தாயென்று கும்பிடடி பாப்பா
- ஒத்தக்கையா? இரட்டைக்கையா?
காயத்ரி பாலசுப்பிரமணியன்
நாம் பிள்ளைகளாய் இருந்த போதும் சரி, இப்போதும் சரி, பிள்ளைகள் எப்போதும் விளையாடும் விளையாட்டு இது! ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு வேகமாக சுற்றுவர். வேக வேகமாக பெரிய வட்டமாக சுற்றும் போது மற்றொரு கையால் பிள்ளைகள் அங்கும் இங்கும் கண்ணில் பட்ட பொருளை தொட்டுக்கொண்டிருப்பார்கள். நேரம் ஆக ஆக, வேகம் அதிகரித்து பிள்ளைகள் கை நழுவி ஆளுக்கொரு பக்கம் விழுவார்கள். அடிபட்ட இடத்தை தேய்த்துக் கொண்டு மீண்டும் விளையாடுவார்கள்.
இந்த தடவையும் கையைப் பிடித்து விளையாடும் விளையாட்டுதான். சற்றே மாறுதலாக. ஆனால் ஜாத்திரதையாக. இருவரும் இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு விளையாடுவார்கள். சிறிய வட்டம். நிதானமான ஓட்டம். அடிபடாமல் ஆட்டம் தொடரும்.
இதை வாழ்க்கைக்கும் பொருத்திப் பாருங்கள். கச்சிதமாய்ப் பொருந்தும்! இளமையின் தலைவாயிலில் இருக்கும் போது மனிதனும் ஆசையும் இருவரும் ஒரு கை மட்டும் கோர்த்துக் கொண்டு பெரிய வட்டமாய் வாழ்க்கை ஓடும். அங்கங்கே கண்ணில் படும் இடத்திலெல்லாம் மனம் இடறி விழுந்து எழுந்து வரும். பல நேரம் லேசான காயம், சில நேரம் பலமான காயம். அது மட்டுமல்ல. தனக்கு கிடைக்கும் பொருள் மற்றும் வசதியைப் பார்த்து இது "நான் சம்பாதித்தது. என்னுடையது" என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு திரிவது ஒரு காலம். பிடி விலகும் போது மனிதன் தட்டாமாலைச் சுற்றி வேகமாய் எங்கோ சென்று விழுவான். பலமான அடி.
எழுந்து சுதாரிப்பதற்கே நேரமும் நாளும் ஆகும். மீண்டும் பயணம் தொடர வேண்டுமே! சுற்றும் முற்றும் பார்ப்பான், தேடுவான் யாரேனும் உதவிக்கரம் நீட்டுவார்களா என்று. இறைவனின் அருளால், நீளும் இருகரங்கள் இப்போதுதான் கண்ணில் படும்.நான்கு கரங்கள் இணைவதால் முதலில் பயம் விலகும். நம்பிக்கை பிறக்கும். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே மீண்டும் பயணம் தொடரும். நினைத்த இடத்திற்கெல்லாம் போக இயலாது. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட இடத்திற்கு உறுதியாய் போகலாம். வேகமான ஓட்டமும் கிடையாது. ஒருவரின் வேகத்திற்கேற்பவே மற்றவர் சுற்ற இயலும். நிதானமான பாதுகாப்பான பயணம்.
நான், எனது என்ற பேச்சுக்கெல்லாம் இடம் கிடையாது. அதனால் வீண் தொல்லைகளும் நம் பக்கம் தலை காட்டாது. மனிதனின் கை நழுவுவது போல் இருக்கும் தருணங்களில் இறைவன் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வான்.
இறைவனின் கரம் நழுவி விடாமல் இருக்க மனிதனும் இறுக்கமாய் பற்றிக் கொள்வான். பயணம் சிரமமின்றி தொடரும்.
பிள்ளைகள் புத்திசாலிகள். ஒத்தக்கை ஆட்டம் சரிவரவில்லை என்று தெரிந்தவுடனே ஒரு ஆளைத் தேடி இரட்டைக்கை ஆட்டத்திற்கு தயாராகிவிடுகிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
ஆனால் நாம்?
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














