-
அமெரிக்கா 20
- கீதா சாம்பசிவம்
அமெரிக்க உள்நாட்டு யுத்தம் தென்பகுதியில் அடிமைகளை வைத்துப் பண்ணைகள் நடத்தும் பெரும்பணக்காரர்களுக்கும், வடபகுதி அமெரிக்கருக்கும் இடையில் ஆரம்பித்தது. முக்கிய காரணம் தென்பகுதி மக்களின் செல்வாக்கு ஓங்கி இருப்பதாய் வட பகுதி மக்கள் நினைத்ததும், தங்கள் அடிமைகளை விடுவித்து தங்கள் செல்வாக்கைக் குறைப்பதாய்த் தெற்கு மக்களும் நினைத்ததே முக்கிய காரணம். ஆரம்பத்தில் வடகிழக்கு, மற்றும் மத்திய அட்லாண்டிக் பிரதேசங்கள் அடங்கிய மாசசூசெட்ஸ், நியூயார்க், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி போன்றவை அடிமைத் தனத்தைச் சட்டபூர்வமாய் ஆதரித்தன. ஆனாலும் அங்கே மெல்ல மெல்ல அடிமைகள் மறைந்தும், குறைந்தும் வந்தனர். அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்திற்கு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்பே அடிமைகள் விடுவிக்கப் பட்டனர்.
உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் பத்தொன்பது மாநிலங்கள் அடிமைகளை விடுவித்திருந்தன. அவை மைன், வெர்மாண்ட், நியூஹாம்ப்ஷைர், மாசசூசெட்ஸ், ரோடே ஐலாண்ட், கனெக்டிகட், நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, ஓஹையோ, இண்டியானா, இல்லினாய்ஸ், மிக்சிகன், விஸ்கான்சின், மினசோட்டா, கான்சாஸ், ஐயோவா, ஒரேகான் மற்றும் கலிபோர்னியா ஆகியவை. அடிமைகளை வைத்திருந்த மாநிலங்கள் அடிமைகள் நாடு எனவே அழைக்கப் பட்டன. பெரும்பாலும் தென்பகுதியில் இருந்த அவை பதினைந்து மாநிலங்கள். அவை: அலபாமா, ஆர்கன்ஸாச், டெலாவேர், ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, கெண்டுகி, லூசியானா, மேரிலாண்ட், மிசிசிபி, மிசொரி, வட கரோலினா, தென் கரோலினா, டெனிசி, டெக்ஸாஸ் மற்றும் வர்ஜினியா. இதில் மேற்கு வர்ஜினியாவும் அடங்கும். அப்போது இது வர்ஜினியாவில் இருந்து பிரியவில்லை. மாநிலங்களாய் இல்லாமல் இருந்தாலும் தனிப்பட்ட பிரதேசங்களாய் இருந்த நெப்ராஸ்காவும், ஒக்லஹாமாவும் அடிமைகளையும், அடிமைகளை வைத்திருப்பதையும் ஆதரித்து வந்தன.
1860-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் ஆன ஆபிரஹாம் லிங்கன் அதிபராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் தன்னுடைய தேர்தல் பிரசாரத்திலேயே அடிமைத்தனத்தை ஒழிப்பதாயும், அவற்றை விரிவு படுத்துவதைத் தடுப்பதாயும், ஏற்கெனவே அடிமைகள் இருக்கும் நாடுகளில் அடிமைகளை முற்றும் ஒழிக்கப் போவதாயும் சொல்லி இருந்தார். ஆகவே, தென் பகுதியின் பதினோரு நாடுகள் தங்களை வட பகுதியில் இருந்து பிரிந்துவிட்டதாய் அறிவித்தன. பதினோரு நாடுகளும் இணைந்து ஒரு குழுவாய் இயங்கப் போவதாயும், அதற்கு அதிபராய் ஜெஃபர்ஸன் டேவிஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்திருப்பதாயும் அறிவித்தன.
அடிமைத்தனத்தை ஒழித்த வடபகுதி மாநிலங்களும், அவற்றின் எல்லைப் பகுதிகளைச் சுற்றி இருந்த மற்ற அடிமைகளை ஆதரித்து வந்த மாநிலங்களும் ஆப்ரஹாம் லிங்கனின் ஆட்சிக்குக் கட்டுப் படுவதாய் அறிவித்தன. இவர்களோடு தாங்கள் இணையப் போவதில்லை என தென்பகுதி மாநிலங்கள் அறிவிக்கவும் இருவருக்கும் ஆரம்பித்தது உள்நாட்டு யுத்தம். யுத்தத்தின் முடிவு??? வரும் நாட்களில் காண்போம்.
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















