தாயென்று கும்பிடடி பாப்பா
- வானம் எனக்கொரு போதிமரம்
சுப்பிரமணியம் ஷர்மா
வாழ்வின் இறுதிக் கட்டம்
எங்கே வாழ்க்கை தொடங்கும்?அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் வாழ்க்கை,இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
பாதை எல்லாம் மாறிவரும். பயணம் முடிந்து விடும்.
மாறுவதைத் தெரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்.
என்ற மனித வாழ்க்கைப் பயணத்திற்கான கண்ணதாசனின் இந்த வரிகள் விண்மீனுக்குப் பொருந்தாது என்பதே மெய்.
மனித வாழ்வில் மிக வினோதமானது அதன் முடிவாகும். இப்படித்தான் முடியும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூறவியலாதது மனித வாழ்வின் முடிவு. ஆனால் விண்மீனின் வாழ்வு எப்போது எப்படி முடியும் என்பதை வரையறுத்துக் கூற முடியும்.பிறக்கும் பொழுது விண்மீனின் நிறை நமக்குத் தெரியும் பட்சத்தில் , முன்னர் குறிப்பிட்டது போல் விண்மீனின் வாழ்க்கைப் பயணப் பாதை மற்றும் அதன் முடிவை வானியலாளர்களால் ஊகித்துக் கூற இயலும்.
ஒரு விண்மீன் கதிரவனின் நிறைப் போல் 8 மடங்கு மதிப்பு நிறையைப் பிறக்கும் பொழுது பெற்றிருந்தால் , அது 10 முதல் 15ஆயிரம் மில்லியன் ஆண்டு வாழ்விற்குப்பின்னர் சிவப்பரக்கனாக(Red Giant ) மாற்றமடையும்.அதன் பின்னர் வெள்ளைக் குள்ளனாக(White Dwarf ) உருமாற்றம் அடைந்து, குளிர்ந்து மங்கலாகி மறைந்து விடும்.இருப்பினும் எல்லா விண்மீன்களின் வாழ்வும் இது போல் எந்த சுவாரசியம் இன்றி முடிவதில்லை.பொதுவாக பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள், பெரு நோவா(Super nova )க்களாக மாற்றமடைந்து பல கோடி கதிரவன்களின் பொலிவுடன் பிரகாசித்து, பின் வெடித்து தூள்தூளாகின்றன.
வானியல் நிகழ்வுகளில் இத்தகைய பெரு நோவாக்கள் காணப்படுவது மிக அரிதானது. வானியல் நிகழ்வுகளில் இத்தகைய பெரு நோவாக்கள் காணப்படுவது மிக அரிதானது.நமது பால்வழிக்கூட்டத் திரளில் (Milky way galaxy )1987 ஆம் ஆண்டிற்கு முன் குறிப்பிடும் படியாக மூன்று பதிவுகளே செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக கிமு 1054 ஆம் ஆண்டு ரிஷப விண்மீன் கூட்டத்தில்(Taurus constellation ) ஒன்றும்,கிபி1572 ஆம் ஆண்டில் டைக்கோ பிராஹியால் இரண்டாவதும் ,கிபி 1604 ஆம் ஆண்டில் கெப்ளர்(Kepler) மற்றும் கலிலீயோ(Galileo) ஆகியவர்களால் மூன்றாவதும் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கலிலீயோ(Galileo) டைக்கோ பிராஹி (Tycho Brahe) கெப்ளர்(Kepler)
கிபி 1987 ஆம் ஆண்டில் நம்மிடமிருந்து 170,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய மெக்லானிக் மேகக் கூட்டம்(Large Magellanic cloud galaxy) என்ற விண்மீன் திரளில் கட்புலனாகும் அளவிற்கு பொலிவுடைய பெரு நோவா ஒன்றை 29 வயதேயான இயான் ஷெல்ட்டன்(Ian shelton) என்ற கனடா (Canada) நாட்டைச் சேர்ந்த இளம் வானியலாளர் சிலி (Chile) நாட்டிலுள்ள லாஸ் காம்பனாஸ் (Las Companas) வானியல் ஆய்வு மையத்திலிருந்து கண்டறிந்தார்.இப் புதிய பெருவோவா SN1987 A , என்று பெயரிடப் பட்டுள்ளது.மேற்கண்ட நிகழ்வு வான் பொருட்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களை தொலை நோக்கி மற்றும் இதர கருவிகள் மூலம் காண ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இயான் ஷெல்ட்டன்(Ian shelton)
மேற்குறிப்பிட்ட இரு வகையான பெரு நோவாக்களைத் தூண்டும் உந்து சக்தி எது ?என்பதை அறிய முன்னர் கூறிய கருத்துக்களை மீண்டும் நினைவு கூர்வோம். முதல் வகை பெரு நோவா, தொடக்கத்தில் இரட்டை விண்மீன் ஒன்றின் வெள்ளைக்குள்ளனாக இருந்து அதன் கூட்டாளியான சிவப்பரக்கனின் பொருளை ஈர்ப்பதால் அளவில் பெரியதாகிக் கொண்டு வரும்.ஒரு கட்டத்தில் இவ் வெள்ளைக் குள்ளனின் நிறை 'சந்திர சேகர் எல்லை' நிறையை விட அதிகமாகும் பொழுது ,உட்புற அழுத்தம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிப்பதன் காரணத்தால் வன்மையாக வெடித்து பெரு நோவா ஆக மாறுகிறது.
இரண்டாம் வகை பெரு நோவா தனது வாழ்க்கையை மிக அதிக நிறை கொண்ட விண்மீனாகத் தொடங்குகிறது.அதாவது அதன் நிறை கதிரவனின் நிறையைப் போல 9 முதல் 30 மடங்காக இருக்க வேண்டும்.இத்தகைய பேரரக்க (Super Giants) விண்மீன்கள் பொதுவாக 10 மில்லியன் ஆண்டுகள் வாழ்னாளைப் பெற்றிருக்கும். மற்ற சாதாரண விண்மீன்களில் நிகழ்வதைப் போலவே இவற்றிலும் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைவதால் ஹீலியம் அணுக்கரு உருவாகும் வினையே நடைபெறுகிறது. இருப்பினும் அவற்றின் அதிகமான நிறை முந்தைய வினையை தொடர அடிகோலுகிறது.இதனால் ஹீலியம் அணுக்கருகளின் இணைவு நிகழ ஆரம்பிக்கிறது.இடைவிடாத ஈர்ப்பு விசையின் காரணமாகத் தோன்றும் அழுத்தம் விண்மீனின் உட்புற வெப்ப நிலையை 1900 மில்லியன் கெல்வின் அளவுக்கு உயர்த்துகிறது.இதனால் மேலும் புதிய கனமான தனிமங்கள் உருவாக வழியேற்படுகிறது.
ஆனால் இந்த நிலை அதிக நேரம் நீடித்திருப்பதில்லை.ஒரு நொடியில் நூற்றில் ஒரு பங்கு காலத்திற்கும் குறைவான கால அளவில் மீண்டெழும் உட்கரு அதிர்வு அலைகளை(Shock Waves) மிக விரைவாக வெளிவிடத் தொடங்கும். அவ்வாறு வெளிவரும் அதிர்வலைகள் நொடிக்கு 180,000 கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்பட்டு விண்மீனின் வெளிக்கூட்டைத் தகர்த்துக் கொண்டு , மிகப்பொலிவுடன் எரிந்து பெரு நோவா ஆக நமக்குக் காட்சி தருகிறது.இந்த வெடிப்பானது மிக வலிமையானதென்பதால் வெளிக் கூட்டில் இருந்த லேசான தனிமங்கள் அணுக்கரு இணைவு வினையில் ஈடுபட்டு புதிய தனிமங்களான கால்சியம், யுரேனியம் மற்றும் காரீயம் போன்றவற்றை உருவாக்கும். உருவாக்கப்பட்ட இப் புதிய தனிமங்கள் விண்வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.
இரண்டாம் வகை பெரு நோவா பொதுவாக எச்சங்களை விட்டுச்செல்லுகிறது.அப்படி விட்டுச்செல்லும் எச்சங்கள் கூட மீண்டும் அதன் நிறையையே சார்ந்தமைகிறது.கதிரவனைப் போல் 10 முதல் 20 மடங்கு நிறை கொண்ட விண்மீன் தரும் இந்த எச்சம் முழுக்கமுழுக்க நியூட்ரான்களால் ஆன பொருளாகும். இப் பொருளானது சுமார் 30 கிலோமீட்டர் விட்டத்தையும் ,ஒரு தீப்பெட்டியின் கனத்தில் 10 மில்லியன் டன் நிறை என்ற அளவிற்கு அடர்த்தியையும் உடையதாக விளங்கும்.இத்தகைய நியூட்ரான் விண்மீன்களின் வினோதத்தன்மை என்னவென்றால் இவைகள் ஒளிக்குப் பதில் ரேடியோ அலைகளைத் துடிப்புகளாக(Pulses ) வெளித்தருகின்றன. இக் காரணத்தால்தான் இவை பல்சார்(Pulsars ) என்றழைக்கப் படுகின்றன.
ஆனால் விரைவிலேயே மேற்கூறிய ஐயப்பாடு சரியில்லை என்பது கண்டறியப்பட்டது. மிகச் சரியான இடைவெளியில் புவியில் பெறப்படும் இது போன்ற ரேடியோ சைகைகள் சுழலும் நியூட்ரான் விண்மீன் வெளியிடும் சைகைகளே என்பது கண்டறியப்பட்டது. நியூட்ரான் விண்மீனைச்சுற்றியுள்ள வலிமை மிக்க காந்தப்புலமே இதற்குக் காரணமாகும்.
கதிரவனைக் காட்டிலும் 30 முதல் 50 மடங்கு நிறையுடைய விண்மீனின் தலையெழுத்து இன்னும் வினோதமானது.அதன் உள்ளகம் அதிகமாக இறுக்கப்படுவதால் அடர்த்தி அதிக அளவிற்கு உயர்கிறது.இதன் காரணமாக ஈர்ப்பு விசை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதால் ஒளி கூட அதன் ஈர்ப்பிலிருந்து தப்ப முடியாது. இதனைக் கருந்துளை (BLACK HOLE) என்கிறோம்.
கருந்துளையிலிருந்து ஒளி முதல் எதுவும் வெளிவரமுடியாது என்பதால் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் வானவியலாலர்கள் இத்தகைய கட்புலனாகாத பொருட்களின் இருப்பிடத்தையும் அவற்றின் ஈர்ப்பு மற்றும் அவற்றின் அருகிலமைந்த பிற வீண்மீன்களின் மீதான தாக்கம் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்கின்றனர்.
பெரு நோவாக்கள் ஒரு வகையான விசித்திரமான பொருட்கள் எனலாம். ஏனெனில் நமது இந்த ஊன் உடம்பு ஆக்கப்பட்ட எல்லாத் தனிமங்களும் கூட விண்மீன் தூசு (STAR DUST) வழியாகத்தான் உருவாக்கம் பெற்றுள்ளன.அண்டத்தில் நாம் காணும் கனமான தனிமங்கள் அனைத்துமே எப்போதோ பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பெரு நோவா வெடிப்பின் பொழுது உருவாகி இப்பொழுது நம்மிடம் இருக்கிறதெனக் கூறலாம்.
கார்பன்,நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன்,எலும்பிலுள்ள கால்சியம் இரத்தத்திலுள்ள இரும்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் அனைத்துமே கணக்கிலடங்காத காலத்திற்கு முன்பு இறந்து போன விண்மீனின் எச்சங்களே என்பதுதான் உண்மை. அப்படிப் பார்க்கும் பொழுது விண்மீன் தூசியிருந்து உருவாகி மீண்டும் விண்மீன் தூசியையே நாம் அனைவரும் அடைவதுதான் மனித வாழ்வின் விதி என்றால் அதில் மிகைப்படுத்தல் எதுவுமில்லை.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














