Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    என்னைப் பற்றி

Meet our Authors

கிருஷ்ணா

கிருஷ்ணா - 01
கிருஷ்ணா - 02
கிருஷ்ணா - 03
கிருஷ்ணா - 04
கிருஷ்ணா - 05
கிருஷ்ணா - 06
கிருஷ்ணா - 07
கிருஷ்ணா - 08
கிருஷ்ணா - 09
கிருஷ்ணா - 10
கிருஷ்ணா - 11
கிருஷ்ணா - 12
கிருஷ்ணா - 13
கிருஷ்ணா - 14
கிருஷ்ணா - 15
கிருஷ்ணா - 16
கிருஷ்ணா - 17
கிருஷ்ணா - 18
கிருஷ்ணா - 19
கிருஷ்ணா - 20

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
கிருஷ்ணா முகுந்தா - 08
பிள்ளையார் பாட்டி

 
பராசர முனிவருக்கும், சத்யவதிக்கும் பிறந்த பிள்ளையான வேத வியாசரைப் பிறந்ததில் இருந்தே பராசரர் வளர்த்து வந்து அனைத்து சாஸ்திரங்களையும் கற்பித்தார். தன் குமாரனாலேயே வேதங்கள் புதிய வடிவம் பெற்றுப் பொலியப் போவதோடு அல்லாமல், அவனே ஒரு ஆசாரியனாகவும் இருக்கப் போகின்றான் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த பராசரர், அதற்கு ஏற்றாற்போலவே தன் குமாரனும் வளர்ந்து வருவதை எண்ணி மகிழ்ந்திருந்தார். வேதங்களைக் கண்டு அறிந்ததோடு அல்லாமல் அவற்றை நான்கு பாகமாகவும் பிரித்து ஒவ்வொன்றையும் கற்பிக்கத் தன் சீடர்களையும் நியமித்திருந்தார் வேத வியாசர். அவருடைய வேத பாடசாலை அந்நாட்களில் மிகவும் பிரசித்தி அடைந்திருந்தது. மன்னாதி மன்னர்களும், ரிஷி குமாரர்களும் அதில் சேர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்களாக இருந்து வந்தனர். பல மன்னர்களுக்கும் குடும்ப ஆசாரியனாக இருந்து வந்தார் வியாசர். அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை, நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் அறிந்தவர் அவர் என்றும் அனைவராலும் சொல்லப் பட்டதோடு அல்லாமல், உண்மையில் அனைத்தும் அறிந்தவராகவே இருந்தார் வியாசர். மேலும் அவர் படகுகளிலே தன் சீடர்களோடு சென்று நதிக்கரைகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கி ஒவ்வொரு நாட்டிலும், மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் வேதங்கள் பற்றியும், யாகங்கள், யக்ஞங்கள் பற்றியும் எடுத்துச் சொல்லுவதோடு அல்லாமல், கற்பித்தும் வந்தார். ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட நாட்கள் தங்கி இருந்து இந்தச் சேவையைச் செய்து தர்மத்தையும், நியாயத்தையும், சத்தியத்தையும் பரப்பி வந்தார்.

இத்தகைய பெருமை வாய்ந்த முனி சிரேஷ்டர் ஆன வியாசரின் வருகையால் மதுரா நகரே குதூகலம் கொண்டது. யமுனைக்கரைக்கு அவரை வரவேற்க அக்ரூரர் சென்றார். முனிவர் படகிலிருந்து இறங்கும்போது, அவருடன் கூடவே ஒரு விவேகியான முகத் தோற்றத்துடன் கூடிய இளைஞன் ஒருவனும் இறங்குவதைக் கண்டார் அக்ரூரர். மிக நீண்ட தாடியுடன் இருந்த வியாசர், கண்களாலேயே சிரித்தார், அக்ரூரரைக் கண்டு. அக்ரூரருக்கு இதமான மயிலிறகால் அந்தப் பார்வையே வருடுவது போல் தெரிந்தது. "அக்ரூரா, இதோ என் குமாரன் விதுரன், இவனைத் தெரியுமா உனக்கு?" எனக் கேட்டார் வியாசர் பரிவும், அன்பும் நிறைந்த குரலில். ஆஹா, இவன் அந்தப் பையனா? அஸ்தினாபுரத்து ராணிகளின் வேலைக்காரியாக இருந்து, ராணிக்குப் பதிலாய் வியாசரிடம் பிள்ளை வரம் பெற்றவளின் பையனா? இவன் முகத்திலேயே விவேகமும், அமைதியும் தெரிகின்றதே என அக்ரூரர் நினைத்தார்.

அனைவரும் சென்று வசுதேவரையும், தேவகியையும் கண்டனர். முனிவரை நமஸ்கரித்த வசுதேவரையும் தேவகியையும், ரிஷி ஆசீர்வதித்தார். பின்னர் இருவரையும் தன்னுடன் இந்திரப் பிரஸ்தம் வருமாறு அழைக்க, வசுதேவர் கம்சனுக்குப் பயந்து மறுக்கின்றார். வியாசர் இருவரையும் தேற்றுகின்றார். "கம்சன் அரக்க குணத்தோடு பிறந்திருக்கின்றான். அதை மாற்ற யாராலும் இயலாது. அவனுடைய பாவங்களை அவன் முற்றிலும் அனுபவித்துத் தீர்ப்பான். உங்கள் இருவருக்கும் விடுதலை கிடைக்கும். வசுதேவா, இப்போது உனக்குப் பதிலாய் அக்ரூரன் வரட்டும் என்னோடு. பீஷ்மன் புரிந்து கொள்ளுவான் உன்னுடைய நிலைமை. நீ அதை எண்ணி வருந்தாதே." என்கின்றார். தேவகி வியாசரிடம் தன் கவலையையும், பயத்தையும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளைக் கம்சன் கொன்றுவிடப் போவதையும் சொல்லி அழுகின்றாள். வியாசர் அவளைத் தேற்றி, "பொறுமையாக இரு மகளே! நாரதர் கூறியது நிச்சயம் பலிக்கப் போகின்றது." என்று சொல்கின்றார்.

வசுதேவரோ, "நாரதர், தேவலோகத்து ரிஷி ஆவார். அவர் அவ்வளவு சுலபமாய் பூவுலகு வந்து கம்சன் போன்றவர்களைப் பார்த்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி இருப்பது உண்மையா?" என்று சந்தேகம் கேட்க, வியாசர் சொல்லுகின்றார்: "வசுதேவா, சந்தேகமே வேண்டாம். இந்த விஷயம் பேசப் படும்போது நானும் அங்கே இருந்தேன். என் காதுகளாலேயே கேட்டேன். பூவுலகில் அதர்மம் அதிகம் ஆகிக் கொண்டே போவதால் சாட்சாத் அந்தப் பரம்பொருள் அவதாரம் செய்யும் வேளை நெருங்கிவிட்டது, எனக் கூறினார்கள். ஆகவே ஒரு அதிசயம் நிகழப் போகின்றது. நம்மை எல்லாம் காக்க ஒரு அருளாளன் தோன்றப் போகின்றான். இது சத்தியம்!" என்று சொல்கின்றார் வியாசர். தேவகியோ, "தந்தையே, அந்த அவதார புருஷன் என் வயிற்றில் உதிப்பானா? இது உண்மையா? அப்படியே அவன் உதித்தாலும் இந்தக் கம்சனிடம் இருந்து தப்புவானா? அது நடக்குமா?" என்றெல்லாம் கூறிக் கலங்குகின்றாள்.

வியாசர் சற்று நேரம் மெளனமாய் இருந்துவிட்டுப் பின்னர் தன் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்து போகின்றார். சற்று நேரத்தில் கண் விழித்த அவர் சொல்லுகின்றார்: "அம்மா, கட்டாயம் ஒரு அவதார புருஷன் தோன்றப் போகின்றான். அதுவும் உன் வயிற்றிலேயே பிறக்கப் போகின்றான். அவனை வெல்லா யாராலும் முடியாது. கம்சனால் அவனைத் தொடக் கூட முடியாது. நம்பிக்கையுடன் காத்திரு. பிறக்கப் போவது அந்தப் பரம்பொருளே!" என்று சொல்லி ஆசீர்வதிக்க, சந்தோஷத்துடனும், ஆச்சரியத்துடனும், ஏற்கெனவே மனமும், உடலும் தளர்ந்திருந்த தேவகி மயக்கம் அடைந்தாள். நாட்கள் சென்றன. ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப் பட்டன. தேவகி ஏழாவது முறையாகக் கர்ப்பம் தரித்தாள்.

இப்போது நாம் சற்று வியாசரைத் தொடர்ந்து அஸ்தினாபுரம் வரைக்கும் போயாக வேண்டிய வேலை இருக்கின்றது. அஸ்தினாபுரத்தின் ராணிமாதாவான சத்தியவதி வியாசரை அழைத்திருக்கின்றாள். சத்தியவதி குரு வம்சத்து அரசன் ஆன ஷாந்தனுவின் மனைவியாவாள். ஷாந்தனுவிற்கு முதலில் கங்கை மனைவியாக இருந்தாள். கங்கைக்கும், ஷாந்தனுவிற்கும் பிறந்த பிள்ளையே பீஷ்மர். இவர் பெயர் உண்மையில் தேவ விரதர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து வாலிபப் பருவம் எய்திய தருணத்தில் இவரின் தந்தை ஆன ஷாந்தனு, கங்கைக் கரையில் உலாவிக் கொண்டிருந்தவருக்கு, திடீரென சுகந்தமான மணம் வீச, மணம் வந்த திக்கை நோக்கிய ஷாந்தனுவின் கண்களுக்கு அங்கே உலாவிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணான மச்சகந்தி என்னும் சத்தியவதி கண்ணில் பட்டாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட ஷாந்தனுவிடம் சத்தியவதியின் தந்தை, "என் பெண்ணிற்குப் பிறக்கும் மகனே பட்டம் சூடி மன்னன் ஆக வேண்டும்." என நிபந்தனை விதிக்க, ஷாந்தனு, மூத்த மகனும், வீரனும், பரசுராமரின் சீடனும் ஆன தேவ விரதன் இருக்கையில் சத்தியவதியின் பிள்ளைக்கு முடி சூட்ட முடியாது என மறுக்கின்றான். ஆனால் அரண்மனைக்கு வந்தும் சத்தியவதியின் அழகை எண்ணி, எண்ணி ஏங்க, தந்தையின் கவலையைப் போக்க எண்ணிய தேவ விரதர், "வாழ்நாள் முழுதும் பரிபூரண பிரம்மசரியம் காப்பதாய்" கடுமையான சபதம் பூண, விண்ணோரும், மண்ணோரும் அவரை "பீஷ்ம, பீஷ்ம" என ஆசீர்வதிக்க, அன்றில் இருந்து அவர் பெயர் பீஷ்மர் ஆயிற்று.

அதே போல் அன்றிலிருந்து இன்று வரையிலும் குரு வம்சத்தின் முன்னேற்றத்தையும், அஸ்தினாபுரத்தை ஆளும் அரசனுக்கு உதவிகள் புரிந்தும், ஆலோசனைகள் சொல்லியும் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தார் பீஷ்மர். அவர் கடுமையான சபதம் பூண்ட காரணத்தாலும், அவரின் பக்தியை மெச்சியும், அவர் விரும்பும்போது மரணம் அவரைத் தழுவும் என ஆசீர்வதிக்கப் பட்டதால் வயது சென்றும் பரிபூரண பலத்தோடும், ஆரோக்கியத்தோடும் திகழ்ந்தார். தன் தம்பியின் மகன்கள் ஆன திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவுக்கும் பெருமளவில் உதவி வந்தார். அந்நாட்களில் பீஷ்மர் ஒரு நாட்டிற்குப் படை எடுத்து வருகின்றார் என்றாலே அனைவரும் நடுங்கினர். அவரின் வயதையும், தவத்தையும், ஞானத்தையும், சரியான நேரத்தின் சரியான முடிவை எடுக்கும் விவேகத்தையும் எண்ணி, அனைவரும் அவரை மதித்தும், போற்றியும் வந்தனர். பீஷ்மரின் சிறிய தாயும், ஷாந்தனுவின் மனைவியுமான சத்தியவதியும் பல முறை விரதத்தைக் கைவிட்டு பீஷ்மரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியும் அவர் மறுத்துவிட்டார். இப்போது அஸ்தினாபுரத்துக்கும், அதன் ராணிகளுக்கும் கொஞ்சம் போதாத காலமோ என்னும் வண்ணம் திருதராஷ்டிரன் மனைவியான காந்தாரி கர்ப்பம் தரித்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவளுக்கு ஏதோ ஒரு சாபம் இருக்கின்றது. அதனால் தாமதம் ஆகின்றது. திருதராஷ்டிரனோ பிறவிக் குருடன். ஆகையால் அவனால் அரசாள முடியாது. எனவே அவன் தம்பியான பாண்டுதான் அரசனாய் இருந்து வந்தான்.

இந்தப் பாண்டுவிற்குத் தான் வசுதேவரின் சகோதரியும், குந்திபோஜனின் வளர்ப்பு மகளும் ஆன ப்ரீத்தா என்னும் குந்தியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றது. இது தவிரவும் மாத்ரி என்னும் பெண்ணையும் பாண்டு விரும்பித் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான். எனினும் அவனுக்கும் குழந்தை பிறக்க வழியில்லை. அவனுக்கும் அத்தகையதொரு கடுமையான சாபம் உள்ளது. இந்நிலையில் குரு வம்சம் தொடர்ந்து அரசு கட்டிலில் இருக்குமா? இந்த வம்சம் இத்தோடு முடிந்து விடுமோ? சத்தியவதி தன் கணவனுக்குச் செய்து கொடுத்த சத்தியம், எப்பாடு பட்டாவது குருவம்சத்தைக் காப்பது என்பதே. இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் எவ்வாறு குரு வம்சத்தைக் காப்பது? ஒன்றும் புரியவில்லையே? இந்த அழகில் பாண்டுவின் மனைவி குந்தி அக்னிப்ரவேசம் செய்யப் போகின்றாளாமே? குழம்பித் தவித்தாள் சத்தியவதி. வயது அறுபதுக்கு மேலாகியும் இன்னும் இளமையின் அழகுக் கிரணங்கள் அவளை விட்டு நீங்கவில்லை. பார்ப்பதற்கே ஒரு தேவ கன்னிகையைப் போல் இருந்த அவளின் நெற்றியில் இருந்த ஈசனின் பக்தை எனக் குறிக்கும் அடையாளம் ஆன சாம்பலில் இருந்தே அவள் ஓர் விதவை எனப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் அருகே பீஷ்மரும் அமர்ந்திருந்தார். இருவரும் வியாசருடன் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர்.

சத்தியவதி நிலைமையைத் துல்லியமாய் அறிந்து வைத்திருந்ததால் வியாசரிடம் எடுத்து உரைத்தாள். பராசரரிடமே வளர்ந்து வந்த வியாசர் தன் தாய் யார் என அறிந்ததும், அவளை வந்து பார்த்து நமஸ்கரித்துத் தாய் விரும்பும்போது தன்னை அழைக்குமாறும், அவளின் ஆவலைப் பூர்த்தி செய்வது தன் கடமை எனவும் கூறி இருந்தபடி, அவ்வாறே அவர் இன்று வரை நடந்தும் வந்தார். தன் தம்பியின் இரு மனைவியருக்கும், அவர்களின் பணிப்பெண்ணிற்கும் குழந்தைப் பேறு அளிக்க உதவி செய்தார். ஆகவே இப்போதும் வியாசரின் உதவியை நாடினாள் சத்தியவதி. தன்னாலேயே பீஷ்மர் இம்மாதிரியான சத்தியத்தைச் செய்ய வேண்டியிருந்தது பற்றியும் குரு வம்சம் அழியத் தான் காரணமாய் இருந்துவிடுவோமே என்றும் அச்சமாய் இருந்தது அவளுக்கு. பீஷ்மரும் சத்தியவதியும் வியாசரிடம் நிலைமையை எடுத்து உரைக்கின்றனர். எல்லாவற்றிலும் முக்கியமாய்க் குந்தியின் நிலை? குழந்தைகளிடம் மாறாத அன்பு கொண்டிருக்கும் குந்திக்கு பாண்டுவின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பது தெரிந்ததும் அவள் தன்னைத் தானே அக்னியில் இட்டுக் கொள்வதின் மூலம் மாய்த்துக் கொள்ளப் போகின்றாள் என்பது தெரிந்தால்? குரு வம்சத்தின் கதி என்னவாகும்?



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants