Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    என்னைப் பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழ்வில் முன்னேறும் வழிகள்
ஆகிரா

 

அன்பு நண்பர்களே,

வாழ்வில் முன்னேறும் வழிகள் குறித்து என் மனதின் ஆழத்தில் பதிந்துள்ள பல கருத்துக்களையும் இவை தொடர்பான சம்பவங்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.

"முதலில் நீ வாழ்வில் முன்னேறி விட்டாயா?" என்று என்னைக் கேட்டிர்களெனில் நான் ஆணித்தரமாகக் கூறுவேன், "ஆம்" என்று.

முதலில் முன்னேற்றம் என்பது என்ன என்று வரையறை செய்யப்படுதல் மிகவும் அவசியம். அவ்வாறு வரையறை செய்வதற்கு முதலில் வாழ்க்கை என்றால் என்னவென்றும் வாழ்வின் நோக்கம் என்னவென்றும் அறிந்திருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து வாழ்வதற்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்க வேண்டும், அதனை தெளிந்த சிந்தையுடன் சிந்தித்து அறிவது மிகவும் இன்றியமையாததென நமக்கு வழிகாட்டிகளாக விளங்கிய முன்னோர்கள் மற்றும் ஞானியர் அனவரும் தெரிவிக்கின்றனர்.

வாழ்வின் லட்சியம்

இத்தகு சிந்தனை மனதில் எழ வேண்டுமெனில் அதற்கு முதலில் வாழ்வில் நமக்கு இன்பத்தைத் தரவல்ல பொருட்களின் மேலும் உறவுகளின் மேலும் இயல்பாகவே உள்ள நாட்டத்தைக் குறைப்பது அவசியம். இத்தகைய நாட்டமே பற்று என்று அறியப்படுகிறது. பற்றை விடுவதற்குப் பரம்பொருளின் அருள் மிக அவசியம். பரம்பொருள் என்பது யாதெனில் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பிற யாவற்றையும் படைத்து, காத்து, அழித்து ஆளும் சக்தியே. இதனை இறை என்று சமய மார்கத்தில் செல்வோர் குறிப்பிடுகின்றனர். இயற்கை என்று பிறர் குறிப்பிடுகின்றனர். அருட்பேராற்றல் என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றும்
பற்றுக பற்றை விடற்கு

நாம் முதன்முதலாக ஏதேனுமொரு சுற்றுலாத் தலத்துக்கோ ஆலயத்துக்கோ செல்கையில் அவற்றைப் பற்றி அறிய ஏற்கெனவே அங்கு சென்று வந்தவர்கள் அல்லது அத்தலங்களிலே வாழ்வோரிடம் வழிகாட்டுதலைப் பெறுவது வழக்கம். அது போலவே பற்றினை விட்டு, தெளிந்த சிந்தையைப் பெற நாம் செய்ய வேண்டுவது யாதெனில் நமக்கு முன்னரே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்ற ஒருவரது வழிகாட்டுதலைப் பெறுவதேயாகும். இத்தகையவரை குரு என்று ஆன்றோர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய குரு இல்வாழ்வைத் துறந்து சந்நியாசியாக வாழ்பவராக இருத்தல் அவசியமில்லை. நம்மிடையே கலந்து பழகி இல்வாழ்வில் சிறந்து விளங்கி நமது அறிவை வளர்க்கவும் நல்ல ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவும் உதவும் மூத்த நண்பர்களே நமது வாழ்க்கைக்கும் வழிகாட்டிகளாக விளங்குவதை நாம் உணர்ந்தாலே போதும்.

மோகத்தைக் கொன்று விடு

மோகத்தைக் கொன்று விடு அல்லால் என்றன்
மூச்சை நிறுத்தி விடு
தேகத்தை சாய்த்து விடு அல்லால் அதில்
சிந்தனை மாய்த்து விடு
யோகத்திருத்தி விடு அல்லல் என்தன்
ஊனை சிதைத்து விடு
ஏகத்திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே

பந்தத்தை நீக்கி விடு அல்லால் உயிர்
பாரத்தைப் போக்கி விடு
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை
செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே எல்லாமென
எண்ணியிருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே உள்ளேனென்று
இயங்கி இருப்பவளே

உள்ளம் குளிராதோ பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளமுருகாதோ அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே இன்ன சிறு
வேட்கை தவிராவோ?
விள்ளற்கரியவளே அனைத்திலும்
மேவியிருப்பவளே

என்று மஹாகவி பாரதி பராசக்தியை இறைஞ்சுகின்றார். பாரதியார் நமது நாடு சுதந்திரம் பெறவென்றே தனது வாழ்வை அற்பணித்தவர். அவ்வாறு அவர் தம் வாழ்வில் நாட்டுப்பணியையே பெரிதும் செய்து வாழ்கையில் அவர் இல்லறம் சிறப்பாக நடக்க இயலாத சூழ்நிலையால் பல சமயம் பரிதவித்தார் என்பதை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலைகளில் தன் வீட்டுப் பிரச்சினை நாட்டுப் பணிக்கு இடையூறாக இருக்கலாகாதெனும் எண்ணத்திலேயே இப்பாடலை எழுதினார் என எண்ணுகிறேன்.

என்னடா இவன் வாழ்வில் முன்னேற வழிகாட்டுகிறேன் என்று கூறிவிட்டு சாமியாராவதற்கு வழி சொல்கிறானே என எண்ணுவோருடை சந்தேகத்தைத் தீர்க்க என்னாலியன்ற வரை முயல்கிறேன்.

பிறந்த நாள் முதல் நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் முன்னேற்றங்களை அடைகிறோம் என்பதை சற்றே சிந்தித்துப் பார்த்தால் நாம் அறியலாம். பிள்ளைப்பருவத்தில் உலகிலுள்ள பல பொருட்களைப் பற்றியும் வாழ்வின் பகுதிகளைப் பற்றியும் கண்டும், பிறர் சொல்லக் கேட்டும் அறியும் நாம் கல்வியையும் தொழில் செய்யும் திறனையும் பெற்ற நிலையில் அதுவரையில் பெற்றோரின் ஆதரவில் வாழ்க்கை நடத்திய நிலை மாறி நாமே சுயமாக வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஈட்டும் கடமையையும் நம் பெற்றோரைக் காப்பாற்றும் கடமையையும் செய்யத் துவங்குகிறோம்.

வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தானாக அமையும் இக்கடமைகளை நாம் முயன்று செய்ய நம்மை மிகவும் தூண்டுவது நமது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுள் நம்மில் மூத்தோர் வாழ்த்து வரும் முறையை நாம் அறிவதேயாகும். இவ்வாறு நாம் நமது பெற்றோர், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் மற்றும் நாம் வாழும் சமுதாயத்தின் நலன் கருதி செயல்புரிகையில் அங்கே தன்னலம் அழிகிறது. தாய் தந்தை முதலான பிற அனைவரின் ஆதரவு நமக்களித்த சுகங்களினால் விளையும் இன்பத்தைக் காட்டிலும் நம் ஆதரவால் பிறர் அடையும் சுகங்களை நாம் அறிகையில் விளையும் இன்பம் மிகப்பெரிது.

மோகத்தைக் கொன்று விடு

அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னையறிந்தால் உண்மை இன்பம்
தன்னலம் அழிந்தால் பெரும் பேரின்பம்

இத்தகைய பேரின்பத்தை அனுபவித்து உணர்பவருக்கு வாழ்வின் நோக்கம் எளிதில் புரிகிறது. நாம் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு கணமும் பிறரது துயர் துடைத்து அவரது இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு கலந்து பழகுகையில் இறை சக்தி நம்மையறியாமல் நம்மை ஆட்கொள்கிறது. அப்பொழுது நாம் நம்மையறிகிறோம், இவ்வுலகை நேசிக்கப் பழகுகிறோம். இந்நிலையில் நமக்கு விதிவசத்தால் ஏதேனும் துன்பம் நேர்கையில் அத்துன்பத்தை நீக்கி இன்பம் தர இறையருள் பிறர் வடிவில் செயல்படுவதையும் நாம் அனுபவிக்கிறோம். நம் வாழ்வில் நமக்குப் பிறரது ஆதரவு பெருகுவதையும் உணர்கிறோம். இவ்வாறு பிறரது ஆதரவைப் பெற்றவர் முயன்று செய்யும் பணி என்றும் முழுமையாக நிறைவேறுவது திண்ணம்.

எண்ணி முயன்ற பணி நிறைவேறுவது வெற்றியல்லவா! அத்தகைய வெற்றி வெறும் பொருளீட்டுவதில் கிடைக்காது. சிறிது பொருளே ஈட்டிடினும் அதனைக் கொண்டு நம்மைத் தவிரப் பிறரும் பயனுறும் நிலையே நிலையான வெற்றியாகும். இத்தகைய நிலையான வெற்றியை அடைந்தவர்க்கு இந்த உலகே ஸ்வர்க்கமாகிறது.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/paasam/ulagam-pirandhathu.php" target="_next">பிறக்கும் போதும் அழுகின்றாய்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக அன்னை
மடியை விரித்தால் எனக்காக

என்ற பாடல் வரிகளில் காணும் இன்ப உணர்வை இத்தகையோர் பெறுவர்.

வாழ்நாளெல்லாம் அழியும் பொருளான பணம் மற்றும் தனது சுய நன்மைகளை மட்டுமே கருதி ஈட்டும் இன்ன பிற பொருள் அனைத்தும் தரும் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே அதிகமாக விளையும்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்த தொரு கல்வி மனப் பழக்கம் நித்தம்
நடையும் நடைப் பழக்கம் நட்பும் தயை
கொடையும் பிறவிக்குணம்

என்று மூதாட்டி ஔவை மொழிந்ததற்கேற்ப நட்பும் தயையும் கொடையும் தலையாய செல்வங்களாகக் கருதிப் போற்றும் ஞானியர் பிறவியிலேயே உருவாகின்றனர். இத்தகையோர் செல்வங்களையோ, புகழையோ விரும்புவதில்லையாயினும் இவர்களுள் குறிப்பிடத் தக்க சிலர் தாம் செய்த சேவையின் மகத்துவத்தால் உலகப் புகழ் பெற்று விளங்குகின்றனர். இதனால் இத்தகைய புகழ் பெறாதவர் யாரும் ஞானி இல்லை என்று ஒதுக்கி விடுதல் மடமையேயாகும். நம்மில் பலருக்கு அவரவர் தந்தையோ, தாயோ இத்தகைய ஞான குருவாக இருப்பதுண்டு. வேறு சிலருக்கு அவர்களது ஆசிரியர்களோ அல்லது நண்பர்களோ குருவாக விளங்குவதும் உண்டு.

எவ்வாறாயினும் இவர்களுள் குருவாக விளங்குபவர்களும் அத்தகைய குருவை வழிகாட்டியாகப் பெற்று அவர் காட்டும் வழியில் தவறாது நடப்பவர்களும் பிறவியிலேயே ஞானம் பெற்றவர்கள் என்பது உறுதி. இதற்கு ஆதாரம், சில குழந்தைகள் தமது பொருட்களைப் பிற குழந்தைகள் எடுத்தால் கோபப்படுவதும் வேறு சில குழந்தைகள் அவ்வாறு கோபப் படாமல் பிற குழந்தைகளைக் காண்கையில் மகிழ்வதும் நாம் காண்கிறோம். குழந்தைப் பருவத்தில் இருந்த குணம் அனேகமாகப் பிறவி முழுவதும் தொடர்வதையும் காண்கிறோம்.

இத்தகைய வேறுபாடுகள் இயற்கையாகவே ஏற்படுவது கண்கூடு. இவர்களுள் ஒரு சாரார் விதிவசத்தாலும் இறையருளாலும் தமது பிறவிக்குணம் இடையே நீங்கப்பெற்று நல்லவர் தீயவராவதும் தீயவர் நல்லவராவதும் கூட நிகழக்கூடியதே. இதற்கு உதாரணம் இராமாயண காவியத்தைப் படைத்த வால்மீகி முனிவர் ஆதியில் ஒரு திருடனாக இருந்ததாகச் சொல்லப்படுவதும், அதே இராமாயண காவியத்தில் தான் பெற்ற பிள்ளையை விடவும் தன் மூத்தாளான சக்களத்தி பெற்ற பிள்ளையான ஸ்ரீராமனை அதிகப் பிரியத்துடன் நடத்திய கைகேயி மனம் திரிந்து இராமனுக்கு வேறு யாரும் இழைக்க நினைக்கவொண்ணாக் கொடுமைகளை செய்ததும் ஆகும்.

நாம் ஒவ்வொருவரும் நான் யார் எனும் ஒரு கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொண்டு நாம் பிற அனைவருடனும் நட்புடனும் அன்புடனும் நடக்கிறோமா, பிறருக்காகத் தியாகம் செய்யும் உள்ளம் நம்மிடம் உள்ளதா, பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருக்கிறோமா எனும் கேள்விகளுக்கு பதில் தேட நமது இயல்பும், வாழ்வில் நமது கடமை என்னவென்றும் நாம் உரிய காலத்தில் அறிந்துகொள்வோம். தன்னையறிவதே ஞானம் என்பது பகுத்தறிவுள்ள மாந்தர் அனைவருக்கும் தெரிந்த உண்மையே.

நம்மிடம் எத்தனை கோடி பணமிருந்தாலும் நாம் உண்ணும் உணவு சிறிதளவேயாகும். அதற்கு மேல் உண்ண முடியாது. அதுவும் இளமை சென்று முதுமை வந்தக்கால் உணவின் அளவு மேலும் குறைய பல சுவையான உணவு வகைகளை ஒதுக்கி, பெரும்பாலும் ருசி குறைந்த உணவையே உண்டு வாழும் கட்டாயமும் பெரும்பாலானோர்க்கு ஏற்படுகிறது. இவ்வுண்மைகளெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தாலும் பெரும்பாலோர் தாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் கடைசி நொடி வரையில் பொருளின் மேலுள்ள பற்றை விட இயலாமல் தவித்துத் துயருறுவதையும் நாம் காண்கிறோம்.

நான் 10 வயதுக்கும் குறைந்த சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ஒரு மூதாட்டி மரணப் படுக்கையில் கிடந்ததைக் கண்டேன். அம்மூதாட்டியைச் சுற்றிலும் உறவினர்கள் பலர் சூழ்ந்திருக்க அவர்களுள் ஒரு பெண்மணி அம்மூதாட்டியின் ஒரு கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்ற முயற்சி செய்தார். அவ்வாறு கழற்றுவதற்கு அம்மூதாட்டி தனது மரணத் தருவாயிலும் அனுமதிக்கவில்லை. அவர் இறந்த பின்னர் அம்மோதிரத்தை வெட்டி எடுத்தார்கள். மோதிரத்தை வெட்ட இயலாவிடில் கைவிரலையே வெட்டினாலும் வெட்டுவர் போலும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது நாட்டில் சந்திரா ஸ்வாமி எனும் போலிச் சாமியார் பற்றியும் அவரிடம் தொடர்பு வைத்திருந்த பல அரசியல்வாதிகள் பற்றியும் பரபரப்பான செய்தி நிலவியது. அப்போது லக்குபாய் பதக் எனும் ஒரு பன்னாட்டு வியாபாரி சந்திரா ஸ்வாமி தனக்கு அரசிடமிருந்து வியாபார ஆணை பெற்றுத் தருவதாகக் கூறி அதற்காகத் தன்னிடம் பல கோடி ரூபாய்கள் கையூட்டுப் பெற்றதாகவும் மாறாகத் தன்னை மோசடி செய்துவிட்டதாகவும் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு முடிவடையுமுன்னரே மரணமடைந்தார்.

பணத்தாசை கொண்டு சத்தியத்தையும் தர்ம நியாயங்களையும் காற்றில் பறக்க விட்டு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, தன்னை நம்பியிருப்பவர்களைத் துன்பத்தில் வாட விட்டு, தனக்குத் தானே பாராட்டு விழாக்களும் நடத்திக் கொண்டு திகழ்பவர்கள் இவ்வுலகில் இருக்கும் காலத்திலும், இவ்வுலகை விட்டுச் சென்ற பின்னரும் பெரிதும் இகழ்ச்சியையே பெறுவது உறுதி.

நாம் பிறரால் மனதாரப் புகழப் படும் வகையில் வாழ முயல வேண்டும். அவ்வாறு புகழுக்குரியவராக இல்லாவிடினும் பிறர் நம்மை இகழத்தக்க செயல்கள் ஏதும் புரியாமல் அமைதியாக வாழ்வது உத்தமம். நான் வாழ்வில் புகழ்ச்சியை விரும்புவதில்லை, பிறர் புகழ வேண்டுமென்று எதனையும் செய்வதில்லை என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு, ஆயினும் அவ்வாறு சொல்வோர் தன்னைத் தானே தன் கூற்று உண்மையா எனும் கேள்வியைக் கேட்கின் இல்லையெனும் பதிலையே பெறுவர். பிறரால் புகழப் பட வேண்டும் என்று பெரிதும் விரும்பி அதற்குத் தகுதியுடையவராக வாழ்ந்து என்றும் நற்செயல்களையே செய்து வாழ்தல் சிறந்தது. அத்தகைய புகழ்ச்சி உண்மையான உள்ளபூர்வமான புகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

விரகரிருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று

எனும் விதத்தில் நம்மிடமுள்ள பொருளைப் பெறவும் வேறு வழிகளில் நம் தயவை நாடவும் பொய்யாக நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி செய்வதை விரும்பக்கூடாது.

ஆகிரா



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button