தாயென்று கும்பிடடி பாப்பா
- அமெரிக்கா - 27
கீதா சாம்பசிவம்
வட மாநிலங்களின் தலைவர்கள் அப்படி ஒன்றும் யுத்த தந்திரங்களில் தேர்ந்தவர்களாக இல்லை. அவர்கள் கொஞ்சம் திணறித் தான் போனார்கள். பயிற்சி அதிகம் தேவைப்பட்டது. நிறையத் தவறுகள் ஏற்பட்டன. என்ன செய்ய வேண்டும் என்று புரிய ஆரம்பிப்பதற்குள்ளாக இந்தத் தவறுகள் முன் நின்றன. மிக மிக சுலபமாக தங்கள் படைகளை அனுப்பி, தென் மாநிலங்களுக்கு அப்போது தலைமை வகித்த ரிச்மாண்டைப் பிடித்து விடலாம் என்று அவர்கள் கண்ட கனவு சுக்குநூறாகப் போயிற்று. இத்தனைக்கும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இருந்து அது நூறு மைல்களே இருந்தது. வலுவான உறுதியான கான்பிடரேட்டின் படை வீரர்களின் ஆவேசத்துக்கு முன்னால் வட மாநில ஐக்கியக் குடியரசின் வீரர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆனால் இதெல்லாம் ஆரம்பத்தில் தான். ஆகவே ஆரம்பத்தில் தலைமை வகித்த தளபதியின் திட்டமான தென் மாநிலத்தைப் பொருளாதாரத் தடைகள் மூலம் வழிக்குக் கொண்டு வருவது அமுலாக்கப் பட்டது.
தென் மாநிலத்து மக்கள் விவசாயம் ஒன்றையே முக்கியமான தொழிலாக நம்பி இருக்க, மிசிசிபியைத் தங்கள் ஆதிக்கத்துக்குக் கொண்டு வந்த வட பகுதியினர் உணவுப் பொருட்களையும், அத்தியாவசியப் பண்டங்களையும் தெற்கே எடுத்துச் செல்லத் தடையும் விதித்தனர். லிங்கனும் இப்படி இரு பக்கமும் தாக்குதல் ஏற்படுத்துவதை உள்ளூர விரும்பினார். வர்ஜீனியாவோடு பேசிக்கொண்டு அவர்களுக்கு மேலும், மேலும் தங்கள் எண்ணங்களை வற்புறுத்துவதன் மூலம் ஒரு மாற்றம் அங்கே உள்ள தலைவர்களிடம் ஏற்படும் என எண்ணி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார். அதே சமயம் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், லூசியானா போன்ற மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை முழுமையாகத் தடை செய்வதையும் ஆதரித்தார். இம்மூன்று மாநிலங்களையும் சற்றே வடக்கே அமைந்திருந்த மற்ற தென் மாநிலங்களிலிருந்து தனியாகப் பிரித்தார். அவர்களைத் தனிமைப்படுத்தினார். முக்கியத் துறைமுகங்களைக் கைப்பற்றுவதிலும் ஈடுபாட்டைக் காட்டினார். இது வடபகுதி மக்களின் உயர்வையும், உழைப்பையும் காட்டுவதாய் எண்ணினார். ஆனால் ஒரு மிகப் பெரிய தகுதிக் குறைவு என்னவெனில் நல்லதொரு தளபதி, படைகளை உறுதியோடும், வலிமையோடும் தன்னம்பிக்கையோடு நடத்திச் செல்லும் தளபதி தேவை.
ஆனால் படை வீரர்களைச் சேர்க்க முடியவில்லை. தன்னார்வலர்கள் இரு பக்கமும் நிறையவே இருந்தனர். ஆனால் அவர்கள் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் அல்ல என்பதோடு, சண்டை இவ்வளவு நாட்கள், மாதங்கள், வருடங்கள் நீடிக்கும் என்பதைப் பெரும்பாலோர் எதிர்பார்க்கவும் இல்லை. என்றாலும் தென் மாநிலங்கள் இரண்டு லக்ஷத்துக்கும் மேல் படை வீரர்களைக் கொண்டிருந்தது. ஆனால் வடக்கே அவ்வளவு வீரர்கள் இல்லை. மேலும் மேலும் படை வீரர்களைச் சேர்க்க வேண்டுமெனில் அந்த அந்த மாநிலத்து கவர்னர்களைச் சரிக்கட்ட வேண்டி இருந்தது. மிகச் சுலபமாக வெற்றி கொள்ளலாம் என்ற நிலைமை மாறி யுத்தம் முடிவடையாத ஒன்றாக மாறவே இரு பக்கமும் தன்னார்வலர்கள் வந்து படைகளில் சேருவதும் குறைந்து விட்டது. முற்றிலும் குறைந்து போய் ஒரு கட்டத்தில் “கட்டாய ராணுவ சேவை” என்னும் திட்டத்தைச் சட்டம் போட்டு அமுலாக்க நேர்ந்தது. ஆனால் இம்முறையில் ஊழல் மிகுந்தது. படை வீர்ர்களைச் சேர்ப்பதில் மட்டுமின்றி அவர்களுக்கெனச் சீருடை தயாரித்தல், ஆயுதங்கள் விநியோகிப்பது என அனைத்திலும் ஊழல் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் இதிலேயும் வட மாநிலங்கள் முன்னேற்றம் காண ஆரம்பித்தன. வடமாநிலங்களின் பொருளாதாரம் உறுதியாக இருந்ததோடு உள்நாட்டிலும் வலுவடைந்திருந்த காரணத்தால் தொழிற்சாலைகள் சீருடைகளையும், ஆயுதங்களையும் சுயமாகத் தயாரித்த்தோடு அல்லாமல் தரமாகவும் தயாரிக்க ஆரம்பித்தன.
ஆனால் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமெ நம்பி இருக்கும் தென் மாநிலங்களிலோ தொழில் முறையில் எதுவும் நடைபெறாததோடு அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட வெளிநாடுகளின் தயவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் இருந்தது. ஆகவே பொருளாதார ரீதியான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அது தவித்துக்கொண்டிருந்தது. தனக்குத் தேவையான யுத்த தளவாடங்களுக்குக் கூட திண்டாடிய தென் மாநிலங்கள் அரசு ஆதரவோடு கூடிய சுய தயாரிப்புகளைச் செய்து வரும் தொழிற்சாலைகளை நாடியது. அதன் மூலம் பெருவாரியான ஆயுதங்களும் வெடி மருந்து பொருட்களும் தயாரிக்கப் பட்டு படை வீரர்களுக்குப் போதுமான அளவு விநியோகம் செய்ய முடிந்தது. ஆனால் முக்கியமான தொழிலான விவசாயத்தில் வெற்றி கிட்ட வில்லை. உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பட்டாலும் வெளிநாடுகளுக்குத் தேவையான அளவு ஏற்றுமதி செய்ய முடியாமல் அனைத்துத் துறைமுகங்களும் வட மாநிலத்தின் ஆதிக்கத்தில் இருந்தன. பண்ணைகளிலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில் தொடர்களும் துறைமுகங்களுக்குச் செல்லுமாறே அமைக்கப் பட்டிருந்தன. ஆகையால் உள்நாட்டுக்குள்ளேயே தேவையான இடங்களுக்குச் செல்லும்படியாக அனுப்பவும் முடியவில்லை. புதிய ரயில் தடங்களை யுத்த காலங்களில் ஏற்படுத்துவதும் மிகுந்த சிரமமாக இருந்தது. உணவு தேவைப்படும் தூரத் தென் மாநிலங்களில் உள்ளோருக்கு எவையும் அனுப்ப முடியாமல் தனித்துத் துண்டிக்கப் பட்டனர். அங்கே விளையும் பொருட்களும் இங்கே வர முடியவில்லை. ஆகவே தென் மாநிலப் படை வீரர்களுக்கும் சரி, தலைவர்களுக்கும் சரி மனச் சோர்வு ஏற்பட்டது. பண்ணை நிலங்களையோ, அல்லது அங்கே விளைந்த பருத்தியையோ உடனடியாக யுத்த தளவாடங்களாக மாற்ற முடியவில்லை. கருவூலத்தில் பணம் இல்லை. தயாரிக்கப் பட்ட பருத்தித் துணிகள் பேல் பேலாகத் தேங்கிக் கிடந்தன. கான்பிடரேட் அரசுக்குக் கடன் சுமை ஏறியது. மேலும் மேலும் காகிதத்தால் ஆன பண நோட்டுகளை அச்சிட்டாலும், அதன் மூலம் பண வீக்கமே அதிகரிக்க ஆரம்பித்தது. 1863-ம் ஆண்டில் கான்பிடரேட் அரசின் ஒரு டாலர் மதிப்பு எட்டு செண்ட்டுகளுக்கும் கீழே போய் மிகவும் தாழ்ந்து விட்டது. இதன் மூலம் அரசியல் ரீதியாகவும் வடக்கே உயர்ந்து நின்றது. இதை அடுத்துப் பார்ப்போம்.
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















