தாயென்று கும்பிடடி பாப்பா
- அருள் மணக்கும் அவதாரங்கள்
A.K. Selvadurai
குழந்தைப் பருவத்தில் செய்யப்படும் அனைத்துச் சிறப்புக்களையும் முறையாகச் செய்து வந்தனர். உபநயனம் செய்யப்படும் பருவத்தில் தேவகுருவாகிய பிரகஸ்பதி என்று சொல்லக்கூடிய வியாழ பகவான் வாமனருக்கு பூணூல் அணிவித்தார். சப்த ரிஷிகளும் தர்ப்பை கொடுத்தனர். பிரம்மா யோக தண்டமும் கண்டலமும் அளித்தார். தாயானவள் கோவணம் அளித்தாள். அமர்வதற்குரிய மான் தோலையும் பூமாதேவி வழங்கினாள். வானுலகம் வாமனருக்கு அழகிய குடையைத் தந்து மகிழ்ந்தது. தந்தை காசிபர் மகனுக்கு அரைஞாண் அணிவித்து மகிழ்ந்தார். சூரிய பகவான் வாமனருக்கு காயத்திரி மந்திரத்தை உபதேசித்தார். குபேரன் பொன்னால் ஆனதொரு தெய்வீகமான பிச்சைப் பாத்திரத்தை அளித்தார். அப்பாத்திரத்தில் சிவபெருமானுடன் வந்திருந்த உமாதேவியார் முதன் முதலில் அன்னம் இட்டாள். இத்தனை கோலாகலத்துடன் உபேந்திரன் உபநயன விழா இனிதாக நடந்தேறியது.
பிரம்மச்சர்ய நிலையை அடைந்த வாமனர் பிச்சையெடுக்கும் பொருட்டுப் புறப்பட்டார். மகாபலியின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தான் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த போது தேவர்கள் எல்லாம் ஒன்று கூடிச் சென்று வேண்டிய போது திருமால் மகாபலியைப் போர் செய்து வெல்வதைக் காட்டிலும் சூசகமாக வீழ்த்துவதே சிறப்பு என்று கருதினார். மகாபலிச் சக்கரவர்த்தி மிகச்சிறந்த வள்ளல். கேட்பவர்க்குக் கேட்டபடி இல்லையென்னாது கொடுக்கும் ஈகைத் திறமுடையவன். எனவே அவன் வள்ளல்தன்மையைப் பயன்படுத்துயே அவனை வீழ்த்த வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தார். எனவே மகாபலி இருக்கும் இடம் தேடி கக்கத்தில் தருப்பைப் புல்லும், ஒரு கையில் குடையும், இன்னொரு கையில் பிச்சைப் பாத்திரமுமாகச் சென்றார்.
மகாபலி நர்மதை நதிக்கரையில் தனது பலம் மேன்மேலும் ஓங்க ஒரு பிரம்மாண்டமான வேள்வியைச் செய்து கொண்டிருந்தான். என்வே வாமன மூர்த்தி அவ்விடத்தைத் தேடிச் சென்றார். வழி நெடுக எண்ணற்ற ஞானிகளும் ஆன்றோர்களும் சான்றோர்களும் அளவில்லாத மகிழ்ச்சிப் பெருக்கில் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் சிலரை அணுகி வாமன மூர்த்தி, "உங்களுக்குள் ஏனிந்த மகிழ்ச்சி?" என்று வினாவினார். அதற்கு அவர்கள் நாங்கள் மகாபலிச் சக்கரவர்த்தியின் வேள்விக்குச் சென்று மகாபாலியினிடத்தில் அளவில்லாத பொன்னையும் பொருளையும் பரிசாகவும், யாசகமாகவும் பெற்று வருகிறோம். என்வே நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு வருகிறோம்" என்றார்,
மகாபலியின் வள்ளல் தன்மையைப் பற்றி வானமர் மிகவும் ஆச்சர்யப்பட்டார். "இப்படிப்பட்ட வள்ளல் தன்மை மிக்கவனா தேவர்களுக்குத் துன்பத்தை அளிக்கின்றான்?" என்று வியப்படைந்தனர். வேள்விச்சாலையை அடைந்தார் வாமனர். தொலைவில் இருந்து மகாபலியை நோக்கினார். விண்ணவராக இருந்தாலும், மண்ணவராக இருந்தாலும் தன்னிலும் மேம்பட்டவர்களாக இருக்கக் கூடாது என்ற செருக்கு அவன் முகத்தில் தெரிந்தது. அவனுடைய அந்தச் செருக்கினை அடக்கினால் மகாபலி திருந்தி விடுவான் என்று முடிவு செய்தார் வாமனர்.
அவர் வேள்விச் சாலையின் உள்ளே பிரவேசித்ததும் மகாபலி தொலைவில் இருந்து பார்த்துவிட்டான். உருவத்தில் குள்ளமான யாரோ ஒரு வேதோத்தமர் வேள்விச்சாலை நோக்கி வந்துள்ளது அறிந்து அளாவற்ற மகிழ்ச்சியால் வரவேற்க ஓடோடி வந்தான். அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான். வாசனை மலர்களை வழி நெடுகத்தூவி வாமனரை வரவேற்றுச் சென்றான். வேள்விக் குண்டத்திற்கு அருகில் தர்ப்பாசனம் அமைத்து அதில் அமரச் செய்து சகல சோடோபசாரங்களும் செய்தான். தங்கத் தாம்பாளத் தட்டில் தன் மனைவியோடு வாமனருக்குப் பாத பூஜைகள் செய்து விழுந்து வணங்கினான். பிறகு வாமனரை நோக்கி, "சுவாமி தாங்கள் வந்தது நான் செய்த தவப்பயன் தாங்கள் வேண்டுவது யாதோ?" என்று கேட்டான்.
அதற்கு வாமனர்ர் மகாபலியை நோக்கி, "மகாபலி, உன் வேள்வி சிறக்க வாழ்த்துக்கள். மேலும் மேலும் என் ஆசிகள் உனக்கு உரித்தாகட்டும். நான் இந்தப் புனிதமான வேள்வியில் யாசகம் பெறவே வருகை புரிந்துள்ளேன்" என்றார். அதற்கு மகாபலி "அருந்தவத்தீர்! நான் வேள்விக்கு வருகை புரியும் எண்ணற்ற ஞானிகளுக்கும் இருடிகளுக்கும் ஆன்றோர்களுக்கும், சான்றோர்களுக்கும் பொன்னாடையும், பொருளையும் அளவில்லாமல் வாரி வாரி வழங்கி வருகிறேன். அப்படி இருக்கும் போது தங்களுக்கு மறுப்பேனா? தயங்காமல் கேளுங்கள். தாங்கள் எதைக் கேட்டாலும் கொடுப்பேன்" என்றார். வாமனர் மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கு மிகுந்த பேச்சினைக் கேட்டும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். இவன் செருக்கை அடக்கிய தீருவது என்று முடிவு கட்டினார்.
"மகாபலி, உன் குல குருவாகிய சுக்கிராச்சார்யாரின் ஆசியோடு நீ செய்யும் தான தருமங்களை யெல்லாம் நிறையக் கேள்விப்பட்டேன். நீ சொன்ன சொல் தவறாத நீதிமான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். என்வே தான் நான் உன்னிடம் வந்துள்ளேன்" என்றார். "தயங்க வேண்டாம் சுவாமி, தைரியத்துடன் கேளுங்கள், எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் அளிப்பேன்" என்றான் மகாபலி.
வாமனர், "மகாபலி, நான் உன்னிடம் பெரிதாக எதிரபார்த்து வரவில்லை என்றாலும் நான் மிகவும் ஆசைப்பட்டு ஒன்றை உன்னிடத்தில் யாசகமாகக் கேட்பது வெறும் மூன்றடி மண் மட்டுமே" என்றார். இதைக் கேட்டதும் மகாபலிச் சக்கரவர்த்தி அந்த வேள்வி மணடபமே அதிரும் அளவிற்குச் சத்தம் போட்டுச் சிரித்தான். பிறகு வாமனரை நோக்கி, "சுவாமி உங்கள் வேண்டுதல் எனக்கு விந்தையாக உள்ளது. எப்படிப்பட்ட வள்ளல் நான்? யார் யாருக்கெல்லாமே எல்லையில்லாமல் வாரிக் கொடுக்கும் என்னிடம் கேவலம் மூன்றே மூன்று அடிமண் தானா கேட்பது? நன்றாக யோசித்துக் கேளுங்கள் வேறு என்னென்ன தேவை? கேளுங்கள் அத்தனையையும் தவறாமல் அளிக்கிரேன்" என்றான்.
வாமனர், "மகாபலி ஆசைக்கும் ஓர் அளவுண்டு. என்வே நான் உன்னிடம் யாசிப்பது மூன்றடி மண் மட்டுமே. நீ எனக்கு அதைக் கொடுத்தால் போதும்" என்றார். மகாபலி, "நல்லது அந்தணரே, அப்படியே வழங்குகிறேன். என் வாழ் நாளில் நான் யாருக்கும் இவ்வளவு சிறிய பரிசினை வழங்கியதில்லை. இருந்தாலும் அளிக்கின்றேன். எத்தகைய அளவு முறையில் இந்த மூன்றடியைப் பெறப் போகிறீர்கள்" என்றான். அதற்கு வாமன மூர்த்தி, "என் சிறிய காலடியாலேயே அளந்து கொள்கிறேன்" என்றார். மகாபலி மேலும் சிரித்தான், "உமது காலடி மிகவும் சிறியதாக உள்ளதா; தாங்கள் எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான்.
வாமனர், "மகாபலி! புனித நீரில் எள் கலந்து எள்ளுந் தண்ணீரும் கொண்டு தாரை வளர்த்துக் கொடுக்க வேண்டும்" என்றார். மகாபலியும் மகிழ்ந்து ஒரு கெண்டிப் பாத்திரத்தில் எள்ளையும் புனித நீரையும் தானே கலந்து வேள்விக் குண்டத்தின் முன்பாக அமர்ந்திருந்த நூற்றக்கணக்கான அந்தணர்கள் வேதம் ஓத, தாரை வார்க்கத் தயரானானான் அப்போது குல குருவாகிய சுக்கிராச்சாரியார் மகாபலியைத் தடுத்தார். "மகாபலி வேண்டாம், வந்திருப்பவன் சாதாரணமானவன் அல்ல. நீ தாரை வார்க்கின்ற இந்த நிகழ்வினால் நீயும் உன்குலம் அழிவதற்குக் கூட வழிவகுத்ததாக ஆகிவிடும், எச்சரிக்கை" என்றார். எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார் ஆனால் அதற்கு மகாபலி சுக்கிராச்சாரியாரை நோக்கி, "சுவாமி நான் இது நாள் வரையும் யாரிடத்திலும் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றாமல் இருந்ததில்லை. எனவே நான் சொன்ன சொல் தவற மாட்டேன். சொன்ன சொல் தவறேன், தவறின் உயிர்வாழேன், தாயைக் கொன்ற நரகத்தினை அடைவேன். இதுவே என் வாழ்க்கையில் நான் கடைபிடிக்கும் விரதம், என்னைத் தடுக்காதீர்கள்" என்றான். பிறகு தாரைவார்க்கத் தலைப்பட்டான்.
சிந்தையு வந்தெதிர் என் செயவென்றான் அந்தணன் மூவடி மண்ணருளுண்டேல் வெந்திறலாயிது வேண்டுமெனா முன் தந்தனென் என்றனன் வெள்ளி தடுத்தான்.
எடுத்தொருவர்க் கொருவர் ஈவதனின் முன்னே தடுப்பது நினக்கிதழகோ தகைவில் வெள்ளி கொடுப்பது விலக்கு கொடுயோய் உனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிவிடு கின்றாய்.
என்னைத் தடுக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே எள்ளுந் தண்ணீர் கலந்த அந்த கெண்டிநீரை வாமனமூர்த்தி கையில் விடுவதற்குத் தொடங்கினான். அது கண்டு சுக்கிரன் என்று சொல்லக்கூடிய வெள்ளியானவர் எப்படியாவது தடுத்தே ஆக வேண்டும் என்கின்ற ஒரே எண்ணத்துடன் வண்டாக உருவம் எடுத்து விரைவாகப் பறாந்து சென்று அந்தக் கெண்டியின் சிறிய வாய்ப்புரத்தின் வழியாக உள்ளே சென்று அடைத்துக் கொண்டார். அவர் தடுத்துவிட்ட காரணத்தால் நீர் வரத்து தடைப்பட்டு நின்றது. சுக்கிரன் வண்டு உருவம் கொண்டு கெண்டியில் போய் அடைத்துகொண்ட இந்தச் செயலை வாமனர் மனத்துக்குள் நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். ஒருவன் தானம் செய்யாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் பிறர் செய்கின்ற தருமத்தைக் கெடுப்பவனுக்கு அப்போதே தண்டனை கிடைக்கும் என்கின்ற உண்மையை இந்த உலகிற்கு உணர்த்தும் பொருட்டு ஒன்றும் தெரியாதவர் போல் ஏன் நீர் அடைத்துக் கொண்டுவிட்டது? என்று கெண்டியின் துவாரம் வழியாக உள்ளே பார்த்தார், சுக்கிரன் வண்டு உருவத்தில் கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்தார். வாமனர் ஒரு சிறு தர்ப்பைப் புல்லை எடுத்து வண்டு உருவில் இருந்த சுக்கிரனின் கண்ணைக் குத்திக் கிளறினார். இதனால் சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழந்தார். வெளியில் வந்து விழுந்து பறந்து ஓடித் தப்பினார். இரத்தமும் தண்ணீருமாக வாமனர் தானம் பெற்றார்.
மிக்கபெரும்புகழ் மாவலி வேள்வியில் தக்கத் தன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்காக்கையனே! அச்சோ அச்சோ சங்கமிடத்தானே! அச்சோ அச்சோ
ஒருவன் செய்கின்ற தருமம் அவன் கொடுக்கின்ற பொருளின் அளவை ஒட்டி உயர்வு பெறுவதில்லை. அப்பொருளைப் பெறுகின்றவருடைய தகுதியை ஒட்டி அது பெருமை பெறுகின்றது,
உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து
மகாபலி தாரை வார்த்துக் கொடுத்த மறு வினாடி அங்கு ஓர் அளாவிடற்கரிய அதிசயம் நிகழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வாமனர் மண்ணுக்கும் விண்ணுக்கும் நெடுநெடு வென்று உயர்ந்து அண்ட கோளங்கள் நடுங்கும்படியாகப் பேருருக் கொண்டார்.
கயந்தரு நறும்புனல் கையிற் றூண்டலும் பயந்தவர்களும் இகழ்குறளன் பார்த்தெதிர் வியந்தவர் வெருக்கொண விசும்பின் ஓங்கினான் உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே
இறைவன் வாமனர் உருவில் இருந்து குள்ளமான வடிவம் மாறி நெடுமால் ஆனார். ஓங்கி உயர்ந்த அந்த உத்தமனின் உருவத்தை வியப்புடன் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தான் மகாபலி. தேவர்கள் எல்லாம் பூமாரி பொழிந்தனர். பிரம்மனும், ருத்திரனும் அந்தத் தரிசனத்தைக் கண்டு சேவித்தார்கள். பிரம்மதேவன் தன் கமண்டலத்தில் இருந்த நீரைத் திருமாலின் திருவடிகளில் சொரிந்தான். அந்த நீரானது பெருக்கெடுத்து கங்கை நதி என்ற நாம் தேயத்துடன் மூன்று உலகங்களிலும் சென்று பரவியது,
அரக்கர்கள் திருமாலின் இந்த பிரம்மாண்ட வடிவத்தைப் பார்த்து குள்ளமான வடிவத்தோடு வந்த சூழ்ச்சியும் வஞ்சனையும் கலந்து மகாபலியை வீழ்த்தத் திருமால் போட்ட திட்டம் இது என்று சீறினார்கள். அவர்களை மகாபலி சமாதானப்படுத்தினான். நிகழப்போவதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
திருமால் ஓரடியால் மண்ணுலத்தை அளந்தார். இன்னொரு அடியால் விண்ணுலகத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கு மகாபலியை நோக்கி, "மகாபலி, நீ தாரை வார்த்துக் கொடுத்ததில் இது வரை இரண்டு அடிகள் மட்டுமே கிடைத்துள்ளன, மூன்றாவது அடிக்கு வழி சொல்வாயாக" என்றார். மகாபலி செய்வதறியாது திகைத்தான். தன்னுடைய செருக்கினை உணர்ந்தான். எனவே மகாபலி இறைவனை நோக்கி, "சுவாமி நான் என் செருக்கினை உணர்ந்து கொண்டேன் என் வாக்கு பொய்யாகி விடக்கூடாது. எனவே தாங்கள் தயவு செய்து என் சிரசினை மூன்றாவது அடியாகக் கருதி எனக்கு அருள் புரிய வேண்டும்" என்று மண்டியிட்டு வணங்கினான். வாமனரும் மகாபலி மீது இரக்கம் கொண்டு அவனது திருமுடி மீது தன் திருவடியைப் பதித்து அருள்புரிந்தார்.
மகாபலி இதன் காரணமாக அழுத்தப் பெற்ற பூமிக்கும் கீழாக அதல, விதல, சுதல, தராதல, மகாதல, இரசாதலம் என்று சொல்லக்கூடிய ஆறு உலகங்களைக் கடந்து பாதாள உலகத்தைப் போய் சேவிக்கும் அருள்பெற்றான். "இந்த ஆறு உலகங்களும் அதற்கு அப்பால் உள்ள ஏழாவது உலகம் பாதாள உலகம் உட்பட நீ ஆட்சி புரிவாயாக" என்று திருமால் பணித்தார்.
அவனால் பூர்த்தியாகாமல் நின்ற யாக வேள்வியை பிருகு முனிவர் மூலமாகப் பூர்த்தி செய்யக் கட்டளையிட்டார்.
மிகவும் சிறிய வடிவத்தில் வாமனராக வந்து மகாபலியின் செருக்கை அடக்க பிரம்மாண்டமான வடிவம் கொண்ட திருமாலின் அளவிடற்கரிய ஆற்றல் கண்டு மூவுலகமும் வியப்பற்றது. மகாபலிக்கு வரங்கள் பலவும் வழங்கிய அருள் உள்ளத்தையும் தங்களுக்கு துன்பத்திலுருந்து விடுதலை அளித்த செயலையும் தேவர்கள் எண்ணிப் போற்றினர்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














