தாயென்று கும்பிடடி பாப்பா
- சங்கர விஜயம் 9
கீதா சாம்பசிவம்
சிவகுரு விதிர்விதிர்த்துப் போனார். தேரில் இருந்தது அவருடைய அருமைப் பிள்ளையான சங்கரனே. உடனே திரும்பிக் கையில் தூக்கிக் கொண்டிருப்பது யார் எனப் பார்த்தால், என்ன ஆச்சரியம்? தேரில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் அவர் கைகளில். மீண்டும் தேரைப் பார்த்தார் சிவகுரு. தேரில் இருந்த சங்கரன் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது அவருக்கு. கையைப் பார்த்தார். கைகளில் தேரில் இருக்க வேண்டிய உற்சவ விக்ரஹங்கள். சட்டென ஒரு உண்மை புரிந்தது அவருக்கு. தனக்குப் பிறந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல. தெய்வீகக் குழந்தை. சாக்ஷாத் அந்த ஈசனின் அம்சமே. தன் தலைக்கு மேல் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு கண்கள் ஆநந்த பரவசத்தால் மழையென வர்ஷிக்கத் தன்னை மறந்து நெஞ்சம் மகிழ்ந்தார். ஆனால் ஏதோ ஒன்று நெருடியது அவருக்கு. இரவு பூராவும் தன்னை பொம்மைத்தேர் செய்யச் சொன்னதே குழந்தை? ஈசனுக்குத் தேர் உபயம் செய்தால் சிவபதவி என்பார்களே? அப்போது நான் ஈசனின் இணையடியை அடையும் தருணம் வந்துவிட்டதோ? குழந்தையை அணைத்துக்கொண்டே உள்ளே வந்த சிவகுரு அப்படியே தூங்கிப் போனார். தூங்கியவர் எழுந்திருக்கவே இல்லை.
தகப்பன் இல்லாமல் குழந்தை ஏங்கிப் போய்விடுவானே என ஆர்யாம்பாள் தன் துக்கத்தை அடக்கிக்கொண்டாள். குழந்தைக்குப் பல விதங்களிலும் ஆறுதல் கூறினாள். குழந்தையோ மனதுக்குள் சிரித்துக்கொண்டது. எனினும் தன் அவதார மகிமையைக் காட்டும் தருணம் வரவில்லை எனக் காத்திருந்தது. ஐந்து வயது சங்கரனுக்குக் குடும்பத்துப் பெரியவர் ஒருவரைக் கொண்டு உபநயனம் செய்து வைக்கப் பட்டது. வேதங்களுக்கு எல்லாம் உறைவிடமான சங்கரன் வேதமந்திரமான காயத்ரி உபதேசிக்கப் பட்டான். ஆர்யாம்பாளின் காலில் விழுந்து வணங்கிய சங்கரனைக் கட்டிக்கொண்டு அழுத தாயைத் தேற்ற வழி தெரியாத சங்கரன், அவளுக்காக காயத்ரி சொன்னான். காலடிக்கு அருகே உள்ள குருகுலத்தில் சங்கரனைச் சேர்க்க ஆவல் கொண்டாள் ஆர்யாம்பாள். அதேபோல் அங்கே சேர்க்கப்பட்டான் குழந்தை. ப்ரமசரிய ஆஸ்ரமத்தை ஆரம்பித்தான் சங்கரன். தினமும் பிக்ஷை எடுத்தே சாப்பிட வேண்டும் பிரம்மசாரிகள். சங்கரனும் அப்படியே பிக்ஷை எடுத்து வந்தான். குருக்களின் கட்டளைகளைத் தட்டாமல் அவர்கள் போதித்த அனைத்தையும் ஆவலுடன் கற்றுக்கொண்டான். தான் பிக்ஷை எடுத்து வருவதை குரு பத்தினியிடம் அளித்து அதில் அவள் சமைத்துத் தருவதையே உண்டும் வந்தான். வித்தைகள் அனைத்தும் அவனை நோக்கி ஓட்டமாய் ஓடிவந்து அடைக்கலமாயின. வேதம், வேதாந்தம், புராணங்கள், ஸ்மிருதி, காவியங்கள், சாஸ்திரங்கள் என அனைத்தும் கற்றுக்கொண்டான் சங்கரன்.
சங்கரனின் பிரமசரிய ஆஸ்ரமத்தில் தான் முதல் முறையாக அவனுடைய அவதார மகிமையைக் காட்டும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் அன்று துவாதசி தினம். முதல் நாள் ஏகாதசி விரதம் இருந்தவர்கள் அன்று அதிகாலையிலேயே உணவு சமைத்து இறைவனுக்குப் படைத்துவிட்டு உணவு உண்ண ஆயத்தம் செய்து கொண்டிருந்த நேரம். அந்த ஊரின் அக்ரஹாரத்தில் அனைத்து வீடுகளிலும் உணவு சமைக்கும் வாசனையும், இறை வழிபாட்டின் வாசனாதித் திரவியங்களின் மணமும் கிளம்பி ஊரையே நறுமணத்தில் ஆழ்த்தி இருந்த்து. ஆனால், அந்த ஒரு வீட்டில் மட்டும் எந்த விதமான அசைவுகளையும் காணோமே? ஒரு வேளை வீட்டில் யாரும் இல்லையோ? வெளி ஊருக்குச் சென்றிருக்கிறார்களோ? சங்கரன் யோசனையுடன் அந்த வீட்டு வாயிலுக்கு வந்தான். வாயிலில் அழகான கோலம் காட்சி அளித்தது. அந்த வீடும் திறந்தே இருந்தது. வீட்டில் அந்த வீட்டுக்காரரின் மனைவி மட்டும் இருந்தாள். அந்த வீட்டில் தினம் தினம் ஏகாதசி தான். அவ்வளவு வறுமை. பொதுவாக கிரஹஸ்தர்கள் எங்கும் யாசிக்கக் கூடாது என்ற சாஸ்திரம் இருக்க அந்த வீட்டின் ஆண்மகன் பெயரும் அயாசகன் என்றே அமைந்திருந்தது. அவன் மனைவி மட்டும் வெளியே சென்றிருந்த கணவன் திரும்பி வந்து ஏதேனும் சம்பாதித்துத் தரப்போகும் பொருளுக்காகக் காத்திருந்தாள்.
அப்போது நம் சங்கரன் அங்கே சென்றுவிட்டான். அந்த வீட்டின் நிலைமையை அறியாத பாலகன் நம் சங்கரன். அல்லது அவனது தெய்வீகம் வெளிப்பட அதுதான் சரியான தருணம் எனக் காத்திருந்தானோ என்னமோ தெரியாது. சங்கரன் அங்கே பிக்ஷைக்கு வந்து நின்றான். “பவதி பிக்ஷாம் தேஹி!” சங்கரன் குரல் கொடுத்தான். அயாசகன் மனைவிக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நம் வீடு தேடியும் பிக்ஷைக்கு ஒருவன் வந்திருக்கிறானே? சாதாரணமாக யாருமே அந்த வீட்டுக்கு பிக்ஷைக்கு வருவதில்லை. அப்படி இருக்கையில் இது என்ன அதிசயம்? வெளியே எட்டிப் பார்த்தாள் அந்தப் பெண்மணி. ஜோதி மயமான ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் தானா பிக்ஷைக்குக் குரல் கொடுத்தது? ஆஹா, இந்த அழகிய தங்கச் சிலை போன்ற குழந்தைக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்கலாமே? இப்போத் தான் உபநயனம் ஆகி இருக்க வேண்டும். கையில் கட்டிய கங்கணமும், பூநூலில் புதுக்கருக்கும் இன்னும் அழியவில்லை. குருகுலத்தில் புதிதாய்ச் சேர்ந்திருக்கிறான் போலும். அந்த வாமனனைப் போல் இருக்கிறானே? அவனே தானோ ஒருக்கால்? அல்லது சங்கரகுமாரன் தான் மனித வடிவெடுத்து வந்துவிட்டானா? அதற்குள்ளாக இரண்டாம் முறை குரல் கொடுத்துவிட்டான் குழந்தை.
மூன்று முறை குரல் கொடுத்தும் எதுவும் கிடைக்கவில்லை எனில் அந்த வீட்டின் எதிரே நிற்காமல் செல்ல வேண்டும். ஒரு முறை பிக்ஷை எடுத்த வீட்டிற்கு அங்கே பிக்ஷை கிடைச்சாலும், கிடைக்காட்டியும் மறு முறை செல்லவும் கூடாது. ஆஹா, இத்தனை அற்புதமான குழந்தை தன் வாயால் பிக்ஷை கேட்பதே அழகாய் இருக்கிறது. இதற்குக் கொடுக்க நம்மிடம் ஒன்றுமே இல்லையே? குழந்தை மூன்றாம் முறை குரல் கொடுத்துவிட்டால் கிளம்பிவிடுவானே? என்ன நம் நிலைமை இவ்வளவு கேவலமாய் ஆகிவிட்டதே? மனம் நொந்து போன அந்தப் பெண்மணி குழந்தையை இருக்கச் சொல்லி சைகை காட்டிவிட்டுப் பேசக் கூட முடியாத படிக்கு அழுகை முட்ட உள்ளே சென்றாள். வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி கூட இல்லை. எதைப் போடுவேன் குழந்தைக்கு? அந்தச் சூரியனே வந்திறங்கினாற்போல் அத்தனை தேஜஸோடு இருக்கிறான் குழந்தை. தேடினாள். ஒவ்வொரு இடமாய்த் தேடினாள். வீட்டின் கதவு இடுக்குகளில் எல்லாம் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தாள். ஒவ்வொன்றாய்ப் பார்க்கும்போது சமையலறை சாளரத்தில் இருந்த ஒரு பாத்திரத்தினுள் கிடந்த ஒரு நெல்லிக்காய் கையில் தட்டுப் பட்டது. அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அழுக ஆரம்பித்த நிலையில் நெல்லிக்காய். என்றாலும் இப்போது இதை விட்டால் வேறு எதுவும் இல்லை. அதற்குள் குழந்தை மூன்றாம் முறை குரல் கொடுத்துவிட்டான். “பவதி பிக்ஷாம் தேஹி!” கடவுளே, குழந்தை அடுத்த வீட்டிற்குச் சென்றுவிடப் போகிறானே? அவசரம் அவசரமாக அந்த அழுகிய நெல்லிக்காயை எடுத்துக்கொண்டு சென்றாள் அந்தப் பெண்மணி.
சங்கரனின் பிக்ஷைப் பாத்திரத்தில் தன் கையில் இருந்த அழுகிய நெல்லிக்காயைக் கூனிக்குறுகிப் போய் இட்டாள் அந்தப் பெண்மணி. அதைப் பாத்திரத்தில் இட்டதுமே கண்கள் கண்ணீரை மழையென வர்ஷிக்க வெட்கமும், அவமானமும் தாங்க முடியாமல் உள்ளே ஓடினாள். இத்தனை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த அழுகையானது பெரிய பெரிய விம்மல்களாக வெடித்தன. அவள் விம்மல்களையும், கையில் இருந்த பாத்திரத்தில் அவள் இட்ட நெல்லிக்காயையும், அதன் அழுகிய தன்மையையும் பார்த்த சங்கரன் சிறு குழந்தையானாலும் உள்ள நிலையைத் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்துகொண்டான். சங்கரனின் மனம் கசிந்து உருகிக் கண்களின் வழியே வெளிவந்தது. கொடுக்க வேண்டும் என நினைத்த அந்தத் தாயையும், கொடுக்க எதுவும் இல்லாத அவள் இல்லாமையும் புரிந்தது சங்கரனுக்கு. இவ்வளவு கருணை உள்ளம் கொண்ட இந்தப் பெண்மணிக்கு இவ்வளவு கொடிய வறுமை ஏன்? அம்மா, தாயே மஹாலக்ஷ்மி, இது என்னம்மா நியாயம்? ஈகைக்குணம் நிரம்பியவர்களிடம் நிறையக் கொடுத்தால் தானே அவர்களால் தானம் செய்யமுடியும்? ஏனம்மா இவர்களை இவ்வளவு கஷ்டத்தில் வைத்திருக்கிறாய்?
சங்கரன் யோசித்தான். அந்த மஹாலக்ஷ்மியிடம், லோகமாதாவிடம் நான் கேட்டால் பதில் சொல்லமாட்டாளா என்ன? சங்கரன் கேட்க ஆரம்பித்தான். லோகமாதாவும் குட்டிச் சங்கரனின் வாயிலிருந்து கிளம்பும் அமுதமான மொழிகளைக் கேட்க விரும்பி சற்றே மறைந்து நின்றாள். சங்கரன் கேட்டது அடுத்துப் பார்ப்போமா?
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














