ட சாலியான ஒரு சாதனையாளர் இசைமேதை திரு கே.வீ. மஹாதேவன் அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அவருடைய மகனும் என்னுடைய நெருங்கிய நண்பருமான திரு வெங்கடாசலம் அவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவரைப் பற்றி எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தால் மிக மன நிறைவுடன் எழுதுகிறேன், சரண் சித்ரா ஆர்ட்ஸ் அளித்த திரை இசைத் திலகம் திரு கே.வீ. மஹாதேவன் அவர்களின் திரை இசை பொன்விழா சாதனை மலர் என்னும் புத்தகத்தை திரு வெங்கடாசலம் அவர்கள் என்னிடம் அளித்தார், அதிலிருக்கும் விவரங்களை எழுதுகிறேன்.
அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தஞ்சை கவிமணி அவர்கள்
வெளியீடு: சரண் சித்ரா ஆர்ட்ஸ் சென்னை 33
வெளியிட்ட நாள்: 13/09/1992
திரைத்துறையில் திரை இசைத்திலகம், இசை மாமேதை, இசைச் சிற்பி என்றெல்லாம் அனைவராலும் போற்றப்பட்டு வாழும்போதே ஒரு வரலாறு படைத்த திரு கே.வீ. மஹாதேவன் அவர்கள் முக்கடலும், முத்தமிழும் கூடிய தென் தமிழ் நாட்டின் கரையோரம் முதற் சங்கத்தமிழ் கோலோச்சிய தென் பகுதியாம் நாகர் கோவில் என்னும் நகரிலே கிருஷ்ணன் கோயில் என்னும் ஊரிலே திரு வெங்கடாசல பாகவதர் அவர்களுக்கும் திருமதி பிச்சையம்மாள் வெங்கடாசலபாகவதர் அவர்களுக்கும் 1918ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி அன்று சுபயோக சுப தினத்தில் பிறந்தார்.
முத்தமிழ் வித்வ கலாரத்ன டீ.கே.எஸ். சகோதரர்கள், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் போன்ற கலைஞர்கள் பிறந்த பொன்னான பூமி நாகர் கோயில்.
திரு கே.வீ. மஹாதேவன் அவர்களின் பாட்டனார் ராம பாகவதர் அவர்கள் திருவனந்தரம் மஹாராஜா அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். திரு கே.வீ. மஹாதேவன் அவர்களுடைய தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் வாசிப்பதில் வல்லவர்.
இசை ரத்தத்திலேயே, இசை வம்சத்திலேயே ஊறிய திரு கே.வீ. மஹா தேவன் அவர்கள் இசையமைத்த பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத காவியமாய் ரசிகர்கள் மனதிலே நிறைந்து காலம் காலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஆகவே அவர் இசையமைத்த பாடல்களின் விவரங்கள், திரைப்படங்கள், அனைத்தையும் பற்றி எழுதுகிறேன்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















