மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
செபரா
|
வெற்றிக்கு வழி, தெரிந்து வினையாற்றுவதே!!அன்பார்ந்த மழலைகள்.காம் வாசகர்களே, உங்களனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். உங்களில் பலர், கல்வி பெற்றிருந்தும், வேலை வாய்ப்பு, அதைத் தொடர்ந்த வளமான வாழ்க்கை, வளர்ச்சி, இவை போன்ற பல துறைகளில் சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியாமல், தோல்வியால் துவண்டு போகின்றீர்கள். பல பன்னாட்டு நிறுவனங்கள் உலகளாவிய வகையில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கும் வசதி படைத்திருந்தாலும், அதனை நிர்வகிக்கச் சிறப்பான தலைமை இல்லாது அவதிப்படுவது கண்கூடு. இவை இரண்டின் இடையே உள்ள இடைவெளியினைக் குறைக்க விரும்பவதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். மழலைகள்.காம் வருங்காலத் தலைவர்களை உருவாக்கும் மற்றும் வழி நடத்தும் பெரும் பொறுப்புடையது என்ற வகையில் இக்கட்டுரைத் தொடர்கள் இங்கே இடம் பெறுகிறது. யாரை இந்த உலகம் விரும்பும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஏற்றவர் திரு வள்ளுவரைத் தவிர யார் இருக்கக் கூடும். வள்ளுவரின் கண்ணோட்டத்தில், கீழ்க்கண்ட குண நலன் உள்ளவர்களையே உலகம் நாடும்.
“செய்வானை நாடி, வினைநாடிக் காலத்தோடு
“வாரி பெருக்கி, வளம் படுத்து உற்றவை இதைத்தான் இன்றைய நிர்வாக உலகும் செய்கிறது. எனவே, நீங்கள் இத்தகைய குண நலன் உடையவராக இருந்தால், நீங்களும் விரும்பப்படுவீர்கள். வெற்றி என்பது, செல்வத்தைச் சேர்ப்பது மட்டுமல்ல. நீங்கள் விழைந்ததனைப் பிறர் செய்யுமாறு செய்வதும் வெற்றியே. பிறர் உங்கள் தலைமையினை விரும்பி ஏற்றுக் கொள்வதும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட (நல்லது பொல்லாதது குறித்து) உங்கள் கருத்தினை விரும்பிக் கேட்க விழைவதுமாகும். இன்றைய நிர்வாக அமைப்பில், அதிகம் தேவைப்படுவது, உங்கள் நேரடி அதிகாரத்திற்கு உட்படாத, அல்லது உங்களுடன் ஒத்த நிலையில் உள்ள அல்லது உங்களை விரும்பாத மனிதர்களிடையேயும் பணியாற்ற வேண்டுவதும், அவர்களையும் ஈடுபடுத்தி, உங்களைப் பின்பற்றச் செய்து, திறமையாக ஒரு நல்ல தலைவனாக, உங்களது சொல்லுக்கு மதிப்பளித்து, விழைந்து பயனுள்ள வகையில் செயலாற்றி, நிர்வாகம் எதிர்பார்க்கும் நல் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சிறப்பான குழு அமைக்கும் திறனும் ஆகும். அவர்களை வழி நடத்தி, ஒரு குழுவாகப் பங்கேற்கச் செய்து, நிர்வாகத்திற்கு நீங்கள் பெற்றுத் தருவதாக ஒப்புக் கொண்ட நல்ல விளைவுகளை உண்டாக்கும் செயல்பாட்டினை உருவாக்குவதும் மற்றும் உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றும் அன்னாரின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் வளர்ச்சி, எதிர்காலம், அன்னாரின் சுய மரியாதைக்கு மதிப்பளிப்பது, இவை போன்ற ஒரு தலைவனின் கடமைகளையும் நிறைவேற்ற உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதும் இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம். வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பாதவர் யார் இருக்கிறார்கள்? உங்களுக்கு அந்த ஆசை இல்லையா? உங்களின் சுய நம்பிக்கையினை அதிகரித்து, மிகச் சிறப்பான ஒரு மனிதராக, திறமையான தலைவராக, பிறர் மதிக்க வாழ ஒரு வழி காட்டுதல் இருந்தால், வரவேற்க மாட்டீர்களா? எனவே, மிகச் சிறந்த தலைவர்களிடம் உள்ள சுய நம்பிக்கை, தொலை நோக்கு, அறிவாற்றல், (பிறரை) ஊக்குவிக்கும் திறமை, எதிர்பார்த்த விளைவுகளை நிகழ்த்த வல்ல திறமை, இவையெல்லாம் உங்களுக்கும் உண்டாக, இந்த உலகம் உங்கள் தலைமையின் கீழ் பணியாற்ற விரும்ப, நீங்கள் என்ன விதமான திறமையுடையவராக இருக்க வேண்டும், எந்த விதமான திறமையினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தலைவர்கள் பிறக்கிறார்கள்; உருவாக்கப்படுவதில்லை என்பது இதுவரை நமது நம்பிக்கை. ஆனால் உண்மை அதுவல்ல. நாட்டு நடப்பினைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது நன்கு புரியும். “வாரிசு அரசியலோ, வாரிசு நிர்வாகிகளோ” நாம் அறியாத ஒன்றல்ல. அவர்களின் குடும்ப நலனுக்காக, அவர்களின் பெற்றோர் (குறிப்பாகத் தந்தையார்) தங்கள் மகனையோ மகளையோ தங்களுக்குப் பிறகு பொறுப்பேற்கத் தயார் செய்வது புதியதல்லவே. அத்தகையோர் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் குறைவான அளவிலேயே இருப்பதும், பெரும்பாலும் அவர்களை உருவாக்கியவர்கள் (GOD FATHER) மறைவிற்குப் பின் காணாமல் போவதும் இயல்பே. இதற்குக் காரணம் முறையான தலைமைப் பொறுப்பேற்க ஏற்ற கல்விப் பயிற்சி இல்லாமற் போவதுதான். மற்றவர்களுக்கு, அதிலும் குறிப்பாக உங்களுக்கு, இந்த வாய்ப்பு முழுமையாகக் கிடைப்பதில்லை. அதனாலேயே நமது நாட்டில் நல்ல தலைமைக்குப் பஞ்சம். இன்றைய நமது கல்வி முறையிலும் இதற்கான வழிமுறைகள் செய்யப்படவில்லை. நமது நாட்டில் இத்தகைய கல்வி நிலையங்கள் அதிகமில்லை. இருப்பவற்றில் சேர்ந்து கற்க அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது என்பதோடு, அவற்றில் இடம் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. சுய நம்பிக்கை, தொலை நோக்கு, அறிவாற்றல், (பிறரை) ஊக்குவிக்கும் திறமை, எதிர் பார்த்த விளைவுகளை நிகழ்த்த வல்ல திறமை, இவையெல்லாம் உங்கள் மனப்பாங்கில் ஒரு மாற்றத்தை உண்டாக்கக் கூடிய ஒன்றாக இருப்பதால், அவை உங்களின் இதயத்தைத் தொட்டு, உள்ளத்தில் பதிந்து, குருதியோடு கலக்க வேண்டிய ஒன்று. இங்கு அறிதல், உணர்தல் அதுவே வழியாய் நடத்தல் என்ற வகையில், தாய்மொழி மூலம் கற்றால் மட்டுமே முடியும். தாய்மொழியான தமிழில் அதிகமான, விரிவான புத்தகங்களும் அதிகம் இல்லை என்ற குறையினையும் தீர்ப்பதுவே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். இந்த வகையில் நாம் வெற்றி பெறத் தேவையான கீழ்க்கண்ட சில தலைப்புகளில், ஒரு சிறு அறிமுகம் தருவது இக்கட்டுரைத் தொடரின் பின் வரும் பகுதிகளில் பேசப்படும்.
கணிணி நிர்வாகம் -இது குறித்து நாம் ஏற்கனவே அறிய ஆரம்பித்திருக்கிறோம் (“ஸ்பாம்” (SPAM) நிர்வாகம்).
வெற்றி பெற வினையாற்றுவது
நேர நிர்வாகம்.
தலைமைப் பொறுப்பேற்கும் திறன்
மன அழுத்தத்தை சமாளித்தல்
பிரச்சினைகளைத் தீர்த்தல்.
முடிவுகள் எடுத்தல்
தகவல் பறிமாற்றம்
திட்டமிடுதலும் மற்றும் நிர்வாகமும்
இக்கட்டுரைத் தொடரின் மூலம் யாரேனும் ஒருவர் ஒரு சிறிது பலன் பெற்றாலும், இக்கட்டுரைத் தொடர் ஆரம்பித்த நோக்கம் சிறப்பு பெறும். இனித் தொடருவோம். அன்புடன் செபரா தொடரும்.... |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |