தாயென்று கும்பிடடி பாப்பா
- எளிய முறை உடற்பயிற்சி
ஆகிரா
தன் வாழ்நாள் உள்ள வரை உலக நன்மைக்காகவே பாடுபட்டு அம்முயற்சியில் உலகெங்கிலுமுள்ள நன்மக்கள் பலரையும் ஒருங்கிணைத்து மனவளக்கலை மன்றம் எனும் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்ட அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி மனித குலம் உய்வதற்காக உடலையும் உள்ளத்தையும் முறைப்படி பேணிக் காக்க சிறந்ததொரு மார்க்கத்தை அருளிச் சென்றார். அவர் ஏற்படுத்திய உடற்பயிற்சி பற்றியும் தியானம் பற்றியும் அவரே விரிவாக எழுதிய நூல்கள் உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் படித்துப் பயன் பெற ஏதுவாக உள்ளன.
அவர் அருளிச் செய்த எளிய முறை உடற்பயிற்சி எனும் நூலில் உள்ள பயனுள்ள தகவல்களை இங்கே சமர்ப்பிக்கிறோம்.
ஆகிரா
எளிய முறை உடற்பயிற்சி
முன்னுரை:
உடலும் உயிரும் இசைந்து இணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன்.
அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு.
வியத்தரு ஆற்றல்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிர்ச்சக்தி
குறுகியும், விரித்தும், நுணுகியும், இயக்கத்தக்க அறிவுத்திறன்.
இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கரு மூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்து நிலையை எய்தியுள்ளன.
ஓர் உயர்ந்த குறிக்கோளோடு மனித இனம் இவ்வுலகுக்கு வந்துள்ளது.
மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்வதையும், அறிவில் முழுமை பெற்று இயற்கையை உணர்ந்து, ரசித்து அதனோடு ஒன்றி வாழ்ந்து நிறைவு பெறும் நிலையான அமைதியைப் பெறுவதையும் உள் நோக்கமாகக் கொண்டதே மனித வாழ்க்கை.
அறிவில் உயர்வு பெற்று, உயிரின் மதிப்பும் சிறப்பும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமெனினும், அது வெற்றி பெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே மனித உடலின் அமைப்பையும் அதன் இயக்கங்களயும் குறித்து முதலில் நாம் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் நன்மை பயக்கும்.
மனித உடல் இயங்குவதற்கு உயிர்ச்சக்தி மூகியமானதாக, மூலகாரணமாக இருக்கிறது. உயிர்ச்சக்தி தங்கும் ஒரு பாத்திரம் போல் உடல் அமைப்பு இருக்கிறது. மனித உடலை நுணுகி ஆராய்ச்சி நோக்கினால், பஞ்சபூதங்களின் அமைப்புக்கு இசைய ஐந்து அடுக்குகளாக அது இருப்பது தெரியவரும்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்று பஞ்ச பூதங்களாவான உடலமைப்பில்,
பிருதிவி என்னும் மண், பரு உடலாகவும்,
அப்பு என்னும் நீர், இரத்தமாகவும்,
தேயு என்னும் நெருப்பு, உடல் சூடாகவும்,
வாயு, என்னும் காற்று, மூச்சாகவும்,
ஆகாசம் என்பது உயிர்ச்சக்தியாகவும்,
இருக்கின்றன. நீர், நெருப்பு, காற்று இந்த மூன்றும் சேந்து பருப் பொருளான உடலையும் நுண்பொருளான உயிர்ச்சக்தியையும் இணைந்து அவை நட்போடு இயங்கச் செய்கின்றன.
இந்த மூன்றும் பொருட்களின் இயல்பான அளாவும் தரமும் குறையுமாயின, அவற்றின் சுற்றியக்கத்துக்குத் தடை நேருமாயின், உடலின் உயிர்ச்சக்திக்கு, அதாவது மின்சார சக்திக்கு ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் வலியும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இத்தகைய சீர்குலைவு ஏற்படும் போது, அதை வலி என்கிறோம். சீர்குலைவு வலியும் அதிகரிக்குமாயின், அந்த அளவுக்கு உயிர்ச்சக்தியின் களைப்பு அதிகரித்து விடுகிறது, அதை நோய் என்கிறோம். இந்தச் சீர்குலைவு அதிகமாக ஏற்பட்டு, உயிர்ச்சக்தி குறைந்து விடுமாயின் பெரும் அளவில் உடலியக்கம் தடைப்பட்டு அப்படியே நின்று விடுவதையே மரணம் என்கிறோம்.
மேலே கூறியவற்றிலிருந்து உடலை நலத்தோடு வைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும் உயிர்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறு நேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. இயற்கைச் சக்திகளின் இயக்கத்தாலோ அல்லது ஐம்புலன்களின் இயக்கத்தாலோ இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது. உணவு, உறக்கம், உழைப்பு, பால் உறவு இவற்றை மிகையாகப் பயன்படுத்துவதாலும், தவறாகப் பயன்படுத்துவதாலும், புறக்கணிப்பதாலும் எண்ணத்தை இயற்கையின் இனிமைக்கு முரணாகப் பயன்படுத்துவதாலும், பலவிதத் தொந்தரவுகள் நேரலாம்.
பருவ வேறுபாடு
பாரம்பரிய கருவமைப்புப்பதிவு,
வானில் கோள்களின் ஓட்டத்திலும் சேர்க்கையிலும் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள்,
இவை இயற்கைச் சக்தியால் நேரும் பாதிப்புகள் ஆகும். இந்த விளைவுகளிலிருந்து காத்துக் கொள்ள இயற்கை, சில தடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்தத் தடுப்பு வசதிகளையும் கடந்துபோகும் நிலை உண்டானால் உடல் கெடுகிறது. பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களாலேயே நாம் தடுத்துக் கொள்ள முடியும்.
சில சமயங்களில் சந்தர்ப்பவசத்தால் நாம் செயல்படும் பொழுது, தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம். இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியம் அன்று. எதிர்ப்புச் சக்தியை உயர்த்திக்க் கொள்ள நாம் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதனால் இயற்கைச் சக்திகளின் விளைவுகளாலும், நாம் செய்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளாலும், உடல் நலக்கோடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களால், நோய்வாய்ப்பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம் நோயை விரைவிலும், வெற்றிகரமாகவும் குணப்படுத்திக் கொண்டு, உடல் நலத்தை விரைவில் பெற்றிடலாம்.
உடற்பயிற்சிகளில் இரு அமைப்புகள் உண்டு.
1. தேகம் நிற்கும் நிலை அல்லது தொடக்க நிலைகள், 2. அசைவுகள் (movements) நாம் முன்பு குறிப்பிட்ட மூன்று தன்மைகள் இரத்தும், வெப்பம், காற்று மனித உடலில் அடுக்கடுக்காக உள்ளன. அவை புவி மைய ஈர்ப்புச் சக்தியால் செயல்படுகின்றன. உடல்நிலை மாறுபட்டால் உடலின் ஒரு பகுதி புவிமையத்தை நோக்கியோ அல்லது அதற்கு எதிர்ப்புறத்திலோ இருப்பதால், இம்மூன்று தன்மைகளின் இருப்பு நிலையில் (அல்லது அவற்றின் ஒரு பகுதியில்) மாற்றம் ஏற்படுகிறது. உடலின் ஒரு பகுதியைப் புவி மையத்தை நோக்கித் திருப்பினால் அந்தப் பகுதியில் இரத்தம் சிறிது அதிகமாகப் பாய்கிறது. காற்று சிறிது அதிகமாகப் பாய்கிறது. காற்று சிறிது அதிகமானால், அது உடலின் மறு பகுதிக்குப் பாய்கிறது. இதோடு கூட மூறையான அசைவுகள் மூலம் இந்த மூன்று தன்மைகளும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. ஒழுங்கான பயிற்சிகள் மூலம் உடலின் பல பகுதிகள் சுத்தப்படுகின்றன. சரியான உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் இயற்கைச் சக்திகளால் விளையும் தீய விளைவுகளைச் சரிப் படுத்திக் கொண்டு உடல் நலத்தைப் பெறலாம்.
நினைவுக்கு எட்டாத காலம் முதற்கொண்டே பருவ நிலை, வாழ்க்கை முறை, இன்னும் இதர பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பலவகையான உடற்பயிற்சிகள் உள்ளன. முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் நிலையில் இருந்ததால், அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. விரைவு, அழுத்தம், பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமது தேவைகளும் வேறு விதமாகிவிட்டன. ஆகவே முந்தைய உடற்பயிசிகள் இந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவையாகா.
இது சம்பத்தமாகப் பல ஆண்டுகள் நான் சிந்தித்து வந்தேன். பலவிதமான ஆசனங்களையும் உடற்பயிற்சிகளையும் ஆராய்ந்து பார்த்தேன். இப்பயிற்ச்சிகளை நானே செய்து பார்த்து அதன் விளைவுகளை எனது உடல் மூலம் தெரிந்து கொண்டேன். இந்திய மருத்துவத் துறையில் எனக்கு இருந்த அறிவு இந்த ஆய்வுக்கு உதவியது. இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்து வருவதால்,
1. உடலுக்குள் பிராணவாயு பரவி நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது.
2. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது.
3. நோய் வராதபடி தடுப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
4. ஆரோக்கியமான உடம்பும், நீடித்த ஆயுளும் உண்டாகின்றன.
5. ஆடவருக்கும், பெண்டிருக்கும், குழந்தைகளுக்கும், பல்வேறு வாழ்க்கை நிலையில் இருப்பவர்களுக்கும் ஏற்றதாக உள்ளாது.
6. பல்வேறு காலநிலைகளுக்கு ஏற்றதாக உள்ளது.
7. உடலை வருத்தாமலும், துன்புறுத்தாமலும் செய்யலாம்.
8. மனித உடலில் உள்ள விலங்கினப் பதிவுகளை நீக்குவதற்கு இந்த உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
9 குறைந்த காலத்தில் முடிக்கக் கூடியவாறு, ஒன்பது பயிற்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதன்மூலம் ஆன்மீகத் தேடலில் வெற்றி பெற்று நாம் இந்த மண்ணுலகுக்கு எதன் பொருட்டு வந்தோமோ, அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கிறோம். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்பவர்கள் இந்த நூலில் விவரித்துள்ள நன்மைகளை நிச்சயம் அடைவார்கள். எளியமுறைக் குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் செய்து பழுகுவதன் மூலம் பெரும் அளவில் நன்மை அடையலாம். இந்தப் பயிற்சிகள் அதற்கு அதிக அளவு உதவியாய் இருக்கும்.
வாழ்க வளமுடன்
வேதாத்ரி
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














