அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 7
அமெரிக்காவில் நம் இந்தியப் பண்டிகைகள் கொண்டாடுவது சனி, ஞாயிறுகளில் தான். உதாரணமாய் தீபாவளிப் பண்டிகை திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள எந்தக் கிழமைகளில் வந்தாலும், அதுக்கு முன்னர் உள்ள சனி, ஞாயிறோ அல்லது வியாழன், வெள்ளிகளில் வந்தால் அடுத்து வரும் சனி, ஞாயிறுகளையோ பண்டிகை கொண்டாடிக் கொள்கிறார்கள். தீபாவளிக்கு வீடுகளில் பட்டாசோ அல்லது மத்தாப்போ கொளுத்த அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. அமெரிக்கர்களின் சுதந்திர நாள் மட்டும் விதிவிலக்கு. மற்ற நாட்களில் இந்த மாதிரியான வாணவேடிக்கைக் கொண்டாட்டங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் சில இந்தியக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெரிய குழியாகச் செய்து, சுற்றிலும் தடுப்புப் போட்டு வைக்கின்றனர். தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, கோவிலிலேயே பட்டாசு, மத்தாப்பு விற்கின்றனர். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே விற்பனை செய்வார்கள். நாம் நமக்குப் பிடித்தமான பட்டாசு, மத்தாப்பு வாங்கிக் குறிப்பிட்ட இடத்தில், குறித்த நேரத்தில் மட்டுமே வெடிக்கலாம். அநேகமாய் இரவு 7-00 மணி முதல் 8-00 அல்லது 8-30 மணிக்குள்ளாக வெடிக்கும் விளையாட்டு முடிந்து விடும். அதற்குப் பின்னர் முடியாது.
தீபாவளி சமயத்திலும், மற்ற குறிப்பிட்ட பண்டிகைகள் சமயத்திலும், கைவினைப் பொருட்கள் காட்சிவிழா, பட்டுப் புடவை விற்பனை மற்றும் இந்தியப் பொருட்கள் விற்பனை, இந்தியப் பலகாரங்கள் விற்பனை எல்லாம் நடைபெறும். கோயில் தென்னிந்தியக் கோயிலாக இருந்தால், "தோசைத் திருவிழா' என்று தோசை விற்பனையும் நடக்கும். இந்தியர்கள் கூட்டம், கூட்டமாய் வருவார்கள். அனைவருமே காரில் வருவதால் வண்டிகளை நிறுத்தச் சிறப்பு ஏற்பாடுகளைக் குறிப்பிட்ட கோயில் செய்து தரும். கார் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப் படும்.
16-ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே அமெரிக்காக் கண்டத்தில் ஐரோப்பியர் குடியேற ஆரம்பித்தாலும், இதில் ஆங்கிலேயரின் பணி கணிசமானது. ஆங்கிலேய அரசில் அப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும் குடியிருக்க அமெரிக்கா வருவோரின் எண்ணிக்கை அதிகம் ஆனது. இங்கிலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தமும், அதில் இங்கிலாந்து மன்னனாக அப்போது இருந்த முதலாம் சார்லஸின் தலையை, அப்போதையப் பிரதம மந்திரியான "ஆலிவர் க்ராம்வெல்" துண்டித்ததும், ப்யூரிட்டன்கள் எனச் சொல்லப் பட்ட கிறிஸ்துவமதப் பிரசாரகர்கள் பெருமளவில் குடிபெயர ஆரம்பித்தனர். அதற்கு முன்னரே "ப்ரோட்டெஸ்டண்டுகள்" குடிபெயர்ப்பும் ஆரம்பம் ஆகி இருந்தது. இவ்வாறு இங்கிலாந்தில் ஏற்பட்ட மத ரீதியான சண்டை, அதனால் அரசியலில் ஏற்பட்ட மாற்றமும் குடிப் பெயர்ச்சிக்குக் காரணம் ஆனது.
இங்கிலாந்தில் மக்களாட்சி ஏற்பட்ட சமயம் "வில்லியம் பென்" என்பவருக்குப் பென்சில்வேனியா அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்துக்காகக் கொடுக்கப் பட்டது. கி.பி. 1607-ல் முதலாம் ஜேம்ஸ் என்னும் மன்னர் இங்கிலாந்து அரசரானபோது அவர் ஆதரவுடன், கிறிஸ்டோபர் நியூபோர்ட் தலைமையில், 3 கப்பல்கள் இங்கிலாந்துக் குடிமக்களுடன், இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு அமெரிக்கக் கண்டத்தின் ஒரு துறைமுகத்தை அடைந்தன. அந்தத் துறைமுகம் ஜேம்ஸ் அரசரின் மகன் பெயரால் "கேப் ஹென்றி" எனவும் பெயர் சூட்டப் பட்டது. இங்கிலாந்தில் இருந்து கப்பலில் 144 நாட்கள் பிரயாணம் செய்து வந்த மக்களில் சிலர் வர்ஜீனியாவில் குடியேறினர். அவர்கள் குடியேறிய பகுதி "ஜேம்ஸ்டவுன்" என மன்னர் பெயரால் அழைக்கப் பட்டது.
(இன்னும் வரும்)
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||



















