தாயென்று கும்பிடடி பாப்பா
- கழிவும் காசகலாம்
Natarajan Kalpattu
இந்த ஒலகத்துலெ உபயோகமில்லாத பொருளுன்னு ஒண்ணுமே கெடெயாதூன்னு சொல்லுவேங்க. “எப்பிடி?” ன்னு கேக்குறீங்களா? சொல்றேன் கேளுங்க.
நீங்க ஒங்க ஊட்டுலெ ஒரு மாடு வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்கோங்க. அந்த மாடு போடுற சாணியெ ஒரு பக்கமா சேத்து வெச்சிருந்தீங்கன்னா அது கொஞ்ச நாளெய்க்கப்புறம் நல்ல உரமா மாறீடூதுங்க. இதெத்தான் தொழு உரம்னு சொல்லுறாங்க.
மாட்டு சாணம் மட்டும் இல்லீங்க. மூத்திரமும் உபயோகமாகுனு சொல்லுறாங்க இயற்கை விவசாய நிபுணருங்க. மாட்டு மூத்திரம் நல்ல பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க உதுவும்னு சொல்லுறாங்க அவங்க.
ஆட்டுப் புழுக்கெ இருக்குதே அது கூட நல்ல உரங்க. ரோசாச் செடிங்களுக்குப் போட்டா நல்லாப் பூக்கும்னு சொல்லுவாங்க.
எங்க அப்பாத்தா கிராமத்துலேந்து வருசா வருசம் வருவாங்க. அவங்க வராங்கன்னா எங்களுக் கெல்லாம் ஒரே குஷியா இருக்குங்க. காரணம் அவங்க இரும்புப் பொட்டிலேந்து வெளிலெ வர முறுக்கு, பொரி விளங்காய் உருண்டெ இதெல்லாந்தாங்க. ஆனா பாருங்க மறு நாளே எங்க சந்தோச மெல்லாம் மறெஞ்சூடும். காரணம் அவங்க எங்களெ ஆட்டாம் புழுக்கெ பொறுக்கியாறச் சொல்லுவாங்க. ஊருக்குப் போறெச்சே அவங்க இரும்புப் பொட்டிலெ பாதி எடெத்த பொடி பண்ண ஆட்டாம் புழுக்கெ அடெச்சிகிட்டு இருக்கும். “எதுக்கு அப்பாத்தா இந்த ஆட்டாம் புழுக்கெ பொடீ?” ன்னு கேட்டா, “லேகியம் பண்ணப் போறேன்” பாங்க. அவங்க லேகியந்தான் பண்ணுவாங்களோ இல்லே கிராமத்து வீட்டுத் தோட்டத்துலெ இருக்குற அவரெக் கொடிக்கும் கத்திரிச் செடிக்கும் போடுவாங்களோ தெரியாதுங்க.
கிராமங்கள்லெ மந்தெ மந்தெயா ஆடுங்களையோ வாத்துங்களையோ இரவு நேரங்கள்லெ வேலி ஒண்ணு கட்டி வயல்களுலெ அடெச்சு வெப்பாங்க. அதுங்க போடுற் புழுக்கைங்களுக்காக.
மனிசக் கழிவும் காசாகுங்க. பொன்மலெ, அதான் எங்க ஊருங்க, ரொம்பச் சின்ன ஊருங்க. ஆனா அங்கெ பாதாள சாக்கடெ ரொம்ப வருசமா இருக்குதுங்க. அங்கெ சாக்கெடெலெ வர மனிசக் கழிவுங்கள்ளாம் ஒரு பம்பிங்க் டேசனுக்குப் போய்ச் சேருதுங்க. அங்கெ திடெப் பொருளெயும் திரவப் பொருளெயும் பிரிச்செடுத்து திடெக் கழிவுங்களெ குப்பல் குப்பலாப் போட்டு வெச்சிருப்பாங்க. கொஞ்ச நாளெய்க்கப்புறம் அதெ விவசாயிங்களுக்கு உரமா விப்பாங்க. பிரிக்கிறெ தண்ணியெப் பாச்சி நெலத்துலெ யானெப் புல்லு வெளெச்சல் பண்ணி அதெ மாடு வெச்சிருக்கிறவங்களுக்கு வண்டி வண்டியாவொ, கட்டுக் கட்டாவோ விப்பாங்க.
சின்ன ஊரான பொன்மலெலெ இப்பிடி. பக்கத்துலெ இருக்குற பெரிய ஊரான திருச்சிலெ எப்பிடின்னு பாருங்க அங்கெ நாப்பது அம்பதுங்கள்லெ பாதாள சாக்கெடெ கெடெய்யாதுங்க. ஆனா அந்த ஊருலேயும் சாக்கெடெலெ காசு பாத்தவங்க இருந்திருக்காங்க.
நகர துப்புறவுத் தொழிலாளிங்க சாக்கெடெ மண்ணெ வாரிக் குப்பல் குப்பலாப் போட்டூட்டுப் போவாங்க. அதெ வாரிகிட்டுப் போகக் குப்பெ வண்டீங்க மறு நாள் தான் வரும். ஆனா அதுக்குள்ளெ சில பேர்வழிங்க கையிலெ ரெண்டு அலுமினியச் சட்டியையோ, இல்லே இந்த கட்டிடத் தொழிலாளிங்க மணலு, சிமின்டு, கல்லுன்னு எடுத்துகிட்டுப் போறாங்களே அந்த மாதிரி இரும்பு சட்டியெயையோ (சென்னை மொழிலெ சொன்னா பாண்டு) எடுத்துகிட்டு வந்து, சாக்கெடெ மண்ணெ அள்ளிப் போட்டுத் தண்ணியெ ஊத்தி அதெ அரிசி களையுவாங்களே அதுலேந்து நெல்லு, உமி. கல்லுன்னு பொறுக்கி எடுக்க அது போல ஆட்டி ஆட்டிக் களைவாங்க. சில பேரு ஒடெஞ்ச சட்டிப் பானெயோட அடிப் பாகத்தெக் கூட எடுத்து கிட்டு வருவாங்க இந்த வேலெய்க்கு. .
சின்னப் பையனா இருந்தப்போ நான் நெனெப்பேன் அவங்களுக்குப் பயித்தியம் புடிச்சிருக்குன்னு. விசயம் தெரிஞ்சவங்களெக் கேட்டா சொன்னாங்க அவங்க தங்கம் எடுக்குறாங்கன்னு. திருச்சிலெ நகெப் பட்டறைங்க நெறைய இருக்கு. அதுலேந்து தங்கப் பொடி சாக்கெடெலெ வருமாம். அதெத் தான் அவங்க எடுக்குறாங்களாம். தங்கம் கல்லெ விடக் கனமானதுங்கறாதலெ அடீலெ தங்குமாம்.
கேனடா நாட்டுலெ ஒரு ரசாயனக் கம்பெனிலெ என்னோட அண்ணன் மகன் ஒருத்தன் ரசாயனப் பொறியாளரா வேலெ பாக்குறான். ரெண்டு வருசத்துக்கு முன்னெ அவனுக்கு ஒரு வேலெ கொடுத்தாங்க. கைத் தொலை பேசிங்கள்லெ இருக்குற பேட்டரிலெ ஒலகத்துலெ ரொம்பக் கொறெவான அளவுலே கெடெய்க்குற கோபால்ட்டுங்கற உலோகம் இருக்கு. பழசாப் போன பாட்டரிங்கள்லேந்து கோபால்ட்டெப் பிரிச்செடுக்க வழி கண்டு பிடிக்கறதுதான் அந்த வேலெ. அந்த வழியெ அவன் கண்டு புடிச்சான். அவனெ உட்டே அதுக்காக ஒரு தொழிற்சாலையும் அமைக்க வெச்சாங்க. இப்பொ அந்த தொழிற்சாலைக்கு ஒலகம் பூராலேந்தும் கெட்டுப் போன தொலை பேசி பேட்டரீங்க வந்து சேருது!
கப்பலுங்க இருக்குதே அதுங்களுக்கு ஒரு வயசு இருக்குதுங்க. அந்த வயசெத் தாண்டினா அது வேலைக்கு ஆவாதுண்ணு கழிச்சுக் கட்டீடுவாங்க. அதுங்களெ ஏலத்துல்வெ எடுத்து இளுத்து கிட்டு வந்து நம்ம நாட்டுலெ குஜராத்துலெ இருக்குற அலாங் போன்ற கப்பல் உடைக்கும் துறைமுகங்கள்லெ அக்கு வேறெ ஆணி வேறெயாப் பிரிச்சு நம்ம நாட்டுக்குத் தேவையான எஃகு, செம்பு, பித்தளை, அலுமினியம்னு பிரிச்சு உருக்காலைங்களுக்கு அனுப்புறாங்க. கோடிக் கணக்கான ரூபா பொறளுதுங்க இந்த வியாபாரத்துலெ.
நெறெயெ பேரு திருப்பதி போயி ஆணு பொண்ணுன்னு வித்தியாசமில்லாமெ தலையெ மொட்டெ அடிச்சிக்கிறாங்க. அந்த மயிரெல்லாம் ஏலம் உடுறாங்க. அதெ வாங்குறவங்க தர வாரியாப் பிரிச்சு எடுத்து சுத்தம் பண்ணி, சவுரி, டோபான்னு செஞ்சு விக்குறாங்க.
ஒரு தபா 1952லெ நான் வேலெ செஞ்சு கிட்டு இருந்து ராணுவப் பொருள் பரிசோதனைப் பிரிவுலெ ஜெர்மெனிலேந்து ஒரு கருவி வரவழிச்சாங்க. அதுக்கு உடெயாம வந்து சேருறதுக்காக ஒரு பொருளெ உபயோகிச்சிருந்தாங்க. அது பாக்குறதுக்கு பஞ்சு மாதிரி இருந்தீச்சு. அதே சமயம் அமுக்கினா இப்பொல்லாம் வருதே ஃபோம் ரப்பர்னு அந்த மாதிரி இருந்தீச்சு.
பரிசோதனைக் கூடத்துலெ வேலெ பாகுறவன் கை சும்மா இருக்குமா? அது என்னான்னு கண்டு புடிக்கணும்னு கொஞ்சத்தெ எடுத்து பெட்ரோலுலெ போட்டா அஞ்சு நிமிசத்துலெ உள்ளேந்து வெளியெ வருது சுருள் சுருளா மயிரு! அதான் ஆரம்பத்துலெ சொன்னேன் இந்த ஒலகத்துலெ உபயோகம் இல்லாத கழிவுப் பொருள்னு ஒண்ணு கெடெயாதுன்னு. எதுலெயும் காசு பாக்கலாங்க.
என் மனசுலெ ஒரு கொறெங்க. இந்த சாயப் பட்டறைங்கள்லேந்து வர சாயக் கழிவுத் தண்ணி இருக்குதே அதெ ஆத்துலெ கொண்டு போயி உடுறாங்க. அதுனாலெ குடி தண்ணி கெட்டுப் போகுது. மீனுங்க செத்துப் போகுது. அந்தத் தண்ணியெ பயிருங்களுக்குப் பாச்சினா அதுங்களும் வாடிப் போகுது. இதெத் தடுத்து இதுலேந்தும் எதுனா உபயோகமான பொருளெ ஒரு நான் நம்ம நாட்டு விஞ்ஞானிங்க கண்டு புடிக்க மாட்டாங்களா சீக்கிறத்துலேயேங்கறெ கொறெதாங்க அது..
இதெப் போலதாங்க பிளாஸ்டிக் குப்பெயும். பக்கம் பக்கமா பிளாஸ்டிக் பையுங்க பறக்குது. இது தானா நாளடைவுலெ மக்கிப் போற ஒண்ணு இல்லீங்க. இதெக் கட்டுக் குள்ளெ கொண்டாந்து இதுலேந்தும் காசு பாக்க முடியுமான்னு யோசனெ பண்ணனுங்க.
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














